Tuesday 12 May 2015

சாபம்




வீட்டுக்குள்ளிருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தேன். காலை உச்சிப்பொழுதாக வளர்ந்துகொண்டிருந்த அவ்வேளையில் ஊரார் தோராயமாக என் வீட்டின் முன்புறத்திலிருந்து  வலதுபுறமாக நீண்ட ஒரு நேர்க்கோட்டில் என் பார்வைக்கு எட்டும்படியான தொலைவில் கூடிக்கொண்டிருந்தனர். ஓட்டமும் நடையுமாக பதற்றத்துடன் அவர்கள் ஒருவர்பின் ஒருவராகவோ இரண்டு மூன்றுபேர் சேர்ந்தோ அங்கு வந்தனர். வீட்டின் தனிமைக்குள் நிழல் கவிந்திருக்க நான் தாழ்வாரத்தை ஒட்டிய திண்ணையில்தான் இருந்தேன். சந்தேகமற்ற வெயில் தெருவை நிரப்பியிருந்தது. திண்ணைக்கும், அதன் விளிம்பையொட்டி மேலே சற்றே தூக்கிக் கட்டப்பட்டிருந்த முரட்டுத் துணிப் படுதாவுக்கும் நடுவில் புக முயற்சிக்கையில் அதன் கண்கூசும் ஒளியை நான் உணர்ந்தேன். எந்தக் கோடையிலும் வெயில் தன் முயற்சியில் வென்று திண்ணைக்குள் பிரவேசித்ததில்லை, சாணத்தால் மெழுகி மூங்கில் தட்டியால் மறைக்கப்பட்டிருந்த காலத்தில் தொடங்கி இப்போதுவரை வெயிலுக்குத் தப்ப யாராயினும் நம்பி இந்தத் திண்ணையில் ஒண்டிக் கொள்ளலாம். காலத்தின் மடிப்புகள் திண்ணையில் ரேகைகளில் இருக்கையில் மனதின் அடுக்குகளிலிருந்து என்னால் எப்போதும் மீட்க முடியும் நினைவுளில் திண்ணையின் பழங்காலமிருந்தது. திண்ணையைத் தாண்டியும் சிலபேர் கூட்டம் கூடியபடி இருந்த இடத்துக்குப் போய்க் கொண்டிருந்தனர், அடையாளம் கண்டு யாரையாவது அருகே அழைத்து என்னவென விசாரிக்கலாமென்றால் இந்த வெயில் அதை அனுமதிக்கவில்லை. திண்ணைக்கு அந்தப் பக்கம் வெயிலுக்குள்ளாகக் கடந்துபோகிறவர்கள் ஒரு கானல் ஓவியமாகத் திரிந்து வளைந்து தெருவின் நெடுக்காக வீசிய மெல்லிய வெங்காற்றுக்கு அசைந்தபடி போனார்கள். கண்ணுக்கு ரசனையான காட்சிதான் என்றாலும் என்ன அங்கே நடக்கிறது என்ற மன அரிப்பு இந்தக் காட்சியை ரசிக்கவொட்டாமல் செய்தது. இப்போது கூட்டம் சற்று வளர்ந்திருந்தது, நான் பார்க்கும் கோணத்திலிருந்து மனிதர்களின் ஒரு அரைவட்டம் தெரிந்தது. அடர்நீல வண்ண சேலைகள் பிரதானமாகத் தெரிந்தன, பிறகு வெள்ளை நிறம்-வேட்டிகளாக இருக்கும். என் கண்ணுக்குத் தெரியாத வட்டத்தின் அடுத்த பாதியிலும் அப்படித்தான் இருக்க வேண்டும். சத்தங்கள் எதுவும் கேட்கவில்லை உரத்தோ, குசுகுசுப்பாகவோ  யாரும் பேசவில்லை, கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதட்டும் குரல்கள்கூட கேட்கவில்லை. அல்லது அடர்ந்த இந்த வெயிலில் என் காதுகள் அடைந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் வீட்டின் பின்வாசலின் புங்கமர நிழலில் ஓசைகளை எப்போதும் நான் தெளிவாகவே கேட்டேன். புங்கமரத்தை அரிதாகவே பறவைகள் அண்டும், எனக்குத் தெரிந்து புங்கங்காய்களைப் புசிக்கும் பறவைகளும் கிடையாது. ஆனால் காய்த்திருக்கும் காலங்களில் கூரிய அலகால் கீறப்பட்டது போன்ற  புங்கங்காய்களின் நெடிமிக்க வாசனையை அனுபவித்தபடி மரத்தின் கீழ் நெடுநேரம் அமர்ந்திருப்பேன். சற்று தள்ளி புழக்கடை கல்தொட்டியில் அலுமினியக் குவளையில் தண்ணீர் மொண்டு குளிப்பவர் தேய்க்கும் சோப்பின் வாசனையை நான் சொல்வேன். சீரான இடைவெளியில் கல்லில் அலுமினியக் குவளை உரசி எழுப்பிக் கொண்டிருக்கும் ஓசை எப்போதும் என் காதுகளை எட்டாமல் போவதில்லை.கூட்டம் கூடிக்கொண்டிருந்த இடத்தை நோக்கிச் செல்பவர்கள் இப்போது குறைந்திருந்தார்கள், அதேநேரம் கூட்டத்திலிருந்து விலகி யாரும் வரவில்லை என்பதும் எனக்குப் புரிந்தது. கூட்டத்தினரை அங்கேயே இழுத்துப்பிடித்து வைத்திருந்த அந்த ஒன்றின் மீது என் ஆவல் கூடியது. அதைத் தெரிந்துகொண்டு ஆகப்போவது ஒன்றுமில்லை என்றாலும் வேறு எதன்மீதும் யோசனை செல்லாது தடுக்கும் இந்த மனதின் தவிப்பை குறைத்துக்கொள்ளலாம். சில நேரம் நான் வேறாகவும் மனம் வேறாகவும் இருப்பது பற்றி யோசித்திருக்கிறேன். பதினாறு வருடங்கள் சிறையின் சுவர்களில் ரத்தம் கசியும் விரல்களால் கீறிக்கொண்டேயிருக்கும் ஒருவனுக்கு அது சாத்தியமாகிறது. கோணியால் இறுக மூடிய முகத்தில் குவளை நீரை மெதுவாக ஊற்றுகையில் அவன் நுரையீரல் தொண்டைக்குள் தள்ளப்படுகிறது. ஏனைய பொழுதுகளில் தன் சுவாசம் மட்டுமே நிரம்பிய இருண்ட அறைக்குள் பார்வை தேய்ந்து விழிகள் நசிகின்றன. திண்ணையை ஒட்டி நடந்து அவ்விடத்தை நோக்கிச் சென்ற ஒருவர் என்னைப் பார்த்ததும் நின்றார், ஒரு வெளிர் நிற கானல் சித்திரம், அணிந்திருந்த மூக்குக் கண்ணாடியில் சூரியன்களைப் பார்த்தேன். மன்னிக்கணும் வர முடியாததுல எனக்கு வருத்தம்தான் என்றுவிட்டு தொடர்ந்து நடந்தார். அல்லது அது நீண்ட நேரம் நடந்த சம்பாஷணையாக இருக்கவேண்டும், வயது முதிர்ந்தவர் என நினைக்கிறேன் மிகவும் உரத்த குரலில் பேசினார். அந்த உரத்த குரலும் வெயிலின் தகிப்பும் தின்றது போக என் காதுகளில் எஞ்சியவை இந்த வார்த்தைகளாக இருக்கும்.எனக்கு அவர்மீது பரிதாபம் தோன்றியது. முதிர்ந்த வயது சாபம்தான், பிறப்பு முதல் ஒருவரால் எற்றி தூரத் தள்ள முடிந்த சாபங்களும், தீவினைகளும் உடல் முதிரும்போது வந்து  முதுகில் ஏறிக்கொள்கின்றன. அந்த டிசம்பர் மாதத்துப் பின் அந்தியில் காட்பாடி ரயில்வே ஸ்டேஷனில் பார்த்த அந்த முதியவள் இன்னமும் அகலாத சித்திரமாய் கண்ணுக்குள் இருக்கிறாள். பார்த்த மாத்திரத்திலேயே ஏன் இவள் இன்னும் சாகாமலிருக்கிறாள் என்ற எண்ணம் பரிதாபத்தின் உச்சத்தில் எரிச்சலாக வந்தது. பதினெட்டு வயதின் பொறுமையின்மையில் பிச்சையெடுக்கும் அழுக்கேறிய முதுமை ஒவ்வாமை தந்தது. தரை குளிர்ந்திருந்த பிளாட்பாரத்தில் சன்னமாக மூத்திர வாடையடித்தது. சில்லறை கேட்டு அவள் அருகே வந்தபோது கவனியாதது போல வேறுபக்கம் திரும்பிக்கொண்டேன். அப்பா இறந்து மூன்று நாட்களாகியிருந்தது, அல்லது அது ஒருவார காலமாகவும் இருக்கலாம். முதலில் எழுபத்தாறு வயதில் தெருக்கிணற்றில் குதித்து சாக அவருக்குத் தெம்பிருந்ததை எண்ணி எனக்கு வியப்பாகத்தான் இருந்தது. நெஞ்சளவான சுற்றுச்சுவரில் ஏறி நின்று குதிக்க வேண்டும், அவரால் முடிந்தது. இறுக்கமான அந்த தினத்தில் என்னை ராணுவத்தில் சேர்க்க அழைத்துப் போகும் ரயில் வருவதற்காக அப்பாவும் நானும் காத்திருந்தோம். பதினெட்டு வயதுக்குள்ளாக பெரும் கனவுகள் முளைத்திருப்பதும் அவ்வயதுக்குள்ளாகவே அவை தகர்ந்துபோவதும் சாபம்தான். வாழ்வில் என்னை சாபங்கள் பின்தொடர்ந்தபடியே இருந்தன. பத்தாம் வகுப்பில் மூன்றாவது முறையாக ஆங்கிலத் தேர்வை எழுதப்போன பஸ் பயணத்தில் கைக்குழந்தையுடன் ஏறிய நரிக்குறவப் பெண் தனக்கு எழுந்து இடம் விடாததற்கு என்னை சபித்தாள். பாஷை புரியாத சாபம். உட்கார்ந்து படித்துக்கொண்டு போனால்தான் தேர்வில் ஏதாவது எழுத முடியும் என அவளிடம் விளக்க நினைத்தேன். அவளுடன் பேசத் துணிவில்லை. ஆனால் அந்த முறை நான் தேறினேன். இரண்டரை கிலோ மீட்டர் தொலைவை ஐந்தரை நிமிடங்களுக்குள் ஓடிக் கடக்கவேண்டிய தேர்வுக்கு முன்பாக பீடி வாசம் கமற அப்பா அருகே வந்து இறைஞ்சுவது போன்ற குரலில் எப்படியாவது ஓடிவிடு என்றார். அவர் குரல் உடைந்தது, கலங்க ஏதுவாகக் கண்கள் தொலைவாகப் பார்த்தன. நான் பதில் பேசவில்லை. ஓட்டம் ஆரம்பித்த சற்றைக்கெல்லாம் மிகப்பாரமாக மூச்சிரைத்தது. நெஞ்செரிந்து கண்களை இருட்டியது, மலம் முட்டியது. ரயில் கிளம்புகையில் அந்த முதியவள் எங்கள் பெட்டியையே பார்த்துக் கொண்டிருந்தாள். மனதுக்குள் சபித்திருப்பளா? தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு உன் கால்களைப் பார்த்தவாறே ஓடு என்று அப்பா சொல்லியிருந்தார். கவிழ்ந்த பார்வையின் கட்டத்தில் இரண்டு முன்பாதங்கள் ஒன்றையொன்று மிஞ்ச முயல்வதைப் பார்த்தபடியே ஓடினேன். வாழ்நாளில் அதுபோல எப்போதும் நான் ஓடியதில்லை. பகலில் நான் புகைப்பது அபூர்வம், அதுவும் இதுபோன்ற வெயில் நிறைந்து வெக்கை திரண்ட பகலில் சுவாசத்துள் புகையிலையின் அரூப நடனத்தை ரசித்து அனுபவிக்க இயலுவதில்லை. இரவே எல்லா வகையிலும் இந்நடனத்தை ஆதரிக்கும் கலாரசிகப் புரவலன், முன்னிரவில் மேல் விழும் தெருவிளக்கின் குறையிருட்டுக்குள் இருந்தபடி நான் புகைப்பேன். இப்போது புகைக்கலாம் என்ற எண்ணம் தோன்ற கரும்பு சுருட்டு ஒன்றை எடுத்துப் பற்றவைத்தேன். இந்தப் பகல்பொழுதின் பதற்றத்தை அது தணிக்கக் கூடும். நாசி புகையிலை மணத்தில் லயிக்க புகையை வெயிலுக்குள் ஊதினேன். முதியவளின் நரைத் தலையில் அலையும் கேசங்களை அது எனக்குக் காட்டியது. கோமல் சிகரெட் புகையை எப்போதும் என் வாய்க்குள் ஊதினாள். அப்போதெல்லாம் அந்தப் புகை உலகின் அதி உன்னதச் சுவையோடும் மணத்தோடும் என்னுள் இறங்கியது. கர்னலின் வீட்டுக்கு ஆர்டர்லியாக இருந்தபோது துப்பாக்கித் துடைக்கும் மென்துணியால் அவரது மூன்று ஜோடி பூட்சுகளைத் துடைத்து பளிங்கு நாவற்பழங்களைப் போன்று மின்ன வைத்தேன். குறுகிய படிக்கட்டுகளில் ஏறி மாடியின் தொட்டிச்செடிகளில் ஒரு பழுப்பிலையும் இல்லாதவாறு சுத்தம் செய்து தண்ணீர் விட்டேன். சருகுகளைக் கூட்டி எடுத்துக் கீழே வந்து யூஸ் மீ என்றெழுதியிருந்த குப்பைத் தொட்டியில் கொட்டினேன். சைக்கிளில் மார்க்கெட் சென்று கோமலுக்கான சானிடரி நாப்கின் உள்ளிட மேம் சாகிப் சொன்ன பொருட்களை ஒன்றும் மறக்காமல் வாங்கி வந்தேன். குறுகலான மாடிப்படிகளில் இரண்டு மூன்று தடவை கோமலின் மார்புகள் என்மேல் உரசியது எதேச்சையானதல்ல என்பதை சீக்கிரமே அறிந்தேன். பால் நிறத்தில் குட்டைப்பாவாடை பனியனுக்குள் கோமலின் உடல்  இப்போதுதான் காகிதத்தில் பொதிந்த கதகதப்பான ரொட்டி போல இருந்தது. ஆனால் மல்லிகாவின் உடல் சருகைப் போன்றது. பெண் பார்க்கப் போயிருந்தபோதே என்னுள் அப்படியொரு பிம்பம் உருவாகிப் பதிந்து விட்டிருந்தது, அது பூஞ்சையென்று சொல்ல முடியாத பூஞ்சையுடல். ஸ்பரிசத்தின் கணத்தில் உயிர் பெற்று, முயக்கத்தின்போது, திரளும் வெள்ளத்தில் பூரணமடையும் வறண்ட நதி போலப் பெருகி அவனை நிறைத்தது. புறத்தே முறுக்கி அகத்தில் நாளங்கள் தெறிக்கையிலும் பொடிந்துவிடாத சருகு உடல் அது என்பதை மீண்டும் மீண்டுமாய் தீராத ஆவலுடன் அறிந்தபடியிருந்தேன். அது ஒருவித படிப்பு என்பதாகவும், கண்டறிதல் என்பதாகவும், தீர்ந்துவிடாதபடிக்கு அதே ஆச்சரியங்களுக்குள் திரும்பவும் நுழைந்து வருதல் என்பதாகவும் இருந்தது. திருமணமாகிய பதினேழாம் நாளே நான் ராணுவத்துக்குத் திரும்பியிருந்தேன். மல்லிகாவின் அண்மைக்காக ஏங்கிய இரவுகளில்தான் புகைக்கும் பழக்கத்திடம் வந்து சேர்ந்தேன். இதமான தாலாட்டாகவும், வெறுமைக்குள் நிறைந்து பரவிப் பின் வெளியேறும் ஒரு நம்புதலுக்குரிய துணையாகவும் புகை மாறிப்போனது. பம்பாயிலிருந்து மல்லிகா வந்திருப்பதாகவும் அவளுக்குப் பதினைந்து வயதில் பெண்பிள்ளையொருத்தி இருப்பதாகவும் கேள்விப்பட்ட அன்று இரவு எண்ணிக்கையில்லாத சுருட்டுக்களைப் புகைத்தேன். வாய் கமறி தொண்டை வழி இருதயத்தில் புகை படிந்து அதைக் கணக்கச் செய்த அந்த இரவில் நான் உறங்கவில்லை. மல்லிகா ஒரு சருகைத்தான் பிள்ளையாகப் பெற்றெடுத்திருப்பாள். கோமலைத் தவிர்க்க அனைத்தையும் முயன்றேன். வயிற்றுவலி என்று மருத்துவமனையில் ஐந்து நாட்கள் படுத்திருந்தேன். திரும்ப வந்தபோது கல்லூரித் தேர்வுகள் முடிந்து வீட்டிலிருந்த கோமல் இன்னும் உக்கிரமாக என்னை நெருங்கினாள். கர்னலின் வீட்டுப் படிகளில் தடுமாறினேன். தொட்டிச் செடிகளில் பழுப்பிலைகள் தென்படத் தொடங்குகையில் ஏன் ஒரு மாதிரியிருக்கே என்று கேட்டு நான் பொய்யாகச் சொன்ன உடல் உபாதைகளுக்குக் கரிசனத்துடன் மருந்து தாயரித்துத் தந்தாள் மேம் சாகிப். தாயினுடையது போன்ற அந்தக் கஷாயங்களை, குற்றவுணர்வு மேலிட, குடிக்க முடியாமல் தவித்தேன். ஓடித் தப்பிவிட முடிகிற ஒரு பந்தயத்தை நான் மிக விரும்பினேன். ஐந்தரை நிமிடங்களுக்கு இன்னும் எட்டு வினாடிகள் இருக்கையில் எல்லைக் கோட்டைத் தாண்டினேன். நெஞ்சு வெடித்து விடுமோ என்றபடியே புல்தரையில் சரிந்தபோது கண்ணீரைத் துடைத்தபடி அப்பா வந்து கையைப்பிடித்து தூக்கினார். எப்போதும் அப்பா அழுது நான் பார்த்ததில்லை. அவரது சுமைகளை சுமக்க நான் தெரிவாகிவிட்டிருந்தேன் என்பதில் ஆசுவாசம் கொண்டவராக எதுவும் பேசமாலேயே நிம்மதியாக ஆழ்ந்து ஒரு பீடியை அவர் அனுபவித்தார். மேம் சாகிப் விமன்ஸ் கிளப்புக்கும், புத்தகங்கள் எடுத்து வர நகரின் மையத்தில் இருந்த லைப்ரரிக்கும் சென்ற நேரங்களில் கோமல் புகைத்தாள். மறுப்பையும் மீறி என்னையும் புகைக்கச் சொன்னாள். அதி கிறக்கமேற்படுத்திய அந்தப் புகையின் பிடிக்குள் இருக்கையில் என்னையவள் வென்றாள். முதல் முறை கோமலோடு இருந்தபின் மல்லிகாவை நினைத்து நான் அழுதேன். அந்த உறவில் கோமல் என்னை உபயோகித்தாள், மிக லாவகமாக ஒரு தேர்ந்த ஆர்க்கெஸ்ட்டரா கண்டக்டரைப்போல அதை நடத்தினாள். துரோகமிழைப்பதன் வலியினூடே சிறு முனைப்புமற்று முழுதாக ஒப்புக்கொடுத்துவிடுவதன் புதிதான ருசியையும் அனுபவித்தேன். இரண்டு மாதங்கள் இப்படியே போய்க்கொண்டிருகையில் நான் மிகப்பயந்த அந்தக் கணம் நிகழ்ந்தது. லைப்ரரி புத்தகமொன்றை மறந்துவிட்டுப்போன மேம் சாகிப் கிளம்பிய பத்தாவது நிமிடம் திரும்பி வந்தாள். அந்தக் கணம் நான் தப்பிவிட நினைக்கவில்லை, என் தரப்பென்று எதையும் முன்வைக்க விரும்பாத நான் நியாயமான தண்டனைக்கு என்னை ஒப்புக் கொடுக்கவே சித்தமாயிருந்தேன், அதுவே மல்லிகாவுக்கு நான் புரிந்த கடும் துரோகத்திற்கு என்னளவிலான சிறு பிராயச்சித்தமாய் அமையும். வீட்டின் முன்பாக தெருவின் அந்தப்பக்கம் சனி மூலையில் இருக்கும் பொதுக்கிணறு கோடையில் வறண்டு போகையில் பள்ளிக்கூடத்துக்குப் போகும்போதும் வரும்போதும் சிறுவர்கள் கஷ்டப்பட்டு எம்பி  உள்ளே பாரத்துக் குரல் கொடுத்தார்கள். கிணறு தனது வறண்ட ஆழத்திலிருந்து அவர்கள் குரலை கடூரமாகப் போலி செய்து எதிரொலித்தது. மழை பெய்து மண் ஊறும் காலங்களில் பருவப் பெண்ணைப் போல தன் சுரப்புகளில் பூரித்து அது தளுக்கியது. தீடீரென்று நீர் வற்றிய தடாகம்போல ஆகிவிட்டிருந்த மேம் சாகிப் போன் செய்ததும் கர்னல் வந்தார். நான் துடைத்த பூட்ஸுகள் என் தொடையிலும் அடி வயிற்றிலும் தாக்கின. கர்னலைப் போல மேம் சாகிப் வசை பேசவில்லை. அவள் கண்களில் தாய்க்குரிய ஒளி இல்லாததைக் கண்டேன், வாய் திறந்து அவள் அளிக்காத சாபத்தை பெற்றுக் கொண்டு பேரக் திரும்பினேன். ஆர்டர்லி வேலையிலிருந்து வழக்கமான பணிக்கு வந்திருந்தேன். சில நாட்களில் ஆமரியிலிருந்து எல்.எம்.ஜி துப்பாக்கியொன்று காணாமல் போனதாக பட்டாலியன் திமிலோகப்பட்டது. வழக்கமான பேச்சுக்களுக்கும், ஒலிகளுக்கும் என் காதுகளை ஒத்திசைவு செய்ய மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன், கோமல் என் காதுகளைத் திருடிக் கொண்டுவிட்டாளோ? திடீரென வாழ்வு ஒளி குன்றியது போலானது. கண்கள் கிறங்க கீழுதட்டைக் கடித்தபடி மல்லிகா மெலிதாக முனகும் ஓசை காதுகளுக்குள் பெரிதாக அதிர்ந்தபடியேயிருந்தது. காணாமல் போன நான்காவது நாள் அந்தத் துப்பாக்கி கம்பளிப் போர்வைக்குள் மடித்து என் ட்ரங்குப் பெட்டியின் அடியில் கண்டெடுக்கப்பட்டது. ஒரு டஜன் அமைப்புக்களின் பெயர்களைச் சொல்லி யாருக்காக இதைக் களவாடினாய் எனக் கேட்டபோது இருண்ட ஆழமான புதைகுழி எனக்காகத் தயாராகிக் கொண்டிருப்பதை உணர்ந்திருந்தும் வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ள சிரமப்பட்டேன். ராணுவ நீதிமன்றத்துக்கு தெளிவான ஆதாரங்கள் சிக்காததால் சிறையில் என் மீதான சித்திரவதைகள் கூடிக்கொண்டே போயின. முதல் தடவை மல்லிகா வந்துபோது அவள் கண்களை என்னால் பாரக்கக்கூடாமல் போனது. ஆயுளளவும் காத்திருப்பதான உறுதியை கைதொட்ட மெல்லிய வருடலில் அவள் தந்துவிட்டுப் போனாள். சிறையில் வருடங்கள் கழிந்தபடியிருந்தன. இரண்டாம் முறை வந்தபோது மல்லிகா அழவில்லை, பேசவுமில்லை. அவள் சருகு உடலில் பூஞ்சைகள் படர்ந்திருப்பதை மங்கிக்கொண்டு வந்த என் கண்கள் வழி பார்த்தேன். எனக்கான ஒரு சாபம் அவளுள் உருவாகியபடி இருந்ததையும்கூட. முன்னோக்கியும் நகரமுடியாமல் பின்னுக்கும் போக முடியாமல் வழக்கு பதினாறு வருடங்கள் கழித்து முடிவுக்கு வந்தது. ஊருக்கு வந்தபோது வீடு ஒரு பாலையின் நடுவில் இருந்தது. அப்பா மட்டுமே இருந்தார். மாலை சாத்திய சாத்தாத வரிசையான புகைப்படங்களிலிருந்து அம்மாவின் மரணத்தையும் தங்கைகளின் திருமணங்களையும் அறிந்தேன். மல்லிகா பிறந்தவீடு போன மறு வருடம், அதாவது நான் சிறைக்குப் போன ஆறாவது வருடம், தூரத்து உறவுக்காரர் ஒருவருடன் பம்பாய் போய்விட்டிருந்தாள், ஊரின் வாரத்தைகளில் சொல்வதானால் ஓடிப்போய்விட்டிருந்தாள். எனக்கு அது அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. வினோதமாக அந்தச் செய்தி எனக்கு நிம்மதியளித்தது. வம்புகளாகவும் கிசுகிசுக்களாகவுமே ஊரில் நிலவிய அவளைப்பற்றிய தகவல்களை நான் புறந்தள்ளினேன், பின் ஊரையே புறந்தள்ளினேன். அதுவொரு நினைவுதான் என்றாலும் மல்லிகா புங்க மரத்தடிக்கு அப்பாலிருந்த கல்தொட்டியில்தான் இப்போதும் குளித்துக் கொண்டிருந்தாள். அப்பா இறந்தபின் இந்தத் திண்ணை எனக்கு உரிமையானது. இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு வார்த்தைகள் குழறிய அவரின் பேச்சில் உதடுகளின் அசைவைப் படிக்கக் கற்றிருந்தவன் ஒரு சாபத்தைத்தான் படித்தேன்.என் ஊழையும் அவருடையதையும் பிணைத்த இந்த பிறப்பில் இனியும் உழல்வாதை அவர் விரும்பவில்லை, சீக்கிரமே வெளியேறிவிட வேண்டும் என விரும்பினார். விரைவாக வீட்டுக்கு வந்துவிட்ட கர்னல் படிகளில் வேகமாக ஏறி அருகே வந்து ஓங்கி என் செவிட்டில் அறைந்தபோது அடி தாங்க முடியாமல் கிட்டத்தட்ட நான் தரையில் விழுந்துவிட்டேன். தடுமாறி நிலைக்கு வந்தபோது மண்டைக்குள் ஒலிகள் கேட்டன, காது அணைந்துவிட்டிருந்தது. உரத்துச் சொல்லுங்கள், மல்லிகாவின் மகள் என் மகளாகவும் இருக்க முடியம், இல்லையா, அவள் மல்லிகாவைப் போலவேதான் இருப்பாள், இன்னொரு சிறிய சருகு, மகளே என்று தழுவுகையில் அவள் பொடிந்துவிட மாட்டாள், அப்படித்தானே,  அப்படித்தான். தடியை மெதுவாக ஊன்றித் திண்ணையிலிருந்து எழுந்தேன். தெருவின் அந்தப்பக்கம் வட்டமாக நின்றிருந்த கூட்டத்தை நோக்கி நடந்தேன். வட்டம் அசையாமலும் சிறு ஓசையின்றியும் நின்றிருந்தது. கைத்தடியால் தடவி கிணற்றின் சுற்றுச் சுவரை உணர்ந்தேன். நெஞ்சில் கான்கிரீட்டின் சூட்டை உணர்ந்தபடி பிரயாசைப்பட்டு சுவரைத் தாண்டி எம்பி உள்நோக்கிக் குனிந்தேன், சற்றுநேர யோசனைக்குப் பின் அப்பா என்றேன். பதிலுக்கு இங்கே வந்துவிடு என்று சொன்ன கிணற்றின் ஆழத்தில் இதுநாள்வரை நான் எங்கும் காணாத ஒரு ஒளியைப் பார்த்தேன்.

நன்றி: கல்குதிரை 2014















Friday 20 February 2015

நீலநாயின் கண்கள்: அசதாவின் மொழிபெயர்ப்புக் கதைகள்.

                                                 

     

                                         


குட்டி ரேவதி

  

'நீலநாயின் கண்கள்' என்ற அசதாவின் மொழிபெயர்ப்புக்கதை தொகுப்பு, தமிழ் வாசகர்களுக்கு மட்டுமன்று, எழுத்தாளர்களுக்கும் முக்கியமானதொரு வருகை. சமீபத்தில், மார்க்வெசின் ஒரு நீளமான நேர்காணலை ஆங்கிலத்தில் வாசித்தேன். அதில் எப்படி அவர் எழுத வந்தார் என்பதை அழகாகச் சொல்லியிருந்தார். சில வருட இடைவெளிக்குப் பிறகு, அவர் பிறந்த ஊருக்கு அவருடைய அம்மாவுடன் சென்ற போது, அவர் கற்பனை ஏதும் செய்யவேண்டியிராத அளவிற்கு, அந்த ஊரே வாசிப்பதற்கும், அதைப் பார்த்து அப்படியே எழுதிப் பிரதி எடுப்பதற்குமான எல்லா காட்சிகளுடனும் ஒரு புனைவு நிறைந்து இருந்ததாகக் கூறினார். இத்தொகுப்பில் எனக்குப் பிடித்தமான எழுத்தாளர்கள், இசபெல் ஆலண்டே, மார்க்வெஸ் மற்றும் வில்லியம் ஃபாக்னரின் கதைகள் இருப்பதும் கூடுதல் சுவை.

தொடக்கத்தில், நமக்கு அறிமுகமான ரஷிய இலக்கியங்களாகட்டும் மற்ற அயல் மொழி இலக்கியங்களாகட்டும், இன்று மீண்டும் வாசிக்கையில் எந்த அளவிற்கு அவை சாதிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. பெரும்பாலும் பார்ப்பனியக் கொச்சை மொழியில், பார்ப்பனீயர்கள் உரையாடிய வழக்கிலேயே அயல்நாட்டு மனிதர்களும் உரையாடுவது கேலிக்கு இடமானதாக இருக்கிறது. உண்மையில், இதிலிருந்து தப்பித்தவன், தாஸ்தாயேவ்ஸ்கி மட்டும் தான் என்று நினைக்கிறேன். அவனுடைய இலக்கியங்களில் இருந்த வறுமையும் நேரடித்தன்மையும் உன்னதமும் கூட்டாகச்சேர்ந்து மொழிபெயர்ப்பாளரை அதன் அசாதாரணத்தன்மையை நோக்கி இழுத்துச்சென்றிருக்கலாம். அசதாவின் மொழிபெயர்ப்பு அதிலிருந்து விடுபட்டு இருப்பதற்குக் காரணம், சமீபத்தில் பரவலாக எல்லா பின்புலத்திலிருந்தும்  தமிழ்ச்சொற்கள் உற்பத்தியாகி வந்து நமது சிந்தனையிலும் கற்பனையிலும் கலந்து புதிய  கற்பனைக்கான வேதியல் மாற்றங்களை   உருவாக்கியிருப்பது தான்.  

'நீலநாயின் கண்கள்' தொகுப்பில், உள்ள கதைகளுக்கு இடையே பொதுச்சரடு ஏதுமில்லை என்று கூறியிருக்கிறார், அசதா. கதைகளைத் தொடர்ந்து வாசித்து முடிக்கையில் எனக்கு அப்படித்தோன்றவில்லை. வெவ்வேறு பெண்களின் ஆளுமையும், கதை நிகழ்வுகளைத் தீர்மானிக்கும் கற்பனை வெளியும், எழுத்தாளர்கள் அவர்கள்  குறித்து தரும் உடல் திடமும் நூலெங்கும் தொடர்ந்து இருக்கின்றன. ஆசிரியை ஐனேஸ் ஆகட்டும், வில்லியம் ஃபாக்னரின் எமிலி க்ரையர்ஸனாகட்டும், ஜேம்ஸ் தர்பரின் கதையில் வந்து போகும் திருமதி மிட்டி ஆகட்டும், மார்க்வெஸின் 'நீலநாயின் கண்கள்' கதையில் கனவுக்குள் வரும் பெண் ஆகட்டும் ஒரு பிடிவாதமான பெண் குணநலன்கள் நூலெங்கும் விரிந்து கிடக்கின்றன. இது தற்செயலான ஒன்றாகவும் இருக்கலாம்.

'ஆசிரியையின் விருந்தாளி' என்ற இசபெல் ஆலண்டேயின் கதை அப்படியே நம் நிலவெளியில் நிகழும் கதையை ஒத்திருக்கிறது. ஒரு மாம்பழத்தைத் திருடியதற்காக, சிறுவன் சுடப்பட்ட கதை. நீதியும் தண்டனையும் அறமும் பிழையாகாமல் பார்த்துக்கொள்ளும் பணியை ஒரு சமூகமே தன் கையில் எடுத்துக்கொள்வதைப் பற்றிய கதையாக இருக்கிறது. கீழைத்தேயங்களில் எப்பொழுதுமே வாழ்வின் வெளியிலிருந்து தான் நீதிகள் சொல்லப்பட்டிருக்கின்றன, ஏடுகளின் வெளிகளிலிருந்து இல்லை.

மார்க்வெஸின் 'நீலநாயின் கண்கள்' கதையை வாசித்துவிட்டு, தொடர்ந்து அடுத்த கதைக்குச் செல்லும் போது, கனவு வெளிக்குள்ளிருந்து வெளியேற இயலாமல் இன்னும் நம் இருப்பு அங்கேயே நிலைப்பட்டிருப்பதை உணரமுடிகிறது. இது மார்க்வெஸின் கதை மற்றும் அசதாவின் மொழிபெயர்ப்பின் கூட்டு சாதனையாக இருக்கலாம். 

இசபெல் ஆலண்டேயின் 'ஆசிரியையின் விருந்தாளி' மற்றும் 'தாமஸ் வர்காசின் தங்கம்' என்ற இரு கதைகளிலுமே ஒரே கதாபாத்திரங்களும் ஒரே ஊரும் வருகின்றன. தொடர் வாசிப்பில், கதாபாத்திரங்களின் குணச்சித்திரிப்பை விவரிக்க வேண்டிய அவசியமில்லாமல் போகிறது. நிறைய விடயங்களைச் சொல்லாமல் விட்டுப் போகும், ஆலண்டேயின் கதைசொல்லல் தன்மை, கதை மாந்தர்களின்  ஆளுமையை இன்னும் மெருகூட்டுவதாக இருக்கிறது. தற்போதைய தமிழ்ச்சிறுகதைகளின் கதை சொல்லல் முறைக்கு, முற்றிலும் எதிரானது இது. தமிழ்ச்சிறுகதைகளின் கதைசொல்லலில், இயன்றவரை நுட்பமான விவரங்களையும் தகவல்களையும் கொடுக்கவேண்டிய ஆவணப்பதிவு நிலைக்கு வந்துள்ளோம். இங்கே சமூக எழுச்சியும் மாற்றங்களும் நேரடியாக மொழியைத் தான் ஊடுருவும். 

என்னைப் பொறுத்தவரை, சிறுகதைகள் பொதுவாகவே, யதார்த்தத்தின் நிலைகளைச் சொல்பவையாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. ஒரு மனிதன் எடுக்கும் எதிர்பாராத முடிவுகளுக்கான அல்லது அசாதாரணமான முடிவுகளுக்கான மர்மங்கள் அவன் வாழ்வின் எத்தருணத்திலிருந்து பிறக்கின்றன என்பதை அறிவதற்கான பாதையில் விளக்கைக்காட்டிச்செல்லும் முயற்சியாகத்தான் 'சிறுகதை' என்னும் இலக்கிய வடிவம் இயங்குகின்றது. ஆனால், இங்கே பலசமயங்களில் ஒரு செய்தித்தாளில் இடம்பெற வேண்டிய சம்பவம் போல அவை 'இருளின் நிழலை' உயர்த்திப் பிடித்துக்கொண்டிருக்கின்றன.

தமிழில் வெளிவந்த மொழிபெயர்ப்புக்கதைகளில் நான் மிகவும் மதிக்கும் தொகுப்பு மார்கரெத் யூர்ஸ்னர் என்ற பெண் எழுத்தாளரின் 'கீழைநாட்டுக்கதைகள்'. வெ.ஶ்ரீராம், மொழிபெயர்க்க க்ரியா வெளியிட்டிருந்தது. வடிவமைப்பிலும், கதைத்தேர்விலும், மொழிபெயர்ப்பிலும் பொலிவு நிறைந்த தொகுப்பு. தன் கற்பனைகளால்  என்னை நீண்ட நாட்களுக்கு அலைக்கழித்த தொகுப்பு. மேலைத்தேயக் கதைகளின் அந்நியத்தன்மை இக்கதைகளில் இல்லாமல் இருந்தன.  மேலும்,   பெண்கள், அவர்கள் சராசரி வாழ்வைக் கொண்டவர்களாக  இருந்தாலும், துடி தெய்வங்களாக இருந்தாலும் அறங்களைத் தாம் செயல்படுத்துபவர்களாக இருந்தனர். மார்கரெத் யூர்ஸ்னர், அறம் எனப்பட்டவையும், அறம் என்று பெண்களால் செயல்படுத்தப்படுபவையும் மாய யதார்த்தவெளியிலிருந்து உருவி எடுத்து எழுதிக்கொண்டே இருந்தார். மிகவும் சர்ச்சைக்குள்ளான கதைகளை எழுதியவர்.

அசதாவின் இத்தொகுப்பிலும்,  பெண்களின் இத்தன்மையை எதேச்சையாக, உணர்ந்தேன். ஒரு வேளை, லத்தீன் அமெரிக்க மொழிக்கதைகளுக்கும், அவர்களுக்கு எஞ்சிய வாழ்வின் சிக்கல்களுக்கும் இத்தகைய கதைசொல்லல்    திறன் தேவையாக இருந்திருக்கலாம். எனில்,    அமெரிக்க நாட்டின் கதைசொல்லல்களை,  அதில் நிலவும் வறட்சிகளை இக்கதைகள் வென்றுவிடுவதற்குக் காரணம், இவர்கள் சொற்களில் நிரம்பியிருக்கும் மர்மமான அர்த்தவெளிகளும், மாய யதார்த்தவாதக் கதைசொல்லல் முறையும் பெண்கள் தம் நீதியைச் செயல்படுத்தக் கண்டுணரும் அற நியாயங்களும்!

மேலும், இந்நூலில், நாவலின் பகுதிகளைச் சேர்த்திருக்கவேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து. சிறுகதை வடிவங்களும் நாவல்களும் கற்பனை செய்யும் முறையிலோ வாசிப்பின் வசதியிலோ ஒரு பொழுதும் ஒத்துப்போவதில்லை. தவிர்த்திருக்கலாம். சிறுகதைகளின் துடிப்பு நிலையும் நாவல்களின் மந்தத்தன்மை கதியும் ஒத்துப்போவதில்லை. 

அசதா, தனக்கு முன்மாதிரியானவர்கள் என்று குறிப்பிட்டிருக்கும் மொழிபெயர்ப்பாளர் பட்டிலிருந்து நான் சற்று வேறுபடுகிறேன். கவிதையோ புனைவோ தட்டையான மொழிபெயர்ப்பால், நம் கற்பனை எலும்புகள் முறிக்கப்பட்டதை பல வாசிப்பில் நான் உணர்ந்திருக்கிறேன். அதுமட்டுமன்று, யசுனாரி கவபட்டாவின் 'தூங்கும் அழகிகளின் இல்லம்' நாவலை ஆங்கிலத்தில் வாசித்த போது எழும்பிய நிலக்காட்சிகளின் ஒளியும் அழகும் என்றென்றும் துலங்குவதாக இன்னும் என்னுள் நிறைந்திருக்கிறன.

அசதா, தன் பலம் குறித்த முன்முடிவுகளை இத்தொகுப்பில் கடந்திருக்கிறார்.  இன்னும் கொஞ்சம் நுட்பமான உணர்வுச்சித்திரங்களுடன் சிறுகதைகளையும் நாவல்களையும் அவர் தமிழ்வெளிக்கு அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கலாம்.  அதற்கான தேவை இங்கே நிறைய இருக்கிறது. ஏனெனில், இது  கற்பனை நிலக்காட்சிகளை விழுங்கிக்கொள்ளும் அசாத்திய குணத்தை நமக்குக் கொடுக்கும். அதேசமயம், கற்பனையின் தாராளத்தையும் நமக்கு ஊட்டும். உன்னத இலக்கியங்களை மொழிபெயர்க்கும் போது, அந்த உன்னதங்களும் நம் நினைவின் அடுக்குகளில் வண்டலாய்ச் சென்று சேர்கின்றன. இதெல்லாவற்றையும் விட ஒரு மொழிபெயர்ப்பாளர், நிறைய கலைச்சொற்களையும்  தன்னுணர்வின்றி உருவாக்கிவிடுகிறார். அத்தகைய சில சொற்களை, இத்தொகுப்பில் காண நேர்ந்த போது மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்த்துகள், அசதாவிற்கும், நாதன் பதிப்பகம் வழியாக வெளியிட்ட அஜயன் பாலாவிற்கும்!

நன்றிகள்.

(22-03-14 அன்று டிஸ்கவரி புக் பேலஸில் நடந்த விமர்சனக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை)