Thursday, 10 June 2021

மெசியா


மெசியா

 ம்மையெல்லாம் எண்ணிக் கணக்குப் பார்க்கும் வினோத ஆசை ஏனிந்த அகஸ்டஸ் சீஸருக்கு, நாமென்ன அவனது மந்தையா?”

முன்னே சிறு பொதிகளைத் தோளிலிட்டு நடந்துகொண்டிருந்த இருவரில் ஒருவன் கேட்டான்.

இப்படியாக அவன் தன் வரிக்கணக்கைச் சரிபார்ப்பானாயிருக்கும்.” உடன் வந்தவன் சொன்னான். “வசூலித்த வரியை ஏய்க்கும் ஆயக்காரர்களுக்கும் இதில் ஒரு செய்தியிருக்கிறது, இல்லையா.”

அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒலிவமும் அத்தியும் தென்பட்ட பாதையில் அதிகமும் பேரீச்சைகள் சடைத்து நிற்க, சிறுவர் இளைஞர் நடுத்தர வயதினர் வயதானோர் என ஆண்களும் பெண்களுமாய் மூட்டை முடிச்சுக்களோடு அவர்கள் நடந்தனர். சிறு குழந்தைகள் தோள்களில் சவாரி செய்ய மிகச்சிலர் கழுதைகள்மீது வந்தனர். வலுவான ஆண்கள் நடக்க இயலாதோரை தோளில் சுமந்தும் படுக்கையில் வைத்துத் தூக்கிக்கொண்டும் நடந்தனர். பாதையின் இருமருங்கிலும் முக்காலும் காய்ந்த குற்றுச்செடிகள் நிறைந்து பரவியிருக்க வறண்ட நிலத்தின் நெளிந்து வளைந்த மண்பாதையில் நீண்ட ஊர்வலமாய் மக்கள் நகர்ந்துகொண்டிருந்தனர். இறுகிய முகங்களில் தெரிந்த எரிச்சலிலும் சோர்விலும் இந்நெடிய பயணத்தின் மீதான அவர்களின் வெறுப்பைப் படிக்க முடிந்தது.

அறுபது வருடங்களாகிறது, இந்த உரோமையர்கள் யூதேயாவில் நுழைந்து ஜெருசலத்தைக் கைப்பற்றி. நாம் எகிப்திலேயே இருந்திருக்கலாமோ, நைல் கரையில் இவ்வளவு வெக்கையிருக்காது இல்லையா?”

வாக்களிக்கப்பட்ட பூமியில் இதெல்லாம் நிகழவேண்டுமென்று சித்தமாயிருக்கும். யாராவது கிழட்டு ராபியிடம் கேட்டுப்பார், ஏடுகளைப் புரட்டிப்பார்த்துச் சொல்வார்.“

இளைஞர்கள் இருவரும் உரக்கச் சிரித்தனர்.

இந்த இருவருக்கும் பின்னால் கழுதையை ஓட்டிவந்தவன் இந்தப் பேச்சையும் சிரிப்பையும் ரசிக்கவே செய்தான். கடுமையான பயணத்தில் மனதைச் சிறிது லகுவாக்க இதுபோன்ற விஷயங்கள் உதவுவதை அறிந்திருந்தான். இரண்டு நாட்கள் முன்பு இந்தப் பயணத்தில் காலை தொடங்கி மாலைவரை அவர்களுடன் உரையாடிக்கொண்டு வந்த ராபி பேசியதும் அப்படித்தான் இருந்தது. கழுதைமீது அமர்ந்தபடி வந்த அவன் மனைவி இதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்கிறாளா என்று தெரியவில்லை. அவள் கவனமெல்லாம் எங்கோ இருந்தது.  அதிமுக்கியச் செய்தியை ஏந்திய தூதுவன் அதை உரியவரிடம் சேர்க்கும்வரை கொண்டிருப்பது போன்ற பதற்றத்தையும் நிலைகொள்ளாமையையும் அவள் கொண்டிருந்தாள். பேறுகாலம் நெருங்கிக்கொண்டிருந்த கர்ப்பவதியான அவளது பதற்றத்தில் அவனும் பங்கெடுத்துக்கொண்டிருந்தான். மக்கள் தங்கள் பூர்வீக ஊர்களுக்குச் சென்று குடிக்கணக்கு ஒப்புவிக்க வேண்டுமென்ற அகஸ்டஸ் சீஸரின் ஆணையின்படி இருவரும் நாசரேத்திலிருந்து பெத்லகேமுக்கு பயணப்பட்டுக்கொண்டிருந்தனர்.

 

நாசரேத்தில் செபக்கூடம் அமைந்த பிரதான தெருவின் இறுதியில் அவன் வீடு. புறத்தில் பாசியேறிய பழைய கற்சாடிகள் நிற்க சற்றுத்தள்ளி முளையில் கழுதை கட்டப்பட்டிருக்கும் சிறு முற்றத்தைத் தாண்டி மரச்சீவல்கள் இறைந்து கிடக்கும் பட்டறை. மரத்தச்சனான அவன் நாளின் பெரும்பகுதியை அங்குதான் கழித்தான். அங்கே உலர்ந்த, உலர்ந்து கொண்டிருக்கும் மரங்கள் தம்மைத் திறந்து மணத்தைக் காற்றில் பரப்பிக்கொண்டிருக்கும். புதிதாக இழைக்கப்படும் மரங்களின் வாசனை அவனுக்கு விருப்பமானது. மரங்களை அவற்றின் வாசனைகள் வழியே அறிந்துகொள்ளவும் செய்வான். நெருப்பில் வேகும் இரும்பின் குணமறியும் கொல்லனைப்போல இழைக்கும் மரங்களின் வயதையறிபவனே நல்ல தச்சனாக இருக்க முடியும். வாதங்களில் தம் தரப்பை நிதானமாக முன்வைக்கும் ஞானிகளைப்போல முதிர்ந்த மரங்கள்  இழைபட இழைபட மெதுவாகவே தம் மணத்தை வெளிப்படுத்தும். நடுவயது மரங்கள் இன்னும் ஈடேறாத வாழ்வின் ஏக்கங்களை வாசனையாக வெளிப்படுத்துகின்றனவோ என எண்ணும் வகையில் அவற்றின் சுகந்தம் அறுதியிட முடியாத ஒரு கலவையாயிருக்கும். முதிராத சிறுமரங்கள் அரிதாகவே அவனிடம் வரும், வேலிப்படல் அல்லது அவசரத்துக்குக் கைக்கோல்கள் செய்வதற்காக. அவற்றின் முதிரா வாசம் நெடியேற்றும், சிலநேரம் குமட்டலைத் தரும். எவற்றையும்விட ஞானமிகு மன்னன் சாலமோன் ஓஃபிரிலிருந்து இத்தேசத்துக்குத் தருவித்த அகில் மரங்களில் வேலை செய்வதில் அவனுக்கு அத்தனை விருப்பம். அதன் அலாதி மணமும் உள்ளடுக்குளின் மென்சிவப்பு வண்ணமும் கிறங்கவைக்கும். பொதுவாகவே பட்டையுரித்த மரங்களின் புறஅடுக்குகளை இழைப்புளியால் இழைத்து இழைத்து நீக்குவது ஒரு மனித உடலை ஆடையகற்றுவது போன்ற குறுகுறுப்பை அவனுக்குத் தந்தது.

தாவீதின் வழிவந்த குடும்பம் தன்னுடையது என்பதை அவனது பாட்டனும் தந்தையும் சொல்லக் கேட்டிருக்கிறான். அரசன் தாவீதிலிருந்து அவனது தந்தை வரையிலான வம்சாவரிசை எழுதிய ஏடொன்று வீட்டிலிருக்கிறது. ஆனாலென்ன அவனறிந்து மூன்று தலைமுறைகளாக இந்த அரச பரம்பரை இழைப்புளிகளோடும் அறுப்பு வாட்களோடும்தான் போராடிக்கொண்டிருக்கிறது. அவனது தாத்தனும் அப்பனும் எப்படியோ தெரியாது, அவன் இந்த தச்சுத்தொழிலை நேசித்தான். அவனொன்றும் பேர்பெற்ற தச்சன் கிடையாது, ஆனாலும் தன்னிடம் வரும் வேலைகளை அர்ப்பணிப்போடு செய்வான். பெரிய உணவு மேசையோ, சிறு மரக்காலோ சாதாரண விளக்குத்தண்டோ நேர்த்தி குன்றாமல் செய்வதென்ற தொழில் ஈடுபாடு கொண்டவன். தனியனான அவன் வீட்டைச் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருந்தான். சில நாட்கள் முன்புதான் சுவைக்கீனின் மகளோடு அவனுக்கு மண ஒப்பந்தம் முடிந்திருந்தது.

மண ஒப்பந்தம் ஆனதிலிருந்து அவள் அவன் வீட்டுக்கு வந்துபோகத் தொடங்கியிருந்தாள், வழமையான முகமன்களைப் பரிமாறிக் கொள்வது தாண்டி பேச்சு நீண்டதில்லை. ஏற்கனவே சுத்தமும் ஒழுங்கும் மிக்கதாக இருந்த அவனது வீட்டை இன்னும் அவள் ஒழுங்குபடுத்தினாள். மண் கலயங்களையும் மரத்தட்டுக்களையும் அவள் அடுக்கி வைத்த வரிசை, வீட்டைப் பெருக்கிக் குப்பைகளையும், பட்டறையின் மரச்சீவல்களையும் காற்று கலைக்கவியலாத மூலையில் கூட்டிவைத்த பாங்கு என எல்லாமே ஒழுங்கின் இன்னொரு உயர்ந்த பரிமாணத்தில் இருந்தன. வாசலில் கட்டியிருந்த கழுதைக்கு அவள் தீனி வைப்பதில்கூட அப்படியொரு அழகொழுங்கு இருந்தது. இனி காலமெல்லாம் தனது வசிப்பிடமாயிருக்கப்போகும் அவ்வீட்டை மானசீகமாய் அவள் சுவீகரித்துக் கொண்டிருந்தாள். சிலகாலம் முன்பு தேவாலயத்து தூணைக் கட்டிக்கொண்டு வீட்டுக்கு வரமாட்டேன் என அடம்பிடித்த பெண்ணா இவளென ஆச்சரியத்துடன் பார்ப்பான் அவன்.

அவள் மூன்று வயதில் தேவாலயத்துக்கென நேர்ந்துவிடப்பட்டவள், அவ்வூராரிடையே அது வழமைதானென்றாலும் ருதுவான பின் இப்படி நேர்ந்துவிடப்பட்டப் பெண்கள் வீடு திரும்பிவிட வேண்டும். ஆனால் அவள் தேவாலயத்திலிருந்து வீடு திரும்ப விரும்பவில்லை. காலமெல்லாம் கடவுளுடனே இருக்க விரும்பியவள் போல முரண்டு பிடித்தாள். ருதுவான பெண்கள் கடவுளின் பிரசன்னத்தில் இருப்பது முறையில்லை, ஆசாரக்கேடு. சினந்து பேசி அவளை அங்கிருந்து துரத்தவும் யாருக்கும் மனமில்லை, ஊரில் எல்லோருக்குமே அவள் மட்டில் வாஞ்சையுண்டு.  எனவேதான் மூத்த அந்த ராபி ஓர் உபாயம் செய்தார்.

அவளது தந்தை சுவைக்கீனின் சம்மதத்துடன் நாசரேத்தில் திருமணத்துக்குத் தயாராயிருக்கும் இளைஞர்களை அழைத்து  ஒவ்வொருவர் கையிலும் ஒரு குச்சியைக் கொடுத்தார் ராபி. அவன் கைக்கும் ஒரு குச்சி வந்தது. தேவாலயத்தின் முன் அவர்களை நிற்கச் செய்துவிட்டு உள்ளே சென்று செபித்தார். வாசல் தூணோரம் நின்று நடப்பவற்றைக் குறுகுறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். வெளியே வந்த ராபி இளைஞர்களிடம் தமது குச்சிகளை உயர்த்திப் பிடிக்கச் சொன்னார். எல்லோரும் உலர்ந்த அந்தக் குச்சிகளை உயர்த்துகையில் அதிசயமாய் அவனது குச்சியில் மட்டும் லீலிகள் மலர்ந்திருந்தன. புன்னகையுடன் அவனது கரம் பற்றி அழைத்து வந்து அவள் பக்கத்தில் நிறுத்தி, “இதோ உன் மணமகள், அழைத்துச் செல்என்றார்.

அவனுக்கு எல்லாமே கனவு போலிருந்தது. நண்பர்களோடு சேர்ந்து செஃபோரிஸுக்குத் தச்சுவேலை செய்யப் போகையில் பாதையோரம் மண்டிக் கிடக்கும் லீலிகளைப் பார்த்து லயித்தபடி செல்வான். எரோது அந்திப்பாஸ் செஃபோரிஸை தனது அரசின் தலைமையகமாகக் கொண்டபின் அந்நகரில் கட்டுமான வேலைகளுக்கு பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் ஆட்கள் சென்றனர். நாசரேத்திலிருந்து செஃபோரிஸ் நடக்கும் தூரம்தான் என்பதனால் அவனும் நண்பர்களும் காலையில் சென்று மாலையில் திரும்பிவிடுவர். அந்தி சாய்ந்த அரையிருட்டில் வீடு திரும்புகையில் லீலிகளைக் கடந்து வரும்போது மட்டும் அவற்றின் மணத்தில் அவன் உள்ளம் அவிழ்ந்துகொள்ளும்.  காய்ந்த அவனது கைக்கொம்பில் லீலி பூத்த அந்த நேரம் அவனுள் என்னவெல்லாமோ எண்ணங்கள் ஓடின. தன் தாத்தாவை நினைத்துக்கொண்டான். எல்லாமே இறைவனின் திருவுளப்படிதான் நடந்தேறுகின்றன என்பார் அவனது தாத்தா மாத்தான், எது குறித்தும் அச்சப்படவோ ஆனந்தப்படவோ என்ன அவசியமிருக்கிறது என்பார்.

னியனான அவன் மனைவியுடன் குடும்ப வாழ்வைத் தொடங்கினான். அவனது மனைவி ஊரின் மற்றப் பெண்களைப் போலில்லை என்பதை விரைவிலேயே உணர்ந்தான். அவளைச் சுற்றி எப்போதும் ஒளி சுடர்ந்துகொண்டிருந்தது. அவள் பாதம் பட்ட இடங்கள் துலங்கின. ஆனால் அவளைக் காண்கையில் மனைவி என்ற எண்ணம் ஏனோ அவனுக்கு உண்டாகவில்லை. அவள் குழந்தைமையின் பூந்தோட்டத்தைத் தாண்டிய பின்னும் சுழித்தோடும் பருவ ஆற்றினுள் இறங்க அச்சம் கொண்டு நிற்பவள் போலிருந்தாள். அன்றாடங்களின் வழமைக்குள் தம்பதியராய் வலம் வந்தவர்கள் உடலளவில் விலகியே இருந்தனர். சத்திரமொன்றின் ஒரே அறையில் இரவுகளை கழிக்க நேர்ந்த கண்ணியமான வழிப்போக்கர்களைப்போல நடந்துகொண்டார்கள். அவன் பொறுத்திருந்தான்.

பல நாட்கள் இது தொடர்ந்தது. ஆனால் உடல் தினவு தனது ஒப்பனைகளைக் கலைத்துவரத் தொடங்கியதை அவன் உணர்ந்தான். இளம்பெண்ணின் அண்மை அவன் உணர்வுகளைத் தீவிரமடையச் செய்தது ஆனால் அவளோ  அதை உணர்ந்தார்ப்போலில்லை.  உடல் மட்டும் பூத்துவிட்ட மனங்கனியாத பெண்ணை தேர்ந்துகொண்டுவிட்டோமோ என ஒருநாள் அவன் நினைத்தான். பாலைக்குளிரும் மனைவியின் அண்மையும் இரவில் அவனை வதைத்தன. ஒருநாள் இரவு அவன் செங்கடலைக் கடந்துவந்த தம் மூதாதைகள் பற்றி அவளிடம் பேச ஆரம்பித்தான். பாரவோனின் கொடும் பிடியிலிருந்து தப்பிப் பாலையை அடைந்து வாழத்தொடங்கிய காலத்தில் அவர்கள் பட்ட துன்பங்கள்தாம் எத்தகையன. இறைவனும் அவரருள் பெற்ற மோயீசனும் மட்டும் இல்லையானால் இந்நேரம் எகிப்தியரின் பைத்தியக்காரத்தனமான பெரிய கட்டுமானங்களில் ரத்தம் சிந்தி உழைத்துச் செத்துப்போயிருப்போம் என்றெல்லாம் அவன் சொல்லிக்கொண்டிருக்க பாதிக் கதையிலேயே அவள் உறங்கிவிட்டிருந்தாள். பெருமூச்சொன்றை அடக்கி வெளியிட்டவனாய் வெளியே வந்து வானைப் பார்த்தான். பாலையின் இரவுதான் எவ்வளவு வசீகரமானது. நட்சத்திரங்கள் பாலை வானுக்கென்றே படைக்கப்பட்டனவோ?  கருணையற்ற வெம்மையின் பகற்பொழுதைக் கடந்துவிட்டால் தெளிந்த வானும் தணிந்த காற்றும் மெலிதாய்ப் பரவிவரும் குளிருமாய் இந்த மணல்வெளியின் இரவுதான் எத்தனை ரசமானது. அது பகலெல்லாம் சதா சீறலும் புலம்பலும் பற்கடிப்புமாய் இருக்கும் மனைவி இரவில் கனிந்து குளிர்ந்து காலை தொடங்கி அவன் கண்டது வேறு யாரோ என்றெண்ணும்படிக்கு படுக்கையில் வந்தமர்வது போல. இந்த உவமானம் அவனுக்கு இன்னுமொரு பெருமூச்சைத் தந்தது.

 

திருமணத்துக்குப் பின் ஏழெட்டு வாரங்கள் கடந்திருந்தன. அன்றும் அவன் செஃபோரிஸுக்குப் போய் களைப்புடன் திரும்பி வந்தான். வாசலில் நின்றிருந்தவள் அவனது இடைவாரையும் மிதியடியையும் அவிழ்த்துவிட்டுப் பாதங்களைக் கழுவினாள். இரவுணவுக்கு மிருதுவான புதிய ரொட்டியும் சுவைமிக்கத் திராட்சைச்சாறும் இருந்தன. அவள் முகத்தில் எதனாலென்று அறுதியிடமுடியாத ஒரு பூரிப்பு, தெள்ளிய விகாசம். ஏதோ நட்சத்திரத்தை விழுங்கிவிட்டவள்போல அவளுடலிலிருந்து குளிர்ந்த மென்னொளி பரவிக்கொண்டிருப்பதைப் பார்த்தான். இதென்ன பிரமை என்றபடியே உண்டு முடித்தான்.

வழமைபோன்ற படுக்கைச் சடங்கில் அருகருகே இருவரும் கூரை நோக்கிப் படுத்திருந்தனர். எவ்வளவு நேரம் கடந்ததென்று தெரியாது, திடீரென மனைவியின் கை தன் கைமீது படுவதை உணர்ந்தான். சமயங்களில் இப்படிக் கைபட்டதும் ஒரு நாசூக்கான விரைவில் கையை விலக்கிக் கொள்வாள். ஆனால் இன்று அவளது உள்ளங்கை அவன் முழங்கைமீது ஊர்ந்து வந்து மெதுவாகக் கீழிறங்கி அவனது விரல்களைப் பற்றியது. அந்த மிருதுவான ஸ்பரிசம் அவனைக் கிளர்த்தியது. ஒருவழியாய் பாதையைக் கண்டுபிடித்து தாம்பத்திய சம்போகத்தின் கதவருகே வந்துவிட்டாள் போலும் என உவகையுற்றான். மெதுவாகப் புரண்டு அவள் கண்களைப் பார்த்தான். பதிலுக்கு அவள் முறுவலித்தாள். அவன் விரல்களோடு தன்னுடையவற்றைக் கோர்த்துக்கொண்டு அவன் காதருகே வந்து முணுமுணுப்பாய்ச் சொன்னாள். நாணமும் மகிழ்ச்சியும் கலந்து குழறும் மென்குரலில் அதைச் சொன்னாள். “நான் கருவுற்றிருக்கிறேன்”.

அவன் உடல் அதிர்ந்தது, கண்கள் கூரையில் நிலைத்தன. நான் கேட்டது இந்த வார்த்தைகளைத்தானா? ஆமாம், அவையேதான், அவற்றுக்கான அர்த்தமும் அதுவேதான். நிஜம் உரைத்த பொழுதில் அவனது வானிலிருந்து ஒன்றும் மிச்சமில்லாமல் நட்சத்திரங்கள் பெயர்ந்து வீழ்ந்தன. தொடர்ந்து காபிரியேல் தூதர், மாசில்லாத உற்பவம், மெசியா என அவள்  சொல்லிக்கொண்டிருந்த எதுவும் அவன் செவிகளில் விழவில்லை, அவளுக்கு அவன் பதிலுரைக்கவுமில்லை.

வன் அமர்ந்திருந்த ஒலிவ மரத்தின் நிழல் நீண்டு கொண்டிருந்தது. அதுதான் சரி. நீண்ட மனப்போரட்டத்துக்குப்பின் முடிவுக்கு வந்தான். பிளவுண்ட குளம்புடைய விலங்குகளின் இறைச்சியை மட்டுமே உண்ணும் ஆசாரமான யூதனான அவன் அதைச் செய்ய முடிவெடுத்தான்.  தன் மனைவியை யாருக்கும் தெரியாமல் விலக்கிவிடத் தீர்மானம் கொண்டான். அவளது முகம் மனதில் வந்தபோது அந்தத் தீர்மானம் இளகிக் கரைந்தது. இத்தனைப் பெரிய எந்திரக்கல்லை இச்சிறு பெண்ணின் கழுத்தில் கட்டிவிடுவது தகுமா? பின்னே, இது எவ்வளவு பெரிய துரோகம். அவன் மனம் கொந்தளித்தது. செபக்கூடத்தில் சொல்லி அவளைக் கல்லால் எரிந்து கொல்லச் சொல்வதுதான் அவன் மனதை ஆற்றும் எனத் தோன்றியது. ஆனால் அடுத்த கணமே தனது எண்ணத்தைத் கண்டு அவனே நடுங்கினான். குழந்தைமை மாறாத அவளுக்கு இப்படியொரு தண்டனையா? ஆனால் ஆனால்... ஆமாம் யாரும் அறியாமல் அவளை விலக்கிவிடலாம். இப்படியே எதிரெதிராய் எண்ணங்கள் அவனுள் மோதின, தணிந்து அமர்ந்தன, பின் மீண்டும் கிளர்ந்தன. பொங்கிப் பொங்கித் தணிந்த எண்ணங்களால் உண்டான அயர்வில் அப்படியே மரத்தடியில் கண்ணுறங்கிப் போனான்.

குரல்கேட்டு வீட்டுக்குள்ளிருந்து வந்தவன் வாசலில் மரத்தைப் பார்த்தான். பெரிய அகில் மரம், அத்தனைப் பெரிய மரத்தில் அதற்குமுன் அவன் வேலை செய்தது இல்லை, ஏன் பார்த்ததுகூட இல்லை.  அருகே ஒரு முதியவர் நின்றிருந்தார். பெரிய படகு ஒன்று செய்ய வேண்டும் என்றார். “படகா? இந்த ஊரிலா?” அவன் சிரித்துவிட்டான். “அதுவும் அகிலிலா? உங்களுக்கொன்றும் பைத்தியமில்லையே?” முதியவர் சிரிக்கவில்லை, பதிலேதும் சொல்லவுமில்லை. அவன் இதற்குமுன் படகுகள் செய்ததில்லை. முணுமுணுப்பாக அவரிடம் சொன்னான், “நீங்கள் சீசெரியாவுக்குப் போகலாமே. அங்கே படகுகள் செய்வதற்கு நிறையப்பேர் உண்டு.” பதில் பேசாமல் அவர் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார். நீண்ட மௌனம். அவரை எப்படி எதிர்கொள்வதென அவனுக்குத் தெரியவில்லை. அவர் முகத்தைப் பார்க்க முடியாமல் தலைதாழ்த்திக்கொண்டான். பையை எடுத்து மெதுவாக அவர் பதினைந்து வெள்ளிக்காசுகளை எண்ணினார். அவற்றை மரத்தின்மீது வைத்துவிட்டு, மீதியை வேலை முடிந்ததும் தருவேன் என்றவராய்ப் பதிலை எதிர்பாராது சென்றார்.

அவன் விக்கித்து நின்றான். ஆனால் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவன்போல வேலையை ஆரம்பித்தான். மேற்புறத்தை மேலோட்டமாக இழைத்துவிட்டு, மரத்தைத் தோராயமாகப் படகு வடிவில் வாளும் கோடரியும் கொண்டு வகிர்ந்தான். கடுமையான வேலைதான் ஆனால் ஏனோ அவனுக்குச் சோர்வு தட்டவில்லை. புறவடிவை அளவீடுகளுடன் அமைத்தபின் படகின் வயிற்றைக் குடைந்தான். குடைவது ஆனந்தமாயிருந்தது. வெளிர் சிவப்பு வண்ண மரச்சீவல்கள் அவனைச் சுற்றிக் குவிந்தன. ரம்மியமான மணம் சூழ அவன் இழைத்துக் குடைந்தபடியேயிருந்தான். எவ்வளவு நேரமாகக் குடைந்துகொண்டிருந்தான் எனத்தெரியாது. அவனுயரத்தைத் தாண்டி குவிந்திருந்த மரச்சீவல்களுக்கு வெளியே வந்தான். அவனுக்கு நிறைவு, வேலை முடிந்துவிட்டிருந்தது. ஆனால் படகு எங்கே? இழைத்து இழைத்து கடைசியில் ஒன்றுமில்லாமல் வெறும் மரச்சீவல் குவியல்தான் இருந்தது. அவன் திடுக்கிட்டு விழித்தான்.

லிவ மரத்தின் நிழல் எதிர்த்திசைக்குப் போய்விட்டிருக்க கண்கூச சூரியனைப் பார்த்தான். தாங்க முடியா விகாசம். “எளியவனுக்கு ஏன் இத்தனை ஒளி, துளிக் கிரணத்தில் என்னைக் கழுவிப் பொலிவடைவேனேமனம் விம்ம முணுமுணுத்தான். காபிரியேல் எல்லாருக்கும் பொதுவான ஒரு கனவுதானே. எல்லோர் கனவிலும் ஒரு காபிரியேல் இருக்கிறான். பெரிய அகில் மரங்களைத் தந்து படகுகள் செய்யச் சொல்கிறான். உன் கனவுக்குத் துணைநிற்பேன் என் அருமை மணையாளே. நம் குழந்தையை வளர்த்து இவ்வுலகின்முன் நிறுத்துவேன்.

பின்வந்த நாட்களில் கர்ப்பிணியான அவளைத் தன் கைகளில் தாங்கினான். வரவிருக்கும் மகவுக்கென சிறிய மரச்சொப்புகள் செய்தான். அலங்காரமாக ஒரு தொட்டிலும். அவனது சொப்புகளைப் பார்த்து அவள் சிரித்தாள்.

 

டையணத்தின் இடையில் ஒருநாள் தோராவையும் பத்துக்கட்டளைகளையும் படித்துத் தேர்ந்த ராபி ஒருவர் அவர்களோடு சேர்ந்துகொண்டார். சீஸரின் இந்த மக்கள் கணக்கெடுப்பை அவரும் விரும்பவில்லை, அதிலும் அவரவர் தமது மூதாதைகள் ஊருக்குச் சென்று கணக்கு ஒப்புவிக்க வேண்டுமென்பது பைத்தியக்காரத்தனம் என்றார். உரையாடலில் அதிகமும் அவரே பேசினார், விஷய ஞானமும் சமுதாய விமர்சனமும் கலந்த உற்சாகமூட்டும் பேச்சு அது. பெண்களைப் பற்றிய பேச்சு வந்தபோது தல்மூட்டிலும், மிட்ராஸிலும் என்ன சொல்லியிருக்கிறது என நுணுகி அறிந்த அவர் சொன்னார்.  நமது மதம் பெண்ணை என்னவாக நினைக்கிறது? அவள் ஆணின் உடமை. அவள் அவனுக்கு ஒரு மேலங்கி, மட்டக்குதிரை, புளிக்காத ஒரு கோப்பை காடி அல்லது இவை போன்றதொரு ஏதாவதொரு உருப்படி. சிலநாட்கள் முன்பு திபேரியாஸில் ஓர் இளம்பெண்மீது அவர்கள் கல்லெறிந்துகொண்டிருந்தார்கள். தன் வயிற்றை நிறைக்க உடலை விற்கும் அபலை. இழிபிறவிகளே, இருவர் சேர்ந்து செய்வதுதானே விபச்சாரம்? நான் அவர்களைப் பார்த்துக் கத்தினேன். அந்த ஆண் எங்கே? இங்கிருப்பவற்றில் பாதிக் கற்கள் அவனுக்கானவையல்லவா? என்மேலும் சில கற்கள் விழுந்தன. அன்றுமாலையே மனம் சோர்ந்தவனாய் கெனசரேத் கரையில் நடந்து என் நடோடிப்பாதையை அடைந்தேன்.

ராபி குடிக்கணக்கு ஒப்படைக்க நடக்கும் கூட்டத்தாரில் ஒருவர் இல்லை, மக்களோடு சேர்ந்து நடக்கக் கிடைத்த பாதையில் தன்னை நுழைத்துக்கொண்டவர். அவரது கோபத்தில் நியாயமிருப்பதை அவன் உணர்ந்தான். மெசியா வந்தபின் எல்லாம் மாறிவிடுமல்லவா எனக் கேட்க நினைத்தான், ஆனால் அதற்கு அவர் என்ன பதில் சொல்வார் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. ராபியின் பேச்சு அவனுக்கு ஒரு சம்பவத்தை நினைவுபடுத்திவிட்டது.

நண்பர்களுடன் வேலைக்காக அவன் செஃபோரிஸ் சென்றுகொண்டிருந்த ஒருநாள் பாதையின் இடப்புறம் பராமரிப்பின்றிக் கிடந்த பெரிய ஒலிவத்தோட்டத்திலிருந்து வெளியேறி முழுக்கப் போர்த்தியவர்களாய் நாலைந்து பேர் அவசரம் அவசரமாய் அவர்கள்முன் சாலையைக் கடந்தார்கள். விந்தி நடந்த நடை, கந்தற்போர்வைகள், கடுமையான சீழ் நாற்றம். தொழுநோயாளிகள் என்பது புரிந்தது. ஊருக்கு வெளியே துரத்தப்பட்ட அவர்கள் இந்நேரத்தில் வெளியே வரக்கூடாது. வந்தாலும் கைமணியை ஒலித்து எச்சரித்தபடிதான் வரவேண்டும்.

கேடுகெட்டப் பன்றிகள்”. அவனோடு வந்தவர்களில் அருவருப்புடன் ஒருவன் கத்தினான். விந்தி நடந்த கூட்டத்தில் ஒருவன் மட்டும் தயங்கி நின்று அவர்களை நோக்கித் திரும்பினான். பழுத்துப் பளபளத்து அமுங்கிக் கிடந்த மூக்கு, இடது கை சுண்டுவிரலைச் சுற்றியிருந்த துணி சீழில் நனைந்திருந்தது. ஆனால் கண்களில் மட்டும் குன்றாத ஒளி.

ஏய், மனிதனே. உடல் ஷீனமடைந்த பன்றியை ஊரைவிட்டு துரத்துவதில்லை சக பன்றிகள், தெரியுமா?” ஓர் இளக்காரச் சிரிப்புச் சிரித்தவன் கையிலிருந்த காய்ந்த ரொட்டியைக் கடித்து மென்றான். “சீக்கிரமே மெசியா வருவார். பன்றிகளை மனிதராக்குவார். உன்போன்ற மனிதரை சீழ்ப்பிடித்த பன்றிகளாக்குவார்.” போர்வைக்குள்ளாக இன்னொரு கையில் மறைத்துவைத்திருந்த மணியை எடுத்து வெறிகொண்டவன் போல ஒலித்துக்கொண்டே ஆங்காரச் சிரிப்புடன் விந்தி விந்தி நடந்துபோய் தன்கூட்டத்தாருடன் சேர்ந்துகொண்டவன் அங்கிருந்து கத்தினான். “அகஸ்டஸ் சீர் குடிக்கணக்கெடுக்கப் போகிறானாமே, சீழ்வடியும் புண்களுக்கு அதில் இடமிருக்கிறதா என்று கேட்டுச்சொல்.” அவன் கூட்டாளிகளும் அவனோடு சேர்ந்து கெக்கலித்தனர்.

 

ழுதைமீது மனைவி அமர்ந்திருக்க அதன் கயிற்றைப் பிடித்தவாறு முன்னே நடந்தவனது மனதில் பலவித சிந்தனைகள். மத ஈடுபாடு கொண்டு ஆசாரங்களைக் கடைபிடிப்பவன்தான் அவன், ஆனாலும் மற்ற யூதர்கள் போல மெசியா வருவாரென்ற நம்பிக்கையை லட்சியக் கனவுபோல நெஞ்சில்  சுமந்து திரிபவனல்ல. இயல்பிலேயே கனவுகளுக்கு வெகு அப்பால் இருப்பவன். ஓய்வுநாளில் செபக்கூடத்துக்கு வெளியே நின்று மெசியாவே விரைந்து வந்து என்னைக் காப்பாற்றும் என அரற்றுவோரை சிறு நகைப்புடன் கடந்துபோவான். யோர்தானின் இடையளவு நீரோட்டத்தில், மண்டிய நாணற்புதர்களருகே நின்றபடி திருமுழுக்கு வழங்கும் நாடோடியைக் கூட்டம் கூட்டமாய் போய்ப்பார்த்து, வரவிருப்பவர் இவர்தானோ என சம்சயம் கொண்டவர்களைப் பார்த்தும் சிரித்தான். நல்லவேளை வெட்டுக்கிளிகளைத் தின்று காட்டுத்தேனைக்குடித்த அந்தக் காட்டுவாசி மெசியா நானல்ல எனச் சொல்லிவிட்டான். வாழ்வின் நம்பிக்கைகளை தச்சுப்பட்டறையிலும் தன் கைத்திறனிலும் வைத்திருந்தான். இருப்பு எளிய சூத்திரம், கனவுகளும் லட்சியங்களும் இல்லாத தேருக்குப் பூட்டும் சக்கரங்கள் என்று வாழ்ந்தான். வாழ்வெனும் கைவண்டியை முணுமுணுப்பின்றி தானே இழுத்தான்.

ஆனால் அந்த ராபியின் பேச்சு அவனது அறையின் இதுவரை திறவாத ஒரு சன்னலைத் திறந்துவைத்தது போலிருந்தது. செஃபோரிஸ் போகும் வழியில் கண்ட தொழுநோயாளிகள், அன்றொருநாள் கல்லடிபட்டுத் தசை கிழிந்து இறந்துகிடந்த விலைமகள் என அவனுக்குள் வாழ்வின் பிற பக்கங்கள் தெரியத் தொடங்கின. வாழ்வு எல்லோருக்கும் ஒன்றுபோல் இல்லையென்பது, சரியாகச் சொன்னால், வாழ்வை எல்லோரும் ஒன்றுபோல வாழ வகையில்லையென்பது பெரிய அநீதிதானே? அதைச் சரிசெய்யும் ஒரு மீட்பர் தேவைதானோ? மெசியாவே என மெல்ல முணுமுணுத்தான், அவனுக்குள் மெல்லிய அதிர்வொன்று பரவியது. அன்று ஒலிவமர நிழலில் கண்ட கனவுக்குப் பிறகு போல மனம் விகசித்து நின்றது. இவளை மணந்தது முதலான சம்பவங்கள் யாவும் அவன் நினைவில் சுழன்று வந்தன. தச்சுப்பட்டறையின் மரச்சட்டங்கள் தாமே மேலெழுந்தன. குறுக்கும் நெடுக்குமாய் மிதந்துவந்த அவை தம் ஒழுங்கில் ஒரு சட்டகமாகி நின்றன.  அச்சட்டகம் குறிப்புணர்த்துவது அவனுக்குப் புரிந்தார்ப் போலிருந்தது, புரியாதது போலுமிருந்தது.

விரைவிலேயே அவர்கள் பெத்லகேம் வந்து சேர்ந்தனர். நெடிய ஏழுநாள் பயணம் முடிவுக்கு வந்திருந்தது. நல்லவேளை வழியில் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. ஆனால் எல்லாமே ஏதோவொரு திட்டத்தின்படியே நடப்பது போலிருந்தது. பெத்லகேமின் சத்திரங்கள் நிரம்பி அவர்களுக்கு இடமில்லாமல் போனதில்கூட ஏதோவொரு பொருளிப்பதைக் கண்டான். கடைசியில் யார்வீட்டுத் தொழுவிலோ இடம் கிடைத்தபோது அவனும் அவளும் மகிழ்வுடன் அங்கே தங்கினர்.  சொல்லிவைத்ததுபோல அன்றிரவே அவளுக்கு பேறுநேரம் வந்தது. அவளிடம் சிறிதும் அச்சமோ கலவரமோ இல்லை. நானே பார்த்துக்கொள்வேன் என்று அவள் சொன்னதும் அவன் வெளியே வந்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். இருந்தும் அவன் மனம் பரபரக்கவே செய்தது. மனதுள் அந்த ராபியை நினைத்து சாந்தமடைய முயன்றான். அந்நேரம் நிரம்பி வழிந்த சத்திரங்களின் ஓசைகள் மெல்லத் தணிந்து பாடலொன்று உயர்ந்து ஒலித்தது. ”விடியலின் வயிற்றிலிருந்து உம் இளமையின் பனித்துளியைப் பெறுவீர்...” என்ற தாவீதின் பாடலை இழுத்து இழுத்துப் பாடிக்கொண்டிருந்தான் திராட்சைமதுவின் பிடியிலிருந்த இரவுப் பாடகனொருவன்.

நாழிகை நேரம் கடந்திருக்கும். படபடப்பு நீங்காதவனாய் தொழுவத்துள் நுழைந்தான். விகாசம் பொங்கும் முகத்துடன் அவனைப் பார்த்து முறுவலித்தாள். குழந்தையைக் கந்தையில் சுற்றி தீவனத்தொட்டிக்குள் கிடத்தியிருந்தாள். இளங்கன்றுகள் இரண்டு குழந்தையைப் பார்த்தவாறே அசைபோட்டுக்கொண்டிருந்தன. முறுவலிப்புடன் அவன் அவளை வினாக்குறியோடு நோக்கினான்.

தேவனது குழந்தை, நம் மகள்என்றாள்.

மனம் விகசிக்க தொட்டியருகே சென்று குழந்தையைக் கையிலேந்தினான். விடியவிருந்த இரவின் குளிரில் அந்தத் தளிருடல் நடுங்கியது.  ஏதோ நினைத்தவன் குழந்தையை உச்சிமுகர்ந்து தேவகுமாரத்திஎன்றான். அதைக்கேட்டு முகம் மலர அவன் மனைவி புன்னகைத்தாள். அப்போது சற்றுத்தள்ளி சாமக்காவலில் இருந்த இடையர் தீமூட்டிக் குளிர்காய்ந்துகொண்டிருக்க, தீயேறி இறுகி முறிந்த மரத்துண்டிலிருந்து தீப்பொறியொன்று கிளம்பி மிதந்து மிதந்து ஆகாயத்துக்கு ஏறத் தொடங்கியது.

----------------

கல்குதிரை - இளவேனிற்கால இதழ் 2020

Monday, 31 October 2016

மூன்று ஜெர்மானிய அதிபுனைவுகள்


மூன்று ஜெர்மானிய அதிபுனைவுகள்

ஹருக்கி முராகாமி


1.பாலுறவுப் படங்களும் அதுபோன்ற குளிர்கால அருங்காட்சியகமும்.

பாலுறவு. உடலுறவு. கலவி. கூடல். இன்னும் நிறைய வார்த்தைகள் உண்டு, ஆனால் என் மனதில் நான் எண்ணிக் கொள்வது (பேசப்படும் வார்த்தை, செயல், நிகழ்வு இவற்றிலிருந்து) ஒரு குளிர்கால அருங்காட்சியகத்தைத்தான்.

குளிர்காலத்தில் ஒரு அருங்காட்சியகம்.

ஆமாம், ‘உடலுறவிலிருந்துநீங்கள்அருங்காட்சியகத்துக்குவர நடுவில் நிறைய தொலைவைக் கடக்க வேண்டும். நீங்கள் எண்ணற்ற சுரங்கப்பாதைகளைக் கடந்து வரவேண்டும், அலுவலகக் கட்டடங்களுக்கிடையே முன்பின்னாகச் சுற்றிவர வேண்டும், ஒரு குழப்பமான ஸ்திதியைத் தாண்டி பருவகாலங்கள் பறந்து செல்ல அனுமதிக்க வேண்டும். இவையெல்லாம் ஒரு கற்றுக்குட்டிக்குத்தான் பெரும் இடையூறாகத் தோன்றும், ஒருமுறை நீங்கள் நினைவின் முழுச் சுற்றையும் முடித்துவிட்டீர்களானால், நீங்கள் உணரும் முன்பே  உடலுறவில்இருந்து குளிர்கால அருங்காட்சியகத்துக்கான வழியைக்  கண்டறிந்துகொள்வீர்கள்.

நான் பொய் சொல்லவில்லை. உங்களால் முடியும். நான் இன்னும் சற்று விளக்கலாம் என நினைக்கிறேன்.

பாலுறவு நகர்ப்புற உரையாடலாக மாறுகையில், உடலுறவின் மேல் கீழான அசைவுகள் இருட்டை நிரப்புகையில், எப்போதும் போல், நான் குளிர்கால அருங்காட்சியகத்தின் நுழைவாயிலில் நிற்கிறேன். என் தொப்பியை தொப்பிக்கான அலமாரியில் தொங்க விடுகிறேன், என் மேலங்கியை அதற்கான தண்டில் தொங்கவிடுகிறேன், என் கையுறைகளை ஒன்றன்மீது ஒன்றாக வரவேற்பு மேசையின் மூலையில் வைக்கிறேன், பிறகு, கழுத்தைச் சுற்றியிருக்கும் துணி நினைவுக்கு வர அதனை நீக்கி என் மேலங்கிமீது வைக்கிறேன்.

குளிர்கால அருங்காட்சியகம் ஒன்றும் மிகப்பெரியது அல்ல. அதிலுள்ளவை, அவற்றின் வகைப்பாடு, அதன் செயல்பாட்டுத் தத்துவம் யாவும் எந்த அளவுகோல்படி பார்த்தாலும் தொழில்முறை நேர்த்தியற்றவை. முதலாகப் பார்க்க அங்கு எந்த ஒருங்கிணைக்கும் கோட்பாடும் இல்லை. எகிப்திய நாய்க் கடவுளின் சிறு சிலை, மூன்றாம் நெப்போலியன் பயன்படுத்திய ஒரு பாகைமானி, சாக்கடல் குகைகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு மணி ஆகியன அங்கு இருந்தன. காட்சிக்கு வைக்கப்பட்டவற்றை ஒருங்கிணைத்துப் பார்க்க எந்த வழியுமில்லை, அவை கூன்வளைந்து, எக்காலத்துக்கும் குளிராலும் பட்டினியாலும் பீடிக்கப்பட்ட அனாதைகளைப்போல கண்மூடி தமது பெட்டிகளுக்குள்  கிடந்தன.

உள்ளே  அருங்காட்சியகம் மிகவும் அமைதியாய் இருந்தது. அருங்காட்சியகம் திறக்க இன்னும் சற்று நேரமிருந்தது. என் மேசையிலிருந்து  வண்ணத்துப் பூச்சி வடிவத்திலான உலோகச்சாவியை எடுத்து நுழைவாயிலுக்கு அருகில் இருக்கும் தாத்தா கடிகாரத்துக்குச் சாவி கொடுக்கிறேன். முட்களைச் சரிசெய்து சரியான நேரம் வைக்கிறேன். நான்-அதாவது, நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ளவில்லையாயின்-இங்கு அருங்காட்சியகத்தில் வேலை செய்கிறேன்.

எப்போதும் போல அமைதியான காலை வெளிச்சமும் அதனினும் அமைதியான பாலுறவு எண்ணமும் வாதுமை எண்ணெய் வாசனைபோல அருங்காட்சியகத்தை நிறைக்கின்றன. திரைச்சீலைகளை நீக்கியபடி, ரேடியேட்டர் வால்வுகளைத் திறந்தபடி நான் எனது சுற்றுகளை மேற்கொள்கிறேன். பிறகு எங்களது ஐம்பது-ஃபெனிங் துண்டுப் பிரசுரங்களை அழகாக அடுக்கி வரவேற்பறை மேசையில் பரப்பி வைக்கிறேன்.

போதுமான அளவுக்கு ஒளியை சரிசெய்கிறேன் (உதாரணமாகச் சொல்லவேண்டுமென்றால் குட்டி வெர்செய்ல்ஸ் அரண்மனையில் -6 பொத்தானை அழுத்தினால் அரசரது அறை ஒளி பெறும் என்பன போல). நீர்க் குளிரூட்டியைச் சரிபார்க்கிறேன். பஞ்சடைத்த அய்ரோப்பிய ஓநாயை குழந்தைகள் தொடாதிருக்கும் பொருட்டு சற்றுப் பின்னால் தள்ளி வைக்கிறேன். கழிப்பறையில் திரவ சோப்பை நிறைத்து வைக்கிறேன். நான் நினைவுபடுத்திச் செய்யவில்லையென்றாலும் ஒன்றன்பின் ஒன்றாக இந்தப் பணிகளை என் உடல் தானாகவே செய்துவிடும். இது, வேறு வார்த்தைகளில் சொன்னால், எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை, அது என்னுடைய என்தன்மை.

இவற்றுக்கெல்லாம் பிறகு நான் அந்தச் சிறிய சமையலறைக்குச் சென்று பல் துலக்குகிறேன். குளிர்பதனப் பெட்டியிலிருந்து பாலை எடுத்து கையிலெடுத்துச் செல்லக்கூடியதான சிறு அடுப்பின்மீது கைப்பிடிக் கிண்ணத்தில் வைத்துச் சூடுபடுத்துகிறேன். மின் அடுப்பு, குளிர்பதனப் பெட்டி, பல்துலக்கி இவையெல்லாம் எந்த வகையிலும் அசாதாரணமானவைகளல்ல (இவை அம்மா-அப்பா மின்சாதனக் கடையிலும் தெருமூலை வீட்டு உபயோகச் சாதனங்கள் கடையிலும் வாங்கப்பட்டவை), ஆனால் அருங்காட்சியகத்தில் இருப்பதால் அவையும் புராதனத்தன்மை தோன்றக் காணப்பட்டன. பாலும் புராதனப் பசுவிடம் கறந்த புராதனப் பாலைப் போலத் தோன்றுகிறது. சிலநேரம் எல்லாமே குழம்பிவிடுகிறது. அதாவது, இந்தக் கருத்தமைவின்படி, அருங்காட்சியகம் வழமையை நீக்கிவிடுகிறது என்பது மிகச்சரியாக இருக்கும், அல்லது வழமை அருங்காட்சியகத்தை நீக்கிவிடுகிறதா?

பால் சூடானதும் அதை எடுத்துக் கொண்டு வரவேற்பறை மேசைக்கு முன்பாக அமர்கிறேன். பாலருந்தியபடியே அவற்றுக்கான இடத்தில் செருகி வைக்கப்பட்ட கடிதங்களை எடுத்துப் படிக்கிறேன். கடிதங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படும். முதல் வகையில் குடிநீர் கட்டணச்சீட்டு, அகழ்வாய்வு வட்டத்தின் செய்திமடல், கிரேக்கத் தூதரகத்தின் தொலைபேசி எண் மாற்றம் குறித்த அறிவிப்புக் கடிதம் இவற்றோடு பிற நிர்வாக ரீதியிலான கடிதங்கள். அடுத்து தங்களது மனப்பதிவுகள், குறைகள், பாராட்டுகள், ஆலோசனைகள் போன்றவற்றைத் தாங்கிவரும் அருங்காட்சியகத்துக்கு வந்துபோனவர்களிடமிருந்தான கடிதங்கள். மனிதர்கள் பலவிதமான எதிர்வினைகளுக்கும் வந்து சேரும் பலவீனமுள்ளவர்கள் என நினைக்கிறேன். அதாவது இந்த விஷயங்கள் மிகப் பழமையானவை. ஹன் காலத்து மதுக்குடுவையை மெசபடோமிய சவப்பெட்டிக்கு அருகே வைப்பது அவர்களுக்கு எவ்வளவு எரிச்சலூட்டும் என நினைத்துப் பாருங்கள்!  ஆனால் அருங்காட்சியம் அவர்களுக்கு குழப்பமும் எரிச்சலும் ஊட்டவில்லையென்றால், வேறு எங்கே போய் அவர்கள் எரிச்சலடைவார்கள்?

மேலோட்டமாகக் கடிதங்களை இந்த இரண்டு வகைகளில் பிரித்தபின், பாலை அருந்தி முடிக்க மேசை இழுப்பறையிலிருந்து பிஸ்கட்டுகளை எடுக்கிறேன். பிறகு மூன்றாவது வகைக் கடிதத்தைப் பிரிக்கிறேன். இது உரிமையாளரிடமிருந்தான கடிதம், அதனாலேயே மிகவும் சுருக்கமானது, அடர் வண்ணக் காகிதத்தில் கறுப்பு மையால் எனக்கான கட்டளைகள் எழுதப்பட்டிருக்கும்.

1. காட்சி எண் 36ல் இருக்கும் ஜாடியைப் பொதிந்து இருப்பறையில் வைக்கவும்.
2. இதற்குப் பதிலாக A52ல் இருக்கும் சிற்பத்தாங்கியை (சிற்பத்தை விடுத்து) எடுத்து Q21ல் காட்சிக்கு வைக்கவும்.
3. வெளி 76ல் மின்விளக்கை மாற்றவும்.
4. அடுத்த மாத விடுமுறை நேரங்களை நுழைவாயிலில் ஒட்டவும்.

ஆமாம், எல்லாக் கட்டளைகளையும் நான் நிறைவேற்றுகிறேன்: கேன்வாஸில் பொதிந்து ஜாடியை இருப்பறையில் வைக்கிறேன்; இரக்கமற்றுக் கனக்கும் சிற்பத்தாங்கியை எடுத்துக்கொண்டு போய், கிட்டத்தட்ட எனக்கு விரைவாதமே வந்துவிட்டது, காட்சிக்கு வைக்கிறேன்; நாற்காலிமீது நின்றபடி வெளி 76ல் மின்விளக்கை மாற்றுகிறேன். எண் 36ல் இருக்கும் ஜாடி அருங்காட்சியகம் செல்லும் ஒருவரது மிகப்பிடித்த காட்சிப் பொருளாக இருந்தது. இரக்கமற்றுக் கனக்கும் சிற்பத்தாங்கி தன்மட்டில் காண்பதற்கு மோசமான ஒரு பொருள், நான் மாற்றிய விளக்கு அதன்மட்டில் புதிதானது. என் சிந்தனையை ஆக்கிரமிப்பவை இது போன்ற விஷயங்கள் அல்ல. சொல்லப்பட்டவற்றைக் கச்சிதமாகச் செய்துமுடித்த பிறகு என் தட்டுக்களை சுத்தம் செய்துவிட்டு பிஸ்கட் டப்பாவை உள்ளே வைக்கிறேன். அருங்காட்சியகம் திறக்கும் நேரம் நெருங்கிவிட்டது.

கழிப்பறைக் கண்ணாடியில் தலைசீவிக் கொள்கிறேன். கழுத்துப் பட்டையின் முடிச்சைச் சரிசெய்கிறேன், என் குறி சரியான வகையில் விரைத்திருக்கிறதா எனப் பார்த்துக் கொள்கிறேன். பிரச்சனை ஒன்றுமில்லை.
* ஜாடி எண் 36, சரி.
* சிற்பத்தாங்கி A52, சரி.
* மின்விளக்கு, சரி.
* விறைப்பு, சரி.

அருங்காட்சியகக் கதவின் மீது பாலுணர்வு ஒரு அலையைப் போல் மோதுகிறது. தாத்தா கடிகாரம் சரியாக காலை 11 மணியைக் காட்டுகிறது. மெதுவாகத் தரையை நாவால் நக்குவதுபோல குளிர்கால வெளிச்சம் மிக மென்மையாக அறைக்குள் பரவுகிறது. தரையில் மெதுவாக நடந்து சென்று தாழ்ப்பாளை நீக்கிக் கதவைத் திறக்கிறேன். கதவைத் திறந்த கணமே எல்லாம் மாறுகிறது. பதினான்காம் லூயி அறையின் சிறு விளக்குகள் ஒளிர்கின்றன, கைப்பிடிக் கிண்ணம் தன் வெப்பத்தை இழக்கிறது, ஜாடி எண்36 மெல்லிய, ஜெல்லி போன்ற ஒரு உறக்கத்துக்குள் நழுவுகிறது. மேலே சந்தடியான சிறு மனிதர்கூட்டம் வட்டமாகத் தமது பாத ஒலிகளை எதிரொலிக்கிறது. மனிதர்களைப் புரிந்துகொள்ளக்கூட நான் எத்தனம் கொள்ளவில்லை. வாசல் வழியில் எதுவோ நிற்கிறது, அது பற்றி எனக்கு அக்கறையில்லை. என்னைப் பொறுத்தவரை அங்கே நிற்கும் உரிமையை அவர்கள் தக்கவைத்துக் கொள்ளலாம். பாலுறவைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் நான் குளிர்கால அருங்காட்சியகத்தில் இருக்கிறேன், நாம் எல்லோரும் அங்குதான் இருக்கிறோம், அனாதைகளைப் போல முதுகு வளைத்து, சிறு கதகதப்பு வேண்டி. கைப்பிடிக் கிண்ணம் சமையலறையில் இருக்கிறது, பிஸ்கட் டப்பா மேசை இழுப்பறையில், நான் குளிர்கால அருங்காட்சியகத்தில்.
---------------

2.ஹெர்மன் கோரிங் கோட்டை, 1983.

பெர்லினில் மலையைக் குடைந்து தனது பெரும் கோட்டையை நிர்மாணித்தபோது ஹெர்மன் கோரிங் மனதில் என்ன நினைத்திருப்பார்? மலையைக் குடைந்தெடுத்து அந்த இடத்தில் கான்கிரீட் கொண்டு நிரப்பினார். பரவிய அந்தியொளியில் அச்சமூட்டும் கரையான் புற்றைப் போல அது பளிச்சென்று தெரிந்தது. சிரமப்பட்டு அதன் செங்குத்துச் சரிவில் ஏறி உச்சியில் நின்றபோது கீழே தெருவிளக்குகள் எரியத் தொடங்கியிருந்த கிழக்கு பெர்லினின் மையப்பகுதியைப் பார்த்தோம். எல்லாத் திசை பார்த்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் தலைநகரை நெருங்கிவரும் எதிரிப்படைகளுக்கு குறிப்புணர்த்தவும் அவர்களை விலகி ஓடவும் செய்திருக்க வேண்டும். எந்த வெடிகுண்டும் அக்கோட்டையின் தடித்த சுவர்களைத் தகர்த்திருக்க முடியாது, எந்த பீரங்கி வண்டியும் செங்குத்தான அதன் சரிவுகளில் ஏறியிருக்க முடியாது.

கோட்டையில் தலைவரது சிறப்புப் பாதுகாப்புப் படையினர் 2000 பேருக்கு பல மாதங்களுக்குப் போதுமான இருப்பில் உணவு, தண்ணீர், ஆயுதங்கள் ஆகியன இருந்தன. ரகசிய சுரங்கப்பாதைகள் புதிர்வழிபோல குறுக்கும் மறுக்குமாகச் சென்றன. அற்புதமான குளிரூட்டி ஒன்று கோட்டைக்குள் தூய காற்றை அனுப்பியது. ரஷ்யர்களோ கூட்டுப்படைகளோ தலைநகரைச் சுற்றிவளைத்தாலும்கூட கோட்டைக்குள் இருப்பவர்கள் அச்சப்படத் தேவையில்லை என ஹெர்மன் கோரிங் பெருமைப்பட்டுக்கொண்டார்; தகர்க்க முடியாத இந்தக் கோட்டைக்குள் அவர்கள் பத்திரமாக இருப்பார்கள்.

ஆனால் பருவகாலத்தின் கடைசிப் பனிச்சரிவுபோல 1945ம் ஆண்டின் வசந்தகாலத்தில் ரஷ்ய ராணுவம் அதிரடியாக பெர்லினுக்குள் நுழைந்தபோது ஹெர்மன் கோரிங் கோட்டை அமைதியாக இருந்தது. கோட்டையை முற்றாக அழிக்க வேண்டி ரஷ்ய ராணுவம் அதன் சுரங்கப்பாதைகளில் தீமூட்டிகளை எறிந்து வெடிபொருட்களை நிரப்பி வெடித்தது. ஆனால் கோட்டையை அழிக்க முடியவில்லை. அதன் கான்கிரீட் சுவர்களில் சில விரிசல்கள் மட்டும் விழுந்தன.

ரஷ்ய வெடிகுண்டுகளைக்கொண்டு ஹெர்மன் கோரிங்கின் கோட்டையைத் தரைமட்டமாக்க முடியாது,” எனது இளம் கிழக்கு ஜெர்மானிய வழிகாட்டி சிரித்தான். “அவர்களால் ஸ்டாலின் சிலையையும் தகர்க்க முடியாது!” 1945 பெர்லின் சண்டையின் எஞ்சியிருக்கும் தடயங்களைக் காட்டியபடி பலமணி நேரமாக என்னை இந்த நகரில் அவன் வழிநடத்திக் கொண்டிருக்கிறான். பெர்லினின் இரண்டாம் உலகப்போரின் பின்விளைவுகளைக் காணும் வினோத ஆவல் கொண்டவன் என என்னை எண்ணிக்கொண்டானா? என்னால் ஊகிக்க முடியவில்லை. ஆச்சரியப்படும் வகையில் நான் ஆர்வத்துடனிருந்தேன், எதைப் பார்க்க நான் விரும்பினேன் என்பதைச் சொல்வது சரியாக இருக்காது என்பதால், பின் அந்தி வரை நகரத்தில் அவனோடு சுற்றினேன். அன்று ஃபென்சிட்டொம் அருகேயுள்ள உணவகத்தில் மதிய உணவு உண்ணச் சென்றபோதுதான் அந்த வழிகாட்டியைச் சந்தித்தேன்.

எங்கள் இருவரின் கூட்டு பொருத்தமற்றதாய் இருந்தாலும் என் வழிகாட்டி திறமைசாலியாகவும் என்மட்டில் வெளிப்படையாகவும் இருந்தான். அவனைப் பின்பற்றி கிழக்கு பெர்லினின் போர்க்களங்களைப் பார்த்து வந்தபோது போர் என்னவோ சிலமாதங்களுக்கு முன்புதான் நடந்து முடிந்ததுபோலத் தோன்றியது. நகரமெங்கும் குண்டு துளைத்த அடையாளங்கள்.

இங்கே, இதைப் பாருங்கள்,” என் வழிகாட்டி சொன்னான். குண்டு துளைத்த சில ஓட்டைகளைக் காட்டினான். “இதில் ரஷ்ய குண்டுகள் எவை, ஜெர்மானிய குண்டுகள் எவை எனப் பார்த்த மாத்திரத்திலேயே நீங்கள் சொல்லலாம். ஆழத் துளைத்து கிட்டத்தட்டச் சுவரை இரண்டாக்கியிருப்பவை ஜெர்மானிய குண்டுகள், மேலாட்டமான மற்ற துளைகள் ரஷ்ய குண்டுகளால் ஏற்பட்டவை. தொழில்திறன் வேறுபாடு, தெரிகிறதா?”

நான் சந்தித்த அத்தனை கிழக்கு பெர்லின்காரர்களிலும் அவனது ஆங்கிலம் அதிகம் புரிந்துகொள்ளத் தக்கதாக இருந்தது. “நீங்கள் நன்றாக ஆங்கிலம் பேசுகிறீர்கள்,” என்றேன் பாராட்டும்விதமாக.

நல்லது, கொஞ்ச காலம் நான் மாலுமியாக இருந்தேன்,” என்றான். “கியூபா, ஆப்பிரிக்காவெல்லாம் போயிருக்கிறேன்கருங்கடலில் சிறிது காலம் இருந்திருக்கிறேன். வழியில் கொஞ்சம் ஆங்கிலம் கற்றுக்கொண்டேன். ஆனால் இப்போது நான் கட்டடக்கலைப் பொறியாளன்…”

நாங்கள் ஹெர்மன் கோரிங்கின் கோட்டையிலிருந்து இறங்கினோம், நகரத்தில் சற்று தூரம் நடந்தபின் அன்டர் டின் லின்டனில் இருந்த பியர் விடுதிக்குச் சென்றோம். வெள்ளிக்கிழமை மாலை என்பதாலோ என்னவோ அங்கு மூச்சு முட்டும் கூட்டம்.

இங்கே கிடைக்கும் கோழி இறைச்சி மிகவும் பிரசித்தம்,” வழிகாட்டி சொன்னான். ஆகவே நான் கோழி இறைச்சியும் பியரும் ஆர்டர் செய்தேன். கோழி இறைச்சி ஒன்றும் மோசமில்லை, பியர் அற்புதமாக இருந்தது. அறை கதகதப்பாக இருந்தது, சந்தடியும் கூச்சலும்கூட இனிமையாக இருந்தன.

எங்கள் பரிசாரகி பேரழகி, பார்க்க கிம் கார்னஸ் போலவே இருந்தாள். மென்சாம்பல் கேசம், நீல விழிகள், சிறிய செதுக்கியது போன்ற இடை, அழகான புன்னகை. எங்களது பியர் குவளைகளை, ஒரு பிரம்மாண்ட ஆண் குறியை அவள் எப்படிப் பிடிப்பாளோ அப்படி, வாஞ்சையுடன் பிடித்து எடுத்து வந்தாள். ஒருமுறை டோக்கியோவில் நான் பார்த்த ஒரு பெண்ணை அவள் நினைவுபடுத்தினாள். அவள் இந்தப் பெண்ணைப் போன்றவளில்லை, எந்த வகையிலும் இருவருக்கும் ஒற்றுமையில்லை, ஆனால் எப்படியோ இருவருக்கும் நுட்பமான ஒற்றுமைகள் இருந்தன. ஒருவேளை ஹெர்மன் கோரிங்கின் இருட்டுப் புதிர்வழி இருவரையும் என் மனதில் போட்டுக் குழப்பியிருக்கலாம்.

நாங்கள் நிறைய பியர் குடித்தோம். கடிகாரத்தில் மணி பத்தைக் காட்டியது. நான் பன்னிரண்டு மணிக்கெல்லாம் ஃப்ரெட்ரிச்ஸ்ட்ராஸ ரயில் நிலையத்தில் எஸ் பானில் இருக்க வேண்டும். எனது கிழக்கு ஜெர்மனி நுழைவனுமதி நள்ளிரவோடு காலாவதியாகிறது, ஒரு நிமிடம் தாமதமானாலும்கூட பெரிய பிரச்சனையாகிவிடும்.

 “நகரத்துக்கு வெளியே ஒரு போர் நிகழ்ந்த இடம், அசலான சீரழிவுகளுடன்,” வழிகாட்டி சொன்னான்.
சலனமின்றி நான் பரிசாரகியையே பார்த்துக் கொண்டிருந்தேன், அவன் சொன்னது காதில் விழவில்லை.

 “மன்னிக்கவும்.” அவன் தொடர்ந்தார், “ரஷ்யப் படைகளும் சிறப்புப் பாதுகாப்புப் படைகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன, தெரியுமா? பெர்லின் சண்டையின் நிஜமான உச்சம் அதுதான். பழைய ரயில்பாதை அருகே சிதைவுகள் கிடக்கின்றன, ஆனால் சண்டைக்குப் பிறகு எப்படியிருந்தனவோ அப்படியே இன்னும் கிடக்கின்றன. உடைந்த பீரங்கி பாகங்கள் உள்ளிட்ட எல்லாமும். நண்பரொருவரின் காரை எடுத்துக்கொண்டு விரைவாக அங்கே சென்றுவிடலாம்.”

என் வழிகாட்டியின் முகத்தைப் பார்த்தேன். சாம்பல் வண்ண முரட்டுப் பருத்திக் கோட்டுக்கு மேலாக அந்த முகம் சிறியதாகத் தோன்றியது. அவன் கைகள் இரண்டையும் மேசைமீது வைத்திருந்தான். அவனது விரல்கள் நீண்டு மிருதுவாக இருந்தன, ஒரு மாலுமியினுடையது போலில்லை.

என் தலையை உலுக்கிக்கொண்டேன், “நள்ளிரவுக்குள் நான் ஃப்ரெட்ரிச்ஸ்ட்ராஸ ரயில் நிலையத்தில் இருக்க வேண்டும். என் நுழைவனுமதி காலாவதியாகிவிடும்.”

 “நாளைக்கு?”

 “நாளை காலை நியூரம்பர்க் செல்கிறேன்,” நான் பொய் சொன்னேன்.

அந்த இளைஞனுக்குச் சற்று ஏமாற்றமாகப் போய்விட்டது. அவன் முகத்தில் சட்டென களைப்பு படர்ந்தது. “நாளை நாம் அங்கு சென்றால் என்னுடைய காதலியையும் அவளது தோழிகள் சிலரையும் உடன் அழைத்துப் போகலாம். அவ்வளவுதான்.” விளக்கம் போல அவன் சொன்னான்.

 “, அது மோசம்,” என்றேன். என் உடலின் நரம்புத் தொகுதிகள் அனைத்தையும் இரக்கமற்ற கரம் ஒன்று நசுக்குவது போல உணர்ந்தேன். ஆனால் நான் என்ன செய்ய முடியும்? எனக்குத் தெரியவில்லை. போரால் சிதைவுற்ற விசித்திரமான ஒரு நகரில் முற்றாகத் தொலைந்து போயிருந்தேன். இறுதியில் அந்த இரக்கமற்ற கரம் தளர்ந்தது, ஒரு அலையைப் போல என் உடம்பிலிருந்து விலகிச் சென்றது.

 “அப்புறம், ஹெர்மன் கோரிங்கின் கோட்டை அற்புதம் இல்லையா?” அவன் புன்னகையுடன் கேட்டான். “நாற்பது வருடங்களாக யாராலும் அதை அழிக்க முடியவில்லை.”

ஃப்ரெட்ரிச்ஸ்ட்ராஸ மற்றும் அன்டர் டின் லின்டனின் குறுக்குவெட்டிலிருந்து எல்லாத்திசைகளிலும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. வடக்கே எஸ் பான் நிலையம். தெற்கே சார்லி சோதனைச் சாவடி. மேற்கே பிரான்டன்பர்க் நுழைவாயில். கிழக்கே ஃபென்சிட்டொம்.

 “சரி கவலை வேண்டாம்,” இளைஞன் சொன்னான். “நிதானமாகப் போனாலும்கூடப் பதினைந்து நிமிடங்களில் ரயில் நிலையம் சென்றுவிடலாம். புரிகிறதா, சரிதானே?”

என் கைக்கடிகாரம் இரவு 11.10 எனக் காட்டியது. சரி, நான் சரியாகத்தானிருக்கிறேன், எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன். நாங்கள் கைகுலுக்கிக் கொண்டோம்.

 “பழைய ரயில்பாதைக்குப் போகாததில் வருத்தமா? அப்புறம் அந்தப் பெண்கள்?”

 “ஆமாம், அது வருந்தத்தக்கதுதான்,” நான் சொன்னேன். ஆனால் நாங்கள் அங்கே போகாதது குறித்து அவனுக்கு என்ன வருத்தமிருக்கப்போகிறதுவடக்கு நோக்கி ஃப்ரெட்ரிக்ஸ்ட்ராஸில் நடக்கும்போது 1945ன் வசந்தகாலத்தில் ஹெர்மன் கோரிங் மனதில் என்ன எண்ணியிருப்பார் எனக் கற்பனை செய்ய முயன்றேன். ஆனால் உண்மையில் ஆயிரம் வருட சாம்ராஜ்யத்தின் படைத்தளபதி என்ன நினைத்திருப்பார் என்பதை யாராலும் அறிய முடியாது. நூற்றுக்கணக்கான வெளிறிய எலும்புகளைப்போல, சொல்லப்போனால் போரின் சவத்தைப்போலவே, கோரிங்கின் அழகான ஹைங்கல் 117 ஆயுதந்தாங்கி படைப்பிரிவின் விமானங்கள் உக்ரேனியக் காடுகளில் கிடக்கின்றன.

-------------
3.ஹெர் டபுள்யூவின் அந்தரத் தோட்டம்

முதல் தடவை நான் ஹெர் டபுள்யூவின் அந்தரத் தோட்டத்தைப் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டபோது கடும் மூடுபனி நிறைந்த நவம்பர் காலை வேளையாக இருந்தது.

 “ரொம்பப் பிரமாதமில்லை,” என்றார் ஹெர் டபுள்யூ.

அவர் சொன்னது சரிதான். அந்தரத் தோட்டம் மூடுபனிக் கடலின் மீதாக மிதந்துகொண்டிருந்தது. தோராயமாக அது எட்டு கெஜ நீளமும் ஜந்து கெஜ அகலமும் கொண்டிருந்தது. அந்தரத்தில் நின்றது என்பதைத் தவிர்த்து வழக்கமான ஒரு தோட்டத்தினின்று எவ்வகையிலும் அது வேறுபட்டிருக்கவில்லை. அதை விளக்கிச்சொல்வதென்றால்: நிச்சயமாக அது ஒரு தோட்டம், நிலத்தின் அளவுகோள்களை வைத்துப் பார்த்தால் அது ஒரு மூன்றாந்தர தோட்டம்தான். திட்டுத் திட்டாகப் புற்கள் காய்ந்திருந்தன, பூக்கள் விசித்திரமாக, இயற்கைக்கு மாறானவையாகக் காணப்பட்டன, தக்காளிக் கொடிகள் வதங்கிக் கிடந்தன, அதற்கு ஒரு மரச்சட்ட வேலிகூட இல்லை. அந்த வெள்ளை நிற தோட்ட அறைகலன்கள் ஏதோ அடகுக் கடையிலிருந்து கொண்டு வரப்பட்டவை போலிருந்தன.

 “நான் சொன்னேனில்லையா, இது ஒன்றும் பிரமாதமில்லை,” ஹெர் டபுள்யூ மன்னிப்புக் கேட்பதுபோல சொன்னார். இவ்வளவு நேரமும் அவர் என் கண்களையே பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். எனக்கு பெருத்த ஏமாற்றமெல்லாம் இல்லை, கொடிகள் பற்றி ஏற அழகான கொழுகொம்புகள், நீரூற்றுகள், விலங்கு உருவங்களில் வெட்டப்பட்ட புதர்ச்செடிகள், க்யூப்பிட் சிலைகள் இவற்றை எதிர்பார்த்து நான் வரவில்லை. நான் ஹெர் டபுள்யூவின் அந்தரத் தோட்டத்தைப் பார்க்க வந்தேன், அவ்வளவுதான்.

பகட்டான, தரையோடு பிணைந்த தோட்டங்களைக் காட்டிலும் இது நன்றாகவேயிருக்கிறது,” என்றேன், ஹெர் டபுள்யூ சற்றே ஆசுவாசமடைந்தது போலத் தோன்றினார்.

 “இதை இன்னும் கொஞ்சம் உயர்த்த முடிந்தால் இது நிஜமாகவே ஒரு அந்தரத் தோட்டமாகிவிடும். ஆனால் எல்லாம் மாறாமல் அப்படியே இருக்கின்றன…” என்றார் ஹெர் டபுள்யூ. “சிறிது தேநீர் அருந்துகிறீர்களா?”

 “அது அற்புதமாக இருக்கும்,” நான் சொன்னேன்.

அறுதியிட்டுச் சொல்ல முடியாத உருவம் கொண்ட ஒரு கேன்வாஸை எடுத்தார் ஹெர் டபுள்யூ (சிறு தோள்பை அல்லது கூடை?), அதிலிருந்து ஒரு கோல்மென் அடுப்பு, மஞ்சள் ஒளிர்பூச்சுடைய தேநீர்க் கெண்டி, தெர்மாஸ் குடுவை நிறைய சுடுநீர் இவற்றை எடுத்து தேநீர் தயாரிக்க ஆரம்பித்தார்.

கடுமையான குளிராக இருந்தது. இறகு வைத்துத் தைத்த திடமான ஜாக்கெட்டும் கழுத்தைச் சுற்றி ஸ்கார்ஃபும் அணிந்திருந்தேன், இருந்தும் பிரயோசனமில்லை. நடுங்கியபடி உட்கார்ந்திருக்கையில் எனக்குக் கீழே மூடுபனி தெற்கு நோக்கி நகர்வதைக் கவனித்தேன். மூடுபனியில் மிதந்தபடி முன்பின் தெரியாத பிரதேசத்துக்கு நாங்கள் அடித்துச் செல்லப்படுவதைப்போல உணர்ந்தேன்.

சூடான மல்லிகைத் தேநீர் அருந்தியபடியே இதை நான் ஹெர் டபுள்யூவிடம் சொன்னபோது அவர் மெல்லச் சிரித்தார். “இங்கே வரும் எல்லோருமே இதைத்தான் சொல்கிறார்கள். அதுவும் குறிப்பாக கடுமையான மூடுபனி நாட்களில். குறிப்பாக அப்போதுதான். வடகடலின் மீதாக ஸ்ட்ராட்டோஸ்ஃபியருக்குள் அடித்துச் செல்லப்பட்டுவிடுவோம் என்று.” தொண்டையைச் செருமிக் கொண்டு இன்னொரு சாத்தியத்தையும் சொன்னேன், “அல்லது கிழக்கு பெர்லினுக்குள்.”  “அட, ஆமாம், ஆமாம்,” வாடிய தக்காளிக் கொடியை வருடியபடியே ஹெர் டபுள்யூ சொன்னார். “இதன் காரணமாகத்தான் இதனை நான் ஒரு முழுமையான அந்தரத் தோட்டமாக மாற்ற முடியவில்லை. அதிக உயரம் போனால் கிழக்கு ஜெர்மனி போலீஸார் பதட்டமடைகிறார்கள். தங்கள் கண்காணிப்பு விளக்கையும் இயந்திரத் துப்பாக்கிகளையும் எப்போதும் தோட்டத்தின்மீது திருப்பி வைத்துக்கொள்கிறார்கள்! அவர்கள் சுடுவதில்லை, ஆனாலும் அது ஒன்றும் மகிழ்வானதாக இல்லை.”

 “அவர்கள் சுடமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்,” என்றேன்.

அதோடு நீங்கள் சொன்னது போல தோட்டம் இன்னும் உயரத்தில் இருந்தால் வலுவான காற்றில் சிக்கிக் கிழக்கு பெர்லினுக்குள் போய்விடமாட்டோம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பிறகு நாம் எங்கிருப்போம்! உளவாளிகள் என்று கைது செய்யப்படுவோம், உயிர் பிழைத்திருந்தாலும்கூட ஒருபோதும் மேற்கு பெர்லின் திரும்ப மாட்டோம்!”

ம்,” என்றேன் நான். ஹெர் டபுள்யூவின் அந்தரத் தோட்டம் பெர்லின் சுவரருகே இருந்த ஆடம்பரமான நான்கு அடுக்கு கட்டடத்தின் கூரையோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்தது. ஹெர் டபுள்யூ தோட்டத்தைக் கூரைக்கு மேல் எட்டு அங்குலத்துக்கும் குறைவான இடைவெளிவிட்டே கட்டி வைத்திருப்பதனால் உன்னிப்பாகப் பார்க்காவிடில் அதை இன்னுமொரு மொட்டைமாடித் தோட்டம் என்றே நீங்கள் எண்ணிக் கொள்ளக்கூடும். எட்டு அங்குல உயரத்தில் தோட்டத்தை மிதக்க விடுவதென்பது எல்லாராலும்  செய்துவிட முடிகிற சாதனை அல்ல. ஹெர் டபுள்யூவால் இதை சாதிக்க முடிந்ததற்குக் காரணம் அவர் அமைதியான, யாரிடமும் வம்பு வைத்துக்கொள்ளாத நபர் என்பதால்தான்,” என எல்லாருமே சொன்னார்கள். “ஏன் நீங்கள் இந்தப் பறக்கும்தோட்டத்தை ஒரு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லக்கூடாது?” நான் கேட்டேன். “கன், ஃப்ராங்ஃபர்ட், அல்லது மேற்கு ஜெர்மனிக்குள் இன்னும் தொலைவாக. அங்கு நீங்கள் எவ்வளவு உயரத்துக்கு வேண்டுமானாலும் போகலாம், யாரும் உங்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள்.”

 “முட்டாள்த்தனம்!” ஹெர் டபுள்யூ தலையைக் குலுக்கிக் கொண்டார். “கன், ஃப்ராங்ஃபர்ட்!” மறுபடியும் அவர் தலையைக் குலுக்கிக்கொண்டார். “எனக்கு இங்குதான் பிடித்திருக்கிறது. என் நண்பர்கள் இங்குதான் வாழ்கிறார்கள்! கார்ஸ்பர்கில்! இங்கிருப்பதே எனக்குப் போதும்!” தேநீரை அருந்தி முடித்தவர் பெட்டியொன்றிலிருந்து தனது கையடக்க ஃபிலிப்ஸ் ரெக்கார்ட் பிளேயரை எடுத்தார். சுழல் மேடையில் ஒரு ரெக்கார்டை வைத்து பொத்தானை அழுத்தினார். உடன் இரண்டாவது இயக்கத்தைச் சேர்ந்த ஹேண்டெலின் வாஸர்மியூசிக் பிரவகித்தது. துலக்கமான ட்ரம்ப்பெட்டுகளின் இசை சோபையிழந்து மேகம் சூழ்ந்து காணப்பட்ட கார்ஸ்பர்க் வானத்தினூடாக தெளிவாக ஒலித்தது. ஹெர் டபுள்யூவின் அந்தரத் தோட்டத்துக்கு இதைவிடப் பொருத்தமான ஒரு இசைக்கோர்வை இருக்க முடியுமா?

 “இந்தக் கோடையில் நீங்கள் திரும்பவும் வரவேண்டும்,” ஹெர் டபுள்யூ சொன்னார். “தோட்டம் அப்போது மிக அற்புதமாக இருக்கும். கடந்த கோடையில் தினந்தோறும் நாங்கள் விருந்து கொண்டாடினோம்! ஒரு தடவை இருபத்தைந்து பேரும் மூன்று நாய்களும் இங்கே இருந்தனர்!”

 “யாரும் விழுந்துவிடாமலிருந்தது நல்ல விஷயம்தான்,” ஆச்சரியத்துடன் சொன்னேன். “உண்மையைச் சொன்னால் இரண்டு பேர் விழுந்துவிட்டார்கள்: குடி போதையில்,” ஹெர் டபுள்யூ சிரித்தபடியே சொன்னார். “ஆனால் யாரும் சாகவில்லை: மூன்றாவது மாடியின் வெளிநீட்டிய கூரை நல்ல வலுவானது.”

இதைக் கேட்டு நான் சிரித்தேன். “முன்பு பெரிய பியானோவையும் மேலே கொண்டு வந்தோம். பொலினி வந்து ஷுமனை வாசித்தார். மிகவும் அற்புதமாக இருந்தது. உங்களுக்குத் தெரியுமில்லையா, பொலினி கொஞ்சம் அந்தரத் தோட்ட வெறியர். லோரின் மஸலும் வர விரும்பினார், ஆனால் முழு வியன்னா  ஃபில்ஹார்மனிக்கையும் இங்கே கொண்டு வைக்க இடமிருக்காது, உங்களுக்குத் தெரியும்.” “ஆமாம், இடமிருக்காது,” ஆமோதிப்பாகச் சொன்னேன். “இந்தக் கோடை திரும்பவும் வாருங்கள்.” என்ற ஹெர் டபுள்யூ கைகுலுக்கினார். “பெர்லினில் கோடைக்காலம் ஒரு அற்புதக்காட்சி. கோடையில் இந்த இடத்தில் துருக்கியச் சமையல் மணக்கும், குழந்தைகள் சிரிப்பும், இசையும், பியருமாக இருக்கும்! அதுதான் பெர்லின்.” “திரும்பவும் வர நான் பெரிதும் விரும்புகிறேன்,” என்றேன். “கன், ஃப்ராங்ஃபர்ட்!” தலையைக் குலுக்கியபடி ஹெர் டபுள்யூ திரும்பவும் சொன்னார். இவ்வாறாக ஹெர் டபுள்யூவின் அந்தரத் தோட்டம் கார்ஸ்பர்க் வானத்தில் வெறும் எட்டு அங்குல உயரத்தில் மிதந்தபடி, கோடையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
-----------
ஆங்கிலத்தில் கீத் லெஸ்லி ஜான்சன்

நன்றி: கல்குதிரை,  2015.

(படம்:Avaya_ArtMuseum2)