Thursday 26 April 2012

தீட்டித் தீராத மொழியும் மெல்லிய ஓர் காதல் தூரிகையும்- ஆப்பிளுக்குள் ஓடும் ரயில் (அய்யப்ப மாதவன்)



          ஊற்றுக் கண் தூர்ந்து போகாமல் தொடர்ந்து எழுத வாய்க்கும் கவிஞர்கள் பாக்கியவான்கள். பிரக்ஞை நிலையில் கவிஞனாயிருப்பதும் அந்தக் கவிப் பிரக்ஞையின் ஸ்தூல சாட்சியங்களான கவிதைகளை தொடர்ந்து படைத்தபடியிருப்பதும் எல்லோருக்கும் சாத்தியமாகிவிடாது. இந்த வகையில் அய்யப்ப மாதவன் பெரும் பாக்கியவான். ‘ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்’ இந்த நான்கு ஆண்டுகளில் அய்யப்ப மாதவன் வெளியிடும் ஐந்தாவது தொகுப்பு. (ஒரு ஹைக்கூ தொகுப்பும் சேர்த்து). எஸ்.புல்லட், நிசி அகவல், சொல்லில் விழுந்த கணம் போன்ற அவரது சமீபத்திய கவிதைத் தொகுப்புகள் தந்த அனுபவத்தை முன் வைத்து ‘ஆப்பிளுக்குள் ஓடும் ரயிலை’ அணுக முற்படும் ஒருவருக்கு ஏமாற்றம் உண்டாகலாம். முன்னுரையில் கவிஞரே சொல்வதுபோல் இவை வேறான கவிதைகள். காதலைப் பிரதானப்படுத்திய கவிதைகள் முக்கால் வாசிக்கும் மேல் நிறைந்திருக்கும் இத்தொகுப்பில் முந்தைய தொகுப்புகளின் அய்யப்ப மாதவனை மீதமிருக்கும் கால்வாசி பொதுவான கவிதைகளில் மட்டுமே காண முடிகிறது. அபோதத்தில் மிதப்பது போன்றதான மொழியின் மென் தீற்றலில் தீவிரமிக்கக் காட்சிப் படிமங்களை உருவாக்கி வாசக உணர்வு நிலையைத் தொட்டும் விலகியும் நகரும் வழமையான அய்யப்ப மாதவன் கவிதைகளாக இத்தொகுப்பின் காதல் கவிதைகள் இல்லை என்ற புள்ளியிலிருந்து நாம் ‘ஆப்பிளுக்குள் ஓடும் ரயிலை’ அணுகத் தொடங்கலாம்.
    இக் காதல் கவிதைகளில் ஒரு பெண், ஒரு புகைச்சித்திரம் அல்லது நீரோவியம் போல அசைந்தபடியிருக்கிறாள். மழையாக, காற்றாக, கறுத்த மேகமாக இன்னும் பலவுமாக கவிஞனின் புறவெளியையும் மனவெளியையும் ஆக்கிரமித்தவளாக அவனை சதா புலனின்பக் கனவுகளிலும் தீராத தாபத்திலும் விழுத்தாட்டியபடியிருக்கிறாள். அவனை அவள் வேறொருவனாக்குகிறாள்.
           ‘ஏகப்பட்ட குதிரைகள் பூட்டி இழுத்தோடிய அவன் வாழ்வினைப் பிடித்து நிறுத்துகிறாள்’ (பக்.34) ‘ஆழங்களில் புதையும் உறவின் வல்லமையில் அவனுக்கு புதிதான அகிலத்தைத் தீட்டுதல் சாத்தியமாகிறது’ (பக்.35). ‘வேறொரு உடலாகி புத்துணர்வில் புதியதொரு காலத்தைச் செதுக்குகிறான்’ (பக்.58) மொழியின் மென்னடுக்குகளில் அடங்கிக் கிடக்கும் தாபம் தூரிகைத் தீற்றலாய் வரிகளெங்கும் தாவரத்தின் வனப்பில் மறைந்து கிடக்கும் கனிகளாக தன்னைக் காட்டியும் காட்டாமலும் அலைவுற்றபடியிருக்கிறது. ‘துவண்ட கைகளில் தீண்டிய/ பெண்மையின் விரல் சர்ப்பத்தில்/ நல்நஞ்சு ஊடுருவி சொக்கும் என் மேனி’ (பக் 21). ‘மஞ்சு விரித்த பரப்பினில் பிடித்த பறவைகளில் அவளைக் கொஞ்சுகிறேன்/ மேகத்துண்டில் என் முகமதில் அவள் விழிகளில்/ பிரவகிக்கும் காதலையுணர்கிறேன்/ அந்தியின் ஆரஞ்சு மினுமினுப்பில் அவள் இதழ்களை முத்தமிடுகிறேன்.’ (பக்.29) ‘தோன்றிய பெண் அசைய அசைய/தாள்களில் வாத்சல்யம் பெருகி/ இலைநுனி வடிக்கும் ஒரு துளி நீராகி/ ரம்மியத்தில் வீழ்ந்தேன்(பக். 96) அவள் அவனுக்கு யாவுமாயிருக்கிறாள். ‘மரத்தின் கீழ் மிதந்த இலையோசையில்/ அஞ்சுகத்தின் குரலில் அவளிருந்தாள்/ பச்சைநிறப் பறவையின் சிச்சிறு விழிகளில்/ கண் சிமிட்டி என்னைக் கண்டாள்’ (பக். 32)
      பிறகு ‘ ஒரு நொடியாயினும் அவளற்றுப் போவது யுகங்கள்’ (பக்.28) ‘அப்போது நீயில்லாத சுகமற்ற துன்பங்களில்/ உழன்றிருந்தேன்’ (பக்.40) ‘ சுழலும் பூமி மரங்கள் பறவைகள் காற்று/ மேகங்கள் கடலென யாவற்றின் மீதான/ ஈடுபாடுகளும் அவளில்லாத சூன்யத்தில்/ நினைவைவிட்டு அகல்கின்றன/’ (பக்.28) என அவளற்ற, அவள் அருகாமை சித்திக்காத பொழுதுகளை நொந்தபடி கவிஞன் தாபமேறி மருகுகிறான். கடைசிவரை அரூபமாகவே நின்றுவிடும் அப்பெண் வரிகளுக்கிடையே தன்னை மறைத்துக் கொள்ளும் சாகசம் கற்றவளாயிருக்கிறாள். உருவத்தைக் கலைத்து கலைத்து விளையாடுகையில் பொதுவில் வைக்கும்போதும் கவிஞன் தன் காதலை, காதலியை தனதானதாகவே காப்பாற்றிக்கொள்ள விழைகிறான். வழக்கமாக பளிச்சென்ற வரிகள் இடையோடி சொற்புதிரும் காட்சியனுபவமுமாய் மாறி மாறி விரியும் அய்யப்ப மாதவன் கவிதைகள் இக் காதல் கவிதைகளில் சற்று அடங்கி மொழிப்பரப்பில் இறுக்கமடைந்திருப்பதைக் ஒருவர் காண முடியும். காதலெனும் உன்மத்த உணர்வு கவிதையைச் செலுத்தும்போதும் ஒருவித நிதானம் கவிதைக்குள் வந்துவிடுவது அதிசயமே. இது புதுவிதமான கவி அனுபவத்தை சாத்தியமாக்குகிறது. நவீன கவிதைப் பரப்பில் காதலை ஒருவித தீவிரத்தன்மையுடனும் பிரத்தியேக வசீகரத்துடனும் எழுதிய ஆளுமைகளை யோசிக்கையில் உடன் நினைவுக்கு வருவது யூமா வாசுகியும் கண்டராதித்தனும். இருவரது காதல் கவிதைகளும் அதிகம் பேசப்பட்டவை. அய்யப்ப மாதவனது காதல் கவிதைகள் இவ்வரிசையில் அமர்வதற்கான எத்தனங்களைக் கொண்டிருப்பவை.                  காதலுக்கும் கவிதைக்குமான உறவின் அடிப்படை என்ன? லயித்தலும், சுகித்தலும், கலத்தலும், ஊடுதலும், தாகித்து ஏங்குதலும், நினைத்துத் துயர்கொள்ளுதலுமே காதல். இவற்றுக்கு வெளியே காதலைப்பற்றி எழுதப்படும் கவிதை காதல் செயலின் தேவையற்ற உடன் விளைபொருளன்றி வேறில்லை என்றே தோன்றுகிறது. ஆயினும் அபூர்வத் தருணங்களில் காதலின் ஒளிகூடிய நினைவின் பொற்பரப்பை வருடி உணர்வின் தகிப்புடன் மொழியில் பதிவுறுகிறது காதல் கவிதை. பின் உலகப்பொதுவான அனுபவமாக மாறி தனது இடத்தை காலத்திலும் மொழியிலும் உறுதிசெய்துகொள்கிறது. அப்போது அதன்மீது கவிஞனுக்கும் உரிமையிருப்பதில்லை. கவிதையல்லாது காதலை இம்மட்டும் கொண்டாடிய வேறொன்று உலகிலில்லை. அதேபோல் காதலல்லாது வேறொன்றால் கவிதை இத்துனை அழகும் ஒளியும் கொண்டதில்லை. காதல் உணர்வு நிலையின் தீவிரமும் அதன்பாற்பாட்ட அகக்கிளர்வுகளும் நீரோவியமாய் தீற்றப்பட்டிருப்பதும், மீண்டும் மீண்டுமான வாசிப்பில் அவற்றின் உள்கிடக்கைகள் பெருகிக் கொண்டே போவதுமான அய்யப்ப மாதவனது காதல் கவிதைகளை புதிய வகை மாதிரிகள் என்றே சொல்ல வேண்டும். அதே நேரம் காதலை, காதலியை வனம், மழை, காற்று, வெளி போன்ற இயற்கையின் கூறுகளாகக் கண்டு புலம்பல் மொழியைக் கையாண்டு படைக்கப்பட்ட தன்மையினால் பைபிளின் பழைய ஏற்பாட்டில் காணும் உன்னத சங்கீதங்கள் பகுதியின் காதல் கவிதைகளின் சாயலை இக்கவிதைகள் கொண்டிருப்பதையும் ஒருவர் ஒப்பிட்டு உணர முடியும்.
      காதல் கவிதைகளுக்குப் பிறகு தொகுப்பிலுள்ள பொதுவான கவிதைகளை வாசிக்கையில் ஏனோ சிறிது காலம் பிரிந்திருந்த நண்பனொருவனை மீண்டும் சந்திக்கும் உணர்வு. அர்த்தங்கள் நழுவிச் சென்றபடியேயிருந்து தீர்க்கமான ஒரு சித்திரத்தைச் சென்றடையும் இக்கவிதைகள் ரசனைமிக்க வாசிப்பனுபவத்தைத் தருபவை. ‘காற்றின் மீதே உறங்குகின்றனர்’ கவிதை குழந்தைகள் உலகை அவதானிக்கும்போதே குழந்தைகளாக இருக்க முடியாத வளர்ந்தவர்களின் இயலாமையும் பதிவு செய்கிறது. ‘உள்ளும் வெளியும்’ கண்ணாடியுடனான குழந்தையின் உறவைப் பற்றியது. இக்கவிதை இதே போன்றதொரு சங்கர ராமசுப்ரமணியன் கவிதையை நினைவூட்டவும் தவறவில்லை. ‘கதவுகள் விற்பனைக்கு’, ‘ஆப்பிளுக்குள் ஓடுகிற ரயில்’, ‘மரவுடல் அத்துமீறல்’, ‘ரம்மியாடும் நிழல்’ போன்ற கவிதைகள் நிறைவான வாசிப்பனுவம் தருபவை. ‘மிருகச் சேட்டைகளில் மூழ்குகிற நகரமோ/ வித்தைகளை இனாமாய்த் துய்த்து மறைகிறது’ என்ற வரிகளமைந்த ‘குரங்காட்டி நகரம்’ கவிதை தன்னுள் ஒரு சாட்டையை ஒளித்து வைத்துள்ளது. ‘நதியோடிய கவிதாவின் முகம்’ வழமையானதொரு பத்திரிக்கைச் செய்தியை வலுமிக்கதொரு சித்திரமாக்கி மனதை இருளில் கவிழ்த்துவது. கண்ணீர் பெருகும் கவிதாவின் முகம் நதியோடிய முகமாய் ஒரு ரொமாண்டிஸிசப் படிமமாகிவிடுகையிலும் யதார்த்தத்தைக் குறியிட்டு நிற்குமிடத்தில் அய்யப்ப மாதவனது மொழி புரியும் ரசவாதம் கவனிக்கத் தக்கது. இதுபோன்ற ரசவாதமே அய்யப்ப மாதவனது கவிதைகள்பால் வாசக ஈர்ப்பினைத் தக்கவைத்திருப்பது. உண்ணும் குச்சியால் ஒற்றை பாஸ்டா இழையை வாய்க்குக் கொண்டுபோக விழையும் முயற்சியின் சுவாரஸ்யங்கள் கொண்டது அய்யப்ப மாதவனது கவிதை மொழி. அதில் பூடகமற்ற பூடகங்கள் உள்சரிந்து உள்சரிந்து காட்சியனுபவம் மேலெழுந்து வருகிறது. லயங்கொண்ட இக் கவிதைமொழி அர்த்தங்களைத் தொட்டும் விலகியும் பயணித்து இறுதியில் பொருத்தப்பாடுடைய காட்சிகளை, அனுபவ மீட்டுருவாக்கங்களை நிகழ்த்துகிறது. மொத்தத்தில் உவப்பானதொரு வாசிப்பனுபவத்தை சாத்தியமாக்கும் வல்லமை இக்கவிதைகளுக்கு வாய்த்துவிடுகிறது. மொழியைக் கூர்மையாக்குவதற்கு பதில் இழைத்து மென்மையாக்குவதன் வழி அர்த்தம் செறிந்த நெகிழ்வான கவிதைகள் உருக்கொள்கின்றன. இதுவே அய்யப்ப மாதவனது கவி வலிமை. தொடர்ந்து இதுபோன்ற கவிதைகளையே ஒரு வாசகன் அவரிடமிருந்து எதிர்பார்க்கிறான். காதலின் உணர்வுப் புலம் தாண்டினால் நாம் எப்போதும் எதிர்கொள்ளும் வாழ்வுதான் காத்திருக்கிறது. அவ்வாழ்விலிருந்து எடுத்து எழுதப்படுவதற்காய் ஆயிரமாயிரம் வரிகள் இறைஞ்சிக் கொண்டிருக்கின்றன. அவற்றை அய்யப்ப மாதவன் செவிகொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டு முடிக்கிறேன். 
   
                                                       ___________________

 ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்(கவிதைகள்) அய்யப்ப மாதவன் வெளியீடு: உயிர்மை

 ·  · Monday at 17:50 ·