Monday, 2 July 2012

மகான் படால் சந்து 27ஆம் எண் வீட்டிலிருந்து; தாகூர் சிறுகதைகள்-மதிப்புரை.


                                                  

மகாகவி, தேசியகீதம் தந்தவர், கவிதை, நாடகம், புனைவுகள், கட்டுரை, ஓவியம்  இவற்றில் பேரளவில் ஆக்கங்களை உருவாக்கியவர், நோபல் பரிசு பெற்றவர் என ரவீந்திரநாத தாகூரின் பிம்பம் மறுபரிசீலனைக்குள்ளாக்கவியலாத அளவுக்கு  இலக்கியப் புனிதம் மிக்கது. சமரசப் புள்ளியொன்றில் இந்திய இலக்கியத்தைச் சுட்டும் ஒட்டுமொத்த முகமாகவும் தாகூர் அறியப்படும் சாத்தியம் இப்போதும் உண்டு. கறாரான விமர்சன அளவுகோல்களை மீறி மேலெழும் படைப்புகளை அவர் தந்தார் என்றபோதும் அவர் படைப்புகள் நோபல் பரிசு உள்ளிட்ட அவரது பெருமைகளுக்கும் பிரபல்யத்துக்கும் முழுமையும் நியாயம் செய்யாதவை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. காலங்களாக பெரும்பான்மையும் கூர்மையான பார்வைகளின்பாற்படாத கல்விப்புல செயல்பாடுகளில் மட்டுமே தாகூரது படைப்புகள் முக்கியத்துவம் தந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தாகூரது படைப்புகளின்றி இந்தியப் பல்கலைக் கழகங்களின் ஆங்கிலப் பட்டப்படிப்புக்கான (இந்திய ஆங்கில இலக்கியம்)  பாடத்திட்டங்கள் முழுமையடைவது இல்லை என்பதும் இங்கு கவனிக்கத் தக்கது. 

தாகூரது இலக்கிய ஆக்கங்களுள் அவரது சிறுகதைகளுக்கு முக்கிய இடம் உண்டு. தன் வாழ்நாளில் அவர் எழுதியவை நூற்றுச் சொச்சம் கதைகள். இச்சிறுகதைகள் வழியாக நாம் கண்டடையும் தாகூர் ஆச்சரியமூட்டும் வகையில் கூர்ந்த அவதானிப்புடன் மனித உணர்வுகளை அவற்றில் காணும் சிடுக்குகளை, நிச்சயமான வாழ்வின் ஓட்டம் மனிதருள் பதித்துச் செல்லும் விரும்பத்தக்கதும், விரும்பத்தாகததுமான வடுக்களை என யதார்த்தமுடன் லாகவமாகவும் நயமாகவும் மொழிக்குள் படைத்துக் காட்டுபவராக இருக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்ட தாகூரின் கதைகளை இன்று ஒரு நூறாண்டுக்கும் அப்பால் நின்று வாசிக்கையிலும் அவற்றுள் நாம் லயித்து ஆழ்ந்து போகச் செய்பவையாக  இருப்பதே இக்கதைகளின் வெற்றி.

மறைந்த த.நா.குமாரஸ்வாமி அவர்களால் நேரடியாக வங்க மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்க்ப்பட்ட தாகூரின் பத்துச் சிறுகதைகள் அடங்கிய  தொகுப்பை ‘தாகூர் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. சா.கந்தசாமி இவற்றைத் தொகுத்துள்ளார்.

தொகுப்பின் முதல் கதையான ‘காரும் கதிரும்’ கதையில் மெத்தப் படித்த இளைஞனான சசிபூஷணனிடத்தில் சிறுமி கிரிபாலாவுக்கு காதல் முகிழ்க்கிறது, சசிபூஷணன் அதனை உணரத் தொடங்கும்போது கிரிபாலா இன்னொருவரது மனைவியாகி விடுகிறாள் (இத்தொகுப்பில் கதைநாயகிகள் சிறுமிகள் என சுட்டப்படுவது மொழிபெயர்ப்பில் உண்டான கவனக்குறைவு என ஒருவர் நினைக்கக்கூடும். கதைகள் எழுதப்பட்ட காலகட்டத்தில் வழக்கத்திலிருந்த பால்ய விவாக முறையில் சாதாரணமாக எட்டு, பத்து வயதையுடைய பெண் குழந்தைகளுக்கெல்லாம் மணமுடிப்பது இயல்பானவொன்று). ஒரு நாவலுக்குரிய விரிவை தன்னுள் அடக்கிய இக்கதை விதியினால் பந்தாடப்பட்டு நொந்து அலையும் சசிபூஷணன் கைம்பெண்ணாகிவிட்ட கிரிபாலாவிடம் வந்து சேரும் காவியத் துயருடன் நிறைவுகிறது. கிரிபாலா பேதைச் சிறுமியாக குறும்புமிக்கத் தன் விளையாட்டுத் தனங்களை சசிபூஷணனிடத்தில் நிகழ்த்திக் கொண்டிருக்கையிலேயே அவற்றுள் மெல்லக் காதலரும்பி வேர்கொள்ளத் தொடங்குவது அவ்விளையாட்டுகளின் போக்கிலேயே விவரிக்கப்படுகிறது. ‘டோரியா’ சிற்றாடை கட்டிய சிறுமியாக நாவற்பழங்களைத் தின்று அதன் கொட்டைகைள உமிழ்ந்தபடி அவனோடு சதா சண்டையில் ஈடுபட்டவளாய் இருக்கும் கிரிபாலா ஒருநாள் மணப்பெண்ணாகி சட்டென சசிபூஷணன் பார்வையிலிருந்தும் நம் பார்வையிலிருந்தும் மறைந்து போகிறாள். இறுதியில் விதவைக்குரிய வெள்ளையுடை அணிந்தவளாக விளையாட்டுத்தனங்கள் அகன்று முதிர்ச்சி குடிகொண்ட ஆனால் துயர் நிறைந்த ஓர் ஆன்மாவாக சசிபூஷணன் அவளைக் காண்கிறான். இக்கதையின் ஓட்டத்தில் சசிபூஷணன் ஆங்கில துரைமார்களது கொடுமைகளைக் கண்டு வெகுண்டெழுபவனாக இருக்கிறான். கிரிபாலாவின் தந்தை ஹரகுமார் ஒரு ஆங்கிலேய துரையால் அவமானத்துக்குள்ளாகும்போது வழக்கறிஞனான அவன் அவருக்காக நீதிமன்றம் சென்று வழக்காடுகிறான். பிறிதொரு சமயம் மீனவர்கள் வலையை அறுத்த இன்னொரு வெள்ளைக்கார துரையை அடிக்கவும் செய்கிறான். இதனால் வழக்கில் சிக்கி பல ஆண்டுகளை சிறையில் கழிக்கநேர்ந்து நைந்துபோய் வெளியே வருகிறான். மாஜிஸ்ட்ரேட் ‘அவன் காங்கிரஸ்காரனா’ என சசிபூஷணனைப் பற்றிக் கேட்பதற்கு ஹரகுமார் பொய்யாக ‘ஆமாம்’ என்று சொல்கிறார். இருப்பினும் சசிபூஷணது இந்த ஆங்கிலேய எதிர்ப்பு, அக்காலகட்டத்தில் வலுவுடன் விளங்கிய சுதந்திரப் போராட்டத்தின் சாயம் பூசப்படாமல்  இயல்பாக கதையின் போக்கிலேயே சொல்லப்படுகிறது. சசிபூஷணன், கிரிபாலா தவிர்த்து இக்கதையில் குறிப்பிடத்தக்க பாத்திரம் கிரிபாலாவின் தந்தையும் ஜமீன் காரியஸ்தருமான ஹரகுமார். தனக்குக் அடங்காத குடியானவன் ஒருவன் மீது பொய்யாக வழக்குப் போட  சசிபூஷணனிடம் கேட்க அவனோ மறுத்துவிடுகிறான். தன் சுயலாபத்துக்காக எதையும் செய்யத் துணியும் அவர் பின்னால் தனக்கு உதவ வந்த சசிபூஷணனக்கு எதிராக வேலை செய்யவும் தயங்குவதில்லை.

கிரிபாலாவின் பாத்திரத்தை நினைவூட்டும் வகையில் அமைந்த மிருண்மயி பாத்திரத்தை மையமாகக் கொண்ட கதை ‘இனிது முடிந்தது’ பெண்ணுக்குரிய அடக்கமும் நாணமுமற்றவளாக பிடாரியென குறும்புகள் செய்து சுற்றித் திரியும் மிருண்மயியை எப்படியோ பட்டப்படிப்புப் படித்த அபூர்வ கிருஷ்ணனுக்குப் பிடித்துப்போகிறது. தாயின் எதிரப்பையும் மீறி அவளைத் திருமணம் புரிந்துகொள்கிறான். திருமணத்துக்குப் பிறகும் அவள் ஊர் சுற்றித் திரியும் சிறுமியாகவே இருக்கிறாள். ஆரம்பத்தில் இதுபற்றி மனக்கவலை கொள்ளும் அபூர்வகிருஷ்ணன் பிறகு அவள் வழியிலேயே சென்று அவளைத் தன்வழிக்கு கொண்டுவர முயற்சிக்கிறான். மிருண்மயியின் திருமணத்துக்கு வர இயலாது போன அவளது ஏழைத் தந்தை ஈசான மஜூம்தார் அவளுக்கு ஆசி கூறி கடிதம் எழுதுகிறார். கடிதத்தைக் கண்டதும் அப்பாவைப் பார்க்வேண்டும் என அடம் பிடிக்கிறாள். அவள் மாமியார் கண்டிப்புடன் முடியாது என மறுத்துவிட இரவு எல்லோரும் உறங்கிய பின் தனியே அப்பாவைப்பார்க்க தொலைதூரப் பயணம் கிளம்புகிறாள். தெரிந்த ஒருவரால் மீண்டும் வீட்டுக்குக் கொண்டுவிடப்படும் அவளை பிறகு அபூர்வகிருஷ்ணனே தந்தையிடம் அழைத்துச் செல்கிறான். தந்தையைக் காணச் செல்லும் பயணம் அவளுள் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. வீடு திரும்பியவள் புதிய பெண்ணாகிறாள்.ஆனால் மேல்படிப்பை முன்னிட்ட அபூர்வ கிருஷ்ணனின் கல்கத்தா வாசம் அவர்களைப் பிரிக்கிறது. இருவரும் பிரிந்து காதலில் தவிக்க இறுதியில் ஒருவித நாடகத் தன்மையுடன் கதை ‘இனிதே முடிகிறது’. குறும்பும் விளையாட்டுமான சிறுமியொருத்தி கணவனது அணுசரணைமிக்க அரவணைப்பில் காதலும் அன்பும் கடமையுணர்வும் மிக்க பெண்ணாய்த் தகையும் மாற்றம் இக்கதையின் அடிநாதம்.

‘அதிதி’ கதையின் தாராபதனை கிரிபாலா மற்றும் மிருண்மயியின் ஆண்பாற் வடிவமாக ஒருவர் காணலாம். அழகும், திறமைகளும், நல்லெண்ணமும், யாருக்கும் உதவும்  மனப்பாங்கும் கொண்டவனான தாராபதன் ஓரிடத்தும் நிரந்தரமாகத் தங்கிவிடாமல் ஆற்றோட்டத்தில் மிதந்துசெல்லும் புஷ்பம் போல தொடர்ந்து புதிய இடங்களை புதிய உறவுகளைத் தேடி பயணிப்பவனாக இருக்கிறான். கடைசியில் மதிலால் பாபு குடும்பத்தில் அவன் ஐக்கியமாகி அவரது மகள் சாருசசியை மணமுடிக்குமளவுக்கு செல்லும்போது அவனது அதிதி வாழ்வு முடிவுக்கு வந்ததாய் நாம் எண்ணுகிறோம்.ஆனால் திருமணத்துக்கு முன்பாக தன்னைப் பிணைக்கப் பார்த்தவற்றிடமிருந்து விலகி ‘அன்பும் ஆதரவும் மீறிய பரந்த உலகினிடையே எங்கோ மறைந்து போகிறான்’ அவன். தாராபதன் ஒரு நிரந்தர அதிதி. லௌகீகத் தளைகளுக்குள் அகப்பட்டுக்கொள்ளாமல் எப்போதும் சுதந்திர வெளிக்குள் சஞ்சரிக்க விரும்புகிற உலகையும் இயற்கையையும் நோக்கி விரியும் ஆன்மாவைக் கொண்ட ஒருவனை தாரபதன் பாத்திரம் வழியாக சித்தரித்துக் காட்டுகிறார் தாகூர்.

இத்தொகுப்பின் ‘காபூல்காரன்’ கதையை ஒருவர் அவ்வளவு எளிதில் கடந்து போய்விட முடியாது. ஐந்து வயது பெண்குழந்நை மினிக்கும் உலர்ந்த திராட்சை முதலானவற்றை விற்கும் காபூல் வியாபாரியான ரஹமத்துக்குமிடையே ஒரு பிணைப்பு உருவாகிறது. ரஹமத்துக்கு குழந்தைகள் விரும்பும் உருவம் கிடையாது. சொல்லப்போனால் முதலில் அவனது நெடிய உருவையும் தாடியையும் கண்டு மினி அஞ்சவே செய்கிறாள். ஆனால் அவர்களிடையேயான குறும்பும் விளையாட்டும் தொனிக்கும் வாஞ்சைமிகு உரையாடல்கள் மூலமாக மெல்ல உரமேறி ஒரு உறவு திடப்படுகிறது. ரஹமத் மினியை வந்து சந்தித்துப் பேசிவிட்டுப் போகாத நாட்கள் ஆபூர்வம். இவர்களுக்குள் அப்படி என்னதான் உறவோ என அவள் தந்தை வியக்க மகளை இந்த காபூல்காரன் மயக்கிக் கடத்திக்கொண்டு போய் தன் ஊரில் அடிமையாக விற்றுவிடுவானோ என்ற அச்சம் மினியின் தாய்க்கு. ஆனால் மினிக்கும் ரஹமத்துக்குமான உறவு ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவுதான். விதிவசத்தால்  கொலையொன்றைப்  புரிந்துவிடும் ரஹமத் சிறையில் வருடங்களைக் கழித்துவிட்டு வெளியே வந்ததும் முதல் காரியமாக மினியை சந்திக்க வருகிறான். அங்கு மினி மணப்பெண் கோலத்தில் நிற்கிறாள். மினியின் தந்தை அவளைச் சந்திக்க முடியாது எனச் சொல்லும்போது மினியின்  வயதையொத்த தன் மகளைப் பற்றியும் மினியின் உருவில் தன் மகளைத் தான் கண்டுவந்ததையும் உருக்கமுடன் விவரிக்கிறான் ரஹமத். அவ்விடத்தில் மகளைப் பிரிந்திருக்கும் துயரையும், பிரியப்போகும் துயரையும் அனுபவிக்கும் இரண்டு தந்தையரும் தம்மிருவரையும் ஒரேவிதமான கையறுநிலையில் காண்கின்றனர். உறவினரது எதிர்ப்பையும் மீறி மணப்பெண் மினியிடம் ரஹமத்தை அழைத்து வருகிறார் மினியின் தந்தை. மினியைக் கண்ட நிம்மதியோடு ரஹமத் வெளியே வருகிறான். அப்போது மகளைப் பிரியப்போகும் தந்தை மகளைப் பிரிந்திருக்கும் தந்தைக்கு பெருந்தொகை கொடுத்து உடனே காபூல் போய் உன் மகளைப் பார் எனச் சொல்கிறார். தந்தை-மகள் உறவை வெகு நுட்பமாய் சித்தரிக்கிற, சாகாவரம் பெற்ற கதை இது.

ஒரு வேலையாளாக போஸ்ட் மாஸ்டருக்குப் பணிவிடைகள் புரியும் ‘போஸ்ட் மாஸ்டர்’  கதையின் ரதன் வெளியே கடமையையே கருத்தாய்க்கொண்ட பணியாளாகவும் உள்ளே உணர்வுகள் நிறைந்த ஒரு பெண்ணாகவும் மனப்போராட்டத்துக்கு உட்படுபவள். ஆனால் கடைசியில் போஸ்ட் மாஸ்டர் தன் மனதின் காதலையறியாது தன்னைப் பணியாளாய் மட்டுமே பார்த்திருந்திருக்கிறார் என்று உணர்ந்து மருகுகிறாள். இதில் பாவப்பட்ட ரதனுக்காக வருந்தும்வேளை  நாம் போஸ்ட் மாஸ்டரைக் குற்றம் சொல்லவும் தோன்றுவதில்லை. விதியின் ஓட்டத்தில் மனதின் ஆசைகள் குறுக்கு மறுக்காய்ப் பாய்ந்து பல நேரங்களில் தீராத சஞ்சலத்தில்தான் நம்மைக் கொண்டுசேர்க்கிறது. இந்தக் கதையில் ரதன் வந்து நிற்குமிடமும் அதுதான்.

இன்றளவும் அதிகம் பேசப்படும் ‘மனைவியின் கடிதம்’ கதை குடும்ப அடக்குமுறை எனும் வெளித்தெரியாத ஆனால் தீவிரமான ஒரு வன்முறையை எதிர்க்கத் துணியும் ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய பெண்ணின் எண்ணவோட்டங்களைப் பதிவு செய்கிறது. கதைநாயகி  மிருணாளின் துணிவை வியக்கும் அதே நேரம் இன்று நிலைமையில் பெரும் மாற்றங்கள் வந்துவிட்டதா என்ற வினாவை எழுப்பவும் இக்கதை தவறுவதில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டு வங்கப் பெண்களது நிலையினை இக்கதை கண்முன் நிறுத்துகிறது. மிருணாள் தான் அடக்கப்பட்டிருக்கும் குடும்பமெனும் சிறைக்குள் இருந்தபடியே தனது காலத்தைத் தாண்டிய எண்ணமும் துணிவும் மிக்கவளாக  சக பெண்களுக்கு அபயக்கரம் நீட்டுகிறாள். இறுதியில் தன்னைப் பிணைத்த தளையை விட்டு என்றென்றைக்குமாக வெளியேறுகிறாள். ‘நான், மாகன் படால் சந்தில் 27ஆம் எண்ணுள்ள உங்கள் இல்லத்திற்கு இனி திரும்ப மாட்டேன்’ என்ற வரியில் ஒலிக்கும் தீர்க்கமான கலகக் குரல் ஒரு நூற்றாண்டைத் தாண்டி இன்றும் ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் மனங்களைக் கிளர்த்தும் வல்லமை மிக்கதாய் ஒலிக்கிறது.

‘வாழ்வும் சாவும்’ கதையின் காதம்பினி வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவேயுள்ள புள்ளியில் நின்று அல்லாடுகிறாள். தனக்கு நிகழாத ஆனால் மற்றவரால் நிகழ்ந்துவிட்டதாகக் கருதப்படும் மரணம் அவளைத் திரிசங்கு சொர்க்கத்தில் தள்ளுகிறது.மிருணாளைப் போல தீர்க்க எண்ணம் அவளிடமில்லை. போக்கிடமின்றி கடைசியில் மரணத்திடமே தன்னை ஒப்புக்கொடுத்துவிடுகிறாள்.

‘கல்லின் வேட்கை’ புதுமைப்பித்தனின் ‘காஞ்சனை’யை நினைவூட்டுகிறது. ‘படித்துறையின் கதை’ பால்யத்தில் விதவைக் கோலம் பூண்டவளான குஸூமா தனது உணர்ச்சிகளின் சுழலில் சிக்கி கடைசியில் கதையை விவரிக்கும் படித்துறை சாட்சியாக ஆற்றின் சுழலுக்குத் தன்னைக் கொடுத்துவிடுகிறாள். ‘ராஸாமணியின் பிள்ளை’, ‘காரும் கதிரும்’ கதையைப் போலவே ஒரு நாவலைத் தன்னுள் அடக்கிய கதை. நல்ல காலத்தை நோக்கிய எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போகும் அவநம்பிக்கையும் பாத்தியதையானவை காலம் கடந்தேனும் எப்படியும் நம்மை வந்தடையும் என்ற நம்பிக்கையும் கலந்த துயரச் சித்திரம் இக்கதை.

வங்கமொழியின் துவக்க காலச் சிறுகதைகளான தாகூரின் கதைகள் அம்மொழிக்கு அவர் தந்த கொடையாகவே கருதப்படுகின்றன. இக்கதைகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டு வங்காளமும் அதன் மக்களும்  மொழிச்சித்திரமாய்த் தீட்டப்பட்டிருக்கிறார்கள்.

இச்சிறுகதைகள் வழியே அவர் கட்டமைக்கும் உலகம் பேரளவில் ரம்மியமானது. வருத்தமும், துயரமும் நிகழுகையில் கூட பின்னணியில் இந்த ரம்மியம் மெல்லப்  பரவியபடியே இருக்கிறது. ஆறுகளில் நிகழும் படகுப் பயணங்கள், இயல்பான இயற்கை வருணனைகள், இவற்றோடு இயைந்த கவித்துவம் கொண்ட மொழியும் இதை சாத்தியமாக்குகின்றன. குறும்பும் விளையாட்டுமான சிறுபெண்களது உலகம் (‘காரும் கதிரும்’, ‘அதிதி’, ‘இனிது முடிந்தது’) வளர்ந்த பெண்களது கடமைகள்,கட்டுப்பாடுகள் அழுத்தும் உலகம் (‘மனைவியின் கடிதம்’, ‘ராஸமணியின் பிள்ளை’), நுட்பமான பந்தத்தின்பாற்பட்ட தந்தை- மகள் உலகம் (‘காபூல்காரன்’,’இனிது முடிந்தது’) ஆகியவை இக்கதைகளில் வலுவாக இடம்பெறுகின்றன.

கூர்ந்த அவதானிப்பும், விமர்சனம் கலந்த சமூகப்பார்வையும் கொண்டு நவீனத்துவக் கதைப்பாணியில் சொல்லப்பட்ட இக்கதைகள் தாம் அடங்கிய சட்டகத்துக்கு விசுவாசமாக இருப்பவை. சில மீறல்கள் மூலம் சில கதைகள் வேறொரு தளத்துக்கு நகர்ந்திருக்க முடியும்.(படித்துறையின் கதை’யில் குஸூமை அந்தத் துறவியோடு சேரவிடாமல் தடுப்பது எது?, ஏன் ரதன் தன் மனதை போஸ்ட் மாஸ்டரிடம் அந்தக் கடைசித் தருணத்திலேனும் சொல்லியிருக்கக் கூடாது?) நூறு ஆண்டுகளுக்கும் முன்பான படைப்புகளை நிகழ்காலத்தின் இலக்கிய அளவீடுகள் முன் வைத்துப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. அதேநேரம் ‘காபூல்காரன்’ போன்ற காலத்தை வென்று நிற்கும் படைப்புகளுக்காக தாகூரை நாம் வியக்காமலிருக்கவும் முடியாது. ஆலன் போ, செகாவ், மாப்பஸான் போன்றோரது வரிசையில் தாகூரை வைப்பதை இதுபோன்ற கதைகள் நியாயப்படுத்தவே செய்கின்றன.

த.நா. குமாரஸ்வாமி அவர்கள் மிகச்சிறப்பாக இக்கதைகளை மொழிபெயர்த்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். தாகூரின் கவித்துவமான மொழிநடை சிறிதும் குன்றாமல் இக்கதைகளில் வெளிப்பட்டிருக்கிறது. தொகுப்பாளர் சா. கந்தசாமியும் தாகூரின் சிறுகதை ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்தும் கதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். முக்கியமான இந்தியச் சிறுகதைகளை சேகரிக்கும் ஒருவர் தவறவிடக்கூடாத தொகுப்பு இது.
-----------------------

நன்றி: 'புதிய புத்தகம் பேசுகிறது' ஜூன் 2012.