பாம்பாட்டிச் சித்தன்
கூடங்குளத்து சாஸ்தா கோவிலில்
சாமியும் அவர்தான்
ஆசாமியும் சாஸ்தாதான்
அக்கம் பக்கம்
ஆட்களிலிருந்தால் சாமியாகவும்
இல்லாவிட்டால் ஆசாமியாகவும்
நடமாடுவார்.
கள்ளியும், கரையான் புற்றுகளும்
தேங்கிய நிலத்தில்
பீடி சுருட்டுபவர்கள்
கட்டுமரமேறி வலையில்
கடல் கொண்டுவரும் செம்படவர்கள்
மானாவாரி உழவர்கள்,
மாணவர்கள்
அனைவருக்கும் அவர்தான் தெய்வம்
ஆனால் கடந்த 15 நாட்களாக
யாரும் சாஸ்தாவைக் காண வரவில்லை
அவரது கைவசமிருந்த தானியங்களும்
பழங்களும் தீர்ந்துவிட்டன
அந்த சிறு கோவிலின் தகவல் பலகையில்
எழுதப்பட்ட பிரதோஷம்
என்ற எழுத்துக்களும்
அதற்குக் கீழாக
அங்கு படிப்பதற்காக வந்த பத்தாம் வகுப்பு
மாணவர்கள் கடைசியாக எழுதிவிட்டுச் சென்ற
அணுக்கருப் பிளவுச் சமன்பாடும்
மங்கிவிட்டிருந்தன
15 நாட்களாக அவருக்குத் தட்டுப்பட்டவர்களெல்லாம்
வெளிறிய வெண்ணிறத்தில்
தலைக்கவசமும், உடைகளும், கையுறைகளும்
அணிந்தவர்கள்தான்.
கனமான காரீய உடைகள், தலைக்கவசம்
கையுறைகள் அணிந்த உயிரியல் ஆராய்ச்சியாளனாக
நான் சொல்வது
‘மேட்ரியோஷ்கா’ பொம்மைகளின்
ஆழத்தில் அடர்த்தி எனும் கருத்து
மீண்டும் ஒருமுறை பொய்யாகிப் போனது
கட்டுப்பாடற்ற தொடர்வினை.
அதன்பின் ஓர் அணு உலை வெடிப்பு
இங்கு எல்லாம் மாறிவிட்டன
கூடங்குளத்திலிருந்து 30 கி.மீ சுற்றளவிற்கு
முள்வேலியிடப்பட்டது.
________________________________
கதிரியக்க அபாயம்
மனித நடமாட்டம்
தடை செய்யப்பட்டப் பகுதி
_______________________________
என்கிற அறிவிப்போடு
பலகைகள் ஆங்காங்கு நடப்பட்டன
அந்த எல்லையில் நுழையும்
நானும் எனது அடையாள அட்டையும்
பரிச்சயமானதால்
அந்த சோதனை சாவடியின் காவலாள்
எனது வாகனம் உள்ளே செல்ல
அனுமதிக்கிறான்
மண், நீர், காற்று
அனைத்திலும் கதிர்வீச்சு கலந்துவிட்டது
வான்நோக்கி வளராமல்
விநோதமாய் வளைந்த
இலைகளற்ற மரக்கிளைகள்
விசித்திர மாற்றங்களையடைந்த
தாவரங்கள்
வளர்ச்சி குன்றிய வால் இறகுகளும்
ஆங்காங்கு இறகுகள் உதிர்ந்த
இடைவெளிகளோடு
பறவைகளாகக் காட்சியளிக்காவிடினும்
அவை பறவைகள்தான்
கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட
நாயொன்று பெரும் ஆமையைப் போன்று
ஊர்ந்து கொண்டுள்ளது.
மனித வரம்பு முடியிமிடத்தில் துவங்கும் வெறுமை
கைவிடப்பட்டு
சிதைவுகளை நோக்கி முன்னேறும்
சிறு நகரங்கள் மற்றும் கிராமங்கள்
பயன்பாடு இழந்த நெடுஞ்சாலைகள்
யாருமற்ற கடைவீதிகள், பள்ளி, கல்லூரி
மற்றும் மருத்துவமனை வளாகங்கள்
இவற்றிலிருந்து யாரோ ஒருவர்
நடப்பதைக் கண்காணிப்பதுபோன்ற பீதியுணர்வு
அநாதைகளாய் விடப்பட்ட கோவில் தெய்வங்கள்
மற்றும் வெறுமையின் எல்லைகள்
எனது வாகனத்தை சாஸ்தா கோவிலின் முன்
நிறுத்தி இறங்கி
எனது கைகர் எண்ணியில்
கதிரியக்க அளவை
சோதித்தபோது 6.37 என
அபாய அளவைக் காட்டியது
கதிரியக்கம் மிகுந்த இப்பகுதியில்
பறவைகளும் மிருகங்களும் சொற்பமே
இவைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட
விந்தணுக்கள் அசாதாரணமாயும்
நீந்தும் திறன் குன்றியும்
காணப்படுகின்றன
உயிர் வாழும் மற்றும்
இனப்பெருக்கத் திறன் குறைந்துவிட்டது.
சாஸ்தா அந்த வட்டாரம் முழுக்கத் தேடியும்
யாரும் தென்படவில்லை
சற்று தள்ளியிருக்கும் சுடலைமாடன்
சாஸ்தாவின் துணைக்கு வந்தார்
இன்னும் சற்று தள்ளியிருக்கும்
ஆன்ட்ரூஸ் தேவாலயத்திலிருந்து
தேவன் ஆன்ட்ரூஸ் அவர்களோடு
சேர்ந்து கொண்டார்.
அஞ்சு கிராமம், ராதாபுரம் என
சுற்றியலைந்த போது
எசக்கியம்மன், பத்ரகாளி, குழந்தேயேசு குரிசடை, முனியாண்டி
வெண்ணையடி பெருமாள், கரிசாஸ்தா ஆகிய தெய்வங்கள்
இவர்களோடு கைகோர்த்துக் கொண்டார்கள்
இரவெல்லாம் அலைந்து பட்டினியாய்
அவரவர் இருப்பிடம் திரும்பினர்
சாஸ்தாவுக்குத் துணையாய் சுடலைமாடன்
மாத்திரம் கூடங்குளத்தில் தங்கிவிட்டார்
மறுநாள்
கடலிலிருந்து மீன்களை
யாரும் காணாதவாறு
கொண்டுவந்து சுட்டுக்கொடுத்தார் சுடலைமாடன்
இன்னும் நிறைய மீன்கள்
செத்து மிதப்பதாயும்,
சாஸ்தா உம்ம இடுப்பிலிருக்கும்
வேட்டிய அவுத்தா ஏகப்பட்ட
மீன்கள் தேறுமோய் என்றார் கண்சிமிட்டியபடி
இதற்கிடையில் முனியாண்டி தெய்வத்திடம்
சேதி சொல்லி அனுப்பியிருந்தாள் எசக்கியம்மன்
மகேந்திரகிரிக்கு அந்தப்பக்கம்
மனிதர்கள் வசிப்பதாயும்
அவளும் இன்னும் பல தெய்வங்களும்
அங்கு போந் குடியேறப் போவதாயும்
சாஸ்தாவும், சுடலைமாடனும் விரும்பினால்
அவர்களோடு சேர்ந்து கொள்ளலாமென
இந்த சமயத்தில் சாஸ்தா கோவிலின் முன்
வந்து நின்ற வாகனத்திலிருந்து
இறங்கினான் அலுமினிய நிற
உடையணிந்த மனிதன்
எனது தலைக் கவசத்தைக் கழற்றிவிட்டு
சாஸ்தாவைக் கும்பிட்டேன்
பின் அவரை நோக்கிப் பேசத் துவங்கினேன்
‘ஐயா, நானும் இந்த மண்ணுல
பொறந்தவந்தான்
நீரு சாமியா இருக்கலாம்
அதுக்குன்னு இங்கன கெடந்து சாவாதீரும்
அணுகுண்டு வெடிச்சிருச்சு இந்த பூமியில
என்று கருதிக்கிரும்
கதிர் வீச்சு நோய் வந்துரும்
தோலு காஞ்சி, செதிள் செதிளா
உரிய ஆரம்பிக்கும்
சுவாசிக்குறப்ப
தொண்டை, சுவாசக்குழல் எல்லாம் காந்தும்.
மீனு, மிருகம், பறவை எல்லாஞ் செத்துக்கெடக்கும்
பட்டினியா கெடக்கோம்னு
எதையுஞ் சாப்பிடாதீரும்
கதிரியக்கம் உம்ம உடம்பெல்லாம்
பரவி செத்துருவீரு
காத்து மண்ணு தண்ணி எல்லாமே
மாசுப்பட்டு போச்சுவே
கெளம்பியிரும், இங்க நிக்காதீரும்வே, நிக்காதீரும்
உமக்கு நல்லது கெட்டதுன்னா
நீர்தாம்லே பார்துதுக்கிடனும்’
என்று சொல்லிவிட்டு தலைக்கவசத்தை
மாட்டிக் கொண்டு கிளம்பிவிட்டேன்
வெள்ளையா கவசத்தை உடலெல்லாம்
மாட்டிட்டு வந்தவன்
காரேறி போனதுதான் தாமசம்
அந்நேரம் வரைக்கும் கருவறை மூலையில்
கல்லாக சமைஞ்சிருந்த முனியாண்டி
காத்தா ஒடிட்டாம்லே
ஓடுறதுக்கு முன்னாடி
ஒரு வாசகஞ் சொன்னான்
‘இதுக்குத்தாம்லே நம்மாளு
விஞ்ஞானியாகணுங்கிறது’
சாஸ்தாவோ சுடலைமாடனோ
அவ்விடத்தைவிட்டு
வெகுநேரம் நகரவில்லை
‘நாம சாமிலே
எந்தக் கதிரியக்கமும் மயிரியக்கமும்
நம்மளை என்னவே செஞ்சிரும்’
என்றபடி கையில் உரியத் தொடங்கியிருந்த
தோலைப் பிய்துத்து அகற்றினார்
கொப்புளமாகி எரிச்சல் கூடியது
தொண்டை வறண்டது
அருகிலிருந்த மரத்திலிருந்து
விகாரமான அலகுகளோடும்
அல்பினிச சிறகுகளோடும்
உருக்குலைந்த தோற்றத்தோடும்
இரு பறவைகள் விழுந்து மடிந்தன
சாஸ்தாவோ நெருப்புப் பற்றவைக்கும் பணியிலிறங்கினார்
சுடலைமாடனோ பறவைகளை சேகரித்துக் கொண்டு
ஒளித்துவைத்திருந்த
கதிரியக்கத்தால் பாதிக்கப்படாத ஒரு புட்டி
பரிசுத்த சாராயத்தைக்
கொண்டுவர விரைந்தார்.
------------------------------------------------------------------------------------------------------------------
-பாம்பாட்டிச் சித்தன் (இஸ்ரேலியம்)