ஜுவாங் கிமரிஸ் ரோஸா.
('கல்குதிரை' பனிக்காலங்களின் இதழில் என்னுடைய மொழிபெயர்ப்பில் வந்த பிரெஸிலிய புனைகதையாளர் ஜுவாங் கிமரிஸ் ரோஸாவின் கதை)
1872 நவம்பர் 11 ம் தேதி இரவு மினாஸ் கெரெய்ஸிலுள்ள செரோஃபிரையோ மாவட்டத்தில் சில விசித்திர சம்பவங்கள் நிகழ்ந்தன. அவை அப்போதைய செய்தித்தாள்களிலும் வானியல் ஏடுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அச்செய்திகளின்படி வானத்திலிருந்து பெரும் வெடிச்சத்தங்களுடன் ஒளிபொருந்தியவொரு ஏவுகணை சீறி வந்தது. உயர்ந்த மலைகளை அசைத்த பேரதிர்வுடன் பூமி குலுங்கியது, வீடுகள் தரைமட்டமாயின, பள்ளத்தாக்குகள் நடுங்கின, எண்ணிக்கையற்ற மக்கள் மாண்டனர். அதைத்தொடர்ந்த கடும் புயல்மழை அதுவரை எவரும் கண்டிராத வெள்ளத்தைக் கொண்டுவந்தது. ஓடைகளிலும் ஆறுகளிலும் சாதாரணமாகப் பாய்வதைவிடவும் அறுபது அடி உயரம் அதிகமாக வெள்ளம் பாய்ந்தது. இந்தப் பேரழிவுக்குப்பின் மூன்று மைல் சுற்று வட்டாரத்தில் பூமியின் முகம் முற்றிலுமாகத் திருத்தியமைக்கப்பட்டது. மீதமிருந்ததெல்லாம் சிதைந்த மலைகள், புதிதாக வெடித்துத் திறந்த குகைகள், தடம் மாறிப் பாய்ந்த சிற்றோடைகள், பிடுங்கியெறியப்பட்ட காடுகள், மேலுயர்ந்த புதிய மலைகள் மற்றும் மலை முகடுகள், சிறு தடயமும் மீதமில்லாது விழுங்கப்பட்ட பண்ணைகள், வயல்களாயிருந்த இடங்களை மூடி மறைத்திருந்த வீசியெறியப்பட்டப் பாறைகள். பேய்த்தனமான இந்நிகழ்வுகள் நடந்த இடத்திலிருந்து சிறிது தூரம் தள்ளியிருந்த இடத்திலும்கூட மனிதர்களும் விலங்குகளும் உயிரோடு புதைந்தோ மூழ்கியோ போயிருந்தனர். மற்றவர்கள், கடவுள் அவர்கள் எங்கெல்லாம் போக விரும்பினாரோ அங்கெல்லாம் சென்றவர்களாய், குழப்பத்தில் பழகிய பாதைகளைக் காண முடியாமல், அலைந்து திரிந்தனர்.
ஒரு வாரம் கழித்து, பாவப்பொறுத்தலளிப்பவரான புனித ஃபெலிக்ஸின் திருநாளன்று, பசியினாலோ அதிர்ச்சியினாலோ வீட்டிலிருந்து துரத்தப்பட்ட, பாவப்பட்ட இந்த அலைந்து திரிபவர்களில் ஒருவன் ஹிலாரியோ கார்டெய்ரோவின் கேஸ்கோ பண்ணையின் முற்றத்தில் தோன்றினான். திடீரென அவன் அங்கிருந்தான், ஒரு இளைஞன் கணவானுக்குரிய தோற்றத்துடன் ஆனால் பரிதாபகரமான நிலையில். தன் நிர்வாணத்தை மறைக்க கந்தைகூட இல்லாமல் குதிரை சேணத்தடியில் கிடக்கும் போர்வையைப் போன்ற முரட்டுத் துணியால் உடம்பைச் சுற்றியிருந்தான். கடவுளுக்குத்தான் தெரியும் அந்தத் துணி அவனுக்கு எப்படிக் கிடைத்ததென. கூச்சத்துடன் தன்னையவன் அதிகாலை வெளிச்சத்தில் காட்டினான், பிறகு பசுக்களின் மேய்ச்சல் நிலத்தின் வேலிக்குப் பின் சென்று மறைந்தான். அவன் ஆச்சரியமூட்டும் வெண்ணிறத்தில் இருந்தான். உடல்நலமற்றோ களைத்துப்போயோ இல்லை. நல்ல வெளுப்புடன், ஒளியினால் பொன்னிறம்கூடி, உடலுக்குள் ஒளிமூலமொன்று இருக்கிறதென தோன்றும்படி அவன் ஒளிர்ந்தான்.இதுவரை அந்தப் பகுதியில் யாரும் கண்டிராத ஓர் அந்நிய தேசத்தவரைப் போல அவன் இருந்தான், கிட்டத்தட்ட அவனே தன்னளவில் ஓர் புதிய இனமாகத் தோன்றினான். இப்போதும் அவர்கள் அவனைப்பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் அதிகம் குழப்பத்துடனும் நிச்சயமின்மையுடனும், காரணம் அது நடந்து நீண்ட நெடுங்காலம் ஆகிவிட்டிருந்தது. அது நடந்தபோது பதின்ம வயதினராகவோ அல்லது குழந்தையாகவோகூட இருந்து அவனை அறியும் பேறு பெற்றவர்களது குழந்தைகளாலும் பேரக் குழந்தைகளாலும் அந்தக் கதை சொல்லப்பட்டு வருகிறது.
ஹிலாரியோ கார்டெய்ரோ கடவுளுக்கு அஞ்சி நடப்பவனாக இருந்ததனால், ஏழைகளுக்கு தாராளமாக உதவி செய்வான், அதிலும் தன் சொந்தங்கள் இறந்தும், உடைமைகளிழந்தும் போகக் காரணமாயிருந்த அப்பேரழிவிற்குப் பிறகான நாட்களில் அவன் அதிகம் உதவிகள் செய்தான். சிறிதும் தயக்கமின்றி அவன் அந்த இளைஞனை அன்பாக வரவேற்று உடையும் உணவும் அளித்தான். அந்த அந்நியனுக்கு அவ்வுதவிகள் மிகவும் தேவைப்பட்டன, அவன் சந்தித்திருந்த அசாதாரணமான துரதிர்ஷ்டங்கள் மற்றும் பயங்கரங்களினால் முழுவதுமாகத் தன் நினைவுகளை இழந்திருந்ததோடு அல்லாமல் அவன் பேசவும் முடியாமல் இருந்தான்.அந்நிலையில் அவனால் எதிர்காலத்தைக் கடந்த காலத்திலிருந்து பிரித்தறிய முடியாமலிருந்தது. காலம் குறித்த எல்லா ஓர்மைகளையும் இழந்திருந்த நிலையிலும், எதையும் புரிந்து கொள்ள இயலாமலிருந்த நிலையிலும் அவன் ஆம் என்றோ இல்லையென்றோ பதிலிறுக்க முடியாமலிருந்தான். உண்மையிலேயே அவன் பரிதாபகரமான நிலையிலிருந்தான்.அவனால் சைகைகளையும் புரிந்துகொள்ள முடியவில்லை, அனேகமும் சைகைகளை அவன் எதிர்மாறாகவே புரிந்து கொண்டான். ஏற்கனவே அவனுக்கொரு பெயர் இருக்குமென்பதால் அவனுக்கென இன்னொரு பெயரை இட்டுக்கட்டவும் முடியவில்லை. அவனுடைய கிறித்தவப் பெயரை யாராலும் யூகிக்க இயலாதபோதும் அவனது குடும்பப் பெயர் என்னவாக இருக்குமென ஓரளவுக்கு யூகித்தனர். அது ‘யாருமல்லாதவரின் மகன்’ என இருக்காலாம் என நினைத்தனர்.
அவன் வந்து சேர்ந்த சில தினங்களுக்குப் பின் அக்கம்பக்கத்தார் அவனைப் பார்க்க வந்தனர். அவனைப் பற்றி அவர்களால் தீர்மானமான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அவன் சற்றே வருத்தம் தோய, கனவின்பாற்பட்ட ஒருவித ஈடுபாடற்ற நிலையில் இருந்தான். ஆனால் எவ்வித ஈடுபாடுமற்ற நிலையிலேயே மக்களதும் பொருட்களதுமான சிறு குணாதிசயங்களையும் உற்று கவனிப்பவனாக இருந்தான்.தேர்ந்த கவனம் மற்றும் சரியாகப் புரிந்துகொள்ள இயலாமை இவற்றின் விசித்திரச் சேர்மானமாக அவன் இருந்தமை பின்னரே புரிந்துகொள்ளப்பட்டது. இருந்தும் அவர்கள் அவனை விரும்பினர். தானே சற்று விசித்திரமானவனாக இருந்த கறுப்பினத்தவனான ஜோஸ் காக்கெந்தேதான் அவனோடு மிக நெருக்கமாக இருந்தவன். அரைப் பைத்தியமான ஓர் இசைக் கலைஞனிடம் அடிமையாக இருந்த அவன் அப் பேரழிவின்போது அதிர்ச்சியில் சித்தம் கலங்கிப்போனவன்.அப்போதிருந்து, பேரழிவு நிகழ்வதற்கு சற்று முன் ரியோ தோ பெய்க்ஸி நதியின் கரையில் நிஜமாகவே தான் கண்டதாக அவன் சத்தியம் செய்யும் பயங்கரக் காட்சி ஒன்றினைப் பற்றிய திகிலூட்டும் கதைகளைச் சொல்லியபடி இங்குமங்கும் திரிந்தபடியிருந்தான். விவியானா என்ற அழகிய பெண்ணின் தந்தையான துவார்தே டயஸ் ஒருவருக்குத்தான் ஆரம்பத்திலிருந்தே அந்த இளைஞனைப் பிடிக்காமல் போனது. அவனொரு தரங்கெட்டவன், மறைந்து வாழும் குற்றவாளி, இதுவே நெருக்கடிகளற்ற இயல்பான காலமாக இருந்திருந்தால் அவன் ஆப்பிரிக்காவுக்கு நாடுகடத்தப் பட்டிருப்பான் அல்லது அரசரது இருட்டுச் சிறைக்குள் தள்ளப்பட்டிருப்பான் என்றார்.அவர் எளிதில் கோபப்படுகிற, அதிகம் பணிவை எதிர்பார்க்கிற ஒருவராயும், கெடுமதியும் நியாயமற்ற போக்கும் கொண்டிருந்ததோடு மட்டுமன்றி மாறாத பிடிவாதமுடையவராயும் இருந்ததனால் யாரும் அவர் பேசியதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஒருநாள் அவனை அவர்கள் தேவாலய வழிபாட்டுக்கு அழைத்துச் சென்றனர்.கடவுள் நம்பிக்கையுள்ளவன் அல்லது இல்லாதவன் என்பதற்கான எந்த அறிகுறியும் அவனிடத்தில் இல்லை, அதோடு விரும்பத்தகாத எதையும் அவன் அங்கு செய்யவில்லை. தேவாலயத்தில் பாடல்களையும் கூட்டிசையையும் அமைதியாக குறிப்பிடத்தகுந்த அளவு பக்தியுணர்வுடனே செவிமடுத்தான். சரியாகச் சொன்னால் அவன் சோகமாக இல்லை, ஆனால் மற்றவர்களைக் காட்டிலும் பழைய நினைவுகளிலும், ஏக்கத்திலும் மூழ்கியிருந்ததாகப்பட்டது.வழிபாட்டுச் சடங்குகளில் ஒன்றையும் அவன் புரிந்துகொள்ளவில்லை, ஆனாலும் அவனது உணர்வுகள் மேலான தூய ஆனந்தக் களிப்பாக- எஜமானனது குரலைக் கேட்கும் நாயினது இதயத்தைப் போல- மாறியிருந்தன. கண்கள் சம்பந்தப்படாது உதடுகள் மட்டுமே சம்பந்தப்பட்டதாயிருந்த அவனது புன்னகை அவன் பற்களை வெளிகாட்டுமளவுக்குக்கூட அகன்றதாயிருக்கவில்லை. அவன் வேறொரு இடம் பற்றிய வேறொரு காலம் பற்றிய சிந்தனையிலிருக்கிறான் எனத் தோன்றும் வகையில் அப்புன்னகை அவன் முகத்தில் வெகுநேரம் தங்கியிருந்தது. வழிபாட்டுக்குப் பிறகு பாதிரியார் பாயாவோ அவனோடு அன்பாகப் பேசினார்.அதற்கு முன் எதிர்பாராத வகையில் அவன் மீது அவர் சிலுவை அடையாளமிட்டார், ஆனால் இந்தச் செய்கை அந்த இளைஞனை எந்தச் சங்கடத்துக்கும் ஆளாக்கவில்லையென்பதை அவர் அறிந்தார்.அவன் தரைக்குச் சற்று மேலே மிதப்பதாக அவருக்குத் தோன்றியது.சாதரண மனிதருக்கு வாய்க்காத ஒருவித உள்ளார்ந்த மிதப்புத்தன்மை அவனை அவ்வாறு மிதக்கச் செய்வதாக நினைத்தார். “அவரோடு ஒப்பிடுகையில் நாமெல்லோரும் கடின முகபாவம் கொண்ட சாதாரண மனிதர்கள், மாறாத வழமையான சோர்வு படிந்த அசிங்கமான தோற்றம் கொண்டவர்கள்”, மரியானா ஸீயிலிருந்த பேராலயப் பாதிரியார் லெஸா கேடவலுக்கு, அற்புதமான அந்நிய நாடோடியொருவரின் வருகை குறித்த தனது சாட்சியமாக பாதிரியார் பாயாவோ எழுதிக் கையொப்பமிட்டு முத்திரை பதித்து அனுப்பிய கடிதத்தில் இந்த வரிகளை எழுதியிருந்தார். இக்கடிதத்தில், மேற்சொன்ன சம்பவம் நடந்தபோது தன்னை அணுகி பிரமிக்கும்வகையில், ஆற்றோரம் தான் கண்ட காட்சிகளைப் பற்றிச் சொன்ன ஜோஸ் காக்கெந்தே பற்றியும் பாதியார் குறிப்பிட்டிருந்தார். “... ஆளைத் தள்ளும் காற்று, அழகும் கம்பீரமுமான மேகம், அதில் அடர்மஞ்சள் வண்ணத்தில் நகரும் ஒரு பொருள், ஒரு பறக்கும் வண்டி, தட்டையாக, உருண்டையான விளிம்புகளுடன், உச்சியில் நீல வண்ணத்தில் கண்ணாடியாலான ஒரு மணி, அது தரையிறங்கியபோது, அதிலிருந்து அதிதூதர்கள் இறங்கினர், சக்கரங்களுக்கும், பற்றியெரியும் ஜுவாலைகளுக்கும், முழங்கும் வாத்தியங்களின் ஒசைக்கும் நடுவே.” கிளர்ச்சியுற்றவனாகக் காணப்பட்ட ஜோஸ் காக்கெந்தேயுடன் வந்த ஹிலாரியோ கார்டெய்ரோ அந்த இளைஞனை ஆதுரமாக அவனது சொந்தத் தந்தை போல திரும்ப வீட்டுக்கு அழைத்துக்கொண்டு கிளம்பினான்.
தேவாலயக் கதவோரம் குருட்டுப் பிச்சைக்காரன் நிகோலாவ் நின்றிருந்தான். அவனைக் கண்ட இளைஞன் தன் முழு கவனத்துடனும் ஆழ்ந்து அவனைப் பார்த்தான் (அவன் கண்கள் ரோஜா நிறத்திலிருந்ததாக அவர்கள் சொன்னார்கள்). நேரே நிகோலாவிடம் சென்று தன் பைக்குள்ளிருந்து எதையோ கொஞ்சம் எடுத்து அவசரமாக அவனிடம் கொடுத்தான். வெய்யிலில் வேர்த்தபடி நின்றிருக்கும் அக்குருடனைப் பார்க்கும் யாரும் எரியும் கோளத்தின் வெப்பத்தைத் தாங்க நேர்ந்த ஆனால் அதே நேரம் சூரியன் நிலவு இவற்றின் அழகில் திளைக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட அவனது முரணான விதியை நினைக்காமல் இருப்பதில்லை. குருடன் அப்பரிசை விரல்களால் வருடிப்பார்த்தான், அது எந்த நாட்டுப் பணம் அறிய முயன்று உண்மையில் அது பணமே இல்லையென உணர்ந்து அதை வாய்க்குக் கொண்டுவந்தான். அவனுக்கு வழிகாட்டியாக இருந்த குழந்தைதான் அது உண்ணக்கூடிய பொருள் இல்லை ஏதோவொரு மரத்தின் விதை என எச்சரித்தது. கோபமாக அதை அவன் தூரப் போட்டான். தொடர்ந்து நாம் காணப்போகிற சம்பவங்களெல்லாம் நடந்து வெகு காலம் கழித்தே அவன் அதை நட்டான். அவ்விதையிலிருந்து அபூர்வமான, யாரும் எதிர்பாராத ஒரு நீல நிறப் பூ பூத்தது, எதிரெதிர்த் தன்மைகள் கொண்டு அசாத்தியமான வகையில் அவை ஒன்று கலந்து அழகான குழப்பமாயிருந்த ஒரு பூ. அதன் வண்ண வேறுபாடுகள் அக்காலத்தில் யாரும் காணாததாயிருந்தது. எந்தக் குறிப்பிட்ட இரண்டு பேராலும் அதன் வண்ணங்கள் குறித்த ஒருமித்த கருத்துவொன்றை எட்ட முடியாமலிருந்தது. ஆனால் விரைவிலேயே ஒரு விதையையும் துளிரையும்கூட விட்டுச் செல்லாமல் வாடி வதங்கியது. அதைப்பற்றி அறிய பூச்சிகளுக்குக்கூடப் போதிய அவகாசம் கிடைக்கவில்லை.
குருடனுடனான இச்சம்பவம் நடந்து முடிந்தவேளை தேவாலய வளாகத்துக்குள் பிரச்சினை உண்டுபண்ணும் விதமாக தனது நண்பர்கள் வேலைக்காரர்களுடன் துவார்தே டயஸ் வந்தார். ஆனால் எல்லோரும் ஆச்சரியப்படும்படியாக அந்த இளைஞனைத் தன்னுடன் அனுப்ப வேண்டும் எனக் கோரினார். காரணம் அவனது தோலின் வெண்ணிறமும் அரச குடும்பத்தாரது போன்ற அவனது நடவடிக்கைகளும் பார்க்க பூகம்பத்தில் இறந்துபோன தனது பணக்கார உறவினர்களான ரெஸன்டர்களில் எஞ்சிய ஒருவனாக அவன் இருக்க வேண்டும் என்றார். ரெஸன்டர்களில் ஒருவனாக அவன் இல்லையென உறுதிப்படும்வரை அவனைத் தன்னுடைய பாதுகாப்பில் வைத்திருப்பது தன் கடமை என வாதிட்டார். உடன் இதை ஹிலாரியோ கார்டெய்ரோ மறுத்தார். தலைநகரில் முக்கிய அரசியல் புள்ளியும் அவர்களது பகுதியில் உணவுப்பொருள்கள் விநியோகிப்பவருமான குவின்காஸ் மெந்தாந்தா இடைபுகுந்து துவார்தே டயஸை பேசி சரிக்கட்டாமல் போயிருந்தால் துவார்தே டயஸின் பிடிவாதத்துக்கு அது பெரும் சண்டையாக முடிந்திருக்கும்.
அந்த இளைஞனை கரிசனத்துடன் தான் பாதுகாத்தது சரியானதே என ஹிலாரியோ கார்டெய்ரோ எண்ணியதைக் காட்டிலும் அது சரியானதாக இருந்தது.எல்லாமே அவருக்கு நன்மையாக நடக்க ஆரம்பித்தது. அவர் குடும்பத்தில் எல்லோரும் நலமாகவும் சச்சரவின்றியும் வாழ்ந்தனர், வியாபாரம் செழித்தது. அந்த இளைஞன் அவருக்கு வெளிப்படையாக எந்த உதவியும் செய்யவில்லை; அரசவையில் பணியிலிருப்பவனது போன்ற வெண்மையான மென்மையான, அழகான, சற்றும் காயப்பேறாத அந்தக் கைகளால் அவன் கடினமான பண்ணை வேலைகள் செய்வானென எதிர்பார்க்கவும் முடியாது.உண்மையில் காற்றைப் போன்ற சுதந்திரத்துடனும், தனிமை நாட்டத்துடனும் கனவில் நடப்பதுபோல இங்குமங்கும் தன் விருப்பப்படி நடந்து திரிந்து அவன் தனது நேரத்தைச் செலவிட்டான். அவன் ஏதோ மந்திரத்துக்குக் கட்டுப்பட்டிருக்கவேண்டும் என மக்கள் நினைத்தனர். மென்மையான கைகள், மந்திரம் இவற்றுக்குப் பொருந்தாத வகையில் அங்கு பயன்பட்ட இயந்திரங்கள் மற்றும் தொழிற்கருவிகள் சம்பந்தமான எல்லா வேலைகளிலும் அவன் முக்கியப் பங்காற்றினான். இயந்திரத் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றவனாக இருந்த அவன் அறிவார்ந்ததும் நுட்பமானதுமான வகையில் புதிதாகக் கண்டுபிடிக்கவும் பழுதானதை சரிப்படுத்தவும் செய்தான். அந்நேரங்களில் அவன் போதிய அளவு விழிப்புள்ளவனாக இருந்தான். அவன் ஒரு வானியலாளனும்கூட ஆனால் இரவில் வானத்தை உற்றுப் பார்ப்பது போலவே பகலிலும் தொடர்ந்து வானத்தை உற்றுப்பார்த்தபடியிருக்கும் வினோதப் பழக்கம் அவனுக்கு இருந்தது.அவனைப்பற்றிய இன்னொரு ஆச்சரியமூட்டும் விஷயம் அவனுக்கு நெருப்பு மூட்டுவதில் இருந்த ஆர்வம், புனித அருளப்பரின் திருவிழாவிற்கு முந்தையநாள் கொண்டாட்டங்களின்போது பாரம்பரியமான விழாநெருப்பு மூட்டுவதில் அவன் ஆர்வமுடன் கலந்துகொண்டான்.
புனித அருளப்பரின் திருவிழாவிற்கு முந்தையநாள் கொண்டாட்டங்களின்போதுதான் அந்தப் பெண் விவியானாவுடனான அச்சம்பவம் நடந்தது, இக்கதை இதற்குமுன் இவ்வளவு சரியாகச் சொல்லப்பட்டதில்லை. அப்போது என்ன நிகழ்ந்ததென்றால், ஜோஸ் காக்கெந்தேயுடன் வந்த அந்த இளைஞன், மிக அழகாயிருந்த ஆனால் மற்றவர்களைப்போல விழாவில் மகிழ்ந்திராத அவளைப் பார்த்தான்.அவளுக்கு அருகே சென்று நளினமாக ஆனால் அதிர்ச்சியூட்டும்விதமாக தனது உள்ளங்கையை அவள் மார்பின்மீது மிக மெதுவாக வைத்தான்.அங்கிருந்த அனைவரிலும் அழகானவளாக விவியானா இருந்ததனால் அவனது அழகான இந்தச் செய்கை எவ்விதத்திலும் அவனது துயர்நிரம்பியதன்மையை மாற்றாதது வியப்பாக இருந்தது.ஆனால் இதைப் பார்த்துக்கொண்டிருந்த அவளது தந்தை துவார்தே டயஸ் சத்தம் போட்டு திரும்பத் திரும்பக் கூச்சலிட்டார், “அவர்களுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும்! இப்போதே அவர்களுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும்!”. திருமணமாகாதவனான அந்த இளைஞன் தன் மகளை மானபங்கப்படுத்தி விட்டதால் அவளைத் தன் மனைவியாக்கிக் கொள்ளவேண்டும், வேறுவழியே இல்லை என்றார்.அந்த இளைஞன் மறுப்பேதும் சொல்லாமல் மகிழ்வுடன் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்ததால், பாதிரியார் பாயாவோ மற்றும் சில முதியவர்கள் வந்து முட்டாள்த்தனமான அவர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வரை துவார்தே டயஸ் தான் சத்தம் போடுவதை நிறுத்தவில்லை. இளம் விவியானா தன் வசீகரிக்கும் புன்னகையால் அவரை சாந்தப்படுத்தினாள். அந்த இளைஞன் தொட்டபோது முடிவற்ற ஆனந்தமொன்று அவளுள் முகிழ்த்தது,
அதன்பிறகான தன் வாழ்நாள் முழுவதும் அவள் அனுபவித்து மகிழ்ந்த தூய பரிசு அது.புரிந்துகொள்ளமுடியாத வகையில் துவார்தே டயஸும் பிறகுஆச்சரியமொன்றை ஏற்படுத்தினார்.
ஆகஸ்ட் 5ம் தேதி பனிமய மாதாவின் திருப்பலி நாள் மற்றும் ஆண்டவரது உருமாற்ற விழாவிற்கு முந்தின நாள், அன்று துவார்தே டயஸ் கேஸ்கோ பண்ணைக்கு வந்து ஹிலாரியோ கார்டெய்ரோவிடம் பேசவேண்டுமென்றார். அப்போது அந்த இளைஞனும் அங்கிருந்தான், நிலவொளியால் ஆனவனோ என ஒருவர் எண்ணும்படிக்கு, ஒரு வேற்றுலகவாசியைப்போல வசீகரத்துடன் அமர்ந்திருந்தான்.அந்த இளைஞனைத் தன் வீட்டுக்கு அழைத்துச்செல்ல அனுமதிக்க வேண்டுமென அவர்களிடம் அவர் கெஞ்சினார். ஏதேனும் உள்நோக்கத்தினாலோ, தன்னிடமில்லாத ஒரு அந்தஸ்தை இருப்பதாகக் காட்டிக்கொள்ளவேண்டுமென்ற ஆசையினாலோ, சுய ஆதாயம் கருதியோ இவ்வேண்டுதலை முன்வைக்கவில்லையென்றும் அந்த இளைஞனாலேயே தான் தன் பாவங்களை உணர்ந்து அவற்றுக்காக மனம் வருந்தியதாயும் அதனால் அவன்மீது மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டிருப்பதாயும் எனவே அவனைத் தன்னோடு வைத்திருக்க விரும்புவதாகவும் சொன்னார். தெளிவாகப் பேசமுடியாத அளவிற்கு அவர் நெகிழ்ந்துபோயிருந்தார், கண்களில் நீர் பெருகிக்கொண்டிருந்தது. அவர் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களால், மூர்க்கமும் கோபமுமான வழியிலன்றி தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் தெரிந்திராத ஒரு மனிதனின் இத்தகைய மாற்றத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. சூரியனின் கண்ணைப்போன்ற பிரகாசத்துடனிருந்த அந்த இளைஞன் இயல்பாக எழுந்து துவார்தே டயஸின் கையைப் பிடித்து உடன் ஜோஸ் காக்கெந்தே வர வயல்கள் வழியே நடந்து துவார்தேவின் நிலத்தில் கைவிடப்பட்ட ஒரு செங்கல் சூளை இருந்த இடத்திற்கு அவரை அழைத்து வந்தான். அங்கே தரையில் அடையாளமிட்டுத் தோண்டச் சொன்னான். அங்கே அவர்கள் வைரப் படிவுகளைக் கண்டனர்-அல்லது வேறொரு கதையின்படி ஒரு பெரிய பானை நிறையத் தங்கத்தைக் கண்டனர். சாதரணமாக, துவார்தே டயஸ் அதன்பின் தானொரு பெரும் பணக்காரனாகிவிடக்கூடும் என நினைத்தான். ஆச்சரியத்தில் திகைத்துப்போன அவனது ஊரார் கூற்றுப்படி அன்றிலிருந்து அவனொரு நல்ல, நேர்மையான மனிதனாக மாறியிருந்தான்.
வந்திக்கத்தக்க புனித பிரிஜித்தின் திருநாளன்று எதனாலும் சலனப்படாத அவ்விளைஞனைப் பற்றி மேலும் ஒரு விஷயம் தெரியவந்தது.முந்தின இரவு வழக்கமாக மறைவது போல அவன் மறைந்து போயிருந்தான் ஆனால் இம்முறை வான் வழியாக, அதுவும் மழையற்று இடி முழங்கிக்கொண்டிருக்கையில் மறைந்து போயிருந்தான். ஜோஸ் காக்கெந்தே சொன்னதெல்லாம் ஒரு குறிப்பிட்ட வடிவ அமைப்பில் ஒன்பது விழாக்கால நெருப்புகளை மூட்ட அவன் உதவினான் என்பதுதான். அது தவிர்த்து அவன் சொன்னதெல்லாம் மேகம், ஜுவாலைகள், சப்தங்கள், உருண்டையான பொருட்கள், சக்கரங்கள்,ஒருவகையான வாகனம், அதிதூதர்கள் இவற்றைப் பற்றிய, மீண்டும் ஒருமுறை சொல்லப்பட்ட திகிலூட்டும் விவரணைகள். சூரியனின் முதல் கிரணத்துடன் சிறகுகள் கொண்டு அவன் பறந்து போயிருந்தான்
தம் வாழ்நாள் முழுக்க அவ்விளைஞனைப்பற்றி நினைத்தபோதெல்லாம் ஒவ்வொருவரும் தத்தமது வழியில் அவனுக்காக துக்கம் கொண்டாடினர்.அவர்கள் தாம் சுவாசித்த காற்றை, மலைகளை, நிலத்தின் உறுதியை ஐயப்பட்டனர்-ஆனால் அவனை நினைவுகூர்ந்தனர். அவரது மகள் கன்னித்தன்மை மாறாத விவியானா தன் ஆனந்தத்தை ஒருபோதும் இழக்காதவளாயிருந்தபோதும் துவார்தே டயஸ் உண்மையில் வேதனையால் இறந்துபோனார். ஜோஸ் காக்கெந்தே அக் குருடனுடன் நீண்ட நேரங்கள் உரையாடுவான். நிறையப்பேர் சொல்வது போல ஹிலாரியோ கார்டெய்ரோவும் அவ்விளைஞனைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் தான் பாதி இறந்து போனவனாக உணர்வதாகச் சொல்லுவார். அவன் அங்கிருந்து சென்றபோதும் அவனது ஒளி அங்கிருந்தது. சொல்வதற்கென்று அங்கிருந்ததெல்லாம் அது ஒன்றுதான்.
நன்றி: 'கல்குதிரை' பனிக்காலங்களின் இதழ். ஆசிரியர்: கோணங்கி.