Saturday, 9 May 2009

சுதந்திரம் - ஜெயந்த மகாபாத்ரா


ஜெயந்த மகாபாத்ரா சமகால இந்திய ஆங்கிலக் கவிஞர்களில் முக்கியமானவர்.அவரது கவிதைகள் உலகளாவிய அங்கீகாரம் பெற்றவை. (முதன் முதலாக ஓர் ஆங்கில கவிதைத் தொகுப்புக்காக) சாகித்ய அகாதமி விருது (Relationship-1986) உள்ளிட்ட பல்வேறு தேச, சர்வதேச அங்கீகாரங்களைப் பெற்றவர். ‘சந்திரபாகா’ இதழின் ஆசிரியர். இந்தியாவின் வறுமையும், அதனால் அல்லலுறும் மக்களும், தொடரும் அரசின் கையாலாகாத்தனமும் ஒருவித சர்ரியலிஸத் தன்மையுடனும், உள்ளடங்கிய சீற்றத்துடனும் அவர் கவிதைகளில் இடம் பெற்றபடியே உள்ளனர்.ஒரிஸ்ஸா அவரது மாநிலமாக இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 2004 செப்டம்பரில் கட்டக்கில் அவரை சந்தித்து உரையாடியதை என் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றாகக் கருதுகிறேன்.



சிலநேரம்
நதியில் எங்கோ
மிதந்துகொண்டிருக்கும்
என் தேசத்தின்
உடலைப் பார்த்துக்கொண்டிருப்பதாய்
உணர்கிறேன்

தனிமையில்,
கரையில் பாதி வெட்டுப்பட்டு
தன்னுள் தானே புதைந்துபோன
மூங்கிலாகிறேன்

புராதன ஜன்னல்களும்
இறந்துகொண்டிருக்கும் மனிதர்களும்
சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள்
இடையறாத பிரார்த்தனைகளுக்கிடையே
அடிக்கடி தலை வணங்கியபடி

உலகின் மீது தங்கள் கை படாமலே
அதை மாற்றிவிட சுதந்திரம் வேண்டி
குழந்தைகள் அழுகின்றன

என் குருட்டுத்தனத்தினால்
இவர்களில் யாரிடமேனும்
திரும்பச் சென்றுவிடுவேனோ
என பயப்படுகிறேன்
என் முகம்
தொலைந்துபோகாமலிருக்க வேண்டுமானால்
நான் தனித்திருக்கவேண்டியது அவசியம்

தொலைவே மலை கிராமம் ஒன்றில்
இந்த ஐம்பதாண்டுகளும்
ஒரு வேளை உணவுக்கான
கொஞ்சம் அரிசியுமின்றியிருக்கும்
அந்தப் பெண்ணையும்
அவள் குழந்தையையும்
நான் சந்திக்கக் கூடாது

பாராளுமன்றக் கட்டடத்தின்
உயர்ந்த வெள்ளைத்தூண்களில் படிந்த
அஸ்தமனங்களின் சிவந்த ஒளியையும்
நான் பார்க்கக்கூடாது

அருகே மனிதன் எழுப்பிய
புதிய கோவிலில்
பூசாரிக்குத்தான் தெரியும்
சுதந்திரம் என்னவென்று
கடவுளோ இருட்டில் பதுங்கிக்கிடக்கிறார்
யாரோ வேற்றாள் போல

வெளிச்சத்துக்காக ஏங்கிக் கிடக்கிறேன்
தினம் நான்
நிழல்களோ தொடர்ந்து இருப்பதற்கான
நியாயங்களைக் கண்டுபிடித்துக்கொண்டேயிருக்கின்றன

நானறிந்த ஒரே சுதந்திரத்தை
அடைய விழைகிறேன்
அது தனிமையில் உடல் கொள்ளும் சுதந்திரம்
அமைதியான மென்பாறையின் சுதந்திரம்
அமாவாசை இருளின் சுதந்திரம்
உறங்கும் கடவுளின்
ஓடைப் படுகைகளின் சுதந்திரம்

நான் சாம்பல்களைவிட்டுத் தள்ளியிருக்கிறேன்
அவற்றை என் நெற்றியில் பூச முயலாதீர்கள்.

(Freedom – Jayantha Mahaptra-2007 ; Courtesy: ‘The Statesman’)

Saturday, 2 May 2009

அப்சலூட் ப்ளஷர் கவிதைகள்;(அய்யப்ப மாதவனின் ‘நிசி அகவல்’ குறித்து)


கவிதையில் தளை மீறுதல், கவிதையைக் கட்டுகளிலிருந்து விடுவித்தல் போன்ற பிரகடனங்களின் காலம் ஒன்றிருந்தது.நவீன கவிதையின் மொழி,கூறுமுறை, வரியமைப்பு, சொல்லிணைவுகள் இவற்றின் உறைந்த தன்மையிலிருந்து லாவகமானதொரு தாவலை எவ்வித ஆரவாரமுமின்றி நிகழ்த்தியிருக்கிறார் அய்யப்ப மாதவன் ‘நிசி அகவலில்’. ஸீரோ கிராவிட்டியில் மிதக்கும் வரிகள்,சாமர்த்தியமாக கலைத்து வைக்கப்பட்ட படிமங்களினூடாக காட்டியும் காட்டாமலும், மறைத்தும் மறைக்காமலும், சொல்லியும் சொல்லாமலும் தன்னை நிகழ்த்திக்கொள்ளும் கவிதைகள்.

கடைசித் தேனீரைத் தயாரித்துக் கொண்டிருந்தாள்
முந்தைய இரவுகளிலோ காதலித்துக்கொண்டிருந்தேன்
அங்குள்ள சிறுவன்
உடைத்த பொம்மைக்கால் என்மீது விழுந்தது
மூளைக்குள் வெளியேறும் கதவின் பாதை
கடைசித் தேனீரை சூடாகப் பருகிய வேளை
வார்த்தைகள் வராமல்
என் நாக்கில் சிறு சிறு கொப்பளங்கள்
கண்களால் துரத்த
கோணலான முகத்துடன் கையசைக்கிறேன்
அவளிடம் புன்னகையில்லை
தாழிடும் கதவில் கண்ணீர்த்துளிகள்
(நீர் மூடிய மடை)

இக்கவிதை நாம் அதிகம் அறிந்த ‘திறந்த கவிதை’ என்பதனின்றும் வேறுபட்டது. திறந்த கவிதை வாசகனுக்கு அளிக்கும் ‘பிரதியை தன் நோக்கில் கட்டமைத்துக்கொள்ளும்’ சுதந்திரத்தை இக்கவிதையும் அளிக்கும் அதேவேளை கலைந்த படிமங்களினூடாக தீர்க்கமானதொரு ஆசிரியப் பிரதியும் சாத்தியமாகிறது. செவ்வியல் தன்மை கொண்ட வரிகளுடன் (தாழிடும் கதவில் கண்ணீர்த்துளிகள்), நவீனத்தன்மையுடைய வரிகளும் (மூளைக்குள் வெளியேறும் கதவின் பாதை), தீர்மானமேதுமற்ற விட்டேற்றியான வரிகளும்(வார்த்தைகள் வராமல்என் நாக்கில் சிறு சிறு கொப்பளங்கள் கண்களால் துரத்த) சேர்ந்து சிருஷ்டித்துத் தரும் அலாதியானதொரு கவிதை அனுபவத்தை கிட்டத்தட்ட தொகுப்பின் எல்லாக் கவிதைகளுமே சாத்தியமாக்குகின்றன. தொகுப்பின் தனித்துவமென இதைச் சொல்லலாம்.

ஒரு கொண்டாட்ட மனநிலை சரடாக நீளும் இத்தொகுப்பில் பிரிவும் துயரமும் ஆற்றாமையும் கையறுநிலையும்கூட தமது முகங்களில் வலியின் ரேகைகளற்றுப் புன்னகைத்துத் திரிகின்றன. வரிகளின் மிதக்கும் தன்மைவழி சாத்தியப்படும் அர்த்தங்கள் எல்லையற்ற விகாசங்களுக்குள்ளும், ஏகாந்தமான அனுபவச் சுழல்களுக்குள்ளும் அழைத்துச் செல்கின்றன.

செந்நிறச் சூரியனை எட்டிப் பறித்தபோது
கையில் தின்ன முடியாத ஆப்பிள்
(கடல் பா)
மெக்டோவல் மத்தியில்
தோட்டம் சேகர் வந்தான் அவன் ஏற்கனவே
ரௌடியாய் செத்துப் போனவன்
(மெக்டோவல் மற்றும் தோட்டம் சேகர்)

விரட்டுபவளின் காதலிலிருந்து தப்பித்து
ஒரு துளிர்த்தவளின் கீழ் பச்சையாகிக்கொண்டிருந்தேன்
ஆபத்தான வளைவுகள் தூரத்தில் தங்கிவிட்டன
(பச்சை ஓணான்)
காற்று ஒரு சருகை ஒரு மரத்தை
ஒரு ஊரை ஒரு சமுத்திரத்தை
ஒரு பெரும் மலையைக்கூடவும் நகர்த்திவிடும்
ஆயினும் காற்று
பெண்ணின் மெல்லிய தாவணிதான்
(காற்றுத்தாவணி)

பெண்ணிடம் ஆண் அடைந்துகொண்டிருக்கும் பகிரங்கமானதும் அந்தரங்கமானதுமான உதாசீனங்கள், தோல்விகள் sublimation-க்கு உள்ளாகி பெறப்படும் கவிதைகள் பெண், காதல் எனும் இரு பெருங்கடல்களுக்கிடையேயான சிறு துண்டு நிலத்திலிருந்து எழுதப்படுபவை. அய்யப்ப மாதவனின் கவிதைப் பெண் இதோ பிரியத்தையும் காதலையும் முயக்கத்தில் தன் முழுமையையும் தந்துவிட்டேன் எனக் காட்டி உக்கிரப் பகலொன்றில் மெல்லிய நீர்க்கோட்டுத் தடத்தை மட்டுமே தந்து மீள்பவளாய் இருக்கிறாள். மாதவனின் சிறு தீவை அவள் கற்பனை முயக்கங்களாலும் பெருமூச்சுக்களாலும் நிரப்பி வைக்கிறாள். ஆயினும் லஜ்ஜையற்று அவளைத் தொடர்ந்தபடியிருக்கிறான் கவிஞன்.

புகைத்தலில் மறைந்தது
விழித்தலைந்த விழிகளும் காதலும்
..........................................................................
.........................................................................
நிழல் விழித்து அவளைப்போன்றதொரு அவள்
மூக்கு நீண்டு காது நீண்டு இமைகள் நீண்டிருந்தாள்
கூந்தலிலிருந்த மல்லிகைகளில்
நறுமணமாகிக்கொண்டிருந்தாள்
(ஜாஸ்மின் சிகரெட்)

என் ஓடையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவள்
திடீரென ஓடிவிட்டாள்
ஆகாயத்தின் கீழ் உணர்வற்று
எதையோ பார்க்கும் நிலையில்
நடந்துகொண்டிருக்கிறேன்
....................................................
....................................................
இருட்டிய கண்களுடன்
அவளிருப்பை அறிய உயிரைப் பிடித்தவாறு
போய்க்கொண்டிருக்கிறேன்
(சிவப்பு காதல்)

மலையடிவாரத்தில் அவனைப் போலொருவன்
பெண் ஏற்படுத்திய காயங்களில்
நினைவிழந்தவனாய் அலைந்தான்
பனிக்காற்றில் சன்னல்கள்
தாழ்ப்பாள்களை இறுக்கியதைக் கண்டு
அவளின் இருப்பிடம் தேடி ஓய்ந்தான்
(கல் எறிதல்)

மழையில் ரெயின்கோட் அவசியமற்ற காக்கை(நீர் உள்ளிறங்கும்),மரவள்ளி சிப்ஸ் செய்து விற்பவன்(வதை படுகளம்) ஒரு விபத்துக் காட்சி(ஒளிரும் விபத்து), கடவுள் மீதான எள்ளல் (சாமி புராணம்) என கவிதைகள் புறம் நோக்கியும் விரிகின்றன. காதலுக்கு அடுத்து குடிப்பதை மையப்படுத்தி அமைந்த கவிதைகள் தொகுப்பில் கணிசமானவை(தெளிந்த போத்தல், குவளையிரவு, அப்சலூட் வோட்கா நீர்ச்சுழிகள்...).

பொங்கி வழியும் குவளை பியர் அல்லது சிறியதொரு ஐஸ்கட்டி மிதக்க பாதி நிறைந்த விஸ்கிக் கோப்பை, சிகரெட் புகையினால் அமானுஷ்யமூட்டப்பட்ட குறை வெளிச்ச மது மேசை, மூளைக்குள் மெதுவே கசியும் போதை, தம்மை பிரதானப் படுத்திப் பேசாத ‘நிசி அகவல்’ கவிதைகளின் அப்சலூட் ப்ளஷர். நாம் கொண்டாடத் துவங்கலாம்.
----------------------------------------------------

நிசி அகவல்
(அய்யப்ப மாதவன்)
ஆழி பப்ளிஷர்ஸ்,
சென்னை-24.
மின்னஞ்சல்-aazhieditor@gmail.com