Saturday, 9 May 2009

சுதந்திரம் - ஜெயந்த மகாபாத்ரா


ஜெயந்த மகாபாத்ரா சமகால இந்திய ஆங்கிலக் கவிஞர்களில் முக்கியமானவர்.அவரது கவிதைகள் உலகளாவிய அங்கீகாரம் பெற்றவை. (முதன் முதலாக ஓர் ஆங்கில கவிதைத் தொகுப்புக்காக) சாகித்ய அகாதமி விருது (Relationship-1986) உள்ளிட்ட பல்வேறு தேச, சர்வதேச அங்கீகாரங்களைப் பெற்றவர். ‘சந்திரபாகா’ இதழின் ஆசிரியர். இந்தியாவின் வறுமையும், அதனால் அல்லலுறும் மக்களும், தொடரும் அரசின் கையாலாகாத்தனமும் ஒருவித சர்ரியலிஸத் தன்மையுடனும், உள்ளடங்கிய சீற்றத்துடனும் அவர் கவிதைகளில் இடம் பெற்றபடியே உள்ளனர்.ஒரிஸ்ஸா அவரது மாநிலமாக இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 2004 செப்டம்பரில் கட்டக்கில் அவரை சந்தித்து உரையாடியதை என் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றாகக் கருதுகிறேன்.



சிலநேரம்
நதியில் எங்கோ
மிதந்துகொண்டிருக்கும்
என் தேசத்தின்
உடலைப் பார்த்துக்கொண்டிருப்பதாய்
உணர்கிறேன்

தனிமையில்,
கரையில் பாதி வெட்டுப்பட்டு
தன்னுள் தானே புதைந்துபோன
மூங்கிலாகிறேன்

புராதன ஜன்னல்களும்
இறந்துகொண்டிருக்கும் மனிதர்களும்
சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள்
இடையறாத பிரார்த்தனைகளுக்கிடையே
அடிக்கடி தலை வணங்கியபடி

உலகின் மீது தங்கள் கை படாமலே
அதை மாற்றிவிட சுதந்திரம் வேண்டி
குழந்தைகள் அழுகின்றன

என் குருட்டுத்தனத்தினால்
இவர்களில் யாரிடமேனும்
திரும்பச் சென்றுவிடுவேனோ
என பயப்படுகிறேன்
என் முகம்
தொலைந்துபோகாமலிருக்க வேண்டுமானால்
நான் தனித்திருக்கவேண்டியது அவசியம்

தொலைவே மலை கிராமம் ஒன்றில்
இந்த ஐம்பதாண்டுகளும்
ஒரு வேளை உணவுக்கான
கொஞ்சம் அரிசியுமின்றியிருக்கும்
அந்தப் பெண்ணையும்
அவள் குழந்தையையும்
நான் சந்திக்கக் கூடாது

பாராளுமன்றக் கட்டடத்தின்
உயர்ந்த வெள்ளைத்தூண்களில் படிந்த
அஸ்தமனங்களின் சிவந்த ஒளியையும்
நான் பார்க்கக்கூடாது

அருகே மனிதன் எழுப்பிய
புதிய கோவிலில்
பூசாரிக்குத்தான் தெரியும்
சுதந்திரம் என்னவென்று
கடவுளோ இருட்டில் பதுங்கிக்கிடக்கிறார்
யாரோ வேற்றாள் போல

வெளிச்சத்துக்காக ஏங்கிக் கிடக்கிறேன்
தினம் நான்
நிழல்களோ தொடர்ந்து இருப்பதற்கான
நியாயங்களைக் கண்டுபிடித்துக்கொண்டேயிருக்கின்றன

நானறிந்த ஒரே சுதந்திரத்தை
அடைய விழைகிறேன்
அது தனிமையில் உடல் கொள்ளும் சுதந்திரம்
அமைதியான மென்பாறையின் சுதந்திரம்
அமாவாசை இருளின் சுதந்திரம்
உறங்கும் கடவுளின்
ஓடைப் படுகைகளின் சுதந்திரம்

நான் சாம்பல்களைவிட்டுத் தள்ளியிருக்கிறேன்
அவற்றை என் நெற்றியில் பூச முயலாதீர்கள்.

(Freedom – Jayantha Mahaptra-2007 ; Courtesy: ‘The Statesman’)

No comments: