Saturday, 7 March 2009

எப்போதும் கொடுக்கும் மரம்








எப்போதும் கொடுக்கும் மரம்

ஆங்கில மூலம் : ஷெல் சில்வர்ஸ்டைன்.
தமிழில் : அசதா

ஒரு காலத்தில் மரம் ஒன்று இருந்தது.

அது ஒரு சிறுவனை மிகவும் நேசித்தது.

தினமும் அவன் அந்த மரத்திடம் வருவான்.

இலைகளை சேகரிப்பான்.

அவற்றைக் கொண்டு ஒரு கிரீடம் செய்வான்.

அதை அணிந்துகொண்டு காட்டுக்கு அரசன் நானென ஆடுவான்.

மரத்தின் மீதேறி கிளைகளில் ஊஞ்சலாடுவான்

பழங்களைப் பறித்துத் தின்பான்

அவர்கள் இருவரும் ஒளிந்து விளையாடுவார்கள்

களைத்துப் போகும்போது மரத்தின் நிழலில் படுத்து அவன் உறங்குவான்

அந்தச் சிறுவனும் மரத்தை மிகவும் நேசித்தான்

மரம் மிக மகிழ்ச்சி கொண்டது.

காலம் கடந்தது

சிறுவன் வளர்ந்து பெரியவன் ஆனான்

இப்போது அனேக நேரம் மரம் தனிமையில் நின்றது.

அப்போது ஒருநாள் சிறுவன் மரத்திடம் வந்தான்

மரம் அவனிடம் சொன்னது, ‘வா, வந்து என் மீது ஏறு, என் கிளைகளில் ஊஞ்சலாடு, என் பழங்களைப் பறித்து உண், என் நிழலில் விளையாடு, மகிழ்ச்சியாக இரு’.

‘உன் மீது ஏறி விளையாட நான் இன்னும் சிறு பையன் இல்லையே. நான் எனக்குத் தேவையானவற்றை வாங்கி விளையாட விரும்புகிறேன். எனக்குப் பணம் தேவை.’ என்றான் சிறுவன்.

‘ஆனால் என்னிடம் பணம் இல்லையே. என்னிடம் இலைகளும் பழங்களும் மட்டுமே இருக்கின்றன. என் பழங்களைப் பறித்துச் சென்று நகரத்தில் விற்றால் உனக்குப் பணம் கிடைக்கும். அதை வைத்து மகிழ்ச்சியாக இரு’.

சிறுவன் மரத்திலேறி பழங்களைப் பறித்துச் சென்றான். மரம் மகிழ்ச்சி கொண்டது.

அதன் பிறகு சிறுவன் நீண்ட நாட்கள் அந்தப் பக்கம் வரவில்லை. மரம் வருத்தமடைந்தது.

ஒருநாள் சிறுவன் திரும்பவும் வந்தான்.மரம் மகிழ்ச்சியில் ஆடியது. அது சொன்னது
‘வா, வந்து என் மீது ஏறி என் கிளைகளில் ஊஞ்சலாடு, மகிழ்ச்சியாக இரு.’

‘மரங்களில் ஏறி விளையாட எனக்கு நேரமில்லை’ சிறுவன் சொன்னான். ‘என்னை கதகதப்பாக வைத்துக்கொள்ள எனக்கொரு வீடு வேண்டும். எனக்கு மனைவி வேண்டும், குழந்தைகள் வேண்டும் அதன்பொருட்டு எனக்கொரு வீடு தேவை. உன்னால் எனக்கொரு வீட்டைத்தர முடியுமா?’

‘என் கிளைகளை வெட்டி அவற்றைக் கொண்டு வீடொன்றைக் கட்டிக் கொள். நீ மகிழ்ச்சியாக இருப்பாய்.’

சிறுவன் மரத்தின் கிளைகளை வெட்டி வீடு கட்ட எடுத்துச் சென்றான். மரம் மகிழ்ச்சி கொண்டது.

அதன் பிறகு சிறுவன் நீண்ட நாட்கள் அந்தப் பக்கம் வரவில்லை. திரும்ப அவன் வந்தபோது மகிழ்ச்சியில் மரத்திற்குப் பேச வார்த்தைகள் வரவில்லை.

‘வா, வந்து விளையாடு’ மெல்ல முணுமுணுத்தது மரம்.

‘நான் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும், உன்னால் எனக்கொரு படகைத் தர முடியுமா?’ அவன் கேட்டான்.

‘என் நடு மரத்தை வெட்டி அதிலிருந்து படகொன்றை செய்துகொள், அதில் நீ நீண்ட தூரம் பயணம் செய்யலாம், மகிழ்ச்சியாக இருக்கலாம்’ என்றது மரம்.

அதன்படியே அவன் நடு மரத்தை வெட்டி அதைக் கொண்டு படகொன்றைச் செய்து அதில் பயணம் செய்தான். மரம் மகிழ்ச்சி கொண்டது, ....ஆனால் உண்மையான மகிழ்ச்சி அல்ல அது.

மிக நீண்ட காலம் கழித்து சிறுவன் திரும்பி வந்தான். ‘மன்னிக்க வேண்டும், உனக்குக் கொடுக்க என்னிடம் எதுவுமில்லை-என்னிடம் பழங்கள் இல்லை’.

‘பழங்களைத் தின்னுமளவுக்கு என் பற்களுக்கு வலுவில்லை’ சிறுவன் சொன்னான்.

‘என் கிளைகளும் என்னைவிட்டுப் போய்விட்டன, அவற்றில் நீ ஊஞ்சலாட முடியாது.’

‘கிளைகளில் ஊஞ்சலாடும் வயதை நான் கடந்து விட்டேன்.’ என்றான் சிறுவன்.

‘என் நடு மரமும் போய்விட்டது, இனி என் மீது நீ ஏற முடியாது.’ மரம் சொன்னது.

‘நான் மிகவும் களைத்துவிட்டேன், என்னால் மரம் ஏற முடியாது.’ சிறுவன் சொன்னான்.

‘மன்னிக்க வேண்டும், உனக்கு எதையாவது கொடுக்கத்தான் விரும்புகிறேன், ஆனால் என்னிடம் எதுவும் மீதமில்லை.இப்போது நானொரு வெறும் மரத் திண்டு மட்டுமே, என்னை மன்னித்துவிடு.’ என்றது மரம்.

‘எனக்கு இப்போது பெரிதாக எதுவும் தேவையில்லை, அமர்ந்து ஓய்வெடுக்க அமைதியான ஓர் இடம், அவ்வளவுதான். நான்
மிகவும் களைத்துப் போயிருக்கிறேன்’ என்றான் சிறுவன்.

‘நல்லது,’ எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு தன்னை நீட்டிக்கொண்டு மரம் சொன்னது, ‘வயதான அடிமரத் திண்டு அமர்ந்து இளைப்பாற உகந்தது. வா வந்து அமர்ந்து இளைப்பாறு.’

சிறுவன் அவ்வாறே செய்தான். மரம் மகிழ்ச்சி கொண்டது.

----------------------

1 comment:

Unknown said...

இக்கதையை ஏற்கனவே வாசித்திருந்தாலும் மீண்டும் வாசிக்கும் போது நெகிழ்ச்சியாக இருந்தது. தன்னிடம் உள்ள எல்லாவற்றையும் கொடுத்த மரத்தின் தியாகத்தை மனிதர்கள் உணர்வதே இல்லை. 'எப்போதும் கொடுக்கும் மரம்' தலைப்பு மிகவும் பொருத்தம்.