Thursday, 9 July 2009
சில கேள்விகள்
மே 28,2009 அன்று எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றை அப்படியே கீழே தருகிறேன். அது முன்பின் அறிமுகமான பெயரோ மின்னஞ்சல் முகவரியோ அல்ல. பிரபாகரன் மரணச் செய்தி குறித்த என் வலைப்பதிவுக் கவிதைக்கு எதிர்வினையாகவே இம்மின்னஞ்சல் வந்திருக்கவேண்டும்(சில காரணங்களுக்காக அக்கவிதையை இரண்டொரு நாட்களில் எடுத்துவிட்டேன்). இக்கடிதம் முதலில் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தியது. பிறகான வாசிப்புகளில் தர்மசங்கடத்துக்கும் குற்றவுணர்வுக்கும் ஆட்பட்டேன் என்றால் அது மிகையில்லை. இக்கடிதத்தில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு போன்ற கேள்விகளுக்கு ஈழத்தில் நடந்து முடிந்திருக்கும் போர் மற்றும் ஈழத்தமிழரது வருங்காலம் குறித்து பல தளங்களிலும் பேசியும் செயலாற்றியும் வந்த,வரும் ஒவ்வொரு இந்தியத் தமிழரும் பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது என்றே நினைக்கிறேன்.
அயலகத் தமிழ்ச் சகோதரர்களுக்கு!
ஐயன்மீர்! ஈழத்திலுள்ள உங்கள் சகோதரத் தமிழர்களுக்காக நீங்கள் துடிக்கும் துடிப்பும், வெறும் இனஅபிமானத்தால் குறுகியிராத உங்கள் இதயம் மானுட அவலம் கண்டே விம்மிக் கண்ணீர் உகுப்பதைக் காட்ட உங்களுக்குள் நடக்கும் போட்டா போட்டியும் கண்டு நெகிழ்கிறேன். நான் குறிப்பிடுவது அரசியல்வாதிகளை அல்ல. கவிதை எழுதியும், கட்டுரைகளில் இனவுணர்வாய்க் கரைந்துருகியும், களச்செயற்பாட்டின் தேவையுணர்ந்து ஒன்றுகூடிப் பொங்கியும் கவலையை வெளியிட்டுக் கொண்டிருக்கும் கலைஞர்கள், இலக்கியவாதிகள், பத்திரிகையாளர்களைச் சொல்கிறேன். இந்த நாட்டில் தமிழ்மக்கள் மீண்டும் ஒரு பேரழிவுக்குச் சென்றுவிடாதிருக்க நீங்களும்தான் எங்கள் நம்பிக்கை. போரில் வெல்வதை விட போரைத் தவிர்ப்பதே மானுட அவலத்தை நிறுத்தும் வழி என்பதை உங்களுக்கு யாரும் சொல்லிக்காட்ட வேண்டியதில்லை.
உங்கள் சகோதரத் தமிழர்கள் படும் கஷ்டங்கள் குறித்து நீங்கள் பரிதவிப்பதும், துயரின் எல்லையில் எதிரிகளைப் பஸ்மமாக்கிவிட முடியாதா என்று ஆவேசமுறுவதும், வரலாற்றின் தொடர் குரூரம் குறித்து வருந்துவதும், ஈழச் சகோதரர்களுக்கு ஏதாவது செய்யமுடியாதா என்று ஏங்குவதும், தன்னுயிரை மாய்த்து தமிழர்களுக்கு உணர்வூட்டுபவரை எதிர்த்து மறுக்காது, ஊக்குவிக்கும் நிர்ப்பந்தமுமாக.... உங்கள் அறவுணர்வை, மனிதாபிமான நெகிழிதயத்தை எல்லோரும் அறிந்து கொள்ளும்படியாகவே நடந்து வருகிறீர்கள். உலகத் தமிழரின் பாராட்டும் வந்து குவிந்தபடி! (தமிழ்நாட்டு அகதிமுகாம்களில் நானும் சில வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன். ஈழச்சகோதரர்கள் மீதான உங்கள் அன்பாவேசத்தையும், துயர்துடைக்கும் துடிப்பையும் அனுபவிக்கக் கிடைத்ததில்லை என்பது என் கூடுதல் எதிர்பார்ப்பால் நேர்ந்த குறையாக இருக்கலாம். தவிர, கொத்துக் கொத்தாக மக்களைப் படுகொலையாக்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து நான் தப்பி வேறு வந்துவிட்டேன்.)
இருந்தாலும், ஆறு கோடிச் சகோதரர்களின் தமிழ்ப்பாசக் கொந்தளிப்பு எனக்கு மட்டுமல்ல ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் ஒரு ‘கெத்’தை ஏற்படுத்துவதாகவே இன்னும் இருக்கிறது. மீண்டும் ஆயுதங்களைத் தூக்கி, இன்னமும் அந்தப் புறநானூற்றுத் தமிழ்வீரம் ஈழத்தில்தான் இருக்கிறது என்ற புளகாங்கிதத்தை அடையவும் - உலகத் தமிழருக்கு வழங்கவும் மனம் பொங்குகிறதுதான். ஈழத்தமிழன் பொருட்படுத்தப்படுவது இந்த வீரத்திற்கும் அதனால் விளையும் அழிவுக்குமாகத்தான் என்று உணர்த்தியே வந்திருக்கிறீர்கள். நாம் இதை எப்படி விட? சிங்களவரோடு சமாதானமாக இந்தத் தீவில் சேர்ந்து வாழ்வது பற்றி யோசிக்கலாம் எனும்போதே, ‘இவன் ரத்தக்காட்டேரிகளின் அடிவருடும் துரோகிகளில் ஒருவனாக இருப்பான் போலிருக்கிறதே’ என்ற எண்ணம் உங்களுக்குள் ஓடுகிறதல்லவா? சண்டையின்றி வாழ்தல் பற்றிய உரையாடலை உங்களிடம் திறக்கவே முடியவில்லை.
முதலில் யாழ்ப்பாணத்திலிருந்து மாபெரும் இடப்பெயர்வாக வன்னிக்கும், பின்னர் உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு ஊடாக முல்லைத்தீவு நந்திக்கடல் களப்பு வரைக்கும் புலிகளால் அழைத்துச் செல்லப்பட்ட தமிழ்மக்கள் அடைந்த கதி யாருக்குத்தான் துயரம் தராமலிருக்க முடியும்? புலிகளின் பாதுகாப்புக்காக இறுதியில் அப்படி அழைத்துச் செல்லப்பட்டவர்கள் சுமார் இரண்டு லட்சம் பேர் இருக்கலாம். அதேசமயம் வன்னிக்கு வெளியே இலங்கைக்குள் முப்பது லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ்பேசும் மக்கள் வாழ்ந்திருந்தார்களே.... அவர்களுடன் இந்த மக்களைப் போய்ச் சேர விடாமல், அதற்காக ஒரு வரி பேசாமல் ஏன் ஒரேயடியாய்த் தமிழ்வீரச் சாகடிப்புக்குத் துடித்தீர்கள்?
சிறிது சிறிதாய் வவுனியா முகாம்களுக்கு வந்துசேர்ந்த மக்களை நெருப்புக்குள் போய் விழுந்துவிட்டவர்களாய்க் கதைகள் கட்டி, அச்சுறுத்தி புலிகளுடன் வன்னிக்குள் வைத்து அழித்து முடிப்பதற்கே பொங்கினீர்களே ஏன்? வன்னிக்கு வெளியே இருந்த தமிழ்பேசும் மக்கள் என்ன கருதியிருந்தார்கள் என்பதை அறிய முனைந்தீர்களா? அல்லது வவுனியா முகாம்களுக்கு வந்து சேர்ந்துகொண்டிருந்த மக்கள் கருதுவதை அறியவாவது முயற்சி செய்தீர்களா?
புலிகளிடம் நம்பிக்கை வைக்க முடியாதவர்கள் - விமர்சனமுள்ளவர்கள் எல்லோரும் துரோகிகள் என்ற சுலபமான முடிவுக்கு வர உங்களைத் தூண்டியது எது? புலியல்லாத தமிழர், முஸ்லிம்களை விடுங்கள். பெரும்பான்மைச் சிங்களவர் ராட்சசர்கள்தான், அவர்களுடன் பேச்சு சாத்தியமில்லை ‘அடி’தான் என்ற உங்கள் தொடர்ஊக்குவிப்புக்கான மானுடப்புரிதல் ஆய்வுமுறை என்ன? கடலுக்கு அப்பால் நடக்கும் வன்முறைகளின் வாதை, ஹீரோவின் வெற்றிக்காக ஆவலுற்றபடி திரைப்படமொன்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் கிளர்ச்சியைத் தந்ததா?
இலங்கையில் தமிழர்களை விடச் சிறுபான்மை இனமாகத் தங்களைக் கருதும் முஸ்லிம்களை வசதியாக மறந்தபடியும், அவர்களது இருப்பை மறுத்தபடியும், ஜனநாயகத் தமிழ்க் குரல்களை அறுத்தபடியும் வன்முறைப் பாசிசப் போராட்டத்திற்கு உரமூட்டும் விதமாக நீங்கள் வடித்த கண்ணீரை மனுக்குலம் மீதான அக்கறையாகச் சொன்னதுதான் அதிர்ச்சியூட்டியது!
அதைவிடுவோம். உங்கள் சொந்த இனத்தின் மீது மட்டுமே அக்கறை கொண்டு அவர்கள் அவலங்களுக்காக வருந்துகிறீர்கள் என்று பார்த்தாலும், உங்கள் நாட்டு அரசை ஒரு இம்மியளவும் உங்களால் அசைக்க முடியாது என்பது உள்ளிட்ட குவலயமாச் சூழ்நிலையை நன்கறிந்த நீங்கள், முட்டாள்ச் சண்டியர்களாய்க் காட்டிக்கொண்டுவிட்ட புலிகளுக்குச் சொல்லியிருக்க வேண்டிய ஆலோசனை என்ன? சரி, அவர்களிடம் யாரும் பேசமுடியாது என்பது தெரிந்தால், மக்களைக் காப்பாற்றப் பேசியிருக்க வேண்டியது என்ன? ‘அந்தக் காலம்’ போல் இறுமாப்பாய் அழிந்து முடிவது தவிர வேறு புத்திசாதுரியமே தமிழனுக்கு வராதா? நீங்கள் கடைசிநேரம் இயலாமையைச் சொல்லி அழுததுதான் முழுக்க முழுக்க உண்மையா?
தனிநாடு சாத்தியமில்லை என்பதை நீங்கள் அறிவீர்களல்லவா? அறிந்தும் புலிகளுக்கு உசாரேற்றியே வந்தீர்களே ஏன்? சிங்களவர், முஸ்லிம்கள், மலையகத் தோட்டக்காட்டாரையெல்லாம் வேலைக்காரர்களாகவே வைத்திருந்த உயர்குடித் தமிழர்களும், உலகப்புலித் தமிழர்களுமாய்ச் சேர்ந்து, அப்பாவி மக்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் அழித்துச் சிங்களவனுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்ற வீம்புக்காகவல்லவா ஒத்துத் தாளம் போட்டீர்கள்!
ராட்சசர்களிடம் சிக்கி அழிந்துகொண்டிருக்கும் அப்பாவித் தமிழர் என்ற சித்திரம் உங்கள் மனிதாபிமான முகத்தை முன்நீட்டிக் கொண்டிருப்பதற்கு உதவியதால், வேறு எதையும் காதில் போட்டுக் கொள்ளாமலும் கண்டுகொள்ள விரும்பாமலும் நீங்கள் துடித்த துடிப்பில் நேர்ந்த அழிவு பற்றி இப்போதாவது நீங்கள் சிந்தித்துணரக் கூடுமா? அல்லது மீண்டும் அனுதாப உசாரேற்றியே அழித்து முடிக்கத் திருவுளமா?
ஈழத்தில் இப்போது மிஞ்சியிருக்கும் நொந்த தமிழ்மக்களை நீங்கள் இப்போதே மெல்ல மெல்ல மறக்க ஆரம்பித்திருப்பீர்கள். இவர்களுக்குப் புது வாழ்வளிப்பதற்கும் போர் ரணங்களை ஆற்றுவதற்கும் நீங்கள் ஆர்த்தெழ மாட்டீர்கள்; டெல்லி வரை போய்க் கொடும்பாவி எரித்துக் குரலெழுப்ப மாட்டீர்கள். உங்கள் ஆவேசமெல்லாம் புலிப்போரினால் தமிழ்ப்பெருமையை நிலைநாட்டுவதில் இருந்ததே தவிர, தமிழ்மக்களைக் காப்பாற்றுவதில் இருக்கவில்லை.
உங்களது தனிநாட்டுக் கனவுக்குப் பரிசோதனைப் பிராணிகளாய் அழியத் தயாராயிருக்கும் ஈழத்தமிழர்களே உங்களுக்குத் தேவை. நொந்தது போதும் இனி பகையையும் வெறுப்பையும் வீணே வளர்க்காமல் மற்றவர்களைச் சகித்து வாழ்வதைப் பார்க்கலாம் எனும் மக்கள் உங்களுக்கு எந்த உபயோகமுமற்றவர்கள். புலிகளுடன் நின்ற மக்களே ஈழத்தமிழர்களாகவும், அவர்களது பிடிக்குள்ளிருந்து தப்பி இலங்கையில் விரவியிருந்த தமிழர்கள் துரோகத் தமிழர்களாகவும் உங்கள் கருத்தில் இருந்ததை நீங்கள் காண்பித்தே வந்திருக்கிறீர்கள். கடைசிநேரம் ‘உங்களோடு முட்டாள்த்தனமாகச் சாகவிரும்பவில்லை’ என்று தப்பி வந்து படையினரிடம் சரணடைந்த தயா மாஸ்டரும் ஜோர்ஜூம் மற்றும் ஏராளம் புலி உறுப்பினர்களும் மக்களும் கடற்புலித்தளபதி சூசையின் மனைவியும் பிள்ளைகளும் ‘காட்டிக்கொடுத்த’ துரோகிகள் என்றுதான் இன்னுங்கூட உங்களால் தமிழ்மானக் கதை பேச முடிகிறது.
ராணுவம், சட்டங்கள், பெரும்பான்மை அதிகாரம் எல்லாவற்றையும் வைத்திருக்கும் எந்தவொரு அரசாங்கத்தையும் அது தர்ம ஆட்சி நடத்துகிறது என்று சொல்வதிலோ, அதன் செயல்களைக் காபந்து பண்ணிப் பேச முற்படுவதிலோ நீதிநியாயம் சிறிதுமிருக்காது என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும். ஆனால் அதனோடு போரிட்டு அழியும்படி மக்களை உசாரேற்றுபவர்களுக்கு, அதன் சாதகபாதகங்களை அலசிப் பார்க்கும் பொறுப்புணர்வு இருக்க வேண்டும். வெற்று உணர்ச்சியாவேசங்களைத் தாண்டிய சிந்தனையும் கள ஆய்வும் இருக்க வேண்டும். ரோசம், வீரம், இனப்பெருமை என்ற உணர்ச்சிகரப் பொங்குகைகளைத் தூண்டி விடும்போது, அதனால் நேரும் மக்கள் அழிவுப் பேரவலத்திற்கும் பதில் சொல்லியாக வேண்டும். அதற்கான பழி முழுவதையும் எதிரிமீது சுமத்தி, மனிதாபிமானக் கண்ணீர் ஓலமிட்டே நம் தரப்புப் போரைத் தீவிரப்படுத்தி விடுவது மக்களைப் பாதுகாக்கும் நடைமுறை அல்ல. மக்கள் மீது அக்கறை உள்ளவர்கள் காண்பிக்க வேண்டியது அறிவார்ந்த பொறுப்புணர்வே தவிர, கும்பலோடு சேர்ந்து உணர்ச்சிவசப்பட்டுப் போடும் கூப்பாடு அல்ல.
போதும்... சகோதரர்களே போதும்! இப்போதும் உங்கள் வீரமரபுப் பெருமித ஆவேசங்களையும் மாற்று இனவெறுப்புக் கக்கல்களையும் எமக்கு ஆதரவாக என்று சொல்லிப் பொங்கிக் கொண்டிருக்க வேண்டாம். நேற்றுவரை தொடர்ந்திருந்த, தன் வாளால் தலை துணித்துப் பலி கொடுத்துப் படை நடத்தும் ‘பொற்கால மிச்சம்’ முடிந்ததுக்குப் பிறகு, இங்கே கொலைகள் இல்லை, வேட்டுக்கள் இல்லை, அழிவோலங்கள் இல்லை. இது தற்காலிகமானதுதான் தமிழர்களே என்று புது வியாக்கியானத்தோடு வந்துவிடாதீர்கள். நிறைய இழந்துவிட்டோம். நிறைய களைத்துவிட்டோம். எதிரிகளைத் தொடர்ந்து கட்டமைத்து ஏசியபடியே நம் இயல்புவாழ்க்கைக்குத் திரும்ப முடியாது. சகிப்பும், பிறரோடு சேர்ந்து வாழும் புரிதலும், நம் வீம்புகளை விடுதலுமே நம்மை வாழவைக்கும். அதற்கு வேண்டியதைப் பேசுங்கள். அதற்கான முயற்சிகளில் உங்களால் ஏதேனும் செய்ய முடிந்தது இருப்பின் அதற்கு முயலுங்கள்.
தமிழகத்தின் முதல்வரும் அவரது கட்சியினருமே மத்திய அரசாங்கம் அமைவதில் பெரும்பங்காற்றியதாகப் புகழப்படும் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியுமா பாருங்கள். அமைச்சுப் பதவிகள் கேட்டு டெல்லி செல்லும் முதல்வரிடம், முகாம்களே வாழும் ஊர்களாகி விட்ட ஈழமக்களுக்கும் இந்தியா செய்யக்கூடிய உதவிகள் பற்றிய ஆலோசனைகளை ஞாபகப்படுத்த முடியுமா பாருங்கள். மத்திய அரசின் தூதுவர்கள் இங்கு வந்து நிலைமைகளைப் பார்த்து நிதியுதவி அறிவித்துச் செல்கிறார்கள். அவர்களோடு தமிழக முதல்வரும் கட்சியினரும் முடிந்தளவில் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஆய்வறிஞர்கள் என்று நீங்களும் இங்கே வந்து அகதிமுகாம்களிலுள்ள உங்கள் சகோதரர்களைப் பார்க்க மனம் கொள்ளுங்கள். நிலைமையை நேரில் வந்து காணுங்கள். தமிழக முதல்வரூடாக மத்திய அரசை அணுகி இச்சமயத்தில் இதற்கு முயன்றால் உங்களை யாரும் தடுக்கப் போவதில்லை. ஏற்கனவே தமிழக முதல்வருக்கும் செல்வி ஜெயலலிதாவுக்கும் இங்கிருந்து அரசபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஈழத்தமிழர்களின் அமைதிவாழ்வில் நீங்கள் கொண்டுள்ள அக்கறையை உதவிகளாக்க இது சந்தர்ப்பம். வாருங்கள்.
தமிழ்த்தீவிரவாதத் தடையற்ற இப்போது, இங்கு மக்களுக்குச் செய்யக்கூடிய உதவிகளைச் செய்வதற்கான ஆலோசனைகளை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லுங்கள். முடிந்தால் அதற்காகவும் ஒருமுறை டெல்லி சென்று ஆர்ப்பாட்டம் செய்ய முடியுமா பாருங்கள். இந்திய அரசின் உதவிகளை அறிவுறுத்தல்களை இலங்கை அரசு மறுக்கப் போவதில்லை. ஈழத்தமிழர்கள் மீண்டும் போரிட்டு அழிவுகளுக்குச் செல்லாமலிருப்பதற்கான அதிகாரப்பகிர்வை வலியுறுத்துங்கள். மத்திய அமைச்சரவையில் பொறுப்புகள் பெற்றுக்கொள்ள தன் கூட்டணி வலுவை பிரயோகிக்க முடிந்த தமிழக முதல்வருக்கு இதற்காகவும் மத்திய அரசை வற்புறுத்தும் வலு இப்போதிருக்கிறது. அதற்கு ஆகுமானதைச் செய்யுங்கள். உங்களிடமுள்ள ஈழத்தமிழ் ஆதரவுப் பலத்தை முழுமையாகப் பயன்படுத்தி எங்களுக்கு அமைதியான வாழ்வளிக்க உதவுங்கள். ‘சிங்களவன் தமிழருக்கு ஒண்ணுந் தரமாட்டான்’ என்று முனகிவிட்டு உங்கள் அலுவல்களைக் கவனிக்கப் போய்விடாதீர்கள்.
ஈழத்தமிழர்கள் மீது உங்களுக்கிருக்கும் அக்கறை அரசியல்வாதிகளினுடையதைப் போல வெறும் ஓட்டு அக்கறையல்ல என்பதை நானறிவேன். அவர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தால்தான் உங்கள் அனுதாபம் பொங்கும் என்பதல்ல உண்மை. அவர்கள் இனிமேலும் அழிவுகளுக்குச் செல்லாமல் அவர்களும் உங்களைப் போன்றதொரு இயல்புவாழ்க்கைக்குத் திரும்புவதற்காகவும் நீங்கள் ஆவேசமுடன் செயற்படுவீர்கள் என்றே நம்புகிறேன். உங்களது அக்கறையும் அனுதாபமும் ஈழத்தமிழர்களுக்குப் போரற்ற அமைதி வாழ்வை ஸ்திரப்படுத்தித் தருவதிலும் தொடர்ந்திருக்கும் என்பதே என் நம்பிக்கை.
போதும், வன்முறையால் வன்முறையை வரவழைத்து அழிந்தது போதும். வன்முறையற்ற வழியில் எங்கள் உரிமைகளைப் பெற்று வாழ்வதற்கு வேண்டிய பின்பல நம்பிக்கையை எங்களுக்குத் தாருங்கள். ராட்சசர்களோடு தமிழ்மக்கள் வாழமுடியாது என்று வீர உசுப்பேற்றி எங்களை மேலும் அழித்துவிடாதீர்கள் சகோதரர்களே!
தமிழகமே! தமிழகமே! ஈழத்தமிழர்களை என்ன செய்யக் கருதி இருக்கிறாய்?
Subscribe to:
Posts (Atom)