மூன்று ஜெர்மானிய அதிபுனைவுகள்
ஹருக்கி முராகாமி
1.பாலுறவுப் படங்களும் அதுபோன்ற குளிர்கால அருங்காட்சியகமும்.
பாலுறவு. உடலுறவு. கலவி. கூடல். இன்னும் நிறைய வார்த்தைகள் உண்டு, ஆனால் என் மனதில் நான் எண்ணிக் கொள்வது (பேசப்படும் வார்த்தை, செயல், நிகழ்வு இவற்றிலிருந்து) ஒரு குளிர்கால அருங்காட்சியகத்தைத்தான்.
குளிர்காலத்தில் ஒரு அருங்காட்சியகம்.
ஆமாம், ‘உடலுறவிலிருந்து’ நீங்கள் ‘அருங்காட்சியகத்துக்கு’ வர நடுவில் நிறைய தொலைவைக் கடக்க வேண்டும். நீங்கள் எண்ணற்ற சுரங்கப்பாதைகளைக் கடந்து வரவேண்டும், அலுவலகக் கட்டடங்களுக்கிடையே முன்பின்னாகச் சுற்றிவர வேண்டும், ஒரு குழப்பமான ஸ்திதியைத் தாண்டி பருவகாலங்கள் பறந்து செல்ல அனுமதிக்க வேண்டும். இவையெல்லாம் ஒரு கற்றுக்குட்டிக்குத்தான் பெரும் இடையூறாகத் தோன்றும், ஒருமுறை நீங்கள் நினைவின் முழுச் சுற்றையும் முடித்துவிட்டீர்களானால், நீங்கள் உணரும் முன்பே ‘உடலுறவில்’ இருந்து குளிர்கால அருங்காட்சியகத்துக்கான வழியைக் கண்டறிந்துகொள்வீர்கள்.
நான் பொய் சொல்லவில்லை. உங்களால் முடியும். நான் இன்னும் சற்று விளக்கலாம் என நினைக்கிறேன்.
பாலுறவு நகர்ப்புற உரையாடலாக மாறுகையில், உடலுறவின் மேல் கீழான அசைவுகள் இருட்டை நிரப்புகையில், எப்போதும் போல், நான் குளிர்கால அருங்காட்சியகத்தின் நுழைவாயிலில் நிற்கிறேன். என் தொப்பியை தொப்பிக்கான அலமாரியில் தொங்க விடுகிறேன், என் மேலங்கியை அதற்கான தண்டில் தொங்கவிடுகிறேன், என் கையுறைகளை ஒன்றன்மீது ஒன்றாக வரவேற்பு மேசையின் மூலையில் வைக்கிறேன், பிறகு, கழுத்தைச் சுற்றியிருக்கும் துணி நினைவுக்கு வர அதனை நீக்கி என் மேலங்கிமீது வைக்கிறேன்.
குளிர்கால அருங்காட்சியகம் ஒன்றும் மிகப்பெரியது அல்ல. அதிலுள்ளவை, அவற்றின் வகைப்பாடு, அதன் செயல்பாட்டுத் தத்துவம் யாவும் எந்த அளவுகோல்படி பார்த்தாலும் தொழில்முறை நேர்த்தியற்றவை. முதலாகப் பார்க்க அங்கு எந்த ஒருங்கிணைக்கும் கோட்பாடும் இல்லை. எகிப்திய நாய்க் கடவுளின் சிறு சிலை, மூன்றாம் நெப்போலியன் பயன்படுத்திய ஒரு பாகைமானி, சாக்கடல் குகைகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு மணி ஆகியன அங்கு இருந்தன. காட்சிக்கு வைக்கப்பட்டவற்றை ஒருங்கிணைத்துப் பார்க்க எந்த வழியுமில்லை, அவை கூன்வளைந்து, எக்காலத்துக்கும் குளிராலும் பட்டினியாலும் பீடிக்கப்பட்ட அனாதைகளைப்போல கண்மூடி தமது பெட்டிகளுக்குள் கிடந்தன.
உள்ளே அருங்காட்சியகம் மிகவும் அமைதியாய் இருந்தது. அருங்காட்சியகம் திறக்க இன்னும் சற்று நேரமிருந்தது. என் மேசையிலிருந்து வண்ணத்துப் பூச்சி வடிவத்திலான உலோகச்சாவியை எடுத்து நுழைவாயிலுக்கு அருகில் இருக்கும் தாத்தா கடிகாரத்துக்குச் சாவி கொடுக்கிறேன். முட்களைச் சரிசெய்து சரியான நேரம் வைக்கிறேன். நான்-அதாவது, நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ளவில்லையாயின்-இங்கு அருங்காட்சியகத்தில் வேலை செய்கிறேன்.
எப்போதும் போல அமைதியான காலை வெளிச்சமும் அதனினும் அமைதியான பாலுறவு எண்ணமும் வாதுமை எண்ணெய் வாசனைபோல அருங்காட்சியகத்தை நிறைக்கின்றன. திரைச்சீலைகளை நீக்கியபடி, ரேடியேட்டர் வால்வுகளைத் திறந்தபடி நான் எனது சுற்றுகளை மேற்கொள்கிறேன். பிறகு எங்களது ஐம்பது-ஃபெனிங் துண்டுப் பிரசுரங்களை அழகாக அடுக்கி வரவேற்பறை மேசையில் பரப்பி வைக்கிறேன்.
போதுமான அளவுக்கு ஒளியை சரிசெய்கிறேன் (உதாரணமாகச் சொல்லவேண்டுமென்றால் குட்டி வெர்செய்ல்ஸ் அரண்மனையில் ஏ-6 பொத்தானை அழுத்தினால் அரசரது அறை ஒளி பெறும் என்பன போல). நீர்க் குளிரூட்டியைச் சரிபார்க்கிறேன். பஞ்சடைத்த அய்ரோப்பிய ஓநாயை குழந்தைகள் தொடாதிருக்கும் பொருட்டு சற்றுப் பின்னால் தள்ளி வைக்கிறேன். கழிப்பறையில் திரவ சோப்பை நிறைத்து வைக்கிறேன். நான் நினைவுபடுத்திச் செய்யவில்லையென்றாலும் ஒன்றன்பின் ஒன்றாக இந்தப் பணிகளை என் உடல் தானாகவே செய்துவிடும். இது, வேறு வார்த்தைகளில் சொன்னால், எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை, அது என்னுடைய என்தன்மை.
இவற்றுக்கெல்லாம் பிறகு நான் அந்தச் சிறிய சமையலறைக்குச் சென்று பல் துலக்குகிறேன். குளிர்பதனப் பெட்டியிலிருந்து பாலை எடுத்து கையிலெடுத்துச் செல்லக்கூடியதான சிறு அடுப்பின்மீது கைப்பிடிக் கிண்ணத்தில் வைத்துச் சூடுபடுத்துகிறேன். மின் அடுப்பு, குளிர்பதனப் பெட்டி, பல்துலக்கி இவையெல்லாம் எந்த வகையிலும் அசாதாரணமானவைகளல்ல (இவை அம்மா-அப்பா மின்சாதனக் கடையிலும் தெருமூலை வீட்டு உபயோகச் சாதனங்கள் கடையிலும் வாங்கப்பட்டவை), ஆனால் அருங்காட்சியகத்தில் இருப்பதால் அவையும் புராதனத்தன்மை தோன்றக் காணப்பட்டன. பாலும் புராதனப் பசுவிடம் கறந்த புராதனப் பாலைப் போலத் தோன்றுகிறது. சிலநேரம் எல்லாமே குழம்பிவிடுகிறது. அதாவது, இந்தக் கருத்தமைவின்படி, அருங்காட்சியகம் வழமையை நீக்கிவிடுகிறது என்பது மிகச்சரியாக இருக்கும், அல்லது வழமை அருங்காட்சியகத்தை நீக்கிவிடுகிறதா?
பால் சூடானதும் அதை எடுத்துக் கொண்டு வரவேற்பறை மேசைக்கு முன்பாக அமர்கிறேன். பாலருந்தியபடியே அவற்றுக்கான இடத்தில் செருகி வைக்கப்பட்ட கடிதங்களை எடுத்துப் படிக்கிறேன். கடிதங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படும். முதல் வகையில் குடிநீர் கட்டணச்சீட்டு, அகழ்வாய்வு வட்டத்தின் செய்திமடல், கிரேக்கத் தூதரகத்தின் தொலைபேசி எண் மாற்றம் குறித்த அறிவிப்புக் கடிதம் இவற்றோடு பிற நிர்வாக ரீதியிலான கடிதங்கள். அடுத்து தங்களது மனப்பதிவுகள், குறைகள், பாராட்டுகள், ஆலோசனைகள் போன்றவற்றைத் தாங்கிவரும் அருங்காட்சியகத்துக்கு வந்துபோனவர்களிடமிருந்தான கடிதங்கள். மனிதர்கள் பலவிதமான எதிர்வினைகளுக்கும் வந்து சேரும் பலவீனமுள்ளவர்கள் என நினைக்கிறேன். அதாவது இந்த விஷயங்கள் மிகப் பழமையானவை. ஹன் காலத்து மதுக்குடுவையை மெசபடோமிய சவப்பெட்டிக்கு அருகே வைப்பது அவர்களுக்கு எவ்வளவு எரிச்சலூட்டும் என நினைத்துப் பாருங்கள்! ஆனால் அருங்காட்சியம் அவர்களுக்கு குழப்பமும் எரிச்சலும் ஊட்டவில்லையென்றால், வேறு எங்கே போய் அவர்கள் எரிச்சலடைவார்கள்?
மேலோட்டமாகக் கடிதங்களை இந்த இரண்டு வகைகளில் பிரித்தபின், பாலை அருந்தி முடிக்க மேசை இழுப்பறையிலிருந்து பிஸ்கட்டுகளை எடுக்கிறேன். பிறகு மூன்றாவது வகைக் கடிதத்தைப் பிரிக்கிறேன். இது உரிமையாளரிடமிருந்தான கடிதம், அதனாலேயே மிகவும் சுருக்கமானது, அடர் வண்ணக் காகிதத்தில் கறுப்பு மையால் எனக்கான கட்டளைகள் எழுதப்பட்டிருக்கும்.
1. காட்சி எண் 36ல் இருக்கும் ஜாடியைப் பொதிந்து இருப்பறையில் வைக்கவும்.
2. இதற்குப் பதிலாக A52ல் இருக்கும் சிற்பத்தாங்கியை (சிற்பத்தை விடுத்து) எடுத்து Q21ல் காட்சிக்கு வைக்கவும்.
3. வெளி 76ல் மின்விளக்கை மாற்றவும்.
4. அடுத்த மாத விடுமுறை நேரங்களை நுழைவாயிலில் ஒட்டவும்.
ஆமாம், எல்லாக் கட்டளைகளையும் நான் நிறைவேற்றுகிறேன்: கேன்வாஸில் பொதிந்து ஜாடியை இருப்பறையில் வைக்கிறேன்; இரக்கமற்றுக் கனக்கும் சிற்பத்தாங்கியை எடுத்துக்கொண்டு போய், கிட்டத்தட்ட எனக்கு விரைவாதமே வந்துவிட்டது, காட்சிக்கு வைக்கிறேன்; நாற்காலிமீது நின்றபடி வெளி 76ல் மின்விளக்கை மாற்றுகிறேன். எண் 36ல் இருக்கும் ஜாடி அருங்காட்சியகம் செல்லும் ஒருவரது மிகப்பிடித்த காட்சிப் பொருளாக இருந்தது. இரக்கமற்றுக் கனக்கும் சிற்பத்தாங்கி தன்மட்டில் காண்பதற்கு மோசமான ஒரு பொருள், நான் மாற்றிய விளக்கு அதன்மட்டில் புதிதானது. என் சிந்தனையை ஆக்கிரமிப்பவை இது போன்ற விஷயங்கள் அல்ல. சொல்லப்பட்டவற்றைக் கச்சிதமாகச் செய்துமுடித்த பிறகு என் தட்டுக்களை சுத்தம் செய்துவிட்டு பிஸ்கட் டப்பாவை உள்ளே வைக்கிறேன். அருங்காட்சியகம் திறக்கும் நேரம் நெருங்கிவிட்டது.
கழிப்பறைக் கண்ணாடியில் தலைசீவிக் கொள்கிறேன். கழுத்துப் பட்டையின் முடிச்சைச் சரிசெய்கிறேன், என் குறி சரியான வகையில் விரைத்திருக்கிறதா எனப் பார்த்துக் கொள்கிறேன். பிரச்சனை ஒன்றுமில்லை.
* ஜாடி எண் 36, சரி.
* சிற்பத்தாங்கி A52, சரி.
* மின்விளக்கு, சரி.
* விறைப்பு, சரி.
அருங்காட்சியகக் கதவின் மீது பாலுணர்வு ஒரு அலையைப் போல் மோதுகிறது. தாத்தா கடிகாரம் சரியாக காலை 11 மணியைக் காட்டுகிறது. மெதுவாகத் தரையை நாவால் நக்குவதுபோல குளிர்கால வெளிச்சம் மிக மென்மையாக அறைக்குள் பரவுகிறது. தரையில் மெதுவாக நடந்து சென்று தாழ்ப்பாளை நீக்கிக் கதவைத் திறக்கிறேன். கதவைத் திறந்த கணமே எல்லாம் மாறுகிறது. பதினான்காம் லூயி அறையின் சிறு விளக்குகள் ஒளிர்கின்றன, கைப்பிடிக் கிண்ணம் தன் வெப்பத்தை இழக்கிறது, ஜாடி எண்36 மெல்லிய, ஜெல்லி போன்ற ஒரு உறக்கத்துக்குள் நழுவுகிறது. மேலே சந்தடியான சிறு மனிதர்கூட்டம் வட்டமாகத் தமது பாத ஒலிகளை எதிரொலிக்கிறது. மனிதர்களைப் புரிந்துகொள்ளக்கூட நான் எத்தனம் கொள்ளவில்லை. வாசல் வழியில் எதுவோ நிற்கிறது, அது பற்றி எனக்கு அக்கறையில்லை. என்னைப் பொறுத்தவரை அங்கே நிற்கும் உரிமையை அவர்கள் தக்கவைத்துக் கொள்ளலாம். பாலுறவைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் நான் குளிர்கால அருங்காட்சியகத்தில் இருக்கிறேன், நாம் எல்லோரும் அங்குதான் இருக்கிறோம், அனாதைகளைப் போல முதுகு வளைத்து, சிறு கதகதப்பு வேண்டி. கைப்பிடிக் கிண்ணம் சமையலறையில் இருக்கிறது, பிஸ்கட் டப்பா மேசை இழுப்பறையில், நான் குளிர்கால அருங்காட்சியகத்தில்.
---------------
2.ஹெர்மன் கோரிங் கோட்டை, 1983.
பெர்லினில் மலையைக் குடைந்து தனது பெரும் கோட்டையை நிர்மாணித்தபோது ஹெர்மன் கோரிங் மனதில் என்ன நினைத்திருப்பார்? மலையைக் குடைந்தெடுத்து அந்த இடத்தில் கான்கிரீட் கொண்டு நிரப்பினார். பரவிய அந்தியொளியில் அச்சமூட்டும் கரையான் புற்றைப் போல அது பளிச்சென்று தெரிந்தது. சிரமப்பட்டு அதன் செங்குத்துச் சரிவில் ஏறி உச்சியில் நின்றபோது கீழே தெருவிளக்குகள் எரியத் தொடங்கியிருந்த கிழக்கு பெர்லினின் மையப்பகுதியைப் பார்த்தோம். எல்லாத் திசை பார்த்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் தலைநகரை நெருங்கிவரும் எதிரிப்படைகளுக்கு குறிப்புணர்த்தவும் அவர்களை விலகி ஓடவும் செய்திருக்க வேண்டும். எந்த வெடிகுண்டும் அக்கோட்டையின் தடித்த சுவர்களைத் தகர்த்திருக்க முடியாது, எந்த பீரங்கி வண்டியும் செங்குத்தான அதன் சரிவுகளில் ஏறியிருக்க முடியாது.
கோட்டையில் தலைவரது சிறப்புப் பாதுகாப்புப் படையினர் 2000 பேருக்கு பல மாதங்களுக்குப் போதுமான இருப்பில் உணவு, தண்ணீர், ஆயுதங்கள் ஆகியன இருந்தன. ரகசிய சுரங்கப்பாதைகள் புதிர்வழிபோல குறுக்கும் மறுக்குமாகச் சென்றன. அற்புதமான குளிரூட்டி ஒன்று கோட்டைக்குள் தூய காற்றை அனுப்பியது. ரஷ்யர்களோ கூட்டுப்படைகளோ தலைநகரைச் சுற்றிவளைத்தாலும்கூட கோட்டைக்குள் இருப்பவர்கள் அச்சப்படத் தேவையில்லை என ஹெர்மன் கோரிங் பெருமைப்பட்டுக்கொண்டார்; தகர்க்க முடியாத இந்தக் கோட்டைக்குள் அவர்கள் பத்திரமாக இருப்பார்கள்.
ஆனால் பருவகாலத்தின் கடைசிப் பனிச்சரிவுபோல 1945ம் ஆண்டின் வசந்தகாலத்தில் ரஷ்ய ராணுவம் அதிரடியாக பெர்லினுக்குள் நுழைந்தபோது ஹெர்மன் கோரிங் கோட்டை அமைதியாக இருந்தது. கோட்டையை முற்றாக அழிக்க வேண்டி ரஷ்ய ராணுவம் அதன் சுரங்கப்பாதைகளில் தீமூட்டிகளை எறிந்து வெடிபொருட்களை நிரப்பி வெடித்தது. ஆனால் கோட்டையை அழிக்க முடியவில்லை. அதன் கான்கிரீட் சுவர்களில் சில விரிசல்கள் மட்டும் விழுந்தன.
“ரஷ்ய வெடிகுண்டுகளைக்கொண்டு ஹெர்மன் கோரிங்கின் கோட்டையைத் தரைமட்டமாக்க முடியாது,” எனது இளம் கிழக்கு ஜெர்மானிய வழிகாட்டி சிரித்தான். “அவர்களால் ஸ்டாலின் சிலையையும் தகர்க்க முடியாது!” 1945 பெர்லின் சண்டையின் எஞ்சியிருக்கும் தடயங்களைக் காட்டியபடி பலமணி நேரமாக என்னை இந்த நகரில் அவன் வழிநடத்திக் கொண்டிருக்கிறான். பெர்லினின் இரண்டாம் உலகப்போரின் பின்விளைவுகளைக் காணும் வினோத ஆவல் கொண்டவன் என என்னை எண்ணிக்கொண்டானா? என்னால் ஊகிக்க முடியவில்லை. ஆச்சரியப்படும் வகையில் நான் ஆர்வத்துடனிருந்தேன், எதைப் பார்க்க நான் விரும்பினேன் என்பதைச் சொல்வது சரியாக இருக்காது என்பதால், பின் அந்தி வரை நகரத்தில் அவனோடு சுற்றினேன். அன்று ஃபென்சிட்டொம் அருகேயுள்ள உணவகத்தில் மதிய உணவு உண்ணச் சென்றபோதுதான் அந்த வழிகாட்டியைச் சந்தித்தேன்.
எங்கள் இருவரின் கூட்டு பொருத்தமற்றதாய் இருந்தாலும் என் வழிகாட்டி திறமைசாலியாகவும் என்மட்டில் வெளிப்படையாகவும் இருந்தான். அவனைப் பின்பற்றி கிழக்கு பெர்லினின் போர்க்களங்களைப் பார்த்து வந்தபோது போர் என்னவோ சிலமாதங்களுக்கு முன்புதான் நடந்து முடிந்ததுபோலத் தோன்றியது. நகரமெங்கும் குண்டு துளைத்த அடையாளங்கள்.
“இங்கே, இதைப் பாருங்கள்,” என் வழிகாட்டி சொன்னான். குண்டு துளைத்த சில ஓட்டைகளைக் காட்டினான். “இதில் ரஷ்ய குண்டுகள் எவை, ஜெர்மானிய குண்டுகள் எவை எனப் பார்த்த மாத்திரத்திலேயே நீங்கள் சொல்லலாம். ஆழத் துளைத்து கிட்டத்தட்டச் சுவரை இரண்டாக்கியிருப்பவை ஜெர்மானிய குண்டுகள், மேலாட்டமான மற்ற துளைகள் ரஷ்ய குண்டுகளால் ஏற்பட்டவை. தொழில்திறன் வேறுபாடு, தெரிகிறதா?”
நான் சந்தித்த அத்தனை கிழக்கு பெர்லின்காரர்களிலும் அவனது ஆங்கிலம் அதிகம் புரிந்துகொள்ளத் தக்கதாக இருந்தது. “நீங்கள் நன்றாக ஆங்கிலம் பேசுகிறீர்கள்,” என்றேன் பாராட்டும்விதமாக.
“நல்லது, கொஞ்ச காலம் நான் மாலுமியாக இருந்தேன்,” என்றான். “கியூபா, ஆப்பிரிக்காவெல்லாம் போயிருக்கிறேன் – கருங்கடலில் சிறிது காலம் இருந்திருக்கிறேன். வழியில் கொஞ்சம் ஆங்கிலம் கற்றுக்கொண்டேன். ஆனால் இப்போது நான் கட்டடக்கலைப் பொறியாளன்…”
நாங்கள் ஹெர்மன் கோரிங்கின் கோட்டையிலிருந்து இறங்கினோம், நகரத்தில் சற்று தூரம் நடந்தபின் அன்டர் டின் லின்டனில் இருந்த பியர் விடுதிக்குச் சென்றோம். வெள்ளிக்கிழமை மாலை என்பதாலோ என்னவோ அங்கு மூச்சு முட்டும் கூட்டம்.
“இங்கே கிடைக்கும் கோழி இறைச்சி மிகவும் பிரசித்தம்,” வழிகாட்டி சொன்னான். ஆகவே நான் கோழி இறைச்சியும் பியரும் ஆர்டர் செய்தேன். கோழி இறைச்சி ஒன்றும் மோசமில்லை, பியர் அற்புதமாக இருந்தது. அறை கதகதப்பாக இருந்தது, சந்தடியும் கூச்சலும்கூட இனிமையாக இருந்தன.
எங்கள் பரிசாரகி பேரழகி, பார்க்க கிம் கார்னஸ் போலவே இருந்தாள். மென்சாம்பல் கேசம், நீல விழிகள், சிறிய செதுக்கியது போன்ற இடை, அழகான புன்னகை. எங்களது பியர் குவளைகளை, ஒரு பிரம்மாண்ட ஆண் குறியை அவள் எப்படிப் பிடிப்பாளோ அப்படி, வாஞ்சையுடன் பிடித்து எடுத்து வந்தாள். ஒருமுறை டோக்கியோவில் நான் பார்த்த ஒரு பெண்ணை அவள் நினைவுபடுத்தினாள். அவள் இந்தப் பெண்ணைப் போன்றவளில்லை, எந்த வகையிலும் இருவருக்கும் ஒற்றுமையில்லை, ஆனால் எப்படியோ இருவருக்கும் நுட்பமான ஒற்றுமைகள் இருந்தன. ஒருவேளை ஹெர்மன் கோரிங்கின் இருட்டுப் புதிர்வழி இருவரையும் என் மனதில் போட்டுக் குழப்பியிருக்கலாம்.
நாங்கள் நிறைய பியர் குடித்தோம். கடிகாரத்தில் மணி பத்தைக் காட்டியது. நான் பன்னிரண்டு மணிக்கெல்லாம் ஃப்ரெட்ரிச்ஸ்ட்ராஸ ரயில் நிலையத்தில் எஸ் பானில் இருக்க வேண்டும். எனது கிழக்கு ஜெர்மனி நுழைவனுமதி நள்ளிரவோடு காலாவதியாகிறது, ஒரு நிமிடம் தாமதமானாலும்கூட பெரிய பிரச்சனையாகிவிடும்.
“நகரத்துக்கு வெளியே ஒரு போர் நிகழ்ந்த இடம், அசலான சீரழிவுகளுடன்,” வழிகாட்டி சொன்னான்.
சலனமின்றி நான் பரிசாரகியையே பார்த்துக் கொண்டிருந்தேன், அவன் சொன்னது காதில் விழவில்லை.
“மன்னிக்கவும்.” அவன் தொடர்ந்தார், “ரஷ்யப் படைகளும் சிறப்புப் பாதுகாப்புப் படைகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன, தெரியுமா? பெர்லின் சண்டையின் நிஜமான உச்சம் அதுதான். பழைய ரயில்பாதை அருகே சிதைவுகள் கிடக்கின்றன, ஆனால் சண்டைக்குப் பிறகு எப்படியிருந்தனவோ அப்படியே இன்னும் கிடக்கின்றன. உடைந்த பீரங்கி பாகங்கள் உள்ளிட்ட எல்லாமும். நண்பரொருவரின் காரை எடுத்துக்கொண்டு விரைவாக அங்கே சென்றுவிடலாம்.”
என் வழிகாட்டியின் முகத்தைப் பார்த்தேன். சாம்பல் வண்ண முரட்டுப் பருத்திக் கோட்டுக்கு மேலாக அந்த முகம் சிறியதாகத் தோன்றியது. அவன் கைகள் இரண்டையும் மேசைமீது வைத்திருந்தான். அவனது விரல்கள் நீண்டு மிருதுவாக இருந்தன, ஒரு மாலுமியினுடையது போலில்லை.
என் தலையை உலுக்கிக்கொண்டேன், “நள்ளிரவுக்குள் நான் ஃப்ரெட்ரிச்ஸ்ட்ராஸ ரயில் நிலையத்தில் இருக்க வேண்டும். என் நுழைவனுமதி காலாவதியாகிவிடும்.”
“நாளைக்கு?”
“நாளை காலை நியூரம்பர்க் செல்கிறேன்,” நான் பொய் சொன்னேன்.
அந்த இளைஞனுக்குச் சற்று ஏமாற்றமாகப் போய்விட்டது. அவன் முகத்தில் சட்டென களைப்பு படர்ந்தது. “நாளை நாம் அங்கு சென்றால் என்னுடைய காதலியையும் அவளது தோழிகள் சிலரையும் உடன் அழைத்துப் போகலாம். அவ்வளவுதான்.” விளக்கம் போல அவன் சொன்னான்.
“ஆ, அது மோசம்,” என்றேன். என் உடலின் நரம்புத் தொகுதிகள் அனைத்தையும் இரக்கமற்ற கரம் ஒன்று நசுக்குவது போல உணர்ந்தேன். ஆனால் நான் என்ன செய்ய முடியும்? எனக்குத் தெரியவில்லை. போரால் சிதைவுற்ற விசித்திரமான ஒரு நகரில் முற்றாகத் தொலைந்து போயிருந்தேன். இறுதியில் அந்த இரக்கமற்ற கரம் தளர்ந்தது, ஒரு அலையைப் போல என் உடம்பிலிருந்து விலகிச் சென்றது.
“அப்புறம், ஹெர்மன் கோரிங்கின் கோட்டை அற்புதம் இல்லையா?” அவன் புன்னகையுடன் கேட்டான். “நாற்பது வருடங்களாக யாராலும் அதை அழிக்க முடியவில்லை.”
ஃப்ரெட்ரிச்ஸ்ட்ராஸ மற்றும் அன்டர் டின் லின்டனின் குறுக்குவெட்டிலிருந்து எல்லாத்திசைகளிலும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. வடக்கே எஸ் பான் நிலையம். தெற்கே சார்லி சோதனைச் சாவடி. மேற்கே பிரான்டன்பர்க் நுழைவாயில். கிழக்கே ஃபென்சிட்டொம்.
“சரி கவலை வேண்டாம்,” இளைஞன் சொன்னான். “நிதானமாகப் போனாலும்கூடப் பதினைந்து நிமிடங்களில் ரயில் நிலையம் சென்றுவிடலாம். புரிகிறதா, சரிதானே?”
என் கைக்கடிகாரம் இரவு 11.10 எனக் காட்டியது. சரி, நான் சரியாகத்தானிருக்கிறேன், எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன். நாங்கள் கைகுலுக்கிக் கொண்டோம்.
“பழைய ரயில்பாதைக்குப் போகாததில் வருத்தமா? அப்புறம் அந்தப் பெண்கள்?”
“ஆமாம், அது வருந்தத்தக்கதுதான்,” நான் சொன்னேன். ஆனால் நாங்கள் அங்கே போகாதது குறித்து அவனுக்கு என்ன வருத்தமிருக்கப்போகிறது. வடக்கு நோக்கி ஃப்ரெட்ரிக்ஸ்ட்ராஸில் நடக்கும்போது 1945ன் வசந்தகாலத்தில் ஹெர்மன் கோரிங் மனதில் என்ன எண்ணியிருப்பார் எனக் கற்பனை செய்ய முயன்றேன். ஆனால் உண்மையில் ஆயிரம் வருட சாம்ராஜ்யத்தின் படைத்தளபதி என்ன நினைத்திருப்பார் என்பதை யாராலும் அறிய முடியாது. நூற்றுக்கணக்கான வெளிறிய எலும்புகளைப்போல, சொல்லப்போனால் போரின் சவத்தைப்போலவே, கோரிங்கின் அழகான ஹைங்கல் 117 ஆயுதந்தாங்கி படைப்பிரிவின் விமானங்கள் உக்ரேனியக் காடுகளில் கிடக்கின்றன.
-------------
3.ஹெர் டபுள்யூவின் அந்தரத் தோட்டம்
முதல் தடவை நான் ஹெர் டபுள்யூவின் அந்தரத் தோட்டத்தைப் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டபோது கடும் மூடுபனி நிறைந்த நவம்பர் காலை வேளையாக இருந்தது.
“ரொம்பப் பிரமாதமில்லை,” என்றார் ஹெர் டபுள்யூ.
அவர் சொன்னது சரிதான். அந்தரத் தோட்டம் மூடுபனிக் கடலின் மீதாக மிதந்துகொண்டிருந்தது. தோராயமாக அது எட்டு கெஜ நீளமும் ஜந்து கெஜ அகலமும் கொண்டிருந்தது. அந்தரத்தில் நின்றது என்பதைத் தவிர்த்து வழக்கமான ஒரு தோட்டத்தினின்று எவ்வகையிலும் அது வேறுபட்டிருக்கவில்லை. அதை விளக்கிச்சொல்வதென்றால்: நிச்சயமாக அது ஒரு தோட்டம், நிலத்தின் அளவுகோள்களை வைத்துப் பார்த்தால் அது ஒரு மூன்றாந்தர தோட்டம்தான். திட்டுத் திட்டாகப் புற்கள் காய்ந்திருந்தன, பூக்கள் விசித்திரமாக, இயற்கைக்கு மாறானவையாகக் காணப்பட்டன, தக்காளிக் கொடிகள் வதங்கிக் கிடந்தன, அதற்கு ஒரு மரச்சட்ட வேலிகூட இல்லை. அந்த வெள்ளை நிற தோட்ட அறைகலன்கள் ஏதோ அடகுக் கடையிலிருந்து கொண்டு வரப்பட்டவை போலிருந்தன.
“நான் சொன்னேனில்லையா, இது ஒன்றும் பிரமாதமில்லை,” ஹெர் டபுள்யூ மன்னிப்புக் கேட்பதுபோல சொன்னார். இவ்வளவு நேரமும் அவர் என் கண்களையே பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். எனக்கு பெருத்த ஏமாற்றமெல்லாம் இல்லை, கொடிகள் பற்றி ஏற அழகான கொழுகொம்புகள், நீரூற்றுகள், விலங்கு உருவங்களில் வெட்டப்பட்ட புதர்ச்செடிகள், க்யூப்பிட் சிலைகள் இவற்றை எதிர்பார்த்து நான் வரவில்லை. நான் ஹெர் டபுள்யூவின் அந்தரத் தோட்டத்தைப் பார்க்க வந்தேன், அவ்வளவுதான்.
“பகட்டான, தரையோடு பிணைந்த தோட்டங்களைக் காட்டிலும் இது நன்றாகவேயிருக்கிறது,” என்றேன், ஹெர் டபுள்யூ சற்றே ஆசுவாசமடைந்தது போலத் தோன்றினார்.
“இதை இன்னும் கொஞ்சம் உயர்த்த முடிந்தால் இது நிஜமாகவே ஒரு அந்தரத் தோட்டமாகிவிடும். ஆனால் எல்லாம் மாறாமல் அப்படியே இருக்கின்றன…” என்றார் ஹெர் டபுள்யூ. “சிறிது தேநீர் அருந்துகிறீர்களா?”
“அது அற்புதமாக இருக்கும்,” நான் சொன்னேன்.
அறுதியிட்டுச் சொல்ல முடியாத உருவம் கொண்ட ஒரு கேன்வாஸை எடுத்தார் ஹெர் டபுள்யூ (சிறு தோள்பை அல்லது கூடை?), அதிலிருந்து ஒரு கோல்மென் அடுப்பு, மஞ்சள் ஒளிர்பூச்சுடைய தேநீர்க் கெண்டி, தெர்மாஸ் குடுவை நிறைய சுடுநீர் இவற்றை எடுத்து தேநீர் தயாரிக்க ஆரம்பித்தார்.
கடுமையான குளிராக இருந்தது. இறகு வைத்துத் தைத்த திடமான ஜாக்கெட்டும் கழுத்தைச் சுற்றி ஸ்கார்ஃபும் அணிந்திருந்தேன், இருந்தும் பிரயோசனமில்லை. நடுங்கியபடி உட்கார்ந்திருக்கையில் எனக்குக் கீழே மூடுபனி தெற்கு நோக்கி நகர்வதைக் கவனித்தேன். மூடுபனியில் மிதந்தபடி முன்பின் தெரியாத பிரதேசத்துக்கு நாங்கள் அடித்துச் செல்லப்படுவதைப்போல உணர்ந்தேன்.
சூடான மல்லிகைத் தேநீர் அருந்தியபடியே இதை நான் ஹெர் டபுள்யூவிடம் சொன்னபோது அவர் மெல்லச் சிரித்தார். “இங்கே வரும் எல்லோருமே இதைத்தான் சொல்கிறார்கள். அதுவும் குறிப்பாக கடுமையான மூடுபனி நாட்களில். குறிப்பாக அப்போதுதான். வடகடலின் மீதாக ஸ்ட்ராட்டோஸ்ஃபியருக்குள் அடித்துச் செல்லப்பட்டுவிடுவோம் என்று.” தொண்டையைச் செருமிக் கொண்டு இன்னொரு சாத்தியத்தையும் சொன்னேன், “அல்லது கிழக்கு பெர்லினுக்குள்.” “அட, ஆமாம், ஆமாம்,” வாடிய தக்காளிக் கொடியை வருடியபடியே ஹெர் டபுள்யூ சொன்னார். “இதன் காரணமாகத்தான் இதனை நான் ஒரு முழுமையான அந்தரத் தோட்டமாக மாற்ற முடியவில்லை. அதிக உயரம் போனால் கிழக்கு ஜெர்மனி போலீஸார் பதட்டமடைகிறார்கள். தங்கள் கண்காணிப்பு விளக்கையும் இயந்திரத் துப்பாக்கிகளையும் எப்போதும் தோட்டத்தின்மீது திருப்பி வைத்துக்கொள்கிறார்கள்! அவர்கள் சுடுவதில்லை, ஆனாலும் அது ஒன்றும் மகிழ்வானதாக இல்லை.”
“அவர்கள் சுடமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்,” என்றேன்.
“அதோடு நீங்கள் சொன்னது போல தோட்டம் இன்னும் உயரத்தில் இருந்தால் வலுவான காற்றில் சிக்கிக் கிழக்கு பெர்லினுக்குள் போய்விடமாட்டோம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பிறகு நாம் எங்கிருப்போம்! உளவாளிகள் என்று கைது செய்யப்படுவோம், உயிர் பிழைத்திருந்தாலும்கூட ஒருபோதும் மேற்கு பெர்லின் திரும்ப மாட்டோம்!”
“ம்,” என்றேன் நான். ஹெர் டபுள்யூவின் அந்தரத் தோட்டம் பெர்லின் சுவரருகே இருந்த ஆடம்பரமான நான்கு அடுக்கு கட்டடத்தின் கூரையோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்தது. ஹெர் டபுள்யூ தோட்டத்தைக் கூரைக்கு மேல் எட்டு அங்குலத்துக்கும் குறைவான இடைவெளிவிட்டே கட்டி வைத்திருப்பதனால் உன்னிப்பாகப் பார்க்காவிடில் அதை இன்னுமொரு மொட்டைமாடித் தோட்டம் என்றே நீங்கள் எண்ணிக் கொள்ளக்கூடும். எட்டு அங்குல உயரத்தில் தோட்டத்தை மிதக்க விடுவதென்பது எல்லாராலும் செய்துவிட முடிகிற சாதனை அல்ல. ஹெர் டபுள்யூவால் இதை சாதிக்க முடிந்ததற்குக் காரணம் “அவர் அமைதியான, யாரிடமும் வம்பு வைத்துக்கொள்ளாத நபர் என்பதால்தான்,” என எல்லாருமே சொன்னார்கள். “ஏன் நீங்கள் இந்தப் பறக்கும்தோட்டத்தை ஒரு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லக்கூடாது?” நான் கேட்டேன். “கன், ஃப்ராங்ஃபர்ட், அல்லது மேற்கு ஜெர்மனிக்குள் இன்னும் தொலைவாக. அங்கு நீங்கள் எவ்வளவு உயரத்துக்கு வேண்டுமானாலும் போகலாம், யாரும் உங்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள்.”
“முட்டாள்த்தனம்!” ஹெர் டபுள்யூ தலையைக் குலுக்கிக் கொண்டார். “கன், ஃப்ராங்ஃபர்ட்!” மறுபடியும் அவர் தலையைக் குலுக்கிக்கொண்டார். “எனக்கு இங்குதான் பிடித்திருக்கிறது. என் நண்பர்கள் இங்குதான் வாழ்கிறார்கள்! கார்ஸ்பர்கில்! இங்கிருப்பதே எனக்குப் போதும்!” தேநீரை அருந்தி முடித்தவர் பெட்டியொன்றிலிருந்து தனது கையடக்க ஃபிலிப்ஸ் ரெக்கார்ட் பிளேயரை எடுத்தார். சுழல் மேடையில் ஒரு ரெக்கார்டை வைத்து பொத்தானை அழுத்தினார். உடன் இரண்டாவது இயக்கத்தைச் சேர்ந்த ஹேண்டெலின் வாஸர்மியூசிக் பிரவகித்தது. துலக்கமான ட்ரம்ப்பெட்டுகளின் இசை சோபையிழந்து மேகம் சூழ்ந்து காணப்பட்ட கார்ஸ்பர்க் வானத்தினூடாக தெளிவாக ஒலித்தது. ஹெர் டபுள்யூவின் அந்தரத் தோட்டத்துக்கு இதைவிடப் பொருத்தமான ஒரு இசைக்கோர்வை இருக்க முடியுமா?
“இந்தக் கோடையில் நீங்கள் திரும்பவும் வரவேண்டும்,” ஹெர் டபுள்யூ சொன்னார். “தோட்டம் அப்போது மிக அற்புதமாக இருக்கும். கடந்த கோடையில் தினந்தோறும் நாங்கள் விருந்து கொண்டாடினோம்! ஒரு தடவை இருபத்தைந்து பேரும் மூன்று நாய்களும் இங்கே இருந்தனர்!”
“யாரும் விழுந்துவிடாமலிருந்தது நல்ல விஷயம்தான்,” ஆச்சரியத்துடன் சொன்னேன். “உண்மையைச் சொன்னால் இரண்டு பேர் விழுந்துவிட்டார்கள்: குடி போதையில்,” ஹெர் டபுள்யூ சிரித்தபடியே சொன்னார். “ஆனால் யாரும் சாகவில்லை: மூன்றாவது மாடியின் வெளிநீட்டிய கூரை நல்ல வலுவானது.”
இதைக் கேட்டு நான் சிரித்தேன். “முன்பு பெரிய பியானோவையும் மேலே கொண்டு வந்தோம். பொலினி வந்து ஷுமனை வாசித்தார். மிகவும் அற்புதமாக இருந்தது. உங்களுக்குத் தெரியுமில்லையா, பொலினி கொஞ்சம் அந்தரத் தோட்ட வெறியர். லோரின் மஸலும் வர விரும்பினார், ஆனால் முழு வியன்னா ஃபில்ஹார்மனிக்கையும் இங்கே கொண்டு வைக்க இடமிருக்காது, உங்களுக்குத் தெரியும்.” “ஆமாம், இடமிருக்காது,” ஆமோதிப்பாகச் சொன்னேன். “இந்தக் கோடை திரும்பவும் வாருங்கள்.” என்ற ஹெர் டபுள்யூ கைகுலுக்கினார். “பெர்லினில் கோடைக்காலம் ஒரு அற்புதக்காட்சி. கோடையில் இந்த இடத்தில் துருக்கியச் சமையல் மணக்கும், குழந்தைகள் சிரிப்பும், இசையும், பியருமாக இருக்கும்! அதுதான் பெர்லின்.” “திரும்பவும் வர நான் பெரிதும் விரும்புகிறேன்,” என்றேன். “கன், ஃப்ராங்ஃபர்ட்!” தலையைக் குலுக்கியபடி ஹெர் டபுள்யூ திரும்பவும் சொன்னார். இவ்வாறாக ஹெர் டபுள்யூவின் அந்தரத் தோட்டம் கார்ஸ்பர்க் வானத்தில் வெறும் எட்டு அங்குல உயரத்தில் மிதந்தபடி, கோடையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
-----------
ஆங்கிலத்தில் கீத் லெஸ்லி ஜான்சன்
நன்றி: கல்குதிரை, 2015.
(படம்:Avaya_ArtMuseum2)
No comments:
Post a Comment