Monday 31 October 2016

நாவல் பகுதி




புளித் தண்ணீரை அருந்தியபடி அவர்கள் கிரகணத்தைக் கடந்த தினத்தில் சியர்வா மரியாவின் அழகு பொலிவு கூடியதாயிருந்தது. அரகடாகாவில் பிறந்தவனோ கபாலத்தில் ஊறும் உயிர் மரணத்தின் எல்லை தாண்டி கருங்கேசமாய்ப் படர்வதை இன்னும் வியந்து முடியாத நிலையில் மரியாவின் முத்தங்களை அவளைப் பீடித்த சாத்தான்கள் வழியேனும் அடைந்து விடுவதென பாதிரி தீவிரம் கொண்டான். நகரில் குறுக்கிடும் சிற்றோடைகளை மூடிய பாலங்களைக் கடக்கையில் காணும் அறிவிப்புப் பலகைகளில் எழுதப்பட்டவைகள் தற்போது அத்தனை பீதியூட்டுவனவாயில்லை.அடித்துக் கொல்லப்பட்ட நாய்கள் அங்கே தொங்கவிடப்பட்டிருக்கவுமில்லை.


ஆவூரில் இறங்கி ஜந்து பர்லாங்குக்கும் குறையாமல் நடக்கவேண்டியிருந்தாலும் முழுப் பரீட்சை விடுமுறையில் வருஷா வருஷம் பாட்டி வீட்டுக்குப் போவது தவறாது. காண முடியா புதர் அடர்வுக்குள் உருண்டோடிக் கிடக்கும் பனம்பழங்களின் கிறக்கமூட்டும் வாசனை பின் தொடர  இருபுறமும் உயர்ந்து நிற்கும் பனைகளுக்கிடையே கரை மீதில் நடந்து நீர்ப்பரப்பு தாண்டி தவளைகள் குதித்தபடியிருக்கும் சகதிக்கு அப்பால் கருவேலம் மண்டிய ஏரியின் வறண்ட பகுதிக்குள் இறங்கி சாம்பல் வண்ண முட்கள் குத்திவிடாமல் வெடித்த களிமண் பாதையில் சற்று தூரம் போனால் மாட்டு மந்தைகளுக்கான காய்ந்த புற்களின் மேய்ச்சல் வெளி வரும். அதனையடுத்து வெட்டிச் சிதைத்த பாறைகளுக்கிடையே குட்டை மாமரங்கள் தென்படும் வயல்களைக் கடந்தால் கோடையின் வெம்மை அவற்றை இன்னும் சோபையற்ற வெற்று மண்வெளியாக்கியிருக்கும் வறண்டு களரேறிய பூமியில் நீண்ட நடை. அதன்பின் வெளிர் சிவப்பில் பூத்திருக்கும் ஓணான் செடிகளால் வேலியமைந்த வரிசையான குப்பைக் குழிகள் தென்படும். அவற்றையும் தாண்டினால் ஊரையும் வயலையும் இணைக்கும் மண்பாதை. மண்பாதையை ஒட்டி ஒன்றிரண்டின் மீது சருகாகிய மலர் மாலைகள் காற்றில் அசைய பல வகையான சிலுவைகள் இறுகி நின்றிருக்கும் இடுகாட்டு மேடு. அந்தக் கல்லறைத் தோட்டத்தின் இடப்புறமாய் திரும்பி தெருவில் நுழைந்து வடக்கே நடந்து மறுபடி கிழக்கே கல்லறைத் தோட்டத்தின் பக்கமே நடந்து வீட்டு வாசலை அடையவேண்டும். வீட்டுக்குள் நுழைந்து புறவாசல் வழியே வந்து கல்தொட்டி நீரில் கால்களை அலம்புகையில் கல்லறைத் தோட்டச் சிலுவைகள் மிக அருகில் துலக்கமாய் நின்றிருக்கும். கல்லறைத் தோட்டத்தின் முழங்கால் உயரம்கூட இல்லாத இரண்டு வரி கருங்கல் மதிலையொட்டி நடந்தால் நிமிடத்தில் வீட்டின் புற வாசலை அடைந்துவிடலாம். ஆனால் யாரும் அவ்வழியைப் பயன்படுத்துவதில்லை. வீட்டின் பின் வாசலில் கல்லறைத் தோட்டம் இருக்கிறதென்று எப்போதும் சங்கடமாய் நினைத்ததுமில்லை. சமயங்களில் கல்லறைத் தோட்டத்துக்குப் போக முடியாத நிலையில் சில அடக்கச் சடங்குகளில் இங்கிருந்தபடியே சன்னமாக லீ பே ராமெ பாடியபடியும் வழிபாட்டுச் சடங்குகளில் பாதிரியாருக்கு உரிய பதிலுரைகள் கூறியபடியும் பாட்டி கலந்துகொள்வாள். கல்லறைத் தோட்டத்தின் காம்பவுண்டு சுவரை இந்த வருடமாவது உயர்த்திக் கட்டவேண்டும் இல்லையேல் வரும் சவேரியார் திருவிழாவுக்கு கல்லறைத் தோட்டத்தை ஒட்டியிருக்கும் பதினெட்டுத் தலைக்கட்டுகளும் பிரிவுத் தொகைத் தரக்கூடாது என கொடியன் வீட்டு இஞ்ஞாசி உள்ளிட்ட சிலர்  எல்லோரிடமும் சொல்லி வைத்திருந்தனர். சில வருடங்களாகவே ஊர்ப் பஞ்சாயத்தில் இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டு வந்தது. அடக்கச் சடங்குகள் நடக்கும்போது தம் வீட்டின் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடியே வைத்திருக்கும் அவர்களுக்கு தினமும் புதைமேடுகளின் முகத்தில் விழிப்பது அசூயையும், அருவெறுப்பையும் தந்தது.
***


விழித்தபோது கனவின் நிலைவாயிலிலேயே உறங்கிவிட்டிருந்ததை அறிந்தான். அவனுக்கு முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் ஏராளம் வாகனங்கள் ஒலியெழுப்பின. யாரோ பிச்சை கேட்கும் குரல்.  நாயொன்று குரைக்கும் சத்தம். வெக்கையழுத்திக் கிடந்த நினைவு குளுமையுணர்ந்து மெதுவாக மலர்ந்திருக்க கண்களின் கனத்த திரைச்சீலைகள் விலகியிருந்தன. ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட இரண்டு கால்கள் தரையோடு மோதி அவன் நெஞ்சினுள் எழுப்பிய ஓசை அடங்கியிருந்தது.  புத்தம்புதிதாய் இருந்த அறையின் வெளிச்சம். சிறு அழுக்கும் படாது பராமரிக்கப்படும் குழல் விளக்கு, கூரை, அறைச் சுவர்கள், தரை, மேசை. கனிவான குரலில் மருத்துவர் சொன்னார் ‘நீங்கள் அழுது என்னவாகப் போகிறது. மருத்துவரின் எதிரேயிருந்த மேசையோடு அவன் அமர்ந்திருந்த நாற்காலி சாரக்கயிறு கொண்டு கட்டப்பட்டிருந்தது. எப்போதுமே அந்த நாற்காலி மேசையோடு கட்டப்பட்டிருந்தது. பார்வையை சற்றே வலப்புறமாக மருத்துவரின் தோளுக்கு மேலாக புத்தக அலமாரி நோக்கித் திருப்புகையில் தடிமனான புத்தகங்களை வழக்கமாக அவன் காணும் அதே இடத்தில் அன்றும் பார்த்தான்.‘என்னால் இனி பறக்கவே முடியாதா?  மீண்டும் கேட்டான். சிறு பஞ்சுத் துணுக்கு கொண்டு நர்ஸ் அவன் கண்ணீரை அழுந்தத் துடைத்தாள். அவள் காலையில் அணிந்த வாசனை திரவியம் வியர்வையில் கலந்து மணத்தது. வேர்வை உலர்ந்த பின்மதியங்களில் இஸபெல்லாவிடம்  புளித்த மோர் மணக்கும். உங்கள் பித்தம் கடுமையாகக் குறைந்துவிட்டது. இனி வாய்ப்பில்லையென்றே நினைக்கிறேன்’. தளர்வுற்றவனாய் வெளியே வந்தபோது வெயில் உக்கிரமாயிருந்தது. வெளியே பூவரச மரத்தின் நிழலில் வாடிக் கிடந்த பூவை அனிச்சையாகக் கையிலெடுத்துக் கொண்டான்.

***


இருபுறமும் வேலிகாத்தான்கள் அடர்ந்து மண்டிக்கிடக்கும்  வறண்ட ஓடை தாத்தாவின் வயலுக்கு இடப்புறமாய் வளைந்து பனைவரிசையைத் தாண்டி நீண்டு, நெரிந்து வளர்ந்த குற்றுச்செடிகளின் பின்னால் இறங்கி காணாமல் போய்விடுகிறது. பாட்டி, இந்த ஓடையாலேயே போனா கடலுக்குப் போயிடலாமா?கப்பியாக மணலும் அதன்மேல் கோடைப் புழுதியும் படிந்த ஓடையின் மாட்டுவண்டித் தடங்களைப் பார்த்தபடி, சும்மாட்டின் மீது வைத்த கனமான பிரம்புக் கூடையை ஒருகையால் பற்றி மறு கையை வீசி வேகமாக நடக்கும் அவள் பின்னால் ஓடிவந்தபடியே அவன் கேட்டான். அப்போது அவன் கடலைப் பற்றியே கனவுகள் கண்டான். அலை நுரைத்துத் ததும்பும் கடலோரங்களில் எப்போதும் பாதம் குறுகுறுக்க நடந்தபடி இருந்தான். கோவிலுக்குள் மெழுகுவர்த்தி ஏற்றி வேண்டிக் கொண்டபின் மொட்டையடித்து எரியும் தலையில் தடவிய சந்தனம் மணக்க அப்பா அவனை குளிக்க அழைத்துச் சென்ற கடற்கரை அவனைப் பித்தங் கொள்ளச் செய்வதாயிருந்தது.  நடந்துகொண்டிருந்தவள் நடையின் வேகத்தைக் குறைக்காமலே  சொன்னாள் மஞ்சக் கருப்பிய வண்டியில பூட்டி ஓட்டு, மூணே நாள்ல கடலுக்குப் போயிடலாம். ஜெயமரி பாட்டியை முதியவள் எனச் சொல்லமுடியவில்லை.அவன் நினைவில் அவளுக்கு அப்படியொனதொரு பிம்பம் எப்போதும் இல்லை.வயோதிகத்தின் நெருக்கத்தில் அவளுக்கு நரைக்க ஆரம்பித்திருந்தது. பூனைக் கண்கள் சற்று ஒளி மங்கிவிட தீர்க்கமான அவற்றின் பழுப்பு வண்ணத்தை வெளுப்பும் வெண்மையும் பற்றத் தொடங்கியிருந்தன. இருப்பினும் ஒரு பேரரசி அல்லது தேவமங்கைக்குரித்தான உயர்ந்த எடுப்பான தன் நாசியால் எப்போதும் போல தொடர்ந்து அவள் தாத்தாவை பகிஷ்கரித்தாள். திமிறும் பசுக்களை வலுவோடு இழுத்து வந்து மேட்டுக் கொட்டகையில் கட்டிப் பால் கறந்தாள். திரும்ப அவற்றைக் கரம்பில் கட்டிப்போட்டுவிட்டு வயலை நோக்கிக் கிளம்பினாள். பொழுது சாய்ந்து இருட்டுகையில் அரிஅரியா புற்கட்டுகளோடு திரும்பி வந்தாள்.தன் குடமிளகாய் மூக்குடன் தாத்தா சிந்தனையின் தொலைவிலிருந்தபடி அவளைக் கவனித்தும் கவனியாதபடி இருந்து வந்தார்.
****


வழக்கத்தைவிட மழை சற்று வலுத்துப் பெய்த அந்த வருட ஐப்பசியில் சாமிநாதன் தாத்தா இன்னும் இரண்டு துண்டுகள் சேர்த்து நெல் நடலாமென அதிகமாய் நாற்று விட்டிருந்தார். சேடையோட்டி பரம்படிக்கும் வேலையில் பாட்டிக்கு சுமை கூடிப்போனது. கூலிக்கு ஆள் வைக்காத கணவனை முணுமுணுத்தபடியே ஓடையோரமிருந்து நாலு நடை இலை தழைகளை அள்ளி வந்து வயலில் கொட்டலாமென கூடையையும் மண்வெட்டியையும் கையிலெடுக்கையில் சட்டென்று மேகம் திரண்டு வானம் இருண்டது. சற்றைக்கெல்லாம் காற்றும் சேர்ந்து சுழன்றடித்தது. பேய் மழை. வெறிகொண்ட காற்று. சிலும்பி விரிந்த தலையில் பனைகள் கட்டற்று ஆடின. கூடைக்குள் மண்வெட்டியை வைத்து மோட்டார் தொட்டியருகே பாதுகாப்பாய் வைத்தவள் தாத்தாவை முன்னால் அனுப்பி கொட்டகையில் மாடுகளைக் கட்டச் சொல்ல நினைக்கையில்தான் அவரைக் காணாது, இந்த மனுஷன் எங்கே போனாரென தேடத் தொடங்கினாள். கொடிவள்ளிக் கிழங்குகளிடையே முளைத்திருந்த பண்ணைப் பூண்டுகளை பிடுங்கியெறிந்துவிட்டு மிளகாய்த் தோட்டத்தின் உடைந்த பாத்திகளை அணைத்துவிட்டபடியிருந்ததில் நெடுநேரம் கடந்துவிட்டிருந்ததை அறிந்தாள். அக்கம் பக்கம் வயல்களிலும் யாருமில்லை. கிணற்றின் பார்மண் குவித்து உண்டாக்கியிருந்த மேட்டில் புங்கமரத்தினடியில் அவர் இருக்கக் கூடும் எனப் பார்த்தாள். அங்கு அவர் இல்லை. எங்கே போயிருப்பார்? காற்றோடு சேர்ந்து சளாரென முகத்தில் அறைந்தது மழை, திடமாக பாதத்தை வைத்து நடக்க முடியாமல் செய்தது. வீட்டுக்கு அவர் போய்விட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தவளாய் கையில் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு தலையில் கூடையைக் கவிழ்த்துக் கொண்டாள். எதேச்சையாக இடப்பக்கம் திரும்புகையில் மின்னல் வெட்டில் தொலைவே பனைவரிசைக்கு அந்தப்பக்கம்  எதுவோ தரையை முரண்டுவது போல கணநேரம் தோன்றி மறைந்தது. அவள்  செல்லமாய் வளர்த்து வரும் தென்னைகளில் ஏறி குரும்பைகளை நாசம் செய்து போடும் மரநாயோவென எண்ணி அருகே நடந்தாள், எனென்றால் மரநாய்கள் உலவத் தொடங்கும் இருள் அப்போதே கவிந்து விட்டிருந்தது. தென்னையின் உடம்பில் வண்டி மையில் வரைந்த நாகங்களையும், குறுக்கே கட்டி வைத்த பனைமட்டைகளின் சலசலப்பையும் உதாசீனம் செய்து அவை மரத்தில் ஏறி குரும்பைகளையும் முதிராத இளம் காய்களையும் கடித்து உறிஞ்சிப் போட்டன.   உடம்பெல்லாம் மழை வழிய மண்வெட்டியின் காம்மை திடமாகப் பற்றிக் கொண்டவள் அடுத்த மின்னல்வெட்டில் அதன் மீது ஓங்கியெறிந்துவிட்டு ஓடிவிட வேண்டும் என்று இன்னும் சில அடிகள் முன்னகர்ந்து காத்திருந்தாள். திரும்ப மின்னல் வெட்டியபோது  மரநாய் மூர்க்கமாய் அசைந்தியங்கும் ஓர் ஆணுடம்பாயிருப்பதை மனம் நடுங்கப் பார்த்தாள். மழையில் மினுங்கிய அவ்வுடலையும் அடியிலிருந்து அதனோடு முயங்கிக் கிடந்த உடலையும் அடையாளம் காண அம் மின்னல் பொழுது அவளுக்கு எதேஷ்டமாகவேயிருந்தது. மழைக் குளிரால் விறைத்திருந்த அவளுடம்பு வியர்த்தது, கையிலிருந்து நழுவி சிற்றோடையாய் தரையிலோடிய மழையில் மண்வெட்டி சொத்தென்று விழுந்தது. கவிழ்த்த கூடைக்குள்ளாக சுவாசம் ஓசைகொண்டு இரைய விடுவிடென்று வீடு நோக்கி நடந்தாள். சாமிநாதன் மண்வெட்டியோடு வீடு வந்தபோது மழை அடங்கியிருந்தது. வெகு பிரயாசையுடன் அவர்கள் கடந்த அந்த இரவின் நிசப்தம் பின் எப்போதைக்குமாக அவர்களிடையே குடிகொண்டது. அவள் கேட்கவும் அவர் விளக்கவும் முற்படாத அந்த முன்னிரவின் நிகழ்வை  அவளே அதிகமும் சுமந்தாள். கல்லறைத் தோட்டத்தில் தினம் அவள் காணும் சிலுவைகளில் எதனை விடவும் மிகப் பாரமானதாய் இருந்தது அது. அன்றிலிருந்து கடுமையான வேலைகளில் பிடிவாதமான முரட்டுத்தனத்துடன் ஈடுபடுவதை விரும்பினாள். அப் பணிகள் தன்னைக் கொன்றுவிட விரும்பியதைப் போல அவற்றிடம் தன்னை ஒப்புக் கொடுத்தாள். கைகள் கன்றி ரணமாகிட தொழுவத்தின் நான்கு பசுக்களுக்காய் வண்டியளவு புல்லை அறுத்தாள். ஊரில் யாரும் விழிக்கும் முன் எழுந்து பொதுக் கிணற்றில் இறைத்து வீட்டிலும் தோட்டத்திலும் ஒரு பாத்திரம் விடாமல் நிரப்பினாள். குறை சிறிதுமில்லாதபடி தினப்படி சமையல் செய்தாள். மனதுள் கனன்ற வன்மத்தை உடல் ஓய்ந்து மனம் வடியும்படியான வேலைகள் வழி வெளிப்படுத்தினாள்.

***

சாஸ்திரம் பார்க்க அம்மா அவனை தெள்ளூர் ஊமை ஜோசியனிடம் அழைத்துப் போனபோது வருடம் தவறாமல் அவனுக்கு ஏதாவது பெரிதாக உடம்புக்கு வந்துகொண்டிருந்தது. சிவந்த நெற்றியில் ஒற்றைக் கோடாய் சிவப்பு தீற்றி அமர்ந்திருந்த ஜோசியனுக்கு வயது இருபத்தைந்துக்கும் குறைவாகவே இருந்தது. சில கணங்களுக்கு மேல் உற்றுப் பார்க்க முடியாதபடி கனறும் ஜுவாலை அவன் கண்களில் இருந்தது.வலது கையை நீட்டச் சொல்லி உள்ளங்கையில் தண்ணீரை விட்டான் ஜோசியன். கண் மூடி மனதோடு முணுமுணுத்தவன் கையிலிருந்த தண்ணீரை பித்தளைத் தாம்பாளத்தில் விடச் சொன்னபோது அது இரத்தச் சிவப்பாய் தட்டில் இறங்கியது. பிரியப்பட்ட மூதாதை ஒருத்தி அவனில் குடிகொண்டிருப்பதால் அவளது சேட்டைகளால் உடம்பு சுகவீனப்படும், புத்திகூட சுவாதீனமில்லாமல் போகும் ஆனால் பெரிய ஆபத்தில்லை என்றான். மனதில் கணக்குகள் போட்டு அவனது இருபத்தேழாவது வயதில்தான் அவள் இவனை விடுவாள் என சைகையில் சொன்னான். பிராயச்சித்தம் என அம்மா கேட்டபோது இல்லையென்று தலையை ஆட்டியவன் கண்களை தயையாய் மூடி தலையைக் கீழ்நோக்கி மெதுவாய் அசைத்து கவலைப்பட வேண்டியதில்லை என்றான்.

***


அந்த வருடம் பருவமழை பிந்தியது. மேகம் கூடுவதும் கலைவதுமாக இருந்ததேயன்றி நிலம் கரிக்க மழை பொழியவில்லை. மாலை மங்கும் வரை புல்லறுத்தவள் படிந்துவிட்ட இருளினூடாக வீடு திரும்பினாள். பீவேலந் தோப்பைத் தாண்டி ஓடையில் இறங்கிக் கடந்து வீட்டுக்குப் போகும் பாதையில் ஏறுகையில் பின்னால் ஓடை மணலில் ஏதோ சரசரத்தபடி பின்தொடர்வதாக உணர்ந்தாள். தலையில் புல்கட்டுடன் திரும்பியவள் தரையோடு தரையாக ஒட்டி அசையாது நிழல் போல நின்றிருந்ததைக் கண்டாள். இரண்டடி பின்னே வந்து உற்றுப் பார்த்தாள். அந்த இருட்டிலும் வசீகரிக்கும் விதமாய் அதன் கண்கள் மினுங்க ஒரு கரிய நாய். ஒரு கை புல் கட்டைப் பிடித்திருக்க மறு கையை வீசி சீ, நாயேஎன விரட்டினாள். அது நகரவில்லை. ஒரு கணம் அதையே உற்றுப் பார்த்துவிட்டு திரும்பி தன் வழியே நடந்தாள். சிறிது தயங்கி நாய் அவளைத் தொடர்ந்தது. நாய் தன்னைத் தொடர்வதை உணர்ந்தவளுக்கு ஏனோ எரிச்சல் வந்தது. அவள் நிற்க அதுவும் நின்றது. திடீரென்று வன்மம் தலைக்கேற வேகமாய் பின்னே வந்து நாயைக் காலால் எற்றினாள் கருமம் பிடிச்ச வேச நாயே. எற்றிய காலை அவளால் திரும்ப இழுக்க முடியவில்லை.  அப்படியே இறுகக் கவ்விவிட்டிருந்த நாய் பந்து போல சுருண்டு  அவள் கண்டைக் காலைப் வாயால் பற்றியிருந்தது. தன் தசைகளின் ஆழத்தில் நாயின் பற்களை உணர்ந்தவள் சிரமத்துடன் உதறி அதனிடமிருந்தும் விடுவித்துக் கொண்டாள். வழியெல்லாம் ரத்தத்தில் தடமெழுதி வீடு வந்தாள்.


காடுவெட்டி வைத்தியர் காயத்தில் எண்ணெய் காய்ச்சி விட்டார். மருந்து கொடுத்துவிட்டு இரண்டு வேளை தவறாமல் கடிவாயில் எருக்கம் பால் அடிப்பதோடு கடுமையான பத்தியமிருக்கவும் சொன்னார். வீடு திரும்பி வழமை போல தன் வேலைகளைச் செய்து வந்தவள் கரிய நிறத்தில் மினுங்கும் கண்களோடு ஏதோவொன்று  தன்னை ஆட்கொண்டுவிட்டதை உணர்ந்தாள். ஏனோ அது தன்னை விட்டுப் போகாமல் தன்னுடனே இருக்கவேண்டுமென விரும்பினாள். தனிமையில் அலைந்துகொண்டிருந்த தனக்கு ஆத்துமத் துணையாகக் கிடைத்ததை விலகிப் போகச் செய்வதில் அவளுக்கு விருப்பமில்லை. ஏதோ இப்போது அவளைப் பீடித்த சாத்தானும் அவளுமாகச் சேர்ந்து வேலைகளைச் செய்வது போல அவற்றில் இன்னும் வேகமும் மூர்க்கமும் கூடியிருந்ததை ஊரார் கண்டனர்.
***

தோட்டத்தில் பறித்த சாமந்திகளில் தானே கட்டிய மாலையுடன் தன் பதினாறு வயதில் இறந்துபோன ஒரே மகன் யோனாஸின் கல்லறைக்கு போகும் வழக்கத்தை இந்தக் கல்லறைத் திருவிழாவில் அவள் மறந்தாள். ஊர்கூடி கல்லறையில் சடங்குகள் நடந்தபோது கதவை மூடி வீட்டுக்குள்ளேயே இருந்தாள். நீத்தார் பாடல்களும் பாதிரியார் காட்டிய தூபப் புகையும் மூடிய கதவைத் தாண்டி வீட்டுக்குள் வந்தும்  அவள் எவ்வித சலனமும் கொள்ளவில்லை. சடங்குகள் முடிந்து மெழுகுத் திரிகளையும் ஊதுபத்திகளையும் ஏற்றி வைத்துவிட்டு எல்லாரும் கிளம்பும்போது சொல்பேச்சு கேளாத சில இளவட்டங்கள் கல்லறைத் தோட்டத்திலேயே பட்டாசு வெடியைத் தொடங்கினர். முத்தாய்ப்பாக அவர்கள் கல்லறைக்குள் படுத்திருப்போரும்கூட அரண்டு போகும் விதமாக ஐந்து லட்சுமி வெடிகளை ஒரே திரியில் சேர்த்து வெடித்தபோது அச் சத்தம்  வீட்டின் கதவை அறைந்து தாழ்ப்பாள் கொண்டியை நீக்கி அவள் காதில் மோதியது. நீரிலழுந்துகையில் பித்தளைக் குடம் நீரை உட்கொண்டு எழுப்பும் ஒலியைப்போல பலமாக அவள் இதயம்  ஒரு தரம் பெரிய குமிழியாகி ஒலியெழுப்பி அடங்கியபொழுதில்  அவளுக்குள் ஏதோ புரண்டது. நினைவின் பழகாத பாதைகள் ஒளியோடு திறந்துகொண்டது போலிருந்தது. கருமையும் மினுங்கும் கண்களும் கொண்டு விடாது அவளை கவ்விப் பிடித்திருந்த விலங்கு தன் ஈர நாவைச் சுழற்றி அவள் முகவாய்க் கட்டையை நக்கியது.

    கல்லறைத் திருவிழாவின் அரவங்கள் அடங்கி ஊர் அமைதிக்குள் ஆழ்ந்திருக்க மெல்லிய குறட்டையோடு சாமிநாதன் உறங்கிக் கொண்டிருந்தார். வெகுநேரம் அடுப்படியிலேயே அமர்ந்திருந்தவள் அரவமின்றி எழுந்தாள். கதவை மெதுவே திறந்தவள் முகத்தில் பளீரென்று அறைந்த வெளிச்சத்தில் நிலைகுலைந்தாள். கண்ணைக் கூசும் வெளிச்சமும் புகையுமாக கல்லறை மேடு இருந்தது. வெண்ணிற உடுப்புகளில் சம்மனசுக்கள் இறங்கி வந்து நடுவே அமைந்திருந்த பூசை மேடையில் ஆடுவதைப் பார்த்தாள். கூடவே புதையுண்டிருந்த ஆத்துமாக்களும் எழுந்து ஆடின. சன்னமான மத்தள ஒலியும் துதிப் பாடல்களும் கேட்டன. உடல் சிலிர்க்க கரம் கூப்பி தொழுதாள். தெய்வீக ஒளியும் மணமுமாக அவள் மனம் நிரம்பிக் கிறங்கியது. வெள்ளுடை தரித்து ஆடிப் பாடிய அவர்களிடையே யோனாஸை அடையாளம் கண்டு அருகே ஓடினாள். கையில் பிடிக்க முடியாமல் அவன் புகையாகிக் கலைந்து போக்கு காட்டியபடி இருந்தான். எப்படியும் அவனைப் பிடித்து விடுவதென்று தளராமல் கல்லறை மேடெங்கும் அவனைப் பின்தொடர்ந்து ஓடியபடியே இருந்தாள்.


இரவெல்லாம் எரிந்து உருகி வழிந்து ஈய்ந்திருக்கும் மெழுகைச் சேகரிக்க விடிகாலையிலேயே வந்த பிள்ளைகள்தான் அதைச் சொன்னார்கள். சாமிநாதன் ஓடிவந்து யோனாஸின் கல்லறை மீது மயங்கிக் கிடந்தவளை எழுப்பி வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவள் கண்கள் வெறுமையில் நிலைத்திருக்க குளிர் ஜூரம் வந்தது போல பற்கள் தடதடத்து உடல் நடுங்கினாள். ஆனால் சாமிநாதன் கலவரமடைந்தது அவளெழுப்பிய சீற்றமான ஒலிகளால்தான். காப்பி கொடுத்த தம்ளரைக் கண்டு அஞ்சி ஒடுங்கினாள். வந்து பார்த்த மாத்திரத்திலேயே காடுவெட்டி வைத்தியருக்கு உறுதிப் பட்டுவிட்டது. சாமிநாதனை தனியே அழைத்துச் சொன்னார். பிடிக்கு அடங்காமல் திமிறியவளை தண்ணீர்க் கயிற்றால் உரல் குந்தாணியோடு பிணைத்தனர். கண்களின் மிருக ஒளியைக் கண்டு பெண்கள் வெருண்டு அருகில் வர அஞ்சினர். பகல் முழுதுமாய் ஓங்கரித்த அவள் சீற்றம்  மாலையிலிருந்து மெதுவாகக்  குறையத் தொடங்கியது.

***
ஆள் வந்து சொன்னபோது அம்மா அழுது அரற்றினாள். இப்பவோ அப்வோன்னுதான்  இருக்குது... இப்பமே கெளம்பினா கண்ண மூடறதுக்கு மின்னாடி ஒரு தடவ பாத்துடலாம்... என்றவர் நிறுத்தினார். இந்த நெலமயிலக் கூட நெனவு வாறப்ப ஜேம்ஸு... ஜேம்ஸுன்னு ரெண்டு மூணு தரம் அனத்திட்டு அடங்குது... அவர் குரல் கரகரத்தது. வெடித்து வந்த அழுகையோடு அம்மா அவனைக் கட்டிக் கொண்டு அரற்றினாள். இரவாயிருந்தபோதும் கடைசி பஸ்ஸுக்குக் காத்திருந்து கிளம்பினார்கள். மழைபெய்து ஓரம் நின்றிருந்த நீரை விசிறியடித்தபடி பஸ் சென்ற இரவில் ஆயிரம் சிறு விளக்குகள் காய்த்திருந்த மரமொன்றைப் பார்த்தான். அதிசயம் போன்ற அம்மரத்தில் விளக்குகள் நின்று நின்று ஒளிர்ந்தன, மரத்திலேயே இங்குமங்குமாக அலைந்தன. தீராத வியப்புடன் கழுத்தைப் பின்னே வளைத்து ஒற்றை வெளிச்சப் புள்ளியாய் பின்னே மறையும் வரை அம்மரத்தையே பார்த்தபடி வந்தான். அம்மரத்தைப் பிடித்து உலுக்க உலுக்க ஒளிரும் பழங்கள் அவன் மீது விழுந்தபடியே இருந்தன. விழித்தபோது தோளிலிருந்து அப்பா அவனை இறக்கிவிட்டார். உறக்கத்தின் மிச்சத்திலும் சிம்னி விளக்கின் குறை வெளிச்சத்திலும் காட்சிகள் பிடிபட  சற்று நேரம் பிடித்தது. விசும்பல்கள் மட்டும் கேட்ட அந்த அறையில் தீவிரமாய் துளைத்து நோக்கும் பார்வையுடனிருந்த இருதய ஆண்டவர் படத்துக்குக் கீழே பாவப்பட்ட விலங்கைப் போல உரல் குந்தாணியோடு பிணைக்கப்பட்டு பாட்டி சித்திரமாய் உறைந்திருந்தாள். கசங்கிய ஆடையும் விரித்த மயிருமாய் தரை பார்த்து தலை கவிழ்ந்திருந்தாள். பலகீனமான கர்ஜனை போல சுவாசம் வந்துகொண்டிருந்தது. உள்ளிருந்த மிருகம் ஆட்டுவித்து ஓய்ந்திருந்ததில் களைத்திருந்தாள். அவளைச் சுற்றிலுமிருந்த கோலம் அவளை யாரும் நெருங்குவதில்லை என்பதை உணர்த்தியது. அவன் அப்படியே அவளைப் பார்த்தபடி நின்றிருந்தான். ஏன் அவள் ஓடி வந்து முகம் எச்சிலில்  ஈரமாகும் வரை ஓயாமல் தனக்கு முத்தம் தரவில்லை என்ற கேள்வியும் அவளிருந்த கோலமும் மனதில் முள்ளாய் இறங்கின. அப்போதுதான் மெல்ல பாட்டி தலையை உயர்த்தினாள், எங்கென்று இல்லாதபடி பார்வை அலைந்து அவனில் நின்றபோது, அவள் உடல் பதறிச் சிலிர்த்தது. பேசவந்த வார்த்தைகள் குழறி வாய்க்குள்ளேயே சரிந்தன. பிணைத்த கைகளை நீட்ட முயன்று தோற்றாள். கால்களைத் தட் தட்டென்று தரையோடு அடித்தாள். அந்தக் கண்களிலிருந்த மிருகம் மறைந்து அப்போது ஜெயமரிப் பாட்டியை அவர்கள் பார்த்தனர். அப்பா அவசரமாக அவனை அறைக்கு வெளியே தூக்கி வந்தார். ஓயாமல் அவள் கால்களைத் தரையில் அடித்தபடியே இருந்தாள்.

                                                                            -------
நன்றி: கல்குதிரை, 2013.

(எழுத நினைத்திருக்கும் பெயரிடப்படாத நாவலிலிருந்து ஒரு பகுதி)
 































No comments: