Thursday, 24 September 2009

'ஒரு முத்தத்தின் பிளாஸ்டிக் பலூன் செப்டம்பர் பனிப்பொழிவில் அசைந்துகொண்டிருக்கிறது'-சமகால ரஷ்ய கவிதைகள் மூன்று.



நினா இஸ்க்கிரங்க்கோ கவிதைகள்
1.நானொரு தெருவில் நடக்கிறேன்
ஒரு பெரிய பையில் எட்டுப் பொருட்களை எடுத்துச் செல்கிறேன்
என் பேரக் ரோஜா
எல்லாப் பென்சில்களையும் தின்றுவிட்டது

கைகளனைத்தையும் கால்சட்டை பாக்கெட்டுகளுக்குள்
விட்டுக்கொண்ட மழை
ஜாஸ்-ராக்,ஹாக்கி மட்டைகள், ஊட்ட உணவுகள்
பாக்ச்சிசாரய்யில் ஒரு குறுக்குச்சந்திலிருந்து எடுத்த
ஒரு நாடகச் சுவரொட்டி

மதிய உணவுக்குப் பிறகு போன்று
களைத்திருக்கிறேன்
கடந்துபோவோரையெல்லாம் எரிச்சலுக்குள்ளாக்குகிறேன்
மார்க்ஸ் அவென்யூ பூனைகளை
உச்சரிக்கப்படுவதும் உச்சரிக்கப்படாததுமான
அசைகளைக் கொண்ட நான்கு சொல்லமைந்த வரியால் திட்டுகிறேன்

நடைபாதையில்
புறா எச்சங்களை காலில் தேய்த்து இழுத்தபடி
ஒரு மனிதனைப் போல இளித்தபடி
டாடன் மன்னர் என்னை நோக்கி வருகிறார்
அவர் வேங்கைச் சட்டை அணிந்திருக்கிறார்
நடத்தைவாதியின் நெருப்புமூட்டியுடன்
இதயம் அமர இடமே இல்லையென்பதுபோல
கதவைத் திறக்கிறார்

என் வழியாக ஒரு பதினைந்து வினாடிகளுக்கு
இருப்பை அவர் விளங்கிக்கொள்கிறார்
ஒரு வெளிநாட்டவரைப்போல பறக்குந்தட்டில்
கிளம்பிச் செல்கிறார் இன்னும் மேலான உலகத்துக்கு

நான் நிற்கிறேன்
நாட்டுப்புற பாடகனின் வாய்ப்பூட்டை எடுக்காமல்
ரயில்வே கட்டுமான அமைச்சகத்தின் வாசனையையும்
ஷிமக்கன் இறைச்சி வறுவல் வாசனையையும் உணர்ந்தபடி.


2.

சதுக்க இலைகளின் பேச்சோயாத கூட்டம்
வறண்ட துளைகளிட்ட, கடிகாரங்களின் சிறு ஈஸ்டர் ரொட்டிகள்
கருத்த சருமத்தின்மீது உப்பைப்போல மென்மையான வாதாம் கொட்டைகள்
இறந்துபோன தினம்தான் மிக விலைமதிப்பற்றது
இரட்டைக் கண்ணாடிக்குப் பின்னால் காகித அட்டையின் சத்தம்
இங்கும் அங்குமாக
பிசிரின்றி சமமாக வெட்டியெடுக்கப்பட்ட சிறு கட்டங்கள்.
நீடித்த மெத்தனத்தின் இனிய வாள்கள்
புல் மற்றும் இரவின் கூராக்கப்பட்ட செங்குத்துக் கோடுகள்
ஓநாய்களின் காஸ்டனெட்* இசைக்கருவிகள்
யாரோ கடைசி மூன்று பறத்தல்களை துக்கித்திருக்க வேண்டும்.
வார்ப்பிரும்பு கொலைக்கருவியில் ஒரு ரோமம் கட்டப்பட்டிருக்கிறது
மறந்துபோன, ஒரு முத்தத்தின் பிளாஸ்டிக் பலூன்
செப்டம்பர் பனிப்பொழிவில் அசைந்துகொண்டிருக்கிறது
ஓசையுடன் உடைந்து உதிரும் சுண்ணக்கட்டி பனிப்புயலை
சமாளித்து நின்றபின்
மரங்கள் நம்மிடமிருந்து மறைகின்றன
கிடைமட்டமாக வெப்பம் தணிகின்றன.
*உள்ளீடற்ற இரண்டு மர அல்லது எலும்புத் துண்டுகளால் ஆன,
ஸ்பானிய நடனக்காரர்கள் பயன்படுத்தும் இசைக்கருவி.
(மொ.பெ: விதாலி செர்னெட்ஸ்கி)

3.

பல்நடையியல்வாதம் என்பது
குட்டைக் காற்சட்டையணிந்த
மத்தியக்கால வீரன்
டிசம்பரிஸ்ட் வீதியிலிருக்கும்
பதிமூன்றாம் எண் கடையின்
மதுவிடுதிக்குள் வேகமாய் நுழைந்து
அரசவைக்குரியவொரு குரலில் வசைபாடுவது,
லாண்டாவும் லிஃப்ஷிட்ஸும் எழுதிய
க்வாண்டம் மெக்கானிக்ஸை
சலவைக்கல் பாவிய தரையில் நழுவ விடுவது.

பல்நடையியல்வாதம் என்பது
ஆடையின் ஒரு பகுதி நல்ல பட்டால் அமைந்து
வண்ணப்பசை மாவினால் ஆக்கப்பட்ட
மற்ற இரண்டு பகுதிகளோடு சேர்ந்திருக்க
ஏனைய பகுதிகள் இல்லாமலேயிருப்பது
அல்லது கடிகாரங்கள் மணியடிக்க, திணறி மூச்சிழுக்க
கிராமத்துப் பையன்கள் வேடிக்கை பார்க்க
எங்கேயோ பின்னால் இழுத்தபடி வருவது.

பல்நடையியல்வாதம் என்பது
எல்லாப் பெண்களும் மெஸ்ராப் மாஷ்டாட்ஸ்
கண்டுபிடித்த ஆர்மீனிய அரிச்சுவடியைப்
போல் அழகாய் இருப்பது
அரிந்த ஆப்பிள் மற்ற கோள்களை விடப் பெரியதில்லை என்றிருப்பது
குழந்தைகளின் இசைத்காள்களில் இசைக் குறிப்புகள்
சொர்கத்தில் சவாசிப்பது சுலபம் எனபது போல
தலைகீழாய் நின்றிருப்து
ஏதோவொன்று உங்கள் காதில் ஒலித்தபடி ஒலித்தபடி இருப்பது.
பல்நடையியல்வாதம் என்பது
கிழிந்த முதுகுப்பையின் பின் வாசல்வழி
காணும் வான்வெளி உடற்பயிற்சி
பிரபஞ்ச நிலையின்மை விதி
புரிந்துகொள்ள முடியாததாய் X எனக் குறியிட்ட
உங்கள் சங்கதிகளை பெருமையோடு காட்டிக்கொள்ள முயலும் ஆசை

பல்நடையியல்வாதம் என்பது
நான் பாட நினைக்கும்போது
நீ என்னோடு உறவுகொள்ள நினைப்பது
நாமிருவரும் முடிவற்று வாழ நினைப்பது.
அதைப்பற்றி நீங்கள் நினைத்துப் பார்த்தால்
ஆச்சரியம்,எல்லாமே எப்படிப் பொருந்திப் போகிறது.
நினைத்தபடி அது நடந்துவிட்டால்
ஆச்சரியம்,அது எப்படிப் திட்டமிடப்பட்டது.

(மொ.பெ: ஓல்கா லிவ்ஷின், உதவி: ஆன்ரூ ஜேங்கோ)