Monday, 31 October 2016

செர்வாண்டிஸைக் கைப்பற்றுதல்செர்வாண்டிஸைக் கைப்பற்றுதல்

அந்தோணியோ ஜெர்ஜெனெஸ்கி


இதெல்லாம் தொடங்கியபோது, அதாவது 2070ல் மதமறுப்பாளர்கள் கட்சி பிரிட்டனில் ஆட்சிக்கு வந்தபோது அக்கட்சிக்கு நான் முழு ஆதரவாக இருந்தேன். மத வழக்கங்களை முழுமையாக அவர்கள் தடைசெய்யத் திட்டமிட்டபோது அது எனக்கு மிக மகிழ்வளித்தது. நான் ஒரு அறிவுஜீவி சூழலில் வளர்க்கப்பட்டேன். எந்தக் கடவுளையும் நம்பாத, கடவுள் என்ற ஆளை ஒரு இரட்டை இலக்க நுண்ணறிவு ஈவு கொண்ட நபருடனோ அல்லது வெறிபிடித்த ஒரு மனித வெடிகுண்டுடனோ தொடர்புபடுத்திப் பார்த்த குடும்பத்தின் பிள்ளை நான். மதமறுப்பாளர்கள் கட்சி ஆரம்பிக்கப்பட்ட உடனேயே அதற்கு நான் வாக்களித்தேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நான் ஒரு கலாச்சாரக் காவலன் - ஆசிரியர்களாக இருப்பவர்கள் அப்படித்தான் இருக்கவேண்டும் என நான் எண்ணுகிறேன் - அதோடு நான் காணநேர்ந்த சில திட்டங்கள் உண்மையானால், ஏதாவது செய்தேயாக வேண்டும்.

இந்தக் கதையின் தொடக்கம் உண்மையை அடிப்படையாகக் கொண்டது இல்லை, என் வீட்டில் நடந்த விருந்து உபசாரத்தின்போது வெளிப்பட்ட சில நகைச்சுவைகளிலிருந்து அது உருவானது. மதமறுப்பாளர்கள் கட்சி (அது பதினைந்து ஆண்டு காலமாக ஆட்சியில் இருக்கிறது) மிகுயெல் தெ செர்வாண்டிஸின் ‘டான் குவிக்ஸாட்டை’ திருத்தி எழுதத் திட்டமிட்டுள்ளதாக  ஜோசப் சொன்னான். தீவிர மதமறுப்பாளர்கள் கிழவர் அலோன்சோ குவிக்ஸானோ போர்வீரர் டான் குவிக்ஸாட்டாக மாற முடிவெடுக்கும்  முன் அவரது  நூலகத்தை மாற்றியமைப்பார்கள். மரியாதைமிக்க சாகசங்கள், துயரில் வாடும் இளம் மங்கையர், கெட்ட மந்திரவாதிகள்  பற்றிய அதிபுனைவு நூல்களின் இடத்தில் அறிவியல் கட்டுரைகள் கொண்ட நூல்களை வைப்பார்கள். இந்தப் புத்தகங்களே குவிக்ஸானோவைக் கவரும். எண்கள் மற்றும் கணித நிரூபணங்களால் நிறைந்த இந்த நூல்கள் புத்தகங்களின் உலகுக்கும் யதார்த்த உலகுக்கும் இடையே தொடர்பை உண்டாக்கும்.

செர்வாண்டிஸ் நாவலின் இந்தப் புதிய வடிவத்தில், அப்போது, எல்லாமே தலைகீழாக இருக்கும். எப்போதும் விமர்சகர்களால் ‘பொது அறிவு மற்றும் தெளிந்த சிந்தனையை’ பிரதிபலிப்பவனாகக் குறிப்பிடப்படும் சான்ச்சோ பான்ஸாதான் அலோன்சோ குவிக்ஸானோவை சாகசப் பயணத்துக்குத் தூண்டுபவனாக இருப்பான். மறக்கமுடியாத அந்த காற்றாலை காட்சியில் சான்ச்சோ சொல்வான்: ‘அங்கே பார் டான் குவிக்ஸாட்டே, ராட்சசர்கள்!’. ‘த்சொ, த்சொ’ என்ற சத்தம்தான் பதிலாகக் கிடைக்கும். ‘அவை அப்படிப்பட்டவையல்ல சான்ச்சோ, அவை வெறும் காற்றாலைகள். நீ விரும்பினால் அதன் இறக்கைகள் ஒவ்வொன்றினது வீச்சைக் கண்டறியவும், அவற்றின் வேகத்தின் சமன்பாட்டைக் கணக்கிடவும் என்னால் முடியும். நான் அதைச் செய்ய விரும்புகிறாயா? என் பெயர் டான் குவிக்ஸாட்டே இல்லை, அலோன்சோ குவிக்ஸானோ’. பாவப்பட்ட சான்ச்சோ, சாகசங்களுக்காக ஏங்குபவன் ஆண்மையற்றவனுக்கு  மனைவியாகிவிட்ட பெண்ணைப் போல ஏமாற்றத்துக்கு ஆளாகிறான். இந்த நகைச்சுவையைச் சொன்ன நண்பர் சொன்னார். இந்த மாற்றங்களைச் செய்வதன் மூலம் செர்வாண்டிஸின் தொள்ளாயிரம் பக்க நாவலை கச்சிதமானதாக்க முடியும். ஐந்து வயதிலிருந்தே மிகைச் செயல்பாட்டுக்கும் கவனச்சிதைவுக்குமாக தங்கள் பெற்றோரால் கட்டாயப்படுத்தி மருந்து புகட்டுப்பட்டு வரும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அது உகந்ததாக இருக்கும்.

இந்த இடம் வரைக்கும் அது, விருந்தின்போதான சுவையற்ற ஒரு கதை, நன்றாக இருந்தது. அரசாங்கத்தைப் பற்றி தவறாகப் பேசுவது சுவாசிப்பதைப் போன்றது, எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பது ஒரு பொருட்டல்ல. அது அப்படித்தான்.

ஒருநாள் சிற்றுண்டிச் சாலையொன்றில் சற்றுமுன் ஒரு அரசு உளவாளி அமர்ந்த மேசையில் நானும் அமரும்படியானது. அந்த நபர் தனது கைப்பெட்டியை மறந்து சென்றுவிட்டார். என்னால் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.அதில் என்ன இருக்கிறதென்று பார்க்க வேண்டும். மின்னணு புத்தகங்கள் மற்றும் இணைய உபகரணங்களுக்குப் பதிலாக, அடைசலாக இருந்த அந்தப் பெட்டியில் ஐநூறு பக்கங்கள் கொண்ட பெரிய அளவு புத்தகம் ஒன்று இருந்தது. காகிதத் தாள்களைப் பார்ப்பது எவ்வளவு விசித்திரமாயிருக்கிறது. இந்த முறையில் ஆவணங்கள் வைத்திருப்பது மின்னணு முறையில் வைத்திருப்பதைவிட பாதுகாப்பானது என்பதால் அரசாங்கம் இதைத் தொடர்ந்து பின்பற்றுகிறது. அதை இணையத்தில் வெளியிட முடியாது. ஏதாவது அவசரம் அல்லது யாரேனும் ரகசியத்தைக் கசியவிட்டுவிட்டால் பிரதிகளை அப்படியே எரித்துவிடலாம். அச்சிட்ட பிரதிகளை பகிர்வதும் மிகவும் சிரமமான காரியம்.

யாராவது என்னை கவனிக்கிறார்களா என சுற்றிலும் பார்த்தேன். சிற்றுண்டிச் சாலை கிட்டத்தட்ட வெறிச்சோடியிருந்தது. சுவாராஸ்யமற்றவன் போல காட்டிக்கொண்டு புத்தகத்தின் பக்கங்களை வேகமாகப் புரட்டினேன். சட்டென்று ‘முற்போக்கு இலக்கிய மாற்றங்கள்’ என்ற தலைப்பில் திட்டங்கள் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தேன். அதில் உபதலைப்புகள் ஒன்றில் ‘டான் குவிக்ஸாட்’ என இருப்பதையும் ஆச்சரியத்துடன் பார்த்தேன். இத்தலைப்பை ‘செர்வாண்டிஸைக் கைப்பற்றுதல்’ எனக்கூட வைத்திருக்கலாம். வரும் ஆண்டுகளில் படிப்படியாக இந்நாவலை (இப்போது கிடைக்கும் பதிப்புகள் யாவுமே மெய்நிகர் பதிப்புகள்) மாற்றி எழுதுவதுதான் திட்டம். மெதுவாகச் செய்வதால் இந்த மாற்றங்கள் யாருக்கும் தெரியவராது, கூட்டு நினைவில் இந்த விவரங்கள் மறக்கப்பட்டுவிடும். நடக்கக்கூடியதுதானா? முதலில் இப்படித்தான் நான் நினைத்தேன். ஆனால் பிரிட்டனில் அச்சுப் பதிப்புகள் அருகிவிட்டதையும் காலப்போக்கில் இலக்கிய நிபுணர்களின் எண்ணிக்கை அடியோடு குறைந்துவிட்டதையும் நினைத்துப் பார்த்தேன். அதோடு குடியேற்றத்துக்கு எதிரான சட்டங்களால் இங்கே ஸ்பானிஷ் பேசும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.

திருத்தி எழுதுவது என்பது சுவாரஸ்யமானது (ஆக்கப்பூர்வமானதும்கூட). நாவலின் 2.0 வடிவத்தில் குவிக்ஸாட்டே ஒரு பைத்தியமா, காதல் வயப்பட்டவனா, தொலைநோக்கு கொண்டவனா, தானே கற்பித்துக்கொண்டவொரு உலகில் வாழ்பவனா போன்ற விவாதங்கள் ஏதும் கிடையாது. அவனுக்கு கிட்டப்பார்வை மட்டுமே. ஆமாம். புத்திக்கூர்மைமிக்க அந்த கணவான் காற்றாலைகளை ராட்சசர்களாகவும், ஆடுகளை போர்வீரர்களாகவும் கண்டது பைத்திய நிலையினால் அல்ல அவருக்குப் பார்வைக் குறைபாடு இருந்த காரணத்தால்தான். அதுதான் சரி, குவிக்ஸாட்டேவுக்கு கிட்டப்பார்வை. நான் அதை இரண்டு முறை படிக்க வேண்டி இருந்தது, நம்புவதற்குக் கடினமாக இருந்தது. ஆனால் (நாவலில் சேர்க்கப்படவிருந்த) தர்க்கங்கள் வலுவாக இருந்தன. இந்தக் காலகட்டத்தை நினைத்துப் பாருங்கள்: இன்றைய காலகட்டத்தோடு ஒப்பிட்டால் அவர் பழங்காலத்தைச் சேர்ந்தவர். அதோடு தன் வாழ்நாளில் கண்கள் களைத்துப் போகுமளவுக்கு ஏராளம் வாசித்தவர். பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மூக்குக் கண்ணாடிகள் பொதுவாகப் புழக்கத்தில் இல்லை, (படங்களைப் பாரக்கையில்) குவிக்ஸாட்டே அவற்றைப் பயன்படுத்தவில்லையென்பதும் தெளிவு. அதனாலேயே நெருங்கிச் செல்கையில் அந்த ராட்சசர்கள் வெறும் காற்றாலைகள் என்பதை உணருகிறார். கிட்டப்பார்வை என்பது தூரப்பார்வைக் குறை.

அந்தப் பெட்டியை மூடினேன், என் உடல் பதறியது. இந்தக் காட்சி தொடர்ந்து எப்படிப் போகிறது என்பதை அறிந்துகொள்ள நான் விரும்பவில்லை. தோல்வி கண்ட அந்த வீரனுக்கு சான்ச்சோ கண்ணாடி வாங்கித் தருவானா?

இன்னொரு எஸ்பிரஸ்ஸோவுக்கு ஆர்டர் செய்த நான் உடனே அதை ரத்து செய்தேன். அதிகம் காபி குடித்தால் அது என்னை அதிகம் பதற்றத்துக்குள்ளாக்கும். வெயிட்டர், டபுள் விஸ்கி ஒன்று, தயவுசெய்து.

மறுபடியும் பெட்டியைத் திறந்தேன். ‘முற்போக்கு இலக்கிய மாற்றங்கள்’ பகுதியிலிருந்து நகர்ந்து ‘பரிசோதனை எண் 34’ என்ற துணைத் தலைப்பை வாசித்தேன்.

இங்கு செர்வாண்டிஸ், குவிக்ஸாட்டே பற்றி நேரடியாக எதுவுமில்லை ஆனால் குருட்டுத்தன்மை பற்றி பேசப்பட்டது, இன்னொரு வகையான கிட்டப்பார்வையை வைத்து. அது விமர்சனக் குருட்டுத்தன்மை. இலக்கிய விமர்சனத்துக்கான  முதல் (தோல்வியுற்ற) மென்பொருளை உருவாக்கும் பரிசோதனை பற்றிய அறிக்கை அது.

இலக்-விமர் நிரலில் பயனாளர் ஒரு முழுநீளப் புத்தகத்தைத் திறந்து ‘கிரகித்துக்கொள்’ என்ற பொத்தானை அழுத்தி, பிறகு மார்க்ஸியம், அமைப்புவாதம், பின்-அமைப்புவாதம் உள்ளிட்ட பதினைந்து போக்குகளில் ஒன்றைத் தேர்ந்துவிட்டு ஐந்து நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.  

வகை பிரிக்கப்பட்ட புத்தகப் பகுப்பாய்வுகள் பற்றிய அறிக்கைகளும் இருந்தன. முதலில் நான் பார்த்தது-அதனை என் மூளையிலிருந்து வெளியேற்ற வழியில்லை- ‘டான் குவிக்ஸாட்டே’. ஆச்சரியப்படும்விதமாக பகுப்பாய்வு முடிவுகளில் ஒன்று நாவலை திருத்தி எழுதப் பரிந்துரைப்பதற்கு இணையாக இருந்தது. அப்படியானால் அந்த கிட்டப்பார்வைவாதம் ஒரு சரியான இலக்கிய விளக்கம்தானா? மெய்நிகர் விமர்சகரின் கருத்தைக் கொண்டே இந்த திருத்தி எழுதும் திட்டம் உருவாகியிருக்க வேண்டும்.  எது முதலில் வந்தது என்பதைத் தெரிந்துகொள்ள வழியே இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அதுவொரு விஷயமே இல்லை.

நிரல் எழுதுபவர்களை மென்பொருள் உருவாக்கும் பணியைக் கைவிட வைத்தது (துணைத் தலைப்பு: தோல்வி) ஜேம்ஸ் ஜாய்ஸின் ‘யுலிசெஸ்’(1922). இந்தப் புத்தகத்தைப் பயனாளர் இலக்-விமர் நிரலில் ஏற்றிய ஒவ்வொரு முறையும் நவீனத்துவத்தின் ஆகச்சிறந்த இந்தப் படைப்பை அறிவியல் புனைவு என அது சொன்னது. இதற்கான ஆதாரம், அந்த மென்பொருள் சொன்னது, நாவலின் கடைசி அத்தியாயத்தில் உள்ளது. வர்ணணையாளர் மாறுவதையொட்டி இந்நாவலின் பதினெட்டாம் அத்தியாயம் புகழ்பெற்றது. ஜாய்ஸ் விலகிக் கொண்டு மோலி ப்ளூமைப் பேசவைக்கிறார். ப்ளூம் நம்பிக்கை வறண்ட நீண்ட தனிப்பேச்சை வழங்குகிறார். இடைவெளியில்லாத, நிறுத்தற்குறிகளற்ற இந்தப் பகுதி அக்காலத்தில் அசிங்கமானதாகக் கருதப்பட்டது. இந்தப் பகுதிதான் ஆதாரம், கணினி சொன்னது, ‘யுலிசெஸ்’ ஹோமரின் ஒடிஸியை மறு ஆக்கம் செய்து  டப்ளினைச் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு யூதரைப் பற்றிப் பேசும் நாவல் அல்ல. உண்மையில் அது மக்களின் நினைவை பாதித்து, அவர்களது தகவல் தொடர்புத் திறனை அழித்து, இடைவெளிகள், நிறுத்தற்குறிகள் இவற்றைப் பயன்படுத்துவதையும், தெளிவான சிந்தனைகளை ஒருங்கிணைப்பதையும் தடுக்கும் மெடம்சைக்கோஸிஸ் என்ற மோசமான வைரஸைப் பற்றிய நாவல். எனவே ‘யுலிசெஸ்’ ரே பிராட்பரியின் ‘மார்ஷியன் கிரானிக்கிள்ஸ்’ போன்ற இருபதாம் நூற்றாண்டின் மிக ஆக்கப்பூர்வமான அறிவியல் புனைவு நூல்களோடு வைத்துப் பார்க்கத் தகுந்த ஒன்று. 

2068ம் ஆண்டு ஜூலையில் இலக்-விமர் திட்டம் கைவிடப்பட்டது. 2076 செப்டம்பரில் தென் கொரியர்கள் இலக்-விமர்2 திட்டத்தை தொடங்கியுள்ளனர். இலக்-விமர்2ன் வெற்றிக்கான வாய்ப்பு 98 சதவீதம் உறுதியானது என்பதுடன் அறிக்கை நிறைவடைகிறது.

இந்த இடத்தில் ஒரேயடியாகப் பெட்டியை மூடிவிட்டு இன்னொரு விஸ்கி ஆர்டர் செய்தேன். ‘என்னவொரு அற்புதமான எதிர்காலம் நமக்குக் காத்திருக்கிறது’ என நினைத்துக் கொண்டேன். சத்தமாகச் சிரித்தேன், என் உடம்பு இன்னொருமுறை தூக்கிப்போட்டது. விஸ்கி வந்தது, ஒவ்வொரு கோப்பை உயர்த்துதலுக்கும் முன் ‘எப்படிப்பட்டவொரு காலத்தில் வாழ்கிறோம் நாம்’ எனக் கூறும் நண்பனை நினைத்து தனியே கோப்பையைக் காற்றில் உயர்த்தி வாழ்த்துச் சொன்னேன். உளவாளியின் பெட்டியில் நான் பார்த்தது மட்டும் உண்மையாக இருந்தால் - அது சற்று விபரீதமாக இருக்கிறது என்பதைத் தவிர்த்து, ஏன் அது உண்மையாக இருக்கக் கூடாது?- யாராவது ஏதாவது செய்தாக வேண்டும். ஒவ்வொரு மிடறாக அருந்த அருந்த எதைச் செய்யவும் சரியான ஆள் நான் இல்லை என்பது உறுதியானதில் நிம்மதியடைந்தேன். அதிகபட்சம் நான் செய்யக்கூடியதெல்லாம் இந்தக் கதையைச் சொல்வது, பரப்புவது. முடிவைப் பற்றிய இந்தக் கதையை. தெருவைப் பார்த்தேன். காலத்தை விரைவுபடுத்துவது போலத் தோன்றிய வலுவான காற்று வீசத்தொடங்கியது. எதிர்காலம் வேக வேகமாக நெருங்கி வருவதைப் பார்த்தேன்.

--------------

அந்தோணியோ ஜெர்ஜெனெஸ்கி(1984): பிரெஸிலின் போர்ட்டோ அலெக்ரியில் பிறந்தவர். இவரது Areia nos dentes - Sand on Teeth (2008) மேற்கத்திய பின்நவவீனத்துவ நாவல். A página assombrada por fantasmas-    A Page Haunte by Ghosts  (2011)  இவரது சிறுகதைத் தொகுப்பு.

நன்றி: கல்குதிரை, 2014.
--------------- 
(படம்: Tilting at Windmills - Don Quixote - Galen Valle - Digital Artist)

No comments: