Saturday, 21 January 2012

இசைக்காத மீன்களின் அக்கார்டியன்


      

மீன்கள் வெயிலில் காயத்துவங்கிய அந்தக் காலைப் பொழுதில் காற்றினூடாக நான்கு திசைகளிலும் பின் பறவைகளற்ற வான் நோக்கியும் பரவ ஆரம்பித்த மீன்வாடையால் மூக்கைச் சுளித்தபடி வெளியே  வந்தவர்களுக்கு நேற்று ஊர் ஏரியில் மீன் கொள்ளையிட்டது  நினைவிலாடியது.  எவ்விதப் புகாருமற்றவர்களாய் மீன்வாடையோடு அந்நாளை அவர்கள் தொடங்கிய அக் காலையில் தேவாலயத்தின் பரந்த மைதானத்தைத் தவிர ஊரின் எல்லாவிடங்களிலும்  மீன் காய்ந்தது. முற்றங்களில், மொட்டைமாடிகளில், அகலமான தெருக்களின் ஓரங்களில், இடமில்லாதபோது வீட்டுக் கூரைகளில், நடைபாதைகளில், நெல்லடிக்கும் களங்களில் என உயிரின் மினுமினுப்பு இன்னும் எச்சமிருந்த உடல்களை காலைச் சூரியனுக்குக் காட்டியபடி மீன்கள் பரவிக் கிடந்தன. பிறகே மீன்களைக் கண்ட காக்கைக் கூட்டங்களின் சந்தோஷ இரைச்சல் கேட்டது. அது அவற்றை விரட்ட முற்பட்ட பலவகைக் குரல்களையும் விஞ்சி ஒலித்தது.  


               தன் அறையிலிருந்து வெளியே வந்த சின்ன ஃபாதர் தாமஸ் வழக்கமாய் பெரிய ஃபாதரின் அறையை நிறைத்து அறைவீடு முழுமையையும் வியாபித்திருக்கும் புகையும் சுருட்டின் மணத்தை எதிர்கொண்டார்.பிறகு மெதுவாகவே அவர் மீன்கள் வெயிலில் வதங்கும் வாசனையை நுகரத் தொடங்கினார். திடுமென அவ்வாசம் அவரை இன்னொரு காலத்தின் இன்னொரு வெளியின் சீதோஷ்ணத்துக்குள் கொண்டு நிறுத்தியபோது நிகழிலிருந்து வேறுபட்ட அந்தக் காற்றையும் வெயிலையும் வாசனைகளையும் மனிதர்களையும் அவர் உணர்ந்தார். கால நகர்வில் பின்னோக்கி இழுக்கப்பட்டவராகி, இறுகிப் படிமமாகிவிட்டவைகள் தடையற்று நீந்த ஆரம்பித்த தன் நினைவு மீன் வாசமேறி மிக ரம்மியமானதொன்றாகி ஆழ்மனத்தில் உறைந்துபோன ஞாபகத்தின் இடுக்குகளிலும் நுழைவதை அவர் கண்டார். அங்கே அவர் எட்டாம் வகுப்பு படிக்கும் அரைக் கால்சட்டையணிந்த சங்கோஜமிக்க பையனாக இன்னமும் குத்தகைதாரர்கள் மீன்பிடித்து முடித்திராத ஏரியின் கரையில் பொறுமையற்றுக் காத்திருந்த மக்கள் கூட்டத்துள் ஒருவராக நின்றிருந்தார். ஊரே நவுந்து போயி கடலோரம் குடியேறிட்டமாதிரி இருக்கு சாமி என்றபடி சோம்பாய் கொண்டு வந்த டீயில் மீன் மணத்தது.


*****

           ன்றைய பாடல் பூசைக்குத் தெரிந்து வைத்திருந்த பாடல்களை மேலோட்டமாக ஒரு முறை வாசித்துப் பார்த்த ஃபாதர் தாமஸ் வென்னீர் தயாராவதற்காகக் காத்திருந்த தருணத்தில் சுவரிலிருந்த அந்த ஓவியத்தைப் பார்த்தார். அதுவொரு பரந்த இயற்கைக் காட்சி ஓவியம். அவருக்கு முன்னிருந்த பாதிரியார்களில் யாரோ ஒருவர் வாங்கி மாட்டிவிட்டுப் போயிருந்த அந்த நீர்வண்ண ஓவியத்தில் முன்னணியில் வெளிறிய பூக்கள் காணப்பட்ட புல்வெளியையடுத்து மூடுபனியினூடாக துயரார்ந்த மலையொன்று தெரிந்தது. அம்மலையை சிரமத்துடன் ஏறிக் கடந்தபோது அந்தப் பக்கம் வறண்ட நிலக்காட்சியின் மையமாக ஏரியொன்றை அவர் கண்டார். வினோதமாக அந்தப்பக்கம் மூடுபனி இருக்கவில்லை. அங்கே நீர் துளியுமற்று வறண்டு முழுக்க முழுக்க மீன்களால் நிரம்பி விட்டிருந்த ஏரியில் தத்தளிப்புடன் சிறுமியொருத்தி மூழ்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவள் அவர் எப்போதும் காண்பவளும் இப்போது கைவிடப்படுதலின் துயரத்தைக் கண்களில் கொண்டிருந்தவளுமான மெலிந்த தேகம் கொண்ட குறும்புக்காரச் சிறுமி. நீரில்லாத ஏரியில் மீன்களால் பயமில்லை தடுமாற்றத்துடன் தனக்குத் தானே சொன்னவராய் அவர் திரும்பி நடந்தார். ஆனால் நடுங்கிய கால்களை எவ்வளவு பிரயாசைப்பட்டும் நகர்த்த முடியாதவராய் அசைவற்று பீதியுடன் நின்றார். பின்னால் திரும்பிப் பார்க்கவும் அவருக்குத் துணிவில்லை. நீண்ட நெடுநேரம் அசைக்கமுடியாது தரையோடு பிணைந்துவிட்ட பாதங்களை இயலாமையோடு பார்த்தபடியிருந்தார். கர்த்தர் நம் முன் செல்கையில் நமக்கு எங்கும் பயமில்லை சாமி, சுடுதண்ணி தயாராயிருக்கு சோம்பாய் வெளியேயிருந்து குரல் கொடுத்தார். 


*****

                   


  

                பெரிய வலைகள், கைப்பிடியுடன்கூடிய கச்சா வலைகள், வாளிகள், பழைய வேட்டி, புடவை, துண்டு என அவரவர் மீன் ஆசைக்கும் மீன் பிடிக்கும் திறமைக்கும் ஏற்றவாறு கரைமீது நின்றிருந்த கூட்டத்தில் வெறுங்கையுடன் மீன்பிடி என்ற விளையாட்டுக்காய் வந்திருந்த சிறுவர்களே அதிகமிருந்தனர். இது போலப் பெருங்கூட்டமாய் மீன் பிடிக்க வாய்க்கும் சந்தர்ப்பங்கள் அரிது என்பதனால் ஊரே கூடித் திரண்டிருந்த அந்த ஏரியின் கரையில் தாமஸ் நின்றிருந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளி நின்றிருந்த ஜோஸஃபின் தலையில் கவிழ்த்திருந்த பிளாஸ்டிக் வாளியை சற்றே உயர்த்தி அவனைப் பார்த்து முறுவலித்தாள். ஆரஞ்சு வண்ணப் பாவாடையும், வெள்ளைப் பூக்கள் விரவிக் கிடந்த, கைப்பகுதி புடைப்புடன் தைக்கப்பட்ட மேல்சட்டையும் அணிந்திருந்த மெலிந்த தேகத்தினளான அவள் அந்த மஞ்சள்நிற வாளியெனும் வினோதத் தொப்பியினால் ஒளிபொருந்தி வசீகரமிக்கவளாகி நின்றாள். இது போன்ற இடங்களில் அவளைக் காண முடியாதபடிக்கான ஒழுங்குக் கட்டுப்பாடுகள் மதிற்சுவராய் நின்ற குடும்பத்தில் பிறந்திருந்த அவள் அக் கட்டுப்பாடுகளை மீறுவதில் தனித்தவொரு சந்தோஷம் இருப்பதைக் கண்டுபிடித்தவளாயும் எப்போதும் அவற்றை மீறும் துணிவுள்ளவளாயும் இருந்தாள். திடீரென அவனறியாத ஏதோவொரு அன்னியப் பிரதேசத்திலிருந்து அங்கு வந்துவிட்டவளைப் போலிருந்தவளைப் பார்த்து பதிலுக்கு முறுவலித்த தாமஸை இனம் புரியாத ஒரு சந்தோஷம் பற்றியது. வகுப்பில் உடன் படிக்கும் பெண்கள் யாருடனும் பேசியறியாதவனாக இருந்தபோதும் ஜோஸஃபினைக் பார்க்கையில் மட்டும்  கிலேசமும் குளிர்ச்சியுமான கிளர்ச்சியொன்று தன்னுள் எழுந்து அடங்குவதை தாமஸ் உணர்ந்திருந்தான். சரியான குறும்புக்காரியும் அடாவடிக்காரியுமான அவள் தன்னைக் காணும் போது மட்டும் கண்களைத் தாழ்த்தி குறுஞ்சிரிப்போடு நாணிச் சென்றுவிடுவதையும் அவனால் புரிந்துகொள்ள முடியாமலிருந்தது. அவள் மஞ்சள் வாளியைக் கீழே இறக்காமல் ஓரக் கண்ணால் அவனையே பார்த்துக் கொண்டிருக்கையில் உச்சிச் சூரியன் அவளைப் பார்த்தபடியே மேற்கே நகர ஆயத்தமாகியது. ராத்திரி பொரிச்ச தலப்பெரட்டயக்கூட விடாம பிடிச்சிட்டுத்தான் கரைஏறுவானுங்க போலருக்கு கூட்டத்திலிருந்த ஒரு முதியவள் சலித்துக் கொண்டாள்.

*****
             `தேனினிமையிலும் ஏசுவின் நாமம் திவ்ய மதுரமாமே`. அஸ்தகால மணிக்கப்புறம் ஒலித்த ரிக்கார்டைக் கேட்டபடி கண்விழித்த பாதருக்கு அன்று ஞாயிற்றுக்கிழமை என்ற நினைவு வந்தது. அருகே மேசையில், போர்த்தப்பட்டிருந்த மெல்லிய வெள்ளைத் துணிக்குள்ளாக வெக்கைமிகு இரவொன்றை எதிர்கொண்டு உறைந்திருந்த அக்கார்டியனை எடுத்துக் கழுத்தில் மாட்டிக் கொண்டதும் மெதுவாக இளகிய அக்கார்டியன் இறுக்கம் தளர்ந்த துருத்தியினூடாக தன்னைத் ஆசுவாசப்படுத்திக் கொண்டு தயாரானபோது உட்கார்ந்தபடி அக்கார்டியன் வாசிப்பது படுத்தபடி கக்கூஸ் போவதற்கு சமம்”, மேஜர் செமினரியில் பயின்ற காலத்தில் பாதர் லாசரஸ் கடும் நெடிமிக்க சுருட்டுப் புகையினூடாக உரத்துச் சிரித்தபடி சொன்னதும் தான் தனிமையில் அக்கார்டியன் வாசிக்கும் தருணங்களிலெல்லாம் மாறாத அதே நெடியுடன் ஒலிப்பதுமான அக்குரலை ஃபாதர் தாமஸ் அன்றும் கேட்டார். நரைத்து அழுக்கேறிய தாடியின் ரோமங்களைக் கடந்து பரவும் அந்த சுருட்டு நெடி பாதர் லாசரஸின் வாசம். அவர் புகைத்த சுருட்டிலிருந்து மட்டுமல்லாமல்  அவருக்குள் எங்கேயோயிருந்த அந்தரங்கமான வாசனைகள் கலந்ததுமாய் அது இருந்தது. நெருப்பில் புகையும் வெறும் புகையிலையின் மணமாக மட்டும் அது இருந்ததில்லையென்பதை ஒரு பாதிரியாராகி இந்த ஊருக்கு வந்தபின் நாளெல்லாம் இந்த அறைவீட்டில் தன்னை சூழ்ந்திருக்கும் பெரிய பாதிரியாரின் சுருட்டு வாசத்தை ஒப்பிட்டு அவர் உணர்ந்து கொண்டிருந்தார். அக்கார்டியன் மட்டுமல்லாது தாமஸுக்கு எவ்வளவோ விஷயங்களில் தெளிவு பெற உதவியிருக்கிறார் பாதர் லாசரஸ். பேராசிரியராக குருத்துவக் கல்லூரியில் அவர் கற்பித்த இறையியல் பாடத்துக்கும்  நடை போகிற மாலை நேரங்களில் மர்ஃபி டவுன் சிறுவர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதோடல்லாமல் பலநேரம் அவர்களோடு நிஜமாகவே சண்டைபோட்டு கோபமாக ஆட்டத்தை முறித்துக்கொண்டு வருவது போன்ற செய்கைகளுக்கும் இடையிலான ஒரு விசித்திர வெளியில் அவர் தன்னை நிறுத்தி வைத்திருந்தார். ‘தாமஸ், திஸ் மேன் ஈஸ் எ ரியல் க்ராக்பாட், அன் எக்ஸ்ட்ரீம் எக்ஸென்ட்ரிக் தாமஸ் அவரோடு நெருக்கமாகத் தொடங்கிய நாட்களில் கால்பந்து ஆட்டமொன்றின் போது இணையாக ஓடிவந்தபடியே மூத்த செமினரியன் அருள் டேவிட் குசுகுசுப்பாக சொன்னதோடு அவரைப் பற்றி தாமஸ் ஏற்கனவே அறிந்திருந்த செமினரியில் எப்போதும் உலவும் வதந்திகளையும் ஒப்பித்தான். அதில் முத்தாய்ப்பனது அவர் ஒருபால் உறவில் நாட்டங்கொண்டவர் என்பது. உன் பின்புறத்தை நீ பத்திரமாய் பார்த்துக்கொள்வது நல்லது மூச்சு வாங்க ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு பந்தைக் காலில் காவியபடி அருள் டேவிட் விலகியோடினான்.
*****

க்ஸ் சுபேதார் மிக்கேல்சாமி மதராஸ் என்ஜினியர்ஸில் பாய்ஸ் பட்டாளம் தொடங்கி ஆனரரி கேப்டன் வரையிலான தனது முப்பத்தியிரண்டு வருட சர்வீஸைப் பற்றிப் பேச ஆரம்பித்தாரென்றால் அது கால் நூற்றாண்டுக்கும் சற்றுகூடிய இந்திய ராணுவத்தின் வரலாறாகவும் மாறிவிடுவதால் எழுபத்தியொன்றில் பாகிஸ்தான் சண்டையின்போது வங்கதேச எல்லையில் இறைச்சி கிடைக்காமல் அணில்களைச் சுட்டுத் தின்ன நேர்ந்த வீரர்களின் அவலம் தொடங்கி, எண்பத்து நான்கில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரின்போது பொற்கோவிலுக்குள் பூட்ஸ் கால்களுடன் நுழைய நேர்ந்த வீரர்களது மனநெருக்கடி வரையான சுவாரஸ்யமிக்க பின்னணித் தகவல்களை நீங்கள் வேறு யாரிடமும் அத்தனைத் துல்லியமாகப் பெற முடியாது. ஆனால் அவர் அதே சம்பவங்களை ஒரு சிறிதும் கலப்படமின்றி அதே நபர்களிடம் திரும்பத் திரும்பச் சொன்னபடியிருந்ததனால் அவர் பேச ஆரம்பித்து பேச்சின் கடிவாளத்தை இறுக்கி அதன் அடி வயிற்றில் பூட்ஸ் காலின் பின்புறத்தால் குத்தி வேகமூட்ட முனையும்போது கேட்டுக் கொண்டிருப்பவர் அங்கிருந்து கிளம்புவதற்கான கற்பனையான ஒரு காரணத்தை உருவாக்கியிருப்பார். முதிர் வயதின் பிசகுகள் படிந்த தன் ஞாபகப் பரப்பில்  யாரொருவரையும் ஐயப்பட அறியாதவராக மாறிவிட்டிருந்தருந்த அவர் சொல்லப்பட்ட காரணத்தினை கரிசனத்துடன் கேட்டு வந்தவரை வழியனுப்பி வைத்துவிட்டு சோர்வுடன் பேச்சை லாயத்தில் கட்டுவார். மனைவி பாக்கியமரியின் மரணத்துக்குப் பின் மௌனம் சகிக்க முடியாத சகவாசியாகிப்போனதால் பேச்சு அவரது தீராத விருப்பமாக மாறியிருந்தது. தொலைபேசிகளின் அண்மையில் பெற்றபாசம் பேணுபவர்களாக பிள்ளைகள். வடநாட்டில் குடும்பத்தோடு இருக்கும் பெரியவன் மோசஸ், அடுத்தவன் ஸ்டாலின் கடல் தாண்டி சிங்கப்பூரிலிருக்க அவன் மனைவி தாய்வீட்டிலிருந்தாள். கடைக்குட்டி ஜோஸஃபின். ஜோஸஃபினின் நினைவு அவரைத் தடுமாற வைத்தது. அவளைப் பற்றிய நினைவு எப்போதும் மிக்கேல் சாமியின் நினைவாற்றலின் செதில்களை உதிர்த்துவிடச் செய்து, பழகியதானாலும் அந்தப் பழைய வலியினை நிகழ்காலத்தினுடையதாகவும் மாற்றிவிடுவது. பாக்கியம் எவ்வளவு சொன்னாள். ஏன் அப்படி நடந்துகொண்டோம். எங்கிருந்து  அப்படியொரு மூர்க்கம் வந்தது. ஆடிக்கொண்டிருந்த நாற்காலி நின்றபோது மிக்கேல்சாமியின் விழியோரம் துளி நீர் தெரிந்தது. சலனமும் நிச்சலமுமான மனஓட்டம் சில கணங்கள் குமிழியிட்டுப் பின் அடங்கியது. போர்ட்பிளேரில் ஏழே நாட்களில் ஒரு விமான ஓடுபாதையை அமைக்கத் தன் கம்பெனிக்கு கமாண்டர் கர்னல் ராம்நாத் உத்தரவிட்டதும் அவர் லாயத்திலிருந்து திரும்பக் குதிரையொன்றை அவிழ்த்துத் தயாரானார். திரும்பவும் நாற்காலி ஆடத்தொடங்கியது.


*****
                                  விபச்சாரத்தில் சிக்கிய பெண்ணைக் காப்பாற்ற உங்களுள் பாவம் செய்யாதவன் அவள் மீது முதல் கல்லை எறியட்டும் என்றவர் ஒரு பெண்ணை இச்சையோடு நோக்கும்போதே அவளோடு உன் மனதில் நீ விபச்சாரம் செய்தாயிற்று எனச் சொல்வது முரணாயிருக்கிறது - ஒரு லிபரல் சடாரென கன்ஸர்வேடிவ் பள்ளத்தில் இறங்குவது போல.

பதிலாக எதுவும் சொல்லாமல் பாதர் லாசரஸ் எழுந்து அக்கார்டியனில் உன் திரு யாழினில் இறைவா வாசிக்க ஆரம்பித்தார். அவர் இந்தப் பாடலை வாசிக்கிறார் என்றால் உற்சாகமான மனநிலையில் இருக்கிறார் என்று அர்த்தம். அபூர்வமாகவே அவர் இந்தப் பாடலை வாசிப்பார். அன்று யாழினை நீயும் மீட்டுகையில், இந்த ஏழையின் இதயம் துயில் கலையும் வரியினை சங்கதிகள் எல்லாம் சேர்த்து இரண்டு மூன்று தரம் திரும்பத் திரும்ப வாசித்தார்.

ஃபாதர் இன்னைக்கு ரொம்ப உற்சாகமாக இருக்கீங்க போல

ஃபாதர் லாசரஸ் சிரித்தார். அக்கார்டியனை மெதுவாக மேசைமீது வைத்தபின் சொன்னார் தாமஸ், பைபிள்ள ஏசுவுக்கு லிபரல் இமேஜ் உண்டாகற அல்லது உண்டாக்கப்படற இடங்கள்ள நீ சொன்ன முதல் சந்தர்ப்பமும் முக்கியமான ஒண்ணு. ஆனா நீ குறிப்பிடும் இந்த இரண்டு சந்தர்ப்பங்களையும் ஒப்பிட்டு அவர் கன்ஸர்வேடிவோனு நினைக்கத் தூண்டறது உன்னுடைய வயசு. ஃபாதர் மறுபடியும் சிரித்தார். சிரிப்பை நிறுத்திவிட்டு ஒரு கணம் தாமஸின் கண்களையே உற்றுப் பார்த்தவர் கேட்டார் யார் அந்தப் பெண்?.

எதிர்பாராத இந்தக் கேள்வி தாமஸை சற்றே நிலை குலைய வைத்தது. அவன் மௌனமாக அமர்ந்திருந்தான். அவன் தோளில் ஆதரவாய்க் கை வைத்தார் கமான் மை பாய், ஐ வாஸ் ஜஸ்ட் கிடிங்.

இல்ல பாதர், உங்ககிட்ட நான் பொய்சொல்ல விரும்பல. நிலை மீண்டவனாக தாமஸ் சொன்னான்.


*****



               ந்த வருடம் மீன்பாடு உண்மையிலேயே மிக அதிகமாக இருந்தது. கடந்த எட்டு நாட்களாக எங்கிருந்தெல்லாமோ வியாபாரிகள் வந்து கூடை கூடையாக சைக்கிளில் வைத்து ஏற்றிக் கொண்டு போனதில் குத்தகைத் தொகையைவிடவும் பலமடங்கு லாபம் கண்டபின்னும் ஏரியில் தீராமல் பெருகியபடி இருந்த மீன்கள் குத்தகைதாரர்களையே வியக்க வைத்தது. மீன்பிடி முடிந்தபின் இரவுகளில் வானிலிருந்து வந்து யாரோ மீன்களைக் கொட்டித் திரும்பவும் ஏரியை நிரப்பிவிடுகிறார்களோ எனவும் சிலர் ஐயப்பட்டனர். ஆனாலும் அவர்களுக்கு மீனைக் கொள்ளையிட இன்னமும் மனம் வரவில்லை. கரையில் நின்றிருந்த கூட்டமோ கட்டுமீறிப்போகும் அளவை எட்டியிருந்தது.ஏரியினுள் மீன்கள் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் மேற்பார்வையில் ஈடுபட்டிருந்த குத்தகைதாரர்களில் ஒருவரான முன்னாள் சபைமணியம் அந்தோணி மற்ற குத்தகைதாரர்களோடு ஏதோ பேசினார். இவர் சொன்னதை அவர்கள் பலமாக மறுத்தது போலிருந்தது. அவர்கள் தொடர்ந்து பேசியபடி இருந்தனர். சற்று கழித்து அவர்களிடையேயான பேச்சு வாக்குவாதமாய் மாறியது. கரை மீதிருந்தவர்கள் ஆர்வம் கூடியவர்களாய் கவனிக்க ஆரம்பித்திருந்தனர். மீன் கொள்ளையிடுவார்கள் என வந்து இதுவரை அவர்கள் ஐந்து நாட்களாக ஏமாற்றத்துடன் திரும்பிப் போய்க்கொண்டிருந்தனர். வாக்குவாதத்தின் முடிவில்  கோபத்துடன் விலகிவந்த அந்தோணி மாறாத அதே கோபத்துடன் தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்தார். கரைமீது நின்றிருந்த கூட்டத்தில் சலசலப்பு அடங்கி திடீர் அமைதி வந்தது. அந்தோணி துண்டை தலைக்கு மேலே உயர்த்தி கரையைப் பார்த்து மூன்று முறை வலுவாகச் சுழற்றினார். அடுத்த கணம் மீன் கொள்ளையிட்டாச்சு என்ற உரத்த குரல்களும் வென்ற இரைச்சலுமாக சரிவான கரையில் திமுதிமுவென ஓடி ஊர் மொத்தமும் ஏரிக்குள் இறங்கியது.

*****


             ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் இரண்டாவது பூசையின்போது பாட்டுக் குழுவில் தாமஸ் ஃபாதர் அக்கார்டியன் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை பூசை கடன் பூசை, அதிலும் இரண்டாவது பூசை வாரத்தின் சிறப்பான பூசை, பாடல் பூசை. காலை முதல்பூசைக்குப் பெரியவர்களும் வயதானவர்களும் கறி எடுத்து சமைக்கும் வேலையிருக்கும் பெண்களும் வந்து போய்விடுவதால் எட்டுமணிக்கு நடக்கும் இரண்டாவது பூசையின்போது தேவாலயம் எப்போதும் சிறுவர்களாலும் வயசுப்பிள்ளைகளாலும் நிறைந்திருக்கும். அக்கார்டியன் வாசிப்பதற்காகவே தாமஸ் ஃபாதர் தனக்கு ஒதுக்கப்பட்ட கிளைப் பங்குகளில் விரைவாக பூசைகளை முடித்துக் கொண்டு எட்டு மணிக்குள் திரும்பி விடுவார். அவர் அக்கார்டியன் வாசிக்க ஆரம்பித்த தொடக்க நாட்களில் ஒருநாள் எல்லோரும் பூசையை கவனிக்காமல் அக்கார்டியனில் அமுங்கி விரியும் துருத்தியையும் அதிலிருந்து சிலீரென்று ஒலித்த சன்னமான இசையையும் வியப்புடன் கவனித்தபடி ஆண்டவர் உங்களோடு இருப்பாராக என்ற பெரிய ஃபாதரின் பாடலுக்கு உம்மோடும் இருப்பாராக என பதில் பாட மறந்த ஒரு சந்தர்ப்பத்தில் பெரிய ஃபாதருக்கு அக்கார்டியன் மீதும் அதை வாசித்த தாமஸ் ஃபாதர் மீதும் வந்த கோபத்தில் சற்று நேரம் பூசையை நிறுத்திவிட்டு அமைதியாக இருந்தார். அப்போதுமுதல் யார் பார்வையிலும் படாத, பாடல் குழு அமருமிடத்துக்கு அருகேயிருந்த பெரிய தூணின் உட்குழிந்த பகுதியை தனக்கும் தன் அக்கார்டியனுக்குமான இடமாக ஃபாதர் தாமஸ் தேர்ந்துகொண்டார்.

               அதிகாலையில் விலகாத தூக்கத்துடன் பாடல் பாடும் கொயர் பிள்ளைகள் மறந்தும் கண்ணயர்ந்துவிடாதபடிக்கு திடும் திடும் என அதன் பெடல் கட்டைகள் மரச்சுவரில் மோதி அதிர்வுகள் உண்டாகும்படி தேவாலயத்தின் சர்ச் ஆர்கனை வாசித்த சவரிமுத்து வாத்தியார்தான் பெரிய ஃபாதருக்கு அடுத்து அக்கார்டியனை எதிரியாகப் பார்த்த இரண்டாவது நபர். தன் ஏகபோக ராஜ்ஜியமாயிருந்த பாடல் குழுவில் நுழைந்து கம்பீரம்மிக்க தனது பழைய ஆர்கனை ஒரு ஒன்றுமற்ற வஸ்துவாக்கிவிட்ட அந்த வினோத இசைப்பெட்டியை, வாசிச்சுப் பார்க்கறீங்ளா? எனக்கேட்டு தாமஸ் ஃபாதர்  அதை வாசிக்கவும் கற்றுக் கொடுத்த தினம் வரை தீராத வன்மத்துடனே பார்த்து வந்தார். ஆர்மோனியத்தத்தான் ரெண்டு பக்கமும் கட்டைங்களை வச்சு நடுவுல துருத்திய திணிச்சு மாத்தி செஞ்சிருக்கான். துருத்தியோட சேர்ந்து கட்டைங்களும் முன்ன பின்ன போய்வருது அவ்ளோதான். ஆனா நம்ம ஆர்மோனிய சவுண்டு என்ன கம்பீரம். இதென்னமோ எச்சிலடைச்சிக்கிட்ட பீப்பி மாதிரி முக்கிக் முக்கிக் கத்துது. மரியசவரி வாத்தியரோடு சேர்ந்து தண்ணியடிக்கும்போது அக்கார்டியன் பற்றி சவரிமுத்து வாத்தியார் இப்படிச் சொல்லித்தான் புரையேறும் வரை சிரித்தார்.


*****

            ரியின் முட்டிக்காலளவு தண்ணீர் தாமஸுக்கு இடுப்பைத் தொடுமளவாக இருந்தது. ஏரி முழுக்க ஆட்களாய் இறங்கிய கணம் நீர்ப்பரப்பின் ஓரங்களிலிருந்த பீதியுற்ற தவளைகள் நாலாபுறமும் தாவித் தாவி ஓடி கரையோரப் புகலிடங்களையடைந்தன. சுற்றியிருப்பவர்கள் யாரென்று அடையாளங்காண முடியாதிருந்த நெரிசலில் கச்சா வலையை நீரில் அமுக்கி வெளியே எடுக்கையில் எதிரே குனிந்திருந்த பெண்ணின் வழித்துக்கட்டிய சேலையை, ஆணின் வேட்டியை, சிறுமியின் பாவாடையை மேலும் அது உயர்த்த சில இடங்களில் கோபமும் சில இடங்களில் சிரிப்புமாய் மீன்பிடி தொடர்ந்தது.எல்லோரும் மீன்களைப் பிடிப்பதில் மும்முரமாயிருக்க படபடப்பும் சந்தோஷமுமாய் நீரிலிறங்கிய தாமஸுக்கு முதலில் என்ன செய்வதெனத் தெரியவில்லை. குழம்பிச் சகதியாகிக் கொண்டிருந்த நீரில் கைகளை மூழ்கவிட்டு அளைகையில் வழுவழுவென நழுவியும் துள்ளியும் சென்றவைகளில் எதுவும் கைகளில் சிக்குவனவாகவில்லை. சற்றுநேரம் கழித்து சிக்கியவொன்றை வெளியே எடுத்து அது தவளையெனக் கண்டதும் அச்சத்துடன் தூர எறிந்தான். அப்படியே அளைந்து கொண்டிருந்தவன் சற்று கழித்து ஒருசேரக் கிடைத்த சின்னச் சின்ன ஆனால் அவ்வளவாக வழுவழுப்பற்ற நான்கு ஜந்து மீன்களை வலுவாகப் பற்றி மேலே கொண்டுவந்தபோது ஒரு பெண்ணின் விரல்களும் அவற்றோடு வளையல்களணிந்த அவள் கைகளும் மேலே வந்தன.  சிரிப்புடன் அவன் முன்னே ஜோஸஃபின் நிமிர்ந்தெழுந்து நின்றாள். அழுக்கு மஞ்சளாய் சகதி நீர் வழிந்து சொட்டிய கைகளைப் பற்றியபடி அவர்கள் நின்றனர். அவனும் சிரித்தான். விரல்களின் ஸ்பரிஸம் அவர்களுள் அந்தப் புதுவித விளையாட்டின் ருசியை தீவிரப்படுத்தியது. சுற்றி நின்றவர்கள் கவனமெல்லாம் தங்கள் கலன்களை மீன்களால் நிறைப்பதில் இருக்க, வந்து சிக்கிய மீன்களைக்கூடப் பிடிக்காமல் நெடுநேரம் இருவரும் நீருக்குள் விரல் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அன்று அந்த ஏரியின் நீர் மீன்கள், நண்டுகள், நத்தைகள், தவளைகள், சில நீர்க்கோழிகள், விலாங்கு மீன்கள் எனத் தவறாய் கணிக்கப்பட்டு பின் தூர எறியப்பட்ட தண்ணீர்ப் பாம்புகள் என தன்னிலிருந்து கொடுத்து பிள்ளைக் காதலொன்றின் களிகூடிய விளையாட்டில் தன்னைச் சேர்த்துக் கொண்டது. நிலத்தின் விளையாட்டுக்கள் நீருக்குள் நிகழ்கையில் அதீத மர்மமும் அமானுஷ்யமும் கூடியனவாக அவை மாறிவிடுவது நிலத்தைப் போலன்றி வெறும் பார்வையாளனாக இராமல் நீரும் விளையாட்டில் ஒருவராகத் தன்னைச் சேர்த்துக் கொள்ளும்போதுதான்.


*****

              ன்றொருநாள் காலைப்பூசை முடிந்து போகும்போது தூம்பாக் கொட்டகைக்குள்ளிருந்தபடி கிசுகிசுப்பான குரலில் அழைத்து ஹாப்பி பர்த்டே என ஜோஸப்பின் நீட்டிய சாக்லெட் டப்பாவை தாமஸின் தம்பியும் தங்கையும் துப்பறிந்து  கண்டுபிடித்த நாளில் அம்மாமுன் பதில் பேச வார்த்தைகளற்று நின்றான். ரோஸாலி தன் மகன் மீது வைத்திருந்த நம்பிக்கையை பளபளப்பான அந்த டப்பாவும் அதிலிருந்த விலைகூடிய இனிப்புகளும்  இரக்கமற்று உடைத்திருந்தன. தனக்குப் பாத்தியதையல்லாத ஒரு திருட்டுப் பட்டத்தினை ஏற்றுக்கொண்டிருப்பதன்  மூலமாக தன் வாழ்வில் அதுவரையும் அதன்பிறகும் தான் அனுபவித்திராத பவித்திரமான ஒரு பிரியத்தின், காதலின்  இதம்கூடிய வெம்மையை எப்போதைக்கும் இழக்காமல் இருந்திருக்கலாம் என்பது மட்டுமல்லாது யூதாஸ் ஸ்காரியோத்தினது போலாகிய தனது உண்மை தன்னிடம் பிரியம் காட்டியது தவிர்த்து ஒரு களங்கமுமறியாத ஆத்துமாவொன்றை சிலுவையில் பூட்டி வதைத்துவிட்டதில் காட்டிக் கொடுத்தலின் துரோகநிழலாவது தன் மேல் விழாமல் தப்பியிருக்கலாம்   என பிறகான காலங்களில் பலநூறு தரம் தாமஸ் கழிவிரக்கத்துடன் நினைத்து மறுகியிருக்கிறார். மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அப்பாவின் போட்டோ முன்பாக பைபிளில் அவனிடம் சத்தியம் வாங்கிய அம்மா அந்த சாக்லேட் டப்பாவை அதற்கு பாத்தியதையானவது வீட்டில் ஒப்படைத்தாள். ஹவில்தாரிலிருந்து நாயப் சுபேதாராக பதவி உயர்வு பெற்ற கையோடு விடுமுறையில் வந்திருந்த மிக்கேல்சாமி தன் நரம்புகளில் ஓடி திடப்பட்டுவிட்ட ஒழுங்கின் கிரமங்களை தன் மகளே பகிஷ்கரித்துவிட்டதாக சீற்றமடைந்தார். அடுத்து நடந்தவைகளுக்கு மிக்கேல்சாமி என்ற நபரை பொறுப்பாக்க முடியாதபடிக்கு ஒழுங்கின் வளையாத செங்கோல் அவரை வழிநடத்தியது. மறுநாள் காலையே ஜோஸஃபின் கேரளத்தில் வசிக்கும் தன் சித்தி வீட்டுக்கு அனுப்பப்பட்டாள். மனைவி பாக்கியமரியின் கெஞ்சல்களும் கதறல்களும்  அவரை சற்றும் அசைக்கவில்லை. ஜோஸஃபின் கேவியபடி ரயிலேறும்போது அவர் சொன்னார் நானாக விருப்பப்பட்டு உன்னைப் பார்க்க வரும்வரை, எத்தனை வருடங்களானாலும் சரி, என் முகத்தில் வந்து நீ விழிக்கக் கூடாது. மீறல்களுக்கு அனுமதியில்லாத தனது ஆளுகைப் பிரதேசத்தில் நிகழ்ந்த முதல் அத்துமீறலை சரியான வகையில் சீர் செய்த நிம்மதியும் பெருமையும் முகத்தில் தெரிய  ரயில் நிலையத்திலிருந்து குலையாத கம்பீரத்துடன் அவர் வெளியே வந்தார்.

*****


               ஜெர்மனியின் டூபிங்கன் பைபிள் விமர்சனப் பள்ளி, திருச்சபை தடை செய்த கறுப்பு வேதாகமம், கைவிடப்பட்ட புதிய ஏற்பாடுகள், பைபிளின் பல ஆகமங்களும் புதிய ஏற்பாட்டின் பல பகுதிகளும் திறமையாக எப்படி எடிட் செய்யப்பட்டன என்பது பற்றியெல்லாம் ஃபாதர் லாசரஸ் அவனோடு பேசியிருக்கிறார். பின்காலத்தில் கடுமையான நிறுவனமயமாதலுக்கு ஆட்பட்டது உள்ளிட்ட கிறித்தவத்தின் இந்த எல்லாப் பிசகுகளையும் மூடி மறைக்குமளவுக்கான ஆளுமையும் அகதரிசனமும்  மிக்க மனிதராக இயேசு கிறிஸ்து இருப்பதும், உலகத்தின் மீதான கிறித்தவ நிறுவனத்தன்மையின் இறுகிய பிடியும் எந்தக்காலத்திலும் எப்படிப்பட்ட சவால்களை எதிர்கொண்டாலும் அது உயிர்த்திருக்க உதவும். ஒரு பாதிரியாராக கிறித்தவத்தைக் கண்மூடி ஏற்கவேண்டிய அவசியமில்லை என ஃபாதர் லாசரஸிடமிருந்து தாமஸ் கற்றுக்கொண்டிருந்தார். வாழ்வின் அர்த்தத்தை நமக்கு விதிக்கப்பட்டவற்றினூடாக வாழ்ந்து தேடுவதும், கேள்விகளுக்கு வெளியேயிருந்தல்லாமல் கேள்விகளின் வழியாக தொடர்ந்து நகர முற்படுவதுமே சிறந்த வழிமுறையாக இருக்கமுடியும் என்பார்.  ஜோஸஃபின் தந்த சாக்லெட் டப்பாவினூடாக அல்லாமல் அதற்கு வெளியே நின்று தான் தீர்வைத் தேட முற்பட்டிருக்க வேண்டாம் என தாமஸ் எண்ணிக் கொண்டார். ஃபாதர் லாசரஸ் பரிசளித்த அக்கார்டியன் ஒரு பெரிய சாக்லெட் டப்பாவாய் இருந்தது. அதனூடாக கடக்க வேண்டிய தருணங்களை முன்னிட்டு அதை எப்போதும் பத்திரமாய் தன்னோடு வைத்திருக்க உறுதிகொண்டார் தாமஸ்.

*****


              வித்த மரவள்ளியின் வாசனை நிறைந்ததிருந்த திருவனந்தபுரத்து புறநகரொன்றின் சற்றே குறுகலான தெருவிலிருந்த அவ்வீட்டின் முன்  புதிய ஆடைகளும், இனிப்புகளும், இன்னபிற தின்பண்டங்களும் நிறைந்த பையுடன் ஆட்டோவில் இறங்கிய மிக்கேல்சாமி இரண்டு வருடங்களில் தன் மகள் எப்படி வளர்ந்திருப்பாள் என்ற கற்பனை மேலிட்ட சாதாரணத் தகப்பனாக அழைப்பு மணியை அழுத்தினார். கண்டிப்பான ஒழுக்கம் என்கிற ஆயுதத்தாலன்றி மனிதனுக்கு விமோசனமில்லை எனும் உறுதிப்பட்ட தனது கோட்பாட்டின் மீதான நம்பிக்கையினால் தன் மகள் பெரும் ஒழுக்கச் சரிவிலிருந்து காப்பாற்றப்பட்டது குறித்த நிம்மதியையும் அவர் கொண்டிருந்தார்.அவர் மனைவியின் தங்கை வீட்டில் சிரம பரிகாரம் முடித்தவர் தாளாத ஏக்கத்தை அடக்கியவராய் இயல்பாக `ஜோஸஃபின் எங்கே?` எனக் கேட்டார். உள்ளே  சம்மனசுமரி சென்ற திசையில் சற்று நேரம் அமைதியும் அதைத் தொடர்ந்து உரத்த பேச்சாக மறுக்கும் குரலும் கெஞ்சல்களும் மாறி மாறிக் கேட்டன. அப்படியே நெடு நேரத்துக்கு நீடித்த உரையாடலின் முடிவில் சம்மனசுமரி மட்டும் திரும்பி வந்தாள். `ஒண்ணுமில்ல… அவளுக்கு இன்னும் அந்தக் கோவம் போகல… உங்களப் பார்க்க மாட்டேங்கறா… சின்னப்புள்ளதான கொஞ்சநாள் போயி விவரம் புரிஞ்சா சரியாயிடுவா…`. மிக்கேல்சாமி சற்று நேரம் ஒன்றும் பேசாமலே அமர்ந்திருந்தார். பிறகு சொல்லிக்கொள்ளாமலே எழுந்து வெளியே வந்தவர் எப்போதும் வட்டத்தின் விளிம்புகள் வளைவானதாகவும், சதுரத்தின் பக்கங்கள் நேர்க்கோடாகவும்  எல்லாருக்கும் இருந்துவிடுவதில்லை என எண்ணிக்கொண்டார். தன் ஒழுக்க விதிகள்  ஏதோவொன்றைக் காணத் தவறிவிட்டதாக அவருக்குத் தோன்றியது. நுட்பமான அது புலப்பட்டும் புலப்படாதது போலிருந்தது. அதன் பிறகு பலமுறை, ஜோஸஃபின் அவரை மட்டுமல்ல அவர் வீட்டில் யாரையுமே பார்ப்பதில்லை என்பதில் திண்ணமாக இருந்தாள்.பாக்கியமரி தொலைவே நின்று தன் மகளை அவளறியாமல் பார்த்துவிட்டு வர நேரும் அவலத்தை அழுதழுது பேசி ஓய்ந்தாள்.சமரச முயற்சிகள் எதற்கும் அசைந்து தராத  ஜோஸஃபின் தன் புகைப்படம் கூட தன் வீட்டுக்குப் போகாமல் பார்த்துக்கொண்டாள். தன் குடும்பத்திடமிருந்து தன்னை முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்ட அவள் இறுதி வரை அக்குடும்பத்துக்கு தொடர்பற்றவளாய் வாழ்ந்து மடிவது என்ற வைராக்கியமொன்றையே வாழ்வின் குறிக்கோளாய்க் கொண்டாள்.

*****



                ன்டர்வெலுக்கு வெளியே வந்த பள்ளிக் கூடப் பிள்ளைகள் மூன்றரை மணிக்கெல்லாம் திடீரென இருள ஆரம்பித்த வானத்தைக் கண்டு முதலில் வெருண்ட போதும் கனமான துளிகள்  விழக்கண்டு ஆரவாரக் கூச்சல் எழுப்பினர். ஆலங்கட்டிகள் கடும் ஓசையுடன் கூரைகள் மீதும் சிமெண்ட் தரைமீதும் விழுந்தன. திறந்த வைளியில் இருந்த சில பானைகள்கூட உடைந்தன. பின் வானம் திறந்துகொண்டதுபோல மழை கொட்ட ஆரம்பித்தது.யாரும் எதிர்பாராத இக் கோடைமழை குழந்தைகளை குதூகலப்படுத்தியது. ஆலங்கட்டி சேகரிக்கும் சாக்கில் மழையில் நனைய விரும்பிய பிள்ளைகள் டீச்சர்களின் அதட்டலுக்குப் பயந்து வகுப்பறைகளுக்குள் ஒடுங்கினர். ஆலங்கட்டிகள் மேல்விழுந்தபோது ஊரெங்கும் காய்ந்துகொண்டிருந்த மீன்கள் உயிர்பெற்ற பாவனையில் சற்றே துள்ளின. பிறகு கொட்டிய மழை சடுதியில் வெள்ளமாய் மாறியபோது மீன்களை சேகரித்து பத்திரப்படுத்த யாருக்கும் அவகாசம் இருக்கவில்லை. கிட்டத்தட்ட எல்லா மீன்களையுமே மழைவெள்ளம் தன்னுள் இழுத்துக் கொண்டுவிட்டிருந்தது. ஆலங்கட்டிகள் வீழ்ந்த ஓசையும்,மழை கொட்டிய பேரோசையும் சின்ன ஃபாதர் தாமஸின் மதிய தூக்கத்தை முன்கூட்டியே கலைத்துவிட்டதில் எழுந்து வெளியே வந்தவர் ஜன்னலோரம் நின்று திரண்டோடிய வெள்ளத்தைப் பார்த்தார்.வெள்ளம் எவ்வெவற்றையோ தன்னுடன்  சேர்த்தபடி கலங்கலாய் ஓடியது. தேவையற்றவை தேவையுள்ளவை என எல்லாமே ஒன்றாகி வெள்ளத்தில் கலந்தோடின.அவர் அழுக்காய் பெருக்கெடுத்தோடிய வெள்ளத்தைப் பார்த்துக்கொண்டிருக்கையில் அதில் ஊரெல்லாம் காயவைக்கப்பட்டிருந்த மீன்களும் பயணிப்பதைக் கண்டார்.  சுழித்தோடிய  வெள்ளத்தில் மிதந்த உயிரற்ற மீன்கள் நீந்தும் பாவனையிலிருந்தன. வெள்ளத்தின் ஓட்டம் அவற்றுக்கு அளித்திருந்த அந்த பாவனை பொருந்தாமல் கூட்டம் கூட்டமாய் எல்லாக் குப்பைகளையும் போல புரண்டோடிய அவைகள் எப்படியேனும் திரும்ப உயிர்பெற்றுவிட வேண்டும் என்ற உத்வேகத்துடன் செல்வன போலிருந்தன.அவர் அம்மீன்களையே பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு மஞ்சள் நிற வாளியும் சில சாக்லெட் டப்பாக்களும்கூட வெள்ளத்தில் பயணிப்பதை அவர் கண்டார். “நாளைக்குக் காலையில மூக்கப் பிடிச்சிக்கிட்டு எழுந்திருக்க வேண்டியிருக்காது சாமி தக்காளி சூப்புடன் வந்த சோம்பாய் சொன்னார். ஏறத்தாழ காய்ந்த மீன்களெல்லாமே வெள்ளத்தோடு போனபின்பும் தீராமல் மழை பெய்தபடியிருக்கையில் அவசரமாய் தன் அறைக்குத் திரும்பிய ஃபாதர் தாமஸ் அக்கார்டியன் அங்கே பத்திரமாய் இருக்கிறதா என ஒருமுறை பார்த்துக் கொண்டார்.

*****
    

                வர்களது விளையாட்டு சலிக்காததாய் நெடு நேரத்துக்கு நீண்டுகொண்டிருந்தது. பிறகு, ஒற்றை மீனுமின்றி கரையோரம் தவளைகள் சூழக்கிடந்த அவளது மஞ்சள் வாளிக்கு ஒரு சிறு மீனையேனும் கொண்டு சேர்க்க உறுதி கொண்டவர்களாய் அவர்கள் விளையாட்டிலிருந்து நீரை விலக்கிவிட்டு எல்லோரையும் போல கை கோர்த்து மீன் தேடினர். நீருக்குள் தன்னைப் பிடிக்க நீண்ட பல நூறு வலைகளையும் கைகளையும் தப்பித் துள்ளியும் நீந்தியும் வந்த கெளுத்தியொன்று விளையாட்டில் கோர்த்துக் கிடந்தபடி தன்னைப் பிடிக்க முயன்ற இரு ஜோடிக் கைகளெனும் வலையினை தன் கொடுக்கால் வெட்ட முனைந்தது.ஒரு கையில் மீனுடன் வலிதாளாமல் மறுகையை உதறினான் தாமஸ். அவன் கையைப் பரிசோதித்துவிட்டு  எங்கோ ஓடிப்போனவள் சுண்ணாம்புடன் திரும்பி வந்தாள். கடிவாயைச் சுற்றி சிவந்திருந்த விரல்பரப்பில் அவள் வைத்த சுண்ணாம்பின் வெண்மை மெல்லக் காதலின் வண்ணமாய்ப் பரிணமிக்கத் தொடங்குகையில் ஏரியினை மேற்குச் சூரியன் நிறம் மாற்றத் தொடங்கியது. அந்த மாலையில் மனம் இன்னும் ஏரிக்குள் மிதந்தபடியிருக்க வானத்தின் பொன்மஞ்சள் நிறைந்திருந்த பிளாஸ்டிக் வாளிக்குள் மீசை விரைக்க நீந்திக்கொண்டிருந்த ஒரேயொரு கெளுத்தி மீனுடன் எல்லாரோடும் சேர்ந்து அவளும் வீடு திரும்பினாள்.


அறைவீடு - ஊரில் பாதிரியார்கள் வசிக்கும் பங்களா. சோம்பாய் - பாதிரியார்களுக்கு சமையல் செய்பவர். தூம்பா - இறந்தவரின் உடலை வைத்து கல்லறைக்கு எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் வண்டி. 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நன்றி; கல்குதிரை (2011)

Sunday, 2 October 2011

யுவான் ருல்ஃபோவின் எரியும் சமவெளி: அவலத் துயரின் அழகியல்.


அசாதாரண வாழ்நிலைச் சூழலில் அசாதாரண மக்களது வாழ்வை புனைகதையின் அசாதாரணமானதொரு வகைமாதிரிகளாகப் படைத்துத் தந்திருக்கும் தொகுப்பாக யுவான் ருல்ஃபோவின் பதினைந்து சிறுகதைகள் அடங்கிய எரியும் சமவெளி தொகுப்பைக் கூறலாம். வறட்சியும் வறுமையும் மேலிட்ட மத்திய மெக்ஸிகோவின் கடந்த நூற்றாண்டின் கொந்தளிப்பான முதல் கால்நூற்றாண்டும் அதைத்தொடர்ந்த ஏமாற்றமும் அவல நிலையின்பாற்பட்டதுமான காலகட்டமும் இக்கதைகளின் களமாக உள்ளன. 1910 முதல் பத்தாண்டுக்காலம் நடந்த மெக்ஸிகப் புரட்சியும் அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து அரசுக்கெதிரான கத்தோலிக்க தீவிரவாதக் குழுக்களின் கலகமான கிறிஸ்டெரோக்களது கலகமும் நிகழ்ந்த இக்காலகட்டம் மெக்ஸிக வரலாற்றில் மிகுந்த நெருக்கடியான காலகட்டமாகும். புரட்சிகளும் கலகங்களும் மக்களை கொண்டு நிறுத்திய ஏமாற்றம் மற்றும் துயர் நிறைந்த வாழ்நிலையிலிருந்து தனது புனைகதைகளை ருல்ஃபோ படைக்கிறார். வறுமையாலும் துயராலும் வாழ்தலின் சுமையினாலும் அழுத்தப்படும் மனிதர்களது சித்திரங்களாக விரியும் அவை வாசகனை உலுக்குபவையாகவும் எக்காலத்துக்குமாக அவனைப் பின்தொடர்ந்து வந்து வாதைக்குள்ளாக்குபவையாகவும் உள்ளன.வெம்மைகூடி வறண்டுபோன, நம்பிக்கைகளழிந்த ஒரு நிலப்பரப்பின் நீட்சியாக அந்நிலத்தின் மனிதர்களும் மாறிவிட்டதான ஒரு தோற்றம் இக்தைகளினூடாக நகர்ந்துகொண்டிருக்கிறது. பகட்டில்லாத தன் மொழியின் துல்லியத்தினாலும் இறுக்கமான கட்டமைப்பினாலும் அதிர்வூட்டும் யதார்த்தச் சித்தரிப்புகளாக இத்தோற்றத்தினை விஸ்தரிப்பதில் பெரும் ஆவல் கொண்டவராகவும் பேரளவில் அதில் வெற்றி காண்பவராகவும் ருல்ஃபோ இக்கதைகளில் காணப்படுகிறார்.

மக்காரியோவின் தன்மொழியாக அமைந்த ‘மக்காரியோ’ கதையில் சிதைவுண்ட மனதின் குழப்பமானதும் அரூபமானதுமான சித்திரங்களை தனது தனித்துவமான மொழி மூலம் வெளிக்கொணர்கிறார் ருல்ஃபோ. அதன்வழி அக்கதையில் வரும் ஞானத்தாய், ஃபெலிபா மற்றும் மக்காரியோ இவர்களது புற மற்றும் அக உலகு சார்ந்த படிம்மொன்றை உருவாக்குகிறார். ‘…என் எச்சிலைக் கொண்டு அவளைக் குணப்படுத்த முடியாதென்று நான் கண்டபொழுது, என் கண்களைக் கொண்டும் அவள் அழுவதற்கு என்னால் முடிந்த அளவிற்கு உதவினேன்’ என்பது போன்ற செவ்வியல் தன்மையுடையதான வரிகளமைந்த இக்கதையில் அவை ஆசியருடையதாக அல்லாமல் மனநிலை பிறழ்ந்த ஒருவனின் கூற்றாக கதையில் அதன் பொருத்தப்பட்டை அடைகின்ற விதத்தில் ருல்ஃபோ கதைமாந்தரது உணர்வையும் தனது மொழியையும் பிணைக்கும் விதம் அலாதியானது.

‘அவர்கள் தந்தது நிலம்’ கதையில் ஒன்றுக்கும் பயன்படாத நிலம், அதனை ‘மழை பெய்ய ஆரம்பித்தால், நீங்கள் பிடித்து இழுத்தால் வருவது மாதிரி சோளப்பயிர் கிடுகிடுவென வளர்ந்து விடும்’ எனக் கூறி அரசாங்கம் தந்துவிட்டுப் போகிறது. காற்று வீசி மேகம் திரளும்போதும் சபிக்கப்பட்ட அந்நிலத்தில் மழையென்று எதுவும் பெய்வதில்லை, ஒரேயொரு கணத்த துளியைத் தவிர. எதற்கும் பயன்படாத நிலத்தைக் கொண்டு என்ன செய்வது என்ற சோகத்தினை நேர்த்தியான வர்ணணைகளும் நுட்பமான உரையாடல்களும் கதையினூடாக நகர்த்திச் செல்வதை நாம் காண்கிறோம். ‘நாங்கள் மிகவும் ஏழைகள்’ கதையில் டாச்சாவின் மாட்டை பெருகி வரும் ஆற்று வெள்ளம் அடித்துச் சென்றுவிடுகிறது. இக்கதையில் ஆறும் அதன் வெள்ளமும் அது விளைவித்துப் போகும் அழிவும் டாச்சாவின் சகோதரனுக்குப் பொருட்டில்லை என்பது போல தனது ஒரே சொத்தான மாட்டை ஆறு அடித்துக்கொண்டு போய்விட்டதால், தனது மற்ற சகோதரிகளைப் போல டாச்சவும் கெட்டுப் போய்விடுவாளோ என்ற கவலையே பிரதானமாக இருக்கிறது. ஆறு உண்டாக்கும் பேரழிவின் பின்னணியில் டாச்சாவின் சகோதரனது இந்தக் கவலையை வைப்பதன் மூலம் ஆற்றின் அழிவுச் செயலை மட்டுப்படுத்தப்பட்ட பூதாகரத்தனத்துடன் ஆசிரியரால் காட்சிப்படுத்த முடிகிறது.

‘தால்பா’ கதையில் புனிதத் தலத்துக்குப் பாதயாத்திரை செல்லும் கூட்டத்தில் ஒருவன் நோய்பீடித்த தன் சகோதரன் மற்றும் அவனது மனைவியுடன் பயணிக்கிறான். மரணத்தை எதிர்கொண்டிருக்கும் சகோதரனுக்குத் துணையாக இவனும் சகோதரனது மனைவியும் செல்லும் பல நாள் பயணத்தில் அவனுக்கும் அவன் சகோதரன் மனைவிக்குமிடையிலான காதல் நமக்குத் தெரிய வருகிறது.இப்பயணம் எந்தப் பலனும் தராது என்பதை உணர்ந்தவர்களாய் தனது அண்ணன்/கணவனது ஆசையின் நிமித்தமாகவே அவர்கள் செல்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்தவாறே அப்புனிதத் தலத்தில் அண்ணன் இறந்துபோகிறான். அதன் பிறகு நமது எண்ணத்துக்கு மாறாக அவர்கள் இறந்துபோனவனைப் பற்றிய எண்ணத்தால் தீவிர அலைக்கழிப்புக்கு ஆளாகிறார்கள். ஒரு மரபான இந்தியக் கதையினது முடிவைப் போன்றவொன்றைக் கொண்டிருக்கும் இக்கதை மனித மனதின் ஆழ்மன விசித்திரங்கள் பற்றியதொரு கலாச்சாரங்கள் மற்றும் தேசங்கள் கடந்த பொதுமைப் பாட்டினை நாம் கருத இடமளிப்பதும் கூட.

‘எரியும் சமவெளி’ கதை புரட்சியின் போக்கில் மனிதர்கள் அடித்துச் செல்லப்படுவதைப் பற்றியது. மெக்ஸிகோவின் ஆயுதமேந்திய முதலாளித்துவப் புரட்சி மனிதர்களை மலை மீதிருந்து வீசியெறியப்பட்ட கற்களைப் போலாக்கியதையும் அவர்கள் நிரந்தரமான அச்சத்திலும் துயரத்திலும் வாழ விதிக்கப்பட்டவர்களாக மாறியதையும் நுட்பமாக விவரிக்கும் கதை.

‘ருல்ஃபோவின் கதைகளில் மிக முக்கியமானதொன்றாக விமர்சகர்களால் கருதப்படும் ‘ அவர்களிடம் என்னைக் கொல்ல வேண்டாமென்று சொல்!’ கதை, வெளிப்படுத்தும் உணரச்சிகளிலும் விவரிக்கப்படும் உத்தியிலும் எளிமையான ஒரு கதையாகவே எனக்குத் தோன்றுகிறது. தொகுப்பின் ஏனைய கதைகளில் நிகழும் கொலைகள்,மரணங்கள் போலவே இக்கதையின் மரணமும் இயல்பான ஒரு மரணமாயிருக்கிறது.

‘நாய்கள் குரைக்கவில்லை’ சிறப்பானதொரு கதை. தந்தைக்கும் மகனுக்குமான உறவினை நுட்பமாகச் சித்தரிக்கும் இக்கதை அழுத்தமானதொரு முடிவைக் கொண்டுள்ளது. ‘அனாக்ளீட்டோ மோரோனஸ்’ இத்தொகுப்பின் சிறப்பான கதைகளில் ஒன்று. அங்கதமிக்க இக்கதை புனிதம், புனிதர்கள் குறித்த மக்களது மனக்கட்டுமானம், ஏதுவான சந்தர்ப்ப நிலைகளின் மூலமாக மக்களது அறியாமை மற்றும் பக்தி போன்ற பலகீனங்கள் மீது இவைகள் கட்டமைக்கப்படுவதையும் சிறப்பாக விவரித்திருக்கும் கதை.

ருல்ஃபோவின் கதையுலகம் பெரிதும் நம்பிக்கையின்மை, துரோகம், துயரம் ஆகிய அகக் காரணிகளாலும் வறட்சி, வெம்மை, சண்டை, தப்பியோடுதல் ஆகிய புறக் காரணிகளாலும் கட்டப்பட்டது. தீர்க்கமான பார்வையும், பிரக்ஞைபூர்வமாக நுட்பமும், துல்லியமும் கொண்ட மொழியும் அவரது கதைகளை முதல் வகைமாதிரிக் (prototype) கதைகளாக்குகின்றன. இக்கதைகள் சொல்லும் மொழியினாலும் நுட்பத்தாலும் புதிய வகைமாதிரிகளாக தம்மை அறிவித்துக் கொண்டாலும் அழகியல் ரீதியாகவும் வெற்றி பெறுபவை. இக்கதைகளின் இந்த அழகியல் தன்மையே இவற்றை ஒருவர் மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுவதாக இருக்கக் கூடும்.தென்னமெரிக்க இலக்கியத்திலும் அதற்கு வெளியிலும் யுவான் ருல்ஃபோ என்ற புனைகதையாளர் பெற்றிருக்கும் இடம் ஏதோ தற்செயலானது அல்லது என்பதற்கு அவரது கதைகள் புனைகதையின் அனைத்துப் பரிமாணங்களிலும் தனித்துவமான கூறுகளைக் கொண்டு வாசிப்பின்பம் குறையாது விளங்குவதே சான்றாக இருக்க முடியும்.

ஏனைய லத்தீனமெரிக்க எழுத்தாளர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள ருல்ஃபோ தவறவில்லை. உதாரணமாக கோர்த்தஸாரும் மார்க்வெஸூம் மொழியினை நடனமாட வைத்து அது சுழன்றாடும் அழகை ரசித்தார்களென்றால் ருல்ஃபோ கறாரான எஜமானராக மொழியிடம் வேலை வாங்குகிறார். எப்போதும் மொழியின் இம்மி பிசகாத பரிபூரணம் அவரது தேவையாயிருக்கிறது. சற்று பிசகினால் intellectual labour என்ற முத்திரை விழுந்துவிடக்கூடிய தனது எழுத்து முறையை நிறைவான இலக்கியப் பிரதிகளுக்கானவொன்றாக அவரால் மாற்றிக் கொள்ள இயல்வதையும் நாம் இங்கு கருத்தில் கொண்டாக வேண்டும். தனது புனைவுகள் வழியாக அவர் யதார்த்தத்துக்கும் இயல்புக்கும் அப்பாற்பட்டவொன்றைக் கட்ட முனைவதில்லை என்பதாலும் சபிக்கப்பட்ட ஒரு நிலத்தின் அவலமிக்க மனிதர்களை அவர்களது வாழ்வின் வெம்மை குறையாமல் ஆடம்பரமில்லாத ஒரு மொழிக்குள் அடக்க முயன்றார் என்பதாலேயுமே அவரால் இது இயன்றிருக்கிறது.


இத்தொகுப்பை ஸ்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த ஜார்ஜ் டி. ஷேட் மற்றும் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் எஸ். பாலச்சந்திரன் ஆகியோரது விரிவான முன்னுரை மற்றும் பின்னுரைகள் யுவான் ருல்ஃபோவின் புனைவுலகுக்கான விவரமானதொரு வழிகாட்டுதலை வழங்கிவிடுவதனால் இத்தொகுப்புக்குள் வாசகன் தடையற்று நுழைவதும் கதைகளை சிரமமின்றி அணுகுவதும் ஏதுவாகின்றது. கவனமாக வடிவமைக்கப்பட்டு வெகு நுட்பமும் சிக்கனமுமான மொழியினால் இறுக்கமாக கட்டமைக்கப்பட்ட ருல்ஃபோவின் கதைகளுக்கான திறப்புக்களை இவை சாத்தியமாக்குகின்றன. இன்னொரு கோணத்தில் பார்க்கையில் விமர்சனப்பூர்வமாக இக்கதைகளை அணுக முயலும் ஒருவனது பார்வையில் மேலே சொன்ன விஷயங்கள் தமது தாக்கத்தை செலுத்துவனவாக அமைந்திருந்தாலும் அவற்றின் இன்றியமையாமையைக் குறைத்து மதிப்பிட முடியாது.

மொழிபெயர்ப்பில் ஒரு வரியை அல்லது ஒரு சொற்டொடரை எடுத்துக்கொண்டு தமது சீரிய மொழியறிவின் அளவுகோல்களால் அது பிழையானதென்று நிறுவி அம்முழு ஆக்கத்தையுமே ஒன்றுக்கும் உதவாதது என நிராகரிக்கும் மேதமை சான்ற மதியாளர் நிரம்பிய நம் சூழலில் மொழிபெயர்ப்புப் பணி புரிவோரின் நிலை பற்றிச் சொல்லத் தேவையில்லை. எதிர்மறையான இச்சூழலில் எவ்விதப் பலனையும் எதிர்பாராதவர்களாய் இயங்கிக் கொண்டிருக்கும் மொழிபெயர்ப்பாளர்களில் எஸ். பாலச்சந்திரன் அவர்களும் ஒருவர். தமிழுக்கு அரியதும் காத்திரமானதுமான பல படைப்புக்களை அவர் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். ‘எரியும் சமவெளி’ மொழிபெயர்ப்பில் சவால்தரும் ஆக்கம். இதனை அவர் சிறப்புற மொழிபெயர்த்திருக்கிறார். இதற்காக தமிழ் கூறும் நல்லுலகம் அவருக்குக் கடமைப்பட்டுள்ளது.

7-5-11 அன்று நாகர்கோவிலில் லஷ்மி மணிவண்ணன் ஏற்பாடு செய்த கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

Thursday, 28 July 2011

ஆகஸ்ட் 21, கோவை 'அருவி' சந்திப்பு


அருவி

நமது ஆகஸ்ட் மாத சந்திப்பில்…
தமிழின் மொழிபெயர்ப்பு தளத்தில்,
ஒரு மொழிபெயர்ப்பாளன் சந்திக்கும் சவால்கள்,
சிக்கல்கள் மற்றும் சென்றடைய வேண்டிய இலக்குகள்……
குறித்த ஒரு சிற்றுரையும் தொடர்ந்து பார்வையாளர்களுடனான
கலந்துரையாடலும் நடைபெறும்.

'தமிழில் மொழிபெயர்ப்பின் வழித்தடங்கள்'
வழங்குபவர்: திரு. அசதா

21 ஆகஸ்ட் 2011,காலை 10.00 மணி முதல்
கோயம்புத்தூர் நுகர் பொருள் வினியோகஸ்தர்கள் சங்கம்
”சித்ரமஹால் ”, முதல் மாடி 1A (பழைய கங்கா மருத்துவமைன அருகில்)
ஸ்வர்ணாம்பிகா லே- அவுட், ராம் நகர், கோவை- 9

தொடர்புக்கு
சீனு : 98432 94085,சூரி: 94421 01335
34, ராமசாமிநகர், கவுண்டம்பைளயம், கோவை -30.

மின்னஞ்சல் : aruvikovai@gmail.com

Wednesday, 11 May 2011

ஜுவான் கிமரிஸ் ரோஸா : முடிவற்ற பாதை.






நவீன பிரெஸிலியப் புனைகதையின் விவாதத்துக்கு அப்பாற்பட்ட முன்னோடி ஜுவான் கிமரிஸ் ரோஸா (1908-67). சிறு விவரக் குறிப்புகள் முதல் பெரும் தகவல்களின்பாற்பட்ட நாவல் வரை அடங்கிய ஏழு புனைகதைத் தொகுதிகளில்,  வரையறுக்கப்பட்ட இலக்கிய வெளிகளில் பயணித்து கலை வெளிப்பாட்டின் புதிய திசைகளைக் கண்டறிந்தவர். புனைகதைக்கான பிராந்திய மற்றும் பிரபஞ்சத்துவ அணுகுமுறைகளுக்கிடையேயான எல்லைகளை ஏற்க மறுத்த ரோஸா, பிரெஸிலிய இலக்கிய மொழியில் ஒப்பற்ற மாற்றத்தையும் அதன் மூலம் விமர்சனத்தின் ஓயாத அலைகளையும்  ஏற்படுத்தினார். பரீட்சார்த்தவாதம், யதார்த்த மீறல், உள்ளுணர்வு வாதம், பிரபஞ்ச பிராந்தியத்துவம், கருத்துமுதல்வாதம் எனப் பல சொல்லாடல்கள் இவரது ஒரு படைப்பை வகைப்படுத்த பயன்படுத்தப்பட்டன. பிரெஸிலின் உள்ளடங்கிய பகுதியிலமைந்த கடந்த காலத்தைச் சேர்ந்ததான, பரந்த, மர்மங்கள் நிறைந்த, மினாஸ் கெரெய்ஸின் 'செர்தாவோ' இவரது புனைவுலகு. ரோஸாவின், உள்ளடங்கிய முன்னேற்றமற்ற இந்நிலப்பகுதி நாடோடிகள், தொன்ம உருவங்கள் மற்றும் அபத்த சாகசக்காரர்களின் வாழிடமாக இருந்தது. sertaoவின் வறண்ட நிலங்கள் துப்பாக்கியேந்திய கொலைகாரர்களுக்கும் நாட்டுப்புற தத்துவவாதிகளுக்கும் இடையேயான பிரசித்திபெற்ற யுத்தங்களின் களமாயமைந்தன. மினாஸ் கெரெய்ஸின் உள்ளடங்கிய பிரதேசங்களின் பிரத்தியேகமான மொழி வேறுபாடுகளை அடித்தளமாகக் கொண்டமைந்த தனது தனித்துவமானதும் மிகக் கவித்துவமானதுமான புனைவு நடையின் உருவாக்கத்தில் பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்தார் ரோஸா. கவனமாக உருவாக்கப்பட்ட மொழியும் உண்மைகளின்பாற்பட்டதாக அமையாத கதைக்களன்களும் சமகால பிரெஸிலியப் புனைகதையாளர்களிடையே ஜுவான் கிமரிஸ் ரோஸாவுக்கு தனியானதொரு இடத்தை அளித்தன.


1946ல் தனது முதல் கதைத் தொகுதியான sagarana வெளிவந்தபோது அதுவரை பிரெஸிலில் பிரதானமாக இருந்துவந்த யாதர்த்த பிராந்திய எழுத்துக்களுக்கு சவால் விடுத்து அவற்றைக் கடந்தும் சென்றார். இத்தொகுப்பில் புதுவிதமானதொரு பாணியும் கதைகூறலில் வலுவானதொரு மறுஅமைப்பாக்கமும் இருந்ததை விமர்சகர்கள் கண்டனர்.தனது இரண்டாவது கதைத்தொகுதியான Corpo de Baile (Corps de Ballet) ஐ அவர் 1956ம் ஆண்டில்தான் வெளியிட்டார்.பொதுவான தலைப்பின் கீழமைந்த  ஏழு கதைகள் அவரது முதல் தொகுப்பின் மொழிநடை மற்றும் தனித்துவம் இவற்றின் இன்னும் மேம்பட்ட தன்மையைக் கொண்டிருந்தன. இதே ஆண்டில் அவரது முக்கியப் படைப்பான The Devil to Pay in the Backlands (Grande Sertao: Veredas) நாவல் வெளிவந்தது.லத்தீனமெரிக்க நாவல்களுள் மிக முக்கியமானவற்றில் ஒன்றாகக் கருதப்படும் இந்த புதுமொழியமைப்பு நாவல் பிரெஸிலிய இலக்கியத்தின் முதல் மீமெய்யியல் நாவலாகக் கருதப்படுகிறது. வரலாறு படைத்த இந்நாவலைப் போன்று பிரெஸிலிய இலக்கிய விமர்சகர்களால் பெரிதும் விவாதிக்கப்பட்ட நாவல் வேறில்லை.1962ல் The Third Bank of  the River and  Other Stories (Primeiras Estorias) யுடன் ரோஸா மீண்டும் சிறுகதைக்குத் திரும்பினார். அடுத்ததான Tutameia (Terceiras Estorias), Trifle (Third Stories)-1967 தொகுப்புகளில் கதைச் செறிவு பிரதானமாயிருந்தது. அவர் இறப்பதற்கு முன்பே வெளியீட்டுக்கு தயாரான ஆனால் அவர் மரணத்துக்குப் பின்பே வெளிவந்த தொகுப்பு These Stories (Estas Estorias)-1969. அவரது கடைசி வெளியீடு பத்திரிக்கைகளில் வெளியான ஆக்கங்கள், நாட்குறிப்புகள், பல்வேறுபட்ட குறிப்புகள், சிறு இலக்கியக் குறிப்புகள், கவிதைகள் இவற்றின் தொகுப்பாக அமைந்த Hail, word (Ave, Palavra)-1970.


Sagranaவை வாசித்தவர்கள் ரோஸாவுடைய மொழியின் புதுமையினாலும் வீச்சினாலும் வசீகரிக்கப்பட்டார்கள். Seratoவின் நாட்டுப்புறப் பேச்சின் தனித்துவமான மொழிக்கூறுகளை பிரெஸிலிய மரபுத் தொடர்களுடன் கலந்து அவர் கணக்கற்ற புதிய வார்த்தைகளை உருவாக்கியிருந்தார். இதில் இன்னும் ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால் கவிதைகளுக்குரிய மோனை நயம், உள்ளார்ந்த லயம் இவற்றை அவர் உரைநடையிலும் பயன்படுத்தியிருந்தமைதான். சில பகுதிகள் உரைநடையில் அமைந்த கவிதைகளாகவே உள்ளன. Woodland Witchery (Sao Marcos) கதையில் கதைசொல்லி மூங்கில் தடிகள் மீது எழுதப்பட்ட சில கவிதைகளைக் காண்கிறான். முன்பின் அறியாத அந்தக் கவிஞனுக்கு தனது பதிலாக பத்து அசிரிய மற்றும் பாபிலோனிய அரசர்களது பெயர்களை இன்னொரு தடியில் எழுதி வைக்கிறான். இப்பெயர்கள் ரோஸாவின் கதைசொல்லி சொல்வது போல தம்மளவில் லயமும் அழகும் கொண்ட கவிதைகளாகும்.

ரோஸாவின் Sagarana தொகுப்பின் கதைகள் பிரெஸிலின் இரண்டாம் தலைமுறை நவீனவாதிகளான (இந்த இரண்டாம் தலைமுறை நவீனத்துவம் 1928ல் தொடங்கியது) யதார்த்த, பிராந்திய நாவலாசிரியர்களிடமிருந்து அவரை தனித்துக் காட்டின. ஜோஸ் லின் தோ ரெகோ மற்றும் ஜோர்ஜ் அமதோ போன்றவர்கள் வடகிழக்குப் பிராந்தியத்துக்கேயுரிய மொழி, கலாச்சாரம் மற்றும் பிரச்சினைகளை ஆவணப்படுத்துதலின் வாயிலாக தங்கள் நாவல்களுக்கு பிரெஸிலியத்துவம் ஊட்ட முற்பட்டனர். சமூக-வரலாற்று கதாபாத்திரங்களை உருவாக்கும் முகமாக நாட்டுப்புற பேச்சு வழக்கைப் பயன்படுத்தினர் ஆயினும் தங்களுக்கேயுரியதான மொழிநடையை உருவாக்கத் தவறினர். அவர்களது படைப்புகள் மேம்போக்கான சமூக யாதார்த்தத்தை நேர்க்கோட்டு அமைப்பில் சித்தரித்தன. ரோஸாவோ பிராந்தியப் புனைவெழுத்தில் தருக்கம் மற்றும் அறிவுசார் சாய்வுகளை அறவே விடுத்து எண்ணவோட்டத்தினால் அமைவுறும் ஒரு கால ஒழுங்கைக் கடைபிடிக்கிறார்.பிராந்திய குணங்களைக் பிரதிபலிக்கும்முகமாய் மட்டுமன்றி ஒரு புதிய இலக்கியப் போக்கை உருவாக்கும் விதமாய் மொழியை அவர் விளையாட்டுத்தனமாய்க் கையாளுகிறார்.


The Devil to Pay in the Backlands நாவலின் கதாபாத்திரங்கள் அனைத்தும் ஒரேயொரு கதைசொல்லியின் மூலமாகவே நமக்கு அறியத்தரப்படுகின்றன. சார்புத்தன்மையும் நிச்சயமின்மையும் அக்கதாபாத்திரங்களின் சித்தரிப்பில் தெரிகின்றன. தனது ஆன்மீக ஆலோசகரின் அறிவுரைகள் நம்பத்தகுந்தனவாயுள்ளன ஆனால் போதுமானவையாக இல்லை என்கிறான் ரியோபால்டோ. தலைவர்களும் தொண்டர்களுமாய் கணக்கற்ற பேர் துப்பாக்கியேந்தித் திரிகிறார்கள், ஒரே நேரத்தில் அவர்கள் கொலைகாரக் கொள்ளையர்களாகவும் நியாயமான காரணத்துக்காகப் போராடும் நேர்மையான கதாநாயகர்களாகவும் தெரிகிறார்கள். தனது பரம வைரியான ஹெர்மோஜீன்ஸை தீவினையின் உருவம் எனத் தான் சொன்னதையே கேள்விக்குள்ளாக்குகிறான் ரியோபால்டோ. அவன் மூடுபனி என அழைக்கும் தனது நெருங்கிய சகாவான டயாடோரிமைப்பற்றி அதிகம் கவலைப்படுகிறான். அவனுடனான சாத்தியப்படாத காதல் ரியோபால்டோவைப் பல ஆண்டுகளுக்கு வாதைக்குள்ளாக்குகிறது. இரண்டு கொள்ளைக் கூட்டத்தாருக்கிடையே நடக்கும் சண்டையொன்றின் முடிவில் டயாடோரிம் ஒரு பெண் எனத் தெரியவருகிறது. டயாடோரிமை விமர்சகர்கள் பலவழிகளில் விளங்கிக்கொள்ள முற்படுகிறார்கள். ரியோபால்டோவின் காவல் சம்மனசாக, தீவினைக்கான கவர்ச்சியாக (ஏவாள்), பிளாட்டோவின் மர்மவாதமாக, பல வழிகளில்.தனது நாவலின் கட்டுமானத்தில் பல்வேறு மூலங்களிலிருந்து விஷயங்களை எடுத்துக்கொள்கிறார் ரோஸா;குறிப்பாக லுஸோ-பிரெஸிலிய கலாச்சாரம், பண்டைய மற்றும் நவீன அய்ரோப்பியத்  தத்துவம், கீழைத்தேய மதங்கள். ரியோபால்டோவின் சிந்தனை பேச்சு ஆகியன பலதரப்பட்ட விஷயங்களால் கட்டமைக்கப்பட்டவை.அவனது வருணனைகள் கிறித்தவக் கற்பனாவாதம், கிரேக்க கொள்கைவாதம், மீமெய்யியல் கதைகள், அறிவியல் மற்றும் இந்துமத சுயமறுப்பு ஆகியவற்றின்வழியே புரிந்துகொள்ளத் தக்கவை.


ஜுவான் கிமரிஸ் ரோஸா பிரெஸிலிய இலக்கியத்தில் கடவுளாகப் போற்றப்படுகிறார். ஆனால் சமகால லத்தீனமெரிக்க புனைவெழுத்துப் பெருக்கத்தில் அவர் முழுமையான அங்கீகாரம் பெறவில்லை. பிரெஸிலில் அவருக்கிருக்கும் மரியாதை லத்தீனமெரிக்கா முழுவதிலும் இருப்பதில்லை. வருந்தத்தக்க ஸ்பானிய-அமெரிக்க, பிரெஸிலிய கலாச்சாரப் பிரிவினைகளோடு ஓரளவுக்கு ரோஸாவின் வெகு ஆடம்பரமான இலக்கிய நடையும் இதற்கு காரணமாயிருக்கிறது.The Devil to Pay in the Backlands நாவலும் The Third Bank of the River and Other Stories தொகுப்பும் மட்டுமே ஸ்பானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. Corpo de Baile மற்றும் Tutameia ஆகியன இன்னும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. The Devil to Pay in the Backlands நாவல் ஒரு முடிவு இன்றி நிறைவடைகிறது. Don Quixote, Ulysses போன்ற பெரும் பிரபஞ்சத்துவப் படைப்புகளோடு வைக்கத் தகுந்த நாவல் இது.ரோஸா சொல்வது போல் ‘'செர்தாவோவில் கோயத், தாஸ்தாயெவ்ஸ்கி, ஃப்ளபேரது மொழி பேசப்படுகிறது,  ரியோபால்டோ சொல்வதுபோல் ‘'செர்தாவோ'’ எல்லா இடத்திலும் இருக்கிறது.


சார்லஸ் ஏ. பெரோன்

தமிழில்:அசதா

ஜுவாங் கிமரிஸ் ரோஸாவின் சிறுகதை:



நன்றி: 'கல்குதிரை' பனிக்காலங்களின் இதழ். சிரிர்: கோணங்கி.

Friday, 21 May 2010

கவிஞன், மொழிபெயர்ப்பாளன் மற்றும் சிறுபத்திரிகை ஆசிரியன் - சி. மணி அவர்களது மொழிபெயர்ப்புகள் குறித்து .




கவிஞன் காதலன் மற்றும் பைத்தியக்காரன் என்ற புகழ்பெற்ற மேற்கோளோடு ஒப்புநோக்கத் தகுந்தது இந்தக் கவிஞன் மொழிப்பெயர்ப்பாளன் மற்றும் சிறு பத்திரிகை ஆசிரியன் என்ற தொடர். கவிஞனாக இருப்பது பைத்திய நிலையின் ஆரம்பம். மேகத்தில் சஞ்சரிக்கும் நினைவுகள், மொழியுடனான ஓயாத சல்லாபம் மொழிபெயர்ப்பாளனாக இருப்பது சற்றே முற்றிய நிலை. ஒரே சமயத்தில் மூல மொழி இலக்கு மொழி எனும் கண்ணுக்குத் தெரியாத தாட்சண்யமற்ற இரு கிங்கரர்களுடன் சமருக்கு நிற்றல். பைத்தியத்தின் உச்ச நிலை சிறுபத்திரிகை ஆசிரியனாக இருப்பது. இது பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. ஆனால் சிறுபத்திரிக்கை ஆசிரியனாக இருப்பதில் ஒரு அனுகூலம் உண்டு. இரண்டு அல்லது மூன்றாவது இதழிலேயே பைத்தியம் தெளியத் தொடங்கிவிடும் என்பதுதான் அது. ஆனால் முதலிரண்டு நிலைகளைத் தொட்டவர்களை தன் வாதைகளை அனுபவிக்காமல் பைத்தியத் தன்மை ஒரு போதும் விடுவதில்லை.
அங்கதம் விலக்கிப் பார்க்க இங்கு பைத்தியத் தன்மை என்பதனை தீவிர ஈடுபாடு என நாம் கொள்ளலாம். சமீபத்தில் நம்மை விட்டு பிரிந்த சி. மணி அவர்கள் ஒரு கவிஞராகவும், மொழி பெயர்ப்பாளராகவும் சிறுபத்திரிக்கை ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். இம்மூன்று நிலைகளிலும் தீவிரமாக இயங்கியமைக்கு அவர் விட்டுச் சென்றிருக்கும் ஆக்கங்கள் சாட்சி. ஒரு மொழிபெயர்ப்பாளன் என்ற வகையில் அவரது மொழிபெயர்ப்புகள் குறித்து மட்டும் எனது கருத்துக்களை இங்கு முன் வைக்க விரும்புகிறேன்.
பார்த்தேன் வெள்ளைப் பூவேலை
வார்த்த சோளி முதுகை
தெரிந்தது முகமே
சி. மணி என்றதும் என் நினைவுக்கு வருவது அவரது இந்தக் கவிதை வரிகள்தாம் கவிதையில் இருண்மை என்ற தலைப்பில் ஆறு வருடங்களுக்கு முன்பு நான் வாசித்த ஒரு கட்டுரையில் இவ்வரிகளைப் பயன்படுத்தியிருந்தேன். பிறகுதான் அவரது மொழிபெயர்ப்புகளை வாசிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. சி. மணி அவர்களது மொழிப்பெயர்ப்புகளைப் பற்றிப் பேசும் முன் பொதுவாக மொழிப் பெயர்ப்புகள் பற்றி சில வி யங்கள்.
குறை சொல்வோர் ஏராளம், ஆதரிப்போர் யாருமில்லை, சரியாகச் செய்தவற்றை நினைவு கூறுவோர் ஒருவருமில்லை. ஆனால் தவறுகளை மறக்கவோ யாரும் தயாரில்லை என்கிறது மொழிபெயர்ப்பாளர்கள் பற்றிய ஒரு பழமொழி. மொழிபெயர்ப்பு இரண்டாந்தர படைப்புச் செயல்பாடாகக் கருதப்படும் தமிழ்ச் சூழலில் இது மிகப் பொருத்தப்பாடுடைய ஒரு பழமொழி. மொழி பெயர்ப்பு மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் பற்றி இங்கு வெகு அரிதாகவே பேசப்படுகின்றது. அப்பேச்சுக்களும் குறைகளைப் பட்டியலிடவே அதிகம் பயன்படுத்தப் படுகின்றன. சிறந்த மொழிபெயர்ப்புகளுக்கும், மொழி பெயர்ப்பாளர்களுக்கும் உரிய அங்கீகாரம் இங்கு கிடைப்பதில்லை.
இது போன்ற எதிர்மறையான சூழலில் இருந்தபடி தொடர்ந்து இயங்க பெரும் அர்ப்பணிப்பு உணர்வும் பலன் எதிர்பாரா நோக்கும் தேவைப்படுகிறது. அவ்வாறு இயங்கியவர் சி. மணி. சி. மணியினது மொழி பெயர்ப்புத் தேர்வுகள் தனித்துவமுடையவை. தாவோ தே ஜிங், முன்னிலை ஒருமை (உதய நாராயண சிங்கின் மைதிலி மொழிக் கவிதைகள்) மற்றம் ஃப்ராய்ட், பெளத்தம், புத்தம் (மிகச் சுருக்கமான அறிமுகம் நூல் வரிசை) ஆகியன அவரது மொழிப்பெயர்ப்புகளில் குறிப்பிடத் தகுந்தன. எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போது அவரது வாழ்நாளுக்கு அவர் மிகக் குறைவான மொழிப் பெயர்ப்புகளையே செய்துள்ளார். ஆனால் அவர் மொழி பெயர்த்த படைப்புகளின் முக்கியத்துவம், மூலத்தில் அவற்றின் கடினத் தன்மை, மொழிப்பெயர்ப்பின் தரம் மற்றும் வாசிப்புத் தன்மை ஆகியவற்றை வைத்துப் பார்க்கையில் இந்த எண்ணிக்கைக் குறைவு ஒரு பொருட்டில்லை என்பது தெரிய வரும்.
2002ம் ஆண்டு க்ரியா வெளியீடாக வந்த தாவோ தே ஜிங் பைபிளுக்கு அடுத்து உலகில் அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட நூல் வாசிக்க எளிதாக இருக்கும் இந்நூல் மொழிபெயர்க்க அவ்வளவு எளிதானது அல்ல. தாவோ பற்றிய கிட்டத்தட்ட பதினைந்து நூல்களை வாசித்து ஒப்பிட்டு பாட பேதங்கள் பார்த்து இறுக்கமான நடையில் சிக்கலான முடிச்சுகள் கொண்டமைந்த இந்த நூலைத் தமிழில் கொண்டுவர எவ்வளவு பொறுமையும் அர்ப்பணிப்பு உணர்வும் தேவைப்பட்டிருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து கொள்ளலாம். நூலின் பின் - உள்ளட்டைக் குறிப்பு சொல்வது போல் உலகின் பல்வேறு பண்பாடுகளில் காணும் மறைஞானச் சிந்தனைகளைக் கற்றறிந்தவர் சி.மணி என்பதும் திறம்பட்ட இம் மொழிப்பெயர்ப்புக்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது.
நன்றாக மூடத் தெரிந்தவனுக்குச்
சட்டம், தாழ்ப்பாள் எதுவும் தேவைப்படுவதில்லை
என்றாலும் அவன் மூடிய பிறகு
அந்தக் கதவைத் திறப்பது சாத்தியமில்லை


தாவோ தே ஜிங் கில் காணும் வரிகள் இவை.தாவோ தே ஜிங்கை வாசகன் தடையின்றி வாசிக்க உதவுவதோடு தன் கடமை முடிந்துவிட்டதாக சி. மணி நினைக்கவில்லை. தாவோ தே ஜிங் என்பதை சரியாக உச்சரிக்கும் விதத்தையும் அவன் தெரிந்திருக்க வேண்டும் என்ற கரிசனம் அவருக்கு. நூலின் பின்னுரையில் அவர் எழுதுகிறார். தாவோ என்பதில் வரும் தா வை தாமோதரன் என்ற பெயரில் வரும் தா மாதிரி உச்சரிக்க வேண்டும். தே என்பதை தேசம் என்பதில் வருகிற தே மாதிரி ஒலிக்க வேண்டும்.
அடுத்து அடையாளம் வெளியிட்ட மிகச் சுருக்கமான அறிமுகம் நூல் வரிசையில் சி. மணி அவர்கள் மொழிபெயர்த்த மூன்று நூல்கள் ஃப்ராய்ட், பெளத்தம், மற்றும் புத்தர். ஃப்ராய்ட் மொழிபெயர்ப்பு என்றதுமே கட்டற்றுப் பெருகி வரும் உளவியல் கலைச்சொற்கள்தான் என் நினைவுக்கு வந்தன. துறைசார் அறிவின் பாலமைந்த மொழிப் பெயர்ப்புகள் என்றாலே இந்தக் கலைச்சொற்கள் ஏற்படுத்தும் மலைப்பும் சலிப்பும் தவிர்க்க இயலாதவை. இதன் காரணமாகவே இம்மாதிரி நூல்கள் பக்கம் போக மொழிபெயர்ப்பாளர்கள் யோசிப்பர். இருநூற்று நாற்பத்தெட்டு பக்கங்கள் கொண்ட ஃப்ராய்ட் நூலில் நூற்று ஐந்து அடிக்குறிப்புகள் காணப்படுவதன் யதார்த்தத்தை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
மறுமலர்ச்சிக் கால வரலாற்றாசிரியரான அந்தோணி கிராஃப்டன் என்பவர் எழுதிய 'அடிக்குறிப்புகள், ஓர் ஆர்வமூட்டும் வரலாறு' என்ற நூலில் சாமானிய வாசகனை வெருட்ட, மிகவும் கற்றறிந்த படைப்பாசிரியன் மேற்கொள்ளும் தந்திரம்தான் அடிக்குறிப்புகள் என்ற கருத்து தொனிக்கும். இந்நூலின் பிரெஞ்சு மொழிபெயர்ப்புக்கான தலைப்பே 'மேதமை: துயரமிக்க வரலாறு' என்பதாகும். இந்நூலைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் நூலின் மூன்றில் ஒரு பகுதி அடிக்குறிப்புகள். ஆனால் மொழிபெயர்ப்பில் அடிக்குறிப்புகளின் இடம் இன்றியமையாதது, அதுவும் சிக்கலான உளவியல் போன்ற துறைசார்ந்த நூல்களை மொழிபெயர்க்கும்போது ஏராளமான அடிக்குறிப்புகள் தருவது வாசிப்பில் இடையூறு உண்டாக்கிவிடுமோ, நூலின் சுவாரஸ்யத்தைக் குறைத்துவிடுமோ போன்ற கவலைகளைத் தள்ளிவிட்டு சொல்ல வந்ததை குறையின்றி வாசகனுக்குச் சொல்ல வேண்டும் என்ற உணர்வுடன் செயல்படுவதே நேர்மையான மொழி பெயர்ப்பாளனுக்குரிய பண்பாகும். அவ்வகையில் சி. மணி அவர்களின் ஃப்ராய்ட் மொழி பெயர்ப்பு நேர்மையான, சமரசம் செய்துகொள்ளாத ஒரு மொழிபெயர்ப்பு என்றே சொல்லவேண்டும். பெளத்தம், புத்தர் ஆகியனவும் மிகச் சிறப்புற சமரசமற்று மொழி பெயர்க்கப்பட்ட நூல்களே.
ஆழ்ந்த மொழியறிவு கொண்ட மொழி பெயர்ப்பாளன் தனது மொழியறிவு மற்றும் துறையறிவு சார்ந்து கலைச்சொல்லாக்கங்களை மாற்றியமைப்பது மட்டுமல்லாமல் தானே அவற்றை உருவாக்கவும் தலைப்படுகிறான். தமிழ்க் கலைச்சொற்களில் பலவற்றைப் புழக்கத்திலிருக்கும் வடிவத்திலேயே பயன்படுத்தினாலும், சில இடங்களில் மாறுபடவும் செய்கிறார் சி. மணி. உதாரணமாக ஆழ்மனப் படிமம் என்பதனை தொல்மனப்படிமம் என்றும் ஓரினப் புணர்ச்சி ஓரினப் பால்மை ஆர்வம் என்றும் குறிப்பிடுவது மற்றும் சோர்வச்சம் என்ற புதிய கலைச்சொல்லாக்கம் தருவது.
மிகவும் சிக்கலானதும் மொழிபெயர்க்கச் சவால் விடக்கூடியதுமான படைப்புகளையே சி. மணி அவர்கள் மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுத்துள்ளார். அல்லது மொழி பெயர்க்கக் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார். தாவோ தே ஜிங், ஃப்ராய்ட், பெளத்தம், மற்றும் புத்தர் போன்ற நூல்கள் மூலமொழி மற்றும் இலக்கு மொழியில் பெற்றிருக்கும் அறிவைக் கொண்டு மட்டுமே மொழி பெயர்க்க இயலாதவை. மேற்குறிப்பிட்ட நூல்கள் அவை இயங்கும் தத்துவம், சமயம் மற்றும் உளவியல் சார்ந்த தளங்களில் ஆழமான புரிதலை வேண்டி நிற்பவை. அத்துடன் பொறுமை, விடா முயற்சி, அர்ப்பணிப்பு உணர்வு இருந்தாலொழிய இவற்றை சிறப்புற மொழி பெயர்ப்பது இயலாத காரியம். மிகக் குறைவான எண்ணிக்கையில் மொழிபெயர்ப்புகள் செய்திருந்தாலும், காலம் உள்ளவரை பேசப்படுவதன் ஆக்கங்களை விட்டுச் சென்றிருக்கிறார் சி. மணி. இளம் மொழி பெயர்ப்பாளர்கள் அவரின் மொழி பெயர்ப்புகளிலிருந்து கற்றுக் கொள்ளவேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. சி. மணி அவர்களின் மறைவில் ஒரு கவிஞர், சிறுபத்திரிகை ஆசிரியரை தமிழிலக்கியம் இழந்திருப்பதை விடவும் ஒரு சிறந்த மொழி பெயர்ப்பாளரை அதிகம் இழந்திருக்கிறது. சி. மணி அவர்கள் மொழி பெயர்த்த சீன ஜென் கவிதையுடன் முடிக்கிறேன்.
வரும்போது போகும்போது விட்டுச்
செல்வதில்லை காட்டு நீர்ப்பறவை
ஒரு சுவடு
தேவையும் இல்லை அதற்கு
ஒரு வழிகாட்டி.
நன்றி: புது எழுத்து மே 2010. ஆசிரியர்: மனோன்மணி