Thursday, 19 November 2009

இலங்கை: போருக்குப் பின்னும் தொடரும் தமிழருக்கு எதிரான அடக்குமுறைகள்.







பிரையன் செனவிராத்னே.





இலங்கை அரசு  சொல்கிறது, வடகிழக்கில் தமிழ்ச் சிறுபான்மையினருக்காக தனி ஈழம் கோரிப் போராடி வந்த  தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான போரில் கிடைத்த ராணுவ வெற்றிக்குப் பின் தமிழ் பயங்கரவாதம் நசுக்கப்பட்டுவிட்டது, இனி இலங்கைக்கு பிரகாசமான எதிர்காலம்தான். உண்மையில் இலங்கை அரசின் பிரச்சினைகள் மோசமாகி வருகின்றன. முன்னெப்போதையும் விட,அரசின் குற்றங்களுக்கெதிரான சர்வதேச நடவடிக்கைகள் இப்போது விரைவாக தேவைப்படுகின்றன.



இந்த ஆண்டு இலங்கை அரசின் தமிழர்கள் மீதான இனப்படுகொலைப் போரில் 30,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.சர்வதேசப் பார்வையாளர்களை இலங்கை அரசு வெளியேற்றியபின் இது நிகழ்ந்திருக்கிறது. ஐ.நா. சபையின் இனப் படுகொலை எனும் குற்றத்தை தடுத்தல் மற்றும் தண்டித்தல் என்பதன் மீதான கூட்டமைப்பு இனப் படுகொலை என்பதை ஒரு தேசிய அல்லது இன அல்லது மதக் குழுவினரை பகுதியாகவோ அல்லது முற்றாகவோ அழித்தொழிக்க முயலும் எண்ணத்துடன் செயல்படுவது என வரையறை செய்துள்ளது.வடக்குப் பகுதியில், அடிப்படையில் வதைமுகாம்களாக அமைக்கப்பட்ட முகாம்களில் மூன்று லட்சம் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.வன்னிப் பகுதியில் நான்கு பெரிய மாநிலங்களை உள்ளடக்கி பத்தாண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகளால் நிர்வகிக்கப்பட்டு சிறப்புறச் செயல்பட்டு வந்த ஒரு அரசாங்கம் ஒழிக்கப்பட்டுவிட்டது.



இலங்கையில் மக்களாட்சி விலக்கப்பட்டு ஒரு அரசியல்-ராணுவ சர்வாதிகார ஆட்சி நிறுவப்பட்டுள்ளது.வேறெந்த நாட்டையும் விட சீனா ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இலங்கைக்கு உதவியது. இதற்கு பிரதியுபகாரமாக சீனா பெரிய அளவிலான கடற்படைத் தளத்தை தன் நாட்டில் அமைத்துக்கொள்ள இலங்கை உதவும். மத்தியக் கிழக்கிலிருந்து சீனா எண்ணெய் பெறவும் சீனாவில தயாராகும் பொருட்கள் பாதுகாப்புடன் மேற்கு நாடுகளுக்கு பயணப்படவும்

இது அவசியமானது. நிலக்கரியினால் இயங்கும் ஒரு மின் உற்பத்தி நிலையத்தை இலங்கையின் வடமேற்கில் சீனா அமைத்துள்ளது. அப்பகுதியில் வாழ்ந்துவந்த எண்பது மீனவக் குடும்பங்கள் வெளியேற்றப் பட்டுள்ளன.அரசு சொன்ன காரணம் - குடிசைகளில் வசித்துவந்ததால் அவர்கள் சட்டவிரோதக் குடியேறிகள்.சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை இலகு கடனாக இலங்கைக்கு வழங்கியுள்ளது.





தமிழர்கள் படுகொலை.



தீவிர தமிழர் எதிர்ப்பு சக்திகளின் ஆதரவுடன், மஹிந்த ராஜபக்க்ஷே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 2005 நவம்பர் தேர்தலுக்குப் பின் தொடங்கிய தமிழர்களுக்கெதிரான முழு அளவிலான போர் இந்த மே மாதம் விடுதலைப் புலிகளின் சரணடைதலுடன் முடிவுக்கு வந்தது. இலங்கை ஒரு சிங்கள-பௌத்த நாடு என்பது ராஜபக்க்ஷேவின் நம்பிக்கை.அதிகமும் பௌத்தர்களான சிங்களவர்கள் இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர். 1948 ல் சுதந்திரமடைந்ததிலிருந்து இலங்கையை தங்கள் வசம் வைத்திருப்பவர்கள்.தமிழர்கள் மீதான இப்போர் 2006 ஜனவரியில் தொடங்கியது, 2008 ஜூனில் தீவிரமடைந்து இவ்வாண்டு ஜனவரியில் உச்சமடைந்தது. மே 17ம் தேதியன்று மட்டும் 10,000ம் தமிழர்கள்,சொல்லப் போனால் அதனினும் கூடுதலாக ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.சாட்சிகளின்றி இனப்படுகொலை நிகழ்த்தப்பட ஏதுவாக கடந்த செப்டம்பரிலேயே ஐ.நா முகைமைகள் உள்ளிட்ட அனைத்து சர்வதேச உதவி அமைப்புகளும் போர்ப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டன.



மே 18ம் தேதி இலங்கை அரசு வெற்றியை அறிவித்தது. இதன் பின்னரும் சர்வதேசப் பார்வையாளர்களையோ மனித உரிமை அமைப்புகளையோ போர்ப்பகுதிக்குள் இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. துப்புரவுப்பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அது சொன்னது. நடைபெற்ற படுகொலைகளின் சாட்சியங்களைத்தான் அது அழித்துக் கொண்டிருக்கிறது.ஆயிரக் கணக்கான, ஆயுதமேந்தாப் பொதுமக்கள் குண்டு வீசியும் எறிகணை வீசியும் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் மத்தியில் கலந்திருந்த விடுதலைப் புலிகளைக் குறி வைத்தே தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக அரசு சொன்னது. அரசின் கருத்து உண்மையோ பொய்யோ, எப்படியிருப்பினும் இலங்கை அரசு தான் கையொப்பமிட்டு ஏற்றுக் கொண்ட ஜெனீவா ஒப்பந்தத்திற்கான 1977ம் ஆண்டு கூடுதல் நெறிமுறைகளின்படி அதன் மேற்சொன்ன செயல்பாடு ஒரு மீறலாகும்.பொதுமக்கள் கூட்டத்தில் பொதுமக்கள் அல்லாத சிலர் கலந்திருந்தாலும் அது அவர்களைப் பொதுமக்கள் இல்லையென ஆக்கிவிடாது, என்பது அந்நெறிமுறைகளின் 50வது பிரிவு. மருத்துவமனைகள் குண்டுவீசித் தாக்கப்பட்டன. எந்ந நிலையிலும், ஓரிடத்தில் நிலைத்த அமைப்பாகவோ, நடமாடும் அமைப்பாகவோ இயங்கும் மருத்துவ அமைப்புகள் மீது தாக்குதல்கள் நடத்தக் கூடாது என்ற 1 மற்றும் 4வது ஜெனீவா ஒப்பந்தகளின்படி இதுவும் மீறலாகும்.

ராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். சர்வதேச சட்டங்களின்படி மிகக் கடுமையான குற்றம் இது.போர்ப் பகுதியில் மக்களுக்கு உணவும் மருந்துகளும் மறுக்கப்பட்ட வகையில் உணவும்கூட ஓர் போர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.ஓர் ஆக்கிரமிக்கும் படை, தான் ஆக்கிரமிக்கும் பகுதியிலுள்ள மக்களுக்குப் போதுமான உணவும் மருந்துகளும் வழங்கக் கடமைப்பட்டிருக்கிறது.ஜெனீவா ஒப்பந்தத்தின் 55 மற்றும் 56வது பிரிவு இவ்வாறு சொல்கிறது.





வதை முகாம்கள்



வடக்கில் சுமார் இரண்டு லட்சத்து எழுபத்தொண்பதாயிரம் தமிழர்கள் கம்பி வேலியிட்ட 40 நல முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.உறவினர்கள் உள்ளிட்ட வெளியாட்கள் யாருக்கும் சென்று பார்க்கும் அனுமதியில்லை.முகமூடியணிந்தவர்களால் (விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற குழுக்களைச் சேர்ந்தவர்கள்) விடுதலைப் புலிகள் என அடையாளங்காணப்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.விடுதலைப் புலிகளென சந்தேகிக்கப்பட்டவர்கள், கண்காணிப்பின் கீழ் விசாரணைக்குட்படுத்தபடவேண்டும் என்ற சர்வதேச கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.



தமிழ்ச் சிறுமியரும் பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். கர்ப்பிணிகளுக்குக் கருச்சிதைவும் பெண்கள் பலருக்குக் கருப்பை நீக்கமும் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. நடுநிலைப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் இத்தகைய தகவல்களை உறுதி செய்யவோ மறுக்கவோ வழியில்லாமலிருக்கிறது.இம் முகாம்கள் ஆறு மாதங்களுக்கு மேல் தேவைப்படாது என்கிறது அரசு, ஆனால் இதேபோன்று வடக்கில் ஒரு வருடத்துக்கு முன் அமைக்கப்பட்ட முகாம்கள் இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.வடக்கில் இருக்கும் முகாம்கள் இன்னமும் பல ஆண்டுகளுக்கு இயங்கிக் கொண்டிருக்கும் என்றே தெரிகிறது.



இலங்கையின் தலைமை நீதிபதி சரத் சில்வா சொல்வது போல் மக்களை இவ்வகையில் முகாம்களில் அடைத்து வைத்திருப்பது சர்வதேசச் சட்டங்களை மட்டுமல்ல இலங்கைச் சட்டங்களையும் மீறிய செயலாகும்.கிழக்கிலிருக்கும் தமிழர்களில் அனேகம்பேர் இப்போது அகதிகள். தூர வடக்கிலிருக்கும் யாழ் தீபகற்பம் கிட்டத்தட்ட ஒரு போலீஸ் அரசாங்கமாக செயல்பட்டு வருகிறது.



தமிழர் அரசாங்கம் அழிப்பு



விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்த அரசாங்கம் முற்றாக அழிக்கப்பட்டிருக்கிறது.இயங்கிவரும் அமைப்புகளை கேள்விமுறையற்று அழிப்பதன்பின் செயலாற்றும் மனநிலை தமிழரால் நிர்மாணிக்கப்பட்ட எதுவும் நிர்மூலமாக்கப்படவேண்டும் என்பதாகும். இனப்பிரச்சினைக்கான நீண்ட நாள் தீர்வுகள் உருவாக்கப்படும்போது இம்மனநிலை கணக்கில் கொள்ளப்படவேண்டும்.இலங்கையின் சர்வாதிகார அரசு மஹிந்த ராஜபக்க்ஷே,அவருடைய மூன்று சகோதரர்கள் மற்றும் எண்ணற்ற உறவினர்களால் நடத்தப்படுவது. கருணையற்ற இலங்கை ராணுவம் தீவிர தமிழர் எதிர்ப்புப் போக்குக் கொண்ட ஜெனரல் சரத் ஃபொன்சேகாவின் தலைமையில் இயங்குவது.எதிர்க்கட்சி எம்.பிக்கள் விலைகொடுத்து வாங்கப்பட்டுள்ளனர். தமிழ் எம்.பிக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.ஊடகங்கள் மௌனமாக்கப்பட்டுள்ளன. தேசங் கடந்த செய்தியாளர்கள் (Reporters Without Borders) என்ற அமைப்பு கருத்து சுதந்திரம் அனுமதிக்கப்படும் அளவை வைத்து அமைத்த 173 நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 165வது இடம்.என்ன நடக்கிறது என கேள்வி எழுப்புவோர்கூட துரோகிகளாக, தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுவதும் அவ்வகையிலே அவர்கள் நடத்தப்படுவதும் நிகழ்கிறது.



எல்லா இடங்களிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது. உலகிலேயே அதி ஊழல்மிக்க காவல்துறை அமைப்புகளில் இலங்கையுடையதும் ஒன்று. ஆயுதமேந்திய குண்டர்களையும் கிரிமினல்களையும் பயன்படுத்திக் கொள்வது அரசாங்கத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்று.இன்னொரு தேர்தல் தேவையில்லை என்பதே தற்போது நிலவும் கருத்து.அப்படியே இன்னொன்று நடத்தப்பட்டாலும், வாக்காளர்களை அச்சுறுத்துதல் என்ற வகையில், அதன் முடிவு முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட ஒன்றுதான்.



செய்யவேண்டியது என்ன?



நீதிவேண்டிய தமிழர் போராட்டத்துக்கு உதவக்கூடியதான நடவடிக்கைகள் தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கெதிரான போராட்டத்தில் கைக்கொள்ளப்பட்டவை போன்றவைதாம்.மனித உரிமை மீறல்களுக்கெதிரான சர்வதேச எதிர்ப்புகளை லட்சியம் செய்யாத இந்த அரசாங்கத்துக்கு அதன் தவறுகளைப் புரிய வைக்க பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படவேண்டியது அவசியம்.தென்னாப்பிரிக்காவில் நடந்தது போல், உலகெங்கிலுமுள்ள தொழிலாளர் அமைப்புகள் இலங்கையிலிருந்து வரும் மற்றும் இலங்கைக்குச் செல்லும் சரக்குகளைக் கையாள்வதை நிறுத்தவேண்டும். குறிப்பாக இலங்கைக்கு சரக்குகள் அனுப்பும், பிற சேவைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களில் இது நடக்கவேண்டும். சுற்றுலாத் துறையும் முடக்கப்படவேண்டும்.



இலங்கை தனிமைப் படுத்தப்படவேண்டும். முகாம்களைச் சுற்றியிருக்கும் கூர்முனைக் கம்பி வேலிகள் நீக்கப்பட்டு தமிழர்கள் தம் வீடுகளுக்குச் செல்லும்வரை, அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்வரை, ஒரு சர்வதேச கூர்முனைக் கம்பி வேலி இலங்கையைச் சுற்றி அமைக்கப்படவேண்டும்.தென்னாப்பிரிக்காவில் செய்தது போல், இத் தனிமைப்படுத்தலில் கிரிக்கெட்டையும் சேர்க்க வேண்டும்.மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்படும்வரை இலங்கை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கப்படவேண்டும்.மனித உரிமைக் குற்றமிழைத்தவர்கள் மீது சர்வதேச நீதிமன்றம் மற்றும் சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் இவற்றில் வழக்குகள் தொடரப்படவேண்டும்.இக்கொடூர அரசின் தலைவர்கள், அரசியல்வாதிகள் இன்னபிறருக்கு எதிராக சர்வதேச அளவில் எதிர்ப்புகள் பதிவு செய்யப்படவேண்டும். அவர்கள் செல்லுமிடமெல்லாம் இதை உணரவேண்டும்.





இலங்கை அரசின் பொய்ச்செய்திப் பரப்புதல், செய்திகளைத் திரித்தல் இவற்றை எதிர்கொள்ளும்வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். மறைக்கப்பட்ட மற்றும் தணிக்கைக்குட்படுத்தப்பட்டவையின் பின்னிருப்பவற்றை உலகம் அறியச் செய்யவேண்டும். இச்செயல்பாட்டினொரு பகுதியாக நான் DVDக்களை தயாரித்திருக்கிறேன். உலகெங்கிலுமுள்ள மக்கள் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களைத் திரட்டி, இலங்கையில் நிலவும் மனம் பதைக்கச் செய்யும் சூழல் குறித்து தங்களது அரசு என்ன செய்கிறது எனக் கேட்கவேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்கள் மட்டும் இதைச் செய்வது போதாது.தமிழர் அல்லாதோரும் இதில் ஈடுபடவேண்டும்.



தமிழர் பிரச்சினையைத் தீர்க்க, பெரும்பான்மையாய்  தென்னிலங்கையில் வசிக்கும் சிங்களவர்களது உதவியும் கோரப்படவேண்டும். இன்று இந்த அரசாங்கத்தின் அடக்குமுறையை தமிழர்கள் அனுபவிக்கிறார்கள்.நாளை அது சிங்களவர்களாகவும்-குறிப்பாக ஏழைச் சிங்களவர்களாகவும் இருக்கலாம்.முப்பது சதம் பணவீக்கம் நிலவ, ஆசியாவிலேயே மிக அதிகமான வீதம் இது, வறிய சிங்களவர்கள் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இதற்கெல்லாம் காரணம் பரவலான ஊழல், மிக மோசமான ஆட்சி இவைகளே தவிர தமிழ் தீவிரவாதம் அல்ல என்பது அவர்களுக்குப் புரியவைக்கப்படவேண்டும்.தமிழ் மக்களுக்கு எதிராயிருப்பது போலவே சிங்களத் தொழிலாளர்களுக்கும் எதிராயிருக்கிறது ராஜபக்க்ஷே அரசு. உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துகொண்டிருக்க, பேரளவில் பணியாளர்களை வேலையின்றி வைக்க உதவும் வகையிலும் தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்பட ஏதுவாயிருக்கும் வகையிலும் தேசிய தொழிலாளர் ஆலோசனைக் கவுன்சிலை மறு அமைப்பாக்கம் செய்திருக்கிறது.



இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 96,000 பேர் தொழிலகப் பிரிவிலும், 70,000 பேர் கட்டுமானப் பிரிவிலும் வேலையிழந்துள்ளனர்.மத்திய வங்கியின் ஒரு அறிக்கையின்படி ஏற்றுமதி வருமானம் 28.2% அதாவது 438 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. ரப்பர் மற்றும் ஜவுளி ஏற்றுமதிகளும் முறையே 36.1%ம் 10.1%ம் வீழ்ச்சியடைந்துள்ளன.தொழிளாலர் வேலை நீக்கச் சட்டத்தின்படி பணியாளர்களை விரைவாக வேலையின்றி வைக்கவும், பணி நேரத்தைக் குறைக்கவும் வகைசெய்யப்பட்டுள்ளது.சிங்களத் தொழிலாளர்களும் ஏழை மக்களும் உடனடியாகக் களத்தில் இறங்காவிடில், தற்போது தமிழர்கள் மீது திருப்பப்பட்டிருக்கும் துப்பாக்கிகள், எதிர்ப்புக் குரல்களை ஒடுக்கத் தயங்காத ஒரு அரசால் அவர்கள் மீதும் திருப்பப்படும் தென்னிலங்கையிலிருக்கும் சோஷலிசக் கட்சிகளால் மட்டுமே ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும். உலக நாடுகள் இக்கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கவேண்டும். நடவடிக்கைகள் எடுக்காதபட்சத்தில் தமிழ் வடக்குப் பகுதி இன்னொரு காஸாவாகிவிடும்-ஒப்புமைகள் ஏற்கனவே அச்சமூட்டுபவையாக உள்ளன.



(பிரையன் செனவிராத்னே நீண்டகாலமாக தமிழர் உரிமைக்காகப் போராடிவரும் சிங்களப் போராளி, Socialist Alliance in Australiaவின் உறுப்பினர்.)





நன்றி: International News, Green Left Weekly issue #803 19 July 2009.