போர் பற்றிய
மிக சமீபத்திய
செய்திக்காகக்
காத்திருக்கிறேன்
என் வான்வெளியில் அல்ல
விமானங்கள் சீறுவது
என் தெருவில் அல்ல
குண்டுகள் விழுவது
நொறுங்கித் தரைமட்டமாவது
என் வீடுமல்ல
அகண்ட இப்பிரபஞ்ஞத்தில்
கவனமாய்க் கறாராய்
வகுக்கப்பட்ட
எல்லைகளினுள்
அபாயங்களுக்குத் தப்பி
அரண் கொண்டிருக்கிறது
என் இருப்பு
என் கோப்பைத் தேநீருடன்
என் இருக்கையில்
ஓய்வாய் அமர்ந்து
தினசரியின் ஒரு வரியை
சாதாரணமாய்க் கடந்து விடுகிறேன்
அவ்வரியில் குண்டடிபட்டு
சில நூறுபேர்
இறந்திருக்கிறார்கள்
எந்த நியாயமுமின்றி
ஒரு குழந்தை தகப்பனையோ
சிசுவொன்று முலையூட்டும் தாயையோ
இழந்துவிட்டிருக்கிறது
யாரோ ஒருவர்
சகோதரனையோ
கணவனையோ
பிள்ளையையோ
இழந்து கதறுகிறார்
நாடகமென போர் நிகழும்
ஊடகங்களின்
அபிமான ரசிகன் நான்
மயக்கும் வண்ணத்திலும்
வாசனையிலும்
பெருகி வழிகின்றன
போர்ச் செய்திகள்
சிதறும் தசையும்
ஒழுகும் ரத்தமும்
இடையறாது ஆர்வமூட்ட
அடுத்த அங்கம் எதுவோயென
ஆவல் கொள்கிறேன்
மரவள்ளிக் கிழங்குகளைத்
தோண்டியெடுப்பது போல்
மண்ணிலிருந்து தன் குழந்தைகளின்
உடல்களைத் தோண்டியெடுக்கிறான்
ஒருவன்
தன் அம்மண மேனியில்
குண்டு சிதறிய காயங்களோடு
அழுதுகொண்டிருக்கிறது
ஒரு குழந்தை
போர்ச்சிதிலங்கள் மீது
விளையாடுகின்றனர்
இன்றைய தினத்துக்குத்
தப்பிவிட்ட சிறுவர்கள்
குண்டுகளை விசிறிச் செல்கிறது விமானம்
புகையெழும்பி மூடுகிறது
தொலைக்காட்சித் திரையை
இன்று கொல்லப்பட்டவர்கள்
எண்ணிக்கையைச் சொல்லி
செய்தி வாசிப்பவன் முடிக்கையில்
என் கடைசி மிடறு
தேநீரை உறிஞ்சுகிறேன்
இனிப்பாயும் இருக்கிறது
ரத்தத்தின் சுவை
(‘பிஷப்புகளின் ராணி’ தொகுப்பிலிருந்து)
இயலாமையின் தொலைவிலிருந்தபடி,
போரால் இன்னலுறும் எம் ஈழத் தமிழ்ச் சோதரர்களுக்கு....