Sunday, 2 October 2011

யுவான் ருல்ஃபோவின் எரியும் சமவெளி: அவலத் துயரின் அழகியல்.


அசாதாரண வாழ்நிலைச் சூழலில் அசாதாரண மக்களது வாழ்வை புனைகதையின் அசாதாரணமானதொரு வகைமாதிரிகளாகப் படைத்துத் தந்திருக்கும் தொகுப்பாக யுவான் ருல்ஃபோவின் பதினைந்து சிறுகதைகள் அடங்கிய எரியும் சமவெளி தொகுப்பைக் கூறலாம். வறட்சியும் வறுமையும் மேலிட்ட மத்திய மெக்ஸிகோவின் கடந்த நூற்றாண்டின் கொந்தளிப்பான முதல் கால்நூற்றாண்டும் அதைத்தொடர்ந்த ஏமாற்றமும் அவல நிலையின்பாற்பட்டதுமான காலகட்டமும் இக்கதைகளின் களமாக உள்ளன. 1910 முதல் பத்தாண்டுக்காலம் நடந்த மெக்ஸிகப் புரட்சியும் அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து அரசுக்கெதிரான கத்தோலிக்க தீவிரவாதக் குழுக்களின் கலகமான கிறிஸ்டெரோக்களது கலகமும் நிகழ்ந்த இக்காலகட்டம் மெக்ஸிக வரலாற்றில் மிகுந்த நெருக்கடியான காலகட்டமாகும். புரட்சிகளும் கலகங்களும் மக்களை கொண்டு நிறுத்திய ஏமாற்றம் மற்றும் துயர் நிறைந்த வாழ்நிலையிலிருந்து தனது புனைகதைகளை ருல்ஃபோ படைக்கிறார். வறுமையாலும் துயராலும் வாழ்தலின் சுமையினாலும் அழுத்தப்படும் மனிதர்களது சித்திரங்களாக விரியும் அவை வாசகனை உலுக்குபவையாகவும் எக்காலத்துக்குமாக அவனைப் பின்தொடர்ந்து வந்து வாதைக்குள்ளாக்குபவையாகவும் உள்ளன.வெம்மைகூடி வறண்டுபோன, நம்பிக்கைகளழிந்த ஒரு நிலப்பரப்பின் நீட்சியாக அந்நிலத்தின் மனிதர்களும் மாறிவிட்டதான ஒரு தோற்றம் இக்தைகளினூடாக நகர்ந்துகொண்டிருக்கிறது. பகட்டில்லாத தன் மொழியின் துல்லியத்தினாலும் இறுக்கமான கட்டமைப்பினாலும் அதிர்வூட்டும் யதார்த்தச் சித்தரிப்புகளாக இத்தோற்றத்தினை விஸ்தரிப்பதில் பெரும் ஆவல் கொண்டவராகவும் பேரளவில் அதில் வெற்றி காண்பவராகவும் ருல்ஃபோ இக்கதைகளில் காணப்படுகிறார்.

மக்காரியோவின் தன்மொழியாக அமைந்த ‘மக்காரியோ’ கதையில் சிதைவுண்ட மனதின் குழப்பமானதும் அரூபமானதுமான சித்திரங்களை தனது தனித்துவமான மொழி மூலம் வெளிக்கொணர்கிறார் ருல்ஃபோ. அதன்வழி அக்கதையில் வரும் ஞானத்தாய், ஃபெலிபா மற்றும் மக்காரியோ இவர்களது புற மற்றும் அக உலகு சார்ந்த படிம்மொன்றை உருவாக்குகிறார். ‘…என் எச்சிலைக் கொண்டு அவளைக் குணப்படுத்த முடியாதென்று நான் கண்டபொழுது, என் கண்களைக் கொண்டும் அவள் அழுவதற்கு என்னால் முடிந்த அளவிற்கு உதவினேன்’ என்பது போன்ற செவ்வியல் தன்மையுடையதான வரிகளமைந்த இக்கதையில் அவை ஆசியருடையதாக அல்லாமல் மனநிலை பிறழ்ந்த ஒருவனின் கூற்றாக கதையில் அதன் பொருத்தப்பட்டை அடைகின்ற விதத்தில் ருல்ஃபோ கதைமாந்தரது உணர்வையும் தனது மொழியையும் பிணைக்கும் விதம் அலாதியானது.

‘அவர்கள் தந்தது நிலம்’ கதையில் ஒன்றுக்கும் பயன்படாத நிலம், அதனை ‘மழை பெய்ய ஆரம்பித்தால், நீங்கள் பிடித்து இழுத்தால் வருவது மாதிரி சோளப்பயிர் கிடுகிடுவென வளர்ந்து விடும்’ எனக் கூறி அரசாங்கம் தந்துவிட்டுப் போகிறது. காற்று வீசி மேகம் திரளும்போதும் சபிக்கப்பட்ட அந்நிலத்தில் மழையென்று எதுவும் பெய்வதில்லை, ஒரேயொரு கணத்த துளியைத் தவிர. எதற்கும் பயன்படாத நிலத்தைக் கொண்டு என்ன செய்வது என்ற சோகத்தினை நேர்த்தியான வர்ணணைகளும் நுட்பமான உரையாடல்களும் கதையினூடாக நகர்த்திச் செல்வதை நாம் காண்கிறோம். ‘நாங்கள் மிகவும் ஏழைகள்’ கதையில் டாச்சாவின் மாட்டை பெருகி வரும் ஆற்று வெள்ளம் அடித்துச் சென்றுவிடுகிறது. இக்கதையில் ஆறும் அதன் வெள்ளமும் அது விளைவித்துப் போகும் அழிவும் டாச்சாவின் சகோதரனுக்குப் பொருட்டில்லை என்பது போல தனது ஒரே சொத்தான மாட்டை ஆறு அடித்துக்கொண்டு போய்விட்டதால், தனது மற்ற சகோதரிகளைப் போல டாச்சவும் கெட்டுப் போய்விடுவாளோ என்ற கவலையே பிரதானமாக இருக்கிறது. ஆறு உண்டாக்கும் பேரழிவின் பின்னணியில் டாச்சாவின் சகோதரனது இந்தக் கவலையை வைப்பதன் மூலம் ஆற்றின் அழிவுச் செயலை மட்டுப்படுத்தப்பட்ட பூதாகரத்தனத்துடன் ஆசிரியரால் காட்சிப்படுத்த முடிகிறது.

‘தால்பா’ கதையில் புனிதத் தலத்துக்குப் பாதயாத்திரை செல்லும் கூட்டத்தில் ஒருவன் நோய்பீடித்த தன் சகோதரன் மற்றும் அவனது மனைவியுடன் பயணிக்கிறான். மரணத்தை எதிர்கொண்டிருக்கும் சகோதரனுக்குத் துணையாக இவனும் சகோதரனது மனைவியும் செல்லும் பல நாள் பயணத்தில் அவனுக்கும் அவன் சகோதரன் மனைவிக்குமிடையிலான காதல் நமக்குத் தெரிய வருகிறது.இப்பயணம் எந்தப் பலனும் தராது என்பதை உணர்ந்தவர்களாய் தனது அண்ணன்/கணவனது ஆசையின் நிமித்தமாகவே அவர்கள் செல்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்தவாறே அப்புனிதத் தலத்தில் அண்ணன் இறந்துபோகிறான். அதன் பிறகு நமது எண்ணத்துக்கு மாறாக அவர்கள் இறந்துபோனவனைப் பற்றிய எண்ணத்தால் தீவிர அலைக்கழிப்புக்கு ஆளாகிறார்கள். ஒரு மரபான இந்தியக் கதையினது முடிவைப் போன்றவொன்றைக் கொண்டிருக்கும் இக்கதை மனித மனதின் ஆழ்மன விசித்திரங்கள் பற்றியதொரு கலாச்சாரங்கள் மற்றும் தேசங்கள் கடந்த பொதுமைப் பாட்டினை நாம் கருத இடமளிப்பதும் கூட.

‘எரியும் சமவெளி’ கதை புரட்சியின் போக்கில் மனிதர்கள் அடித்துச் செல்லப்படுவதைப் பற்றியது. மெக்ஸிகோவின் ஆயுதமேந்திய முதலாளித்துவப் புரட்சி மனிதர்களை மலை மீதிருந்து வீசியெறியப்பட்ட கற்களைப் போலாக்கியதையும் அவர்கள் நிரந்தரமான அச்சத்திலும் துயரத்திலும் வாழ விதிக்கப்பட்டவர்களாக மாறியதையும் நுட்பமாக விவரிக்கும் கதை.

‘ருல்ஃபோவின் கதைகளில் மிக முக்கியமானதொன்றாக விமர்சகர்களால் கருதப்படும் ‘ அவர்களிடம் என்னைக் கொல்ல வேண்டாமென்று சொல்!’ கதை, வெளிப்படுத்தும் உணரச்சிகளிலும் விவரிக்கப்படும் உத்தியிலும் எளிமையான ஒரு கதையாகவே எனக்குத் தோன்றுகிறது. தொகுப்பின் ஏனைய கதைகளில் நிகழும் கொலைகள்,மரணங்கள் போலவே இக்கதையின் மரணமும் இயல்பான ஒரு மரணமாயிருக்கிறது.

‘நாய்கள் குரைக்கவில்லை’ சிறப்பானதொரு கதை. தந்தைக்கும் மகனுக்குமான உறவினை நுட்பமாகச் சித்தரிக்கும் இக்கதை அழுத்தமானதொரு முடிவைக் கொண்டுள்ளது. ‘அனாக்ளீட்டோ மோரோனஸ்’ இத்தொகுப்பின் சிறப்பான கதைகளில் ஒன்று. அங்கதமிக்க இக்கதை புனிதம், புனிதர்கள் குறித்த மக்களது மனக்கட்டுமானம், ஏதுவான சந்தர்ப்ப நிலைகளின் மூலமாக மக்களது அறியாமை மற்றும் பக்தி போன்ற பலகீனங்கள் மீது இவைகள் கட்டமைக்கப்படுவதையும் சிறப்பாக விவரித்திருக்கும் கதை.

ருல்ஃபோவின் கதையுலகம் பெரிதும் நம்பிக்கையின்மை, துரோகம், துயரம் ஆகிய அகக் காரணிகளாலும் வறட்சி, வெம்மை, சண்டை, தப்பியோடுதல் ஆகிய புறக் காரணிகளாலும் கட்டப்பட்டது. தீர்க்கமான பார்வையும், பிரக்ஞைபூர்வமாக நுட்பமும், துல்லியமும் கொண்ட மொழியும் அவரது கதைகளை முதல் வகைமாதிரிக் (prototype) கதைகளாக்குகின்றன. இக்கதைகள் சொல்லும் மொழியினாலும் நுட்பத்தாலும் புதிய வகைமாதிரிகளாக தம்மை அறிவித்துக் கொண்டாலும் அழகியல் ரீதியாகவும் வெற்றி பெறுபவை. இக்கதைகளின் இந்த அழகியல் தன்மையே இவற்றை ஒருவர் மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுவதாக இருக்கக் கூடும்.தென்னமெரிக்க இலக்கியத்திலும் அதற்கு வெளியிலும் யுவான் ருல்ஃபோ என்ற புனைகதையாளர் பெற்றிருக்கும் இடம் ஏதோ தற்செயலானது அல்லது என்பதற்கு அவரது கதைகள் புனைகதையின் அனைத்துப் பரிமாணங்களிலும் தனித்துவமான கூறுகளைக் கொண்டு வாசிப்பின்பம் குறையாது விளங்குவதே சான்றாக இருக்க முடியும்.

ஏனைய லத்தீனமெரிக்க எழுத்தாளர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள ருல்ஃபோ தவறவில்லை. உதாரணமாக கோர்த்தஸாரும் மார்க்வெஸூம் மொழியினை நடனமாட வைத்து அது சுழன்றாடும் அழகை ரசித்தார்களென்றால் ருல்ஃபோ கறாரான எஜமானராக மொழியிடம் வேலை வாங்குகிறார். எப்போதும் மொழியின் இம்மி பிசகாத பரிபூரணம் அவரது தேவையாயிருக்கிறது. சற்று பிசகினால் intellectual labour என்ற முத்திரை விழுந்துவிடக்கூடிய தனது எழுத்து முறையை நிறைவான இலக்கியப் பிரதிகளுக்கானவொன்றாக அவரால் மாற்றிக் கொள்ள இயல்வதையும் நாம் இங்கு கருத்தில் கொண்டாக வேண்டும். தனது புனைவுகள் வழியாக அவர் யதார்த்தத்துக்கும் இயல்புக்கும் அப்பாற்பட்டவொன்றைக் கட்ட முனைவதில்லை என்பதாலும் சபிக்கப்பட்ட ஒரு நிலத்தின் அவலமிக்க மனிதர்களை அவர்களது வாழ்வின் வெம்மை குறையாமல் ஆடம்பரமில்லாத ஒரு மொழிக்குள் அடக்க முயன்றார் என்பதாலேயுமே அவரால் இது இயன்றிருக்கிறது.


இத்தொகுப்பை ஸ்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த ஜார்ஜ் டி. ஷேட் மற்றும் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் எஸ். பாலச்சந்திரன் ஆகியோரது விரிவான முன்னுரை மற்றும் பின்னுரைகள் யுவான் ருல்ஃபோவின் புனைவுலகுக்கான விவரமானதொரு வழிகாட்டுதலை வழங்கிவிடுவதனால் இத்தொகுப்புக்குள் வாசகன் தடையற்று நுழைவதும் கதைகளை சிரமமின்றி அணுகுவதும் ஏதுவாகின்றது. கவனமாக வடிவமைக்கப்பட்டு வெகு நுட்பமும் சிக்கனமுமான மொழியினால் இறுக்கமாக கட்டமைக்கப்பட்ட ருல்ஃபோவின் கதைகளுக்கான திறப்புக்களை இவை சாத்தியமாக்குகின்றன. இன்னொரு கோணத்தில் பார்க்கையில் விமர்சனப்பூர்வமாக இக்கதைகளை அணுக முயலும் ஒருவனது பார்வையில் மேலே சொன்ன விஷயங்கள் தமது தாக்கத்தை செலுத்துவனவாக அமைந்திருந்தாலும் அவற்றின் இன்றியமையாமையைக் குறைத்து மதிப்பிட முடியாது.

மொழிபெயர்ப்பில் ஒரு வரியை அல்லது ஒரு சொற்டொடரை எடுத்துக்கொண்டு தமது சீரிய மொழியறிவின் அளவுகோல்களால் அது பிழையானதென்று நிறுவி அம்முழு ஆக்கத்தையுமே ஒன்றுக்கும் உதவாதது என நிராகரிக்கும் மேதமை சான்ற மதியாளர் நிரம்பிய நம் சூழலில் மொழிபெயர்ப்புப் பணி புரிவோரின் நிலை பற்றிச் சொல்லத் தேவையில்லை. எதிர்மறையான இச்சூழலில் எவ்விதப் பலனையும் எதிர்பாராதவர்களாய் இயங்கிக் கொண்டிருக்கும் மொழிபெயர்ப்பாளர்களில் எஸ். பாலச்சந்திரன் அவர்களும் ஒருவர். தமிழுக்கு அரியதும் காத்திரமானதுமான பல படைப்புக்களை அவர் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். ‘எரியும் சமவெளி’ மொழிபெயர்ப்பில் சவால்தரும் ஆக்கம். இதனை அவர் சிறப்புற மொழிபெயர்த்திருக்கிறார். இதற்காக தமிழ் கூறும் நல்லுலகம் அவருக்குக் கடமைப்பட்டுள்ளது.

7-5-11 அன்று நாகர்கோவிலில் லஷ்மி மணிவண்ணன் ஏற்பாடு செய்த கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை.