Wednesday, 2 September 2009

நீ கொன்ற திங்கட்கிழமை 31.08.09


(For N)
கொல்லப்படும் வரை
அந்த திங்கட்கிழமை
நம் பிரியத்துக்குரியதாயிருந்தது
நீ உள்ளிட்ட நாம் யாரும்
வெறுக்கத்தக்கதான எதையும்
புரிந்திருக்கவில்லை அது.

கள்ளம் புரியாக் குழந்தையென
நீ உருவப்போகும் கொலைவாளினை
அறியாதிருந்தது.

யாரும் எதிர்பாராத கணம்
அத் திங்கட்கிழமையை நீ கொன்றாய்
அது சரிந்து விழும்போதும்
பற்றிக்கொள்ள உன் கைகளையே தேடியது
உன் கைகள் கொலைவாளினை
கழுவிக் கொண்டிருக்கையில்
அது துடித்து அடங்கியது.

அது ஞாயிறைப் பின்தொடரும்
விசேஷங்களேதுமற்ற
சாதாரணவொரு திங்கட்கிழமைதான்
மரணத்தின் குருதி அதை
கைவிடப்படுதலின் துயர தினமாக்கிவிட்டது.

நீ கொன்ற திங்கட்கிழமையின்
களிப் பாடல்களும்
ஒப்பாரிகளாகிவிட்டன
அன்றைய தினத்தின் ஒப்பாரிகளோ
உலகைப் புரட்டும் துயர கீதங்களாகியிருக்கின்றன.

உனக்குத் தெரியாது
நீ கொன்ற திங்கட்கிழமை
உன்மீது கொண்ட பிரியத்தையன்றி
வேறொன்றையுமறியாதது

நீ கொன்ற திங்கட்கிழமைக்கு
உன்னைத் தவிர வேறு
உறவுகள் இருந்திருக்கவில்லை

நீ கொன்ற திங்கட்கிழமையின் பிணம்
கணம் கூடி அழுத்துகிறது
அதை அடக்கம் செய்ய
வாரத்தின் ஏனைய கிழமைகள்
தயாராயில்லாததால்
கிழமைகளுக்கும்
புரிந்துகொள்ளப்படாத பிரியத்துக்கும் தொலைவே
அதைச் சுமந்து திரிகிறேன்.

No comments: