Saturday, 21 January 2012

இசைக்காத மீன்களின் அக்கார்டியன்


      

மீன்கள் வெயிலில் காயத்துவங்கிய அந்தக் காலைப் பொழுதில் காற்றினூடாக நான்கு திசைகளிலும் பின் பறவைகளற்ற வான் நோக்கியும் பரவ ஆரம்பித்த மீன்வாடையால் மூக்கைச் சுளித்தபடி வெளியே  வந்தவர்களுக்கு நேற்று ஊர் ஏரியில் மீன் கொள்ளையிட்டது  நினைவிலாடியது.  எவ்விதப் புகாருமற்றவர்களாய் மீன்வாடையோடு அந்நாளை அவர்கள் தொடங்கிய அக் காலையில் தேவாலயத்தின் பரந்த மைதானத்தைத் தவிர ஊரின் எல்லாவிடங்களிலும்  மீன் காய்ந்தது. முற்றங்களில், மொட்டைமாடிகளில், அகலமான தெருக்களின் ஓரங்களில், இடமில்லாதபோது வீட்டுக் கூரைகளில், நடைபாதைகளில், நெல்லடிக்கும் களங்களில் என உயிரின் மினுமினுப்பு இன்னும் எச்சமிருந்த உடல்களை காலைச் சூரியனுக்குக் காட்டியபடி மீன்கள் பரவிக் கிடந்தன. பிறகே மீன்களைக் கண்ட காக்கைக் கூட்டங்களின் சந்தோஷ இரைச்சல் கேட்டது. அது அவற்றை விரட்ட முற்பட்ட பலவகைக் குரல்களையும் விஞ்சி ஒலித்தது.  


               தன் அறையிலிருந்து வெளியே வந்த சின்ன ஃபாதர் தாமஸ் வழக்கமாய் பெரிய ஃபாதரின் அறையை நிறைத்து அறைவீடு முழுமையையும் வியாபித்திருக்கும் புகையும் சுருட்டின் மணத்தை எதிர்கொண்டார்.பிறகு மெதுவாகவே அவர் மீன்கள் வெயிலில் வதங்கும் வாசனையை நுகரத் தொடங்கினார். திடுமென அவ்வாசம் அவரை இன்னொரு காலத்தின் இன்னொரு வெளியின் சீதோஷ்ணத்துக்குள் கொண்டு நிறுத்தியபோது நிகழிலிருந்து வேறுபட்ட அந்தக் காற்றையும் வெயிலையும் வாசனைகளையும் மனிதர்களையும் அவர் உணர்ந்தார். கால நகர்வில் பின்னோக்கி இழுக்கப்பட்டவராகி, இறுகிப் படிமமாகிவிட்டவைகள் தடையற்று நீந்த ஆரம்பித்த தன் நினைவு மீன் வாசமேறி மிக ரம்மியமானதொன்றாகி ஆழ்மனத்தில் உறைந்துபோன ஞாபகத்தின் இடுக்குகளிலும் நுழைவதை அவர் கண்டார். அங்கே அவர் எட்டாம் வகுப்பு படிக்கும் அரைக் கால்சட்டையணிந்த சங்கோஜமிக்க பையனாக இன்னமும் குத்தகைதாரர்கள் மீன்பிடித்து முடித்திராத ஏரியின் கரையில் பொறுமையற்றுக் காத்திருந்த மக்கள் கூட்டத்துள் ஒருவராக நின்றிருந்தார். ஊரே நவுந்து போயி கடலோரம் குடியேறிட்டமாதிரி இருக்கு சாமி என்றபடி சோம்பாய் கொண்டு வந்த டீயில் மீன் மணத்தது.


*****

           ன்றைய பாடல் பூசைக்குத் தெரிந்து வைத்திருந்த பாடல்களை மேலோட்டமாக ஒரு முறை வாசித்துப் பார்த்த ஃபாதர் தாமஸ் வென்னீர் தயாராவதற்காகக் காத்திருந்த தருணத்தில் சுவரிலிருந்த அந்த ஓவியத்தைப் பார்த்தார். அதுவொரு பரந்த இயற்கைக் காட்சி ஓவியம். அவருக்கு முன்னிருந்த பாதிரியார்களில் யாரோ ஒருவர் வாங்கி மாட்டிவிட்டுப் போயிருந்த அந்த நீர்வண்ண ஓவியத்தில் முன்னணியில் வெளிறிய பூக்கள் காணப்பட்ட புல்வெளியையடுத்து மூடுபனியினூடாக துயரார்ந்த மலையொன்று தெரிந்தது. அம்மலையை சிரமத்துடன் ஏறிக் கடந்தபோது அந்தப் பக்கம் வறண்ட நிலக்காட்சியின் மையமாக ஏரியொன்றை அவர் கண்டார். வினோதமாக அந்தப்பக்கம் மூடுபனி இருக்கவில்லை. அங்கே நீர் துளியுமற்று வறண்டு முழுக்க முழுக்க மீன்களால் நிரம்பி விட்டிருந்த ஏரியில் தத்தளிப்புடன் சிறுமியொருத்தி மூழ்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவள் அவர் எப்போதும் காண்பவளும் இப்போது கைவிடப்படுதலின் துயரத்தைக் கண்களில் கொண்டிருந்தவளுமான மெலிந்த தேகம் கொண்ட குறும்புக்காரச் சிறுமி. நீரில்லாத ஏரியில் மீன்களால் பயமில்லை தடுமாற்றத்துடன் தனக்குத் தானே சொன்னவராய் அவர் திரும்பி நடந்தார். ஆனால் நடுங்கிய கால்களை எவ்வளவு பிரயாசைப்பட்டும் நகர்த்த முடியாதவராய் அசைவற்று பீதியுடன் நின்றார். பின்னால் திரும்பிப் பார்க்கவும் அவருக்குத் துணிவில்லை. நீண்ட நெடுநேரம் அசைக்கமுடியாது தரையோடு பிணைந்துவிட்ட பாதங்களை இயலாமையோடு பார்த்தபடியிருந்தார். கர்த்தர் நம் முன் செல்கையில் நமக்கு எங்கும் பயமில்லை சாமி, சுடுதண்ணி தயாராயிருக்கு சோம்பாய் வெளியேயிருந்து குரல் கொடுத்தார். 


*****

                   


  

                பெரிய வலைகள், கைப்பிடியுடன்கூடிய கச்சா வலைகள், வாளிகள், பழைய வேட்டி, புடவை, துண்டு என அவரவர் மீன் ஆசைக்கும் மீன் பிடிக்கும் திறமைக்கும் ஏற்றவாறு கரைமீது நின்றிருந்த கூட்டத்தில் வெறுங்கையுடன் மீன்பிடி என்ற விளையாட்டுக்காய் வந்திருந்த சிறுவர்களே அதிகமிருந்தனர். இது போலப் பெருங்கூட்டமாய் மீன் பிடிக்க வாய்க்கும் சந்தர்ப்பங்கள் அரிது என்பதனால் ஊரே கூடித் திரண்டிருந்த அந்த ஏரியின் கரையில் தாமஸ் நின்றிருந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளி நின்றிருந்த ஜோஸஃபின் தலையில் கவிழ்த்திருந்த பிளாஸ்டிக் வாளியை சற்றே உயர்த்தி அவனைப் பார்த்து முறுவலித்தாள். ஆரஞ்சு வண்ணப் பாவாடையும், வெள்ளைப் பூக்கள் விரவிக் கிடந்த, கைப்பகுதி புடைப்புடன் தைக்கப்பட்ட மேல்சட்டையும் அணிந்திருந்த மெலிந்த தேகத்தினளான அவள் அந்த மஞ்சள்நிற வாளியெனும் வினோதத் தொப்பியினால் ஒளிபொருந்தி வசீகரமிக்கவளாகி நின்றாள். இது போன்ற இடங்களில் அவளைக் காண முடியாதபடிக்கான ஒழுங்குக் கட்டுப்பாடுகள் மதிற்சுவராய் நின்ற குடும்பத்தில் பிறந்திருந்த அவள் அக் கட்டுப்பாடுகளை மீறுவதில் தனித்தவொரு சந்தோஷம் இருப்பதைக் கண்டுபிடித்தவளாயும் எப்போதும் அவற்றை மீறும் துணிவுள்ளவளாயும் இருந்தாள். திடீரென அவனறியாத ஏதோவொரு அன்னியப் பிரதேசத்திலிருந்து அங்கு வந்துவிட்டவளைப் போலிருந்தவளைப் பார்த்து பதிலுக்கு முறுவலித்த தாமஸை இனம் புரியாத ஒரு சந்தோஷம் பற்றியது. வகுப்பில் உடன் படிக்கும் பெண்கள் யாருடனும் பேசியறியாதவனாக இருந்தபோதும் ஜோஸஃபினைக் பார்க்கையில் மட்டும்  கிலேசமும் குளிர்ச்சியுமான கிளர்ச்சியொன்று தன்னுள் எழுந்து அடங்குவதை தாமஸ் உணர்ந்திருந்தான். சரியான குறும்புக்காரியும் அடாவடிக்காரியுமான அவள் தன்னைக் காணும் போது மட்டும் கண்களைத் தாழ்த்தி குறுஞ்சிரிப்போடு நாணிச் சென்றுவிடுவதையும் அவனால் புரிந்துகொள்ள முடியாமலிருந்தது. அவள் மஞ்சள் வாளியைக் கீழே இறக்காமல் ஓரக் கண்ணால் அவனையே பார்த்துக் கொண்டிருக்கையில் உச்சிச் சூரியன் அவளைப் பார்த்தபடியே மேற்கே நகர ஆயத்தமாகியது. ராத்திரி பொரிச்ச தலப்பெரட்டயக்கூட விடாம பிடிச்சிட்டுத்தான் கரைஏறுவானுங்க போலருக்கு கூட்டத்திலிருந்த ஒரு முதியவள் சலித்துக் கொண்டாள்.

*****
             `தேனினிமையிலும் ஏசுவின் நாமம் திவ்ய மதுரமாமே`. அஸ்தகால மணிக்கப்புறம் ஒலித்த ரிக்கார்டைக் கேட்டபடி கண்விழித்த பாதருக்கு அன்று ஞாயிற்றுக்கிழமை என்ற நினைவு வந்தது. அருகே மேசையில், போர்த்தப்பட்டிருந்த மெல்லிய வெள்ளைத் துணிக்குள்ளாக வெக்கைமிகு இரவொன்றை எதிர்கொண்டு உறைந்திருந்த அக்கார்டியனை எடுத்துக் கழுத்தில் மாட்டிக் கொண்டதும் மெதுவாக இளகிய அக்கார்டியன் இறுக்கம் தளர்ந்த துருத்தியினூடாக தன்னைத் ஆசுவாசப்படுத்திக் கொண்டு தயாரானபோது உட்கார்ந்தபடி அக்கார்டியன் வாசிப்பது படுத்தபடி கக்கூஸ் போவதற்கு சமம்”, மேஜர் செமினரியில் பயின்ற காலத்தில் பாதர் லாசரஸ் கடும் நெடிமிக்க சுருட்டுப் புகையினூடாக உரத்துச் சிரித்தபடி சொன்னதும் தான் தனிமையில் அக்கார்டியன் வாசிக்கும் தருணங்களிலெல்லாம் மாறாத அதே நெடியுடன் ஒலிப்பதுமான அக்குரலை ஃபாதர் தாமஸ் அன்றும் கேட்டார். நரைத்து அழுக்கேறிய தாடியின் ரோமங்களைக் கடந்து பரவும் அந்த சுருட்டு நெடி பாதர் லாசரஸின் வாசம். அவர் புகைத்த சுருட்டிலிருந்து மட்டுமல்லாமல்  அவருக்குள் எங்கேயோயிருந்த அந்தரங்கமான வாசனைகள் கலந்ததுமாய் அது இருந்தது. நெருப்பில் புகையும் வெறும் புகையிலையின் மணமாக மட்டும் அது இருந்ததில்லையென்பதை ஒரு பாதிரியாராகி இந்த ஊருக்கு வந்தபின் நாளெல்லாம் இந்த அறைவீட்டில் தன்னை சூழ்ந்திருக்கும் பெரிய பாதிரியாரின் சுருட்டு வாசத்தை ஒப்பிட்டு அவர் உணர்ந்து கொண்டிருந்தார். அக்கார்டியன் மட்டுமல்லாது தாமஸுக்கு எவ்வளவோ விஷயங்களில் தெளிவு பெற உதவியிருக்கிறார் பாதர் லாசரஸ். பேராசிரியராக குருத்துவக் கல்லூரியில் அவர் கற்பித்த இறையியல் பாடத்துக்கும்  நடை போகிற மாலை நேரங்களில் மர்ஃபி டவுன் சிறுவர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதோடல்லாமல் பலநேரம் அவர்களோடு நிஜமாகவே சண்டைபோட்டு கோபமாக ஆட்டத்தை முறித்துக்கொண்டு வருவது போன்ற செய்கைகளுக்கும் இடையிலான ஒரு விசித்திர வெளியில் அவர் தன்னை நிறுத்தி வைத்திருந்தார். ‘தாமஸ், திஸ் மேன் ஈஸ் எ ரியல் க்ராக்பாட், அன் எக்ஸ்ட்ரீம் எக்ஸென்ட்ரிக் தாமஸ் அவரோடு நெருக்கமாகத் தொடங்கிய நாட்களில் கால்பந்து ஆட்டமொன்றின் போது இணையாக ஓடிவந்தபடியே மூத்த செமினரியன் அருள் டேவிட் குசுகுசுப்பாக சொன்னதோடு அவரைப் பற்றி தாமஸ் ஏற்கனவே அறிந்திருந்த செமினரியில் எப்போதும் உலவும் வதந்திகளையும் ஒப்பித்தான். அதில் முத்தாய்ப்பனது அவர் ஒருபால் உறவில் நாட்டங்கொண்டவர் என்பது. உன் பின்புறத்தை நீ பத்திரமாய் பார்த்துக்கொள்வது நல்லது மூச்சு வாங்க ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு பந்தைக் காலில் காவியபடி அருள் டேவிட் விலகியோடினான்.
*****

க்ஸ் சுபேதார் மிக்கேல்சாமி மதராஸ் என்ஜினியர்ஸில் பாய்ஸ் பட்டாளம் தொடங்கி ஆனரரி கேப்டன் வரையிலான தனது முப்பத்தியிரண்டு வருட சர்வீஸைப் பற்றிப் பேச ஆரம்பித்தாரென்றால் அது கால் நூற்றாண்டுக்கும் சற்றுகூடிய இந்திய ராணுவத்தின் வரலாறாகவும் மாறிவிடுவதால் எழுபத்தியொன்றில் பாகிஸ்தான் சண்டையின்போது வங்கதேச எல்லையில் இறைச்சி கிடைக்காமல் அணில்களைச் சுட்டுத் தின்ன நேர்ந்த வீரர்களின் அவலம் தொடங்கி, எண்பத்து நான்கில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரின்போது பொற்கோவிலுக்குள் பூட்ஸ் கால்களுடன் நுழைய நேர்ந்த வீரர்களது மனநெருக்கடி வரையான சுவாரஸ்யமிக்க பின்னணித் தகவல்களை நீங்கள் வேறு யாரிடமும் அத்தனைத் துல்லியமாகப் பெற முடியாது. ஆனால் அவர் அதே சம்பவங்களை ஒரு சிறிதும் கலப்படமின்றி அதே நபர்களிடம் திரும்பத் திரும்பச் சொன்னபடியிருந்ததனால் அவர் பேச ஆரம்பித்து பேச்சின் கடிவாளத்தை இறுக்கி அதன் அடி வயிற்றில் பூட்ஸ் காலின் பின்புறத்தால் குத்தி வேகமூட்ட முனையும்போது கேட்டுக் கொண்டிருப்பவர் அங்கிருந்து கிளம்புவதற்கான கற்பனையான ஒரு காரணத்தை உருவாக்கியிருப்பார். முதிர் வயதின் பிசகுகள் படிந்த தன் ஞாபகப் பரப்பில்  யாரொருவரையும் ஐயப்பட அறியாதவராக மாறிவிட்டிருந்தருந்த அவர் சொல்லப்பட்ட காரணத்தினை கரிசனத்துடன் கேட்டு வந்தவரை வழியனுப்பி வைத்துவிட்டு சோர்வுடன் பேச்சை லாயத்தில் கட்டுவார். மனைவி பாக்கியமரியின் மரணத்துக்குப் பின் மௌனம் சகிக்க முடியாத சகவாசியாகிப்போனதால் பேச்சு அவரது தீராத விருப்பமாக மாறியிருந்தது. தொலைபேசிகளின் அண்மையில் பெற்றபாசம் பேணுபவர்களாக பிள்ளைகள். வடநாட்டில் குடும்பத்தோடு இருக்கும் பெரியவன் மோசஸ், அடுத்தவன் ஸ்டாலின் கடல் தாண்டி சிங்கப்பூரிலிருக்க அவன் மனைவி தாய்வீட்டிலிருந்தாள். கடைக்குட்டி ஜோஸஃபின். ஜோஸஃபினின் நினைவு அவரைத் தடுமாற வைத்தது. அவளைப் பற்றிய நினைவு எப்போதும் மிக்கேல் சாமியின் நினைவாற்றலின் செதில்களை உதிர்த்துவிடச் செய்து, பழகியதானாலும் அந்தப் பழைய வலியினை நிகழ்காலத்தினுடையதாகவும் மாற்றிவிடுவது. பாக்கியம் எவ்வளவு சொன்னாள். ஏன் அப்படி நடந்துகொண்டோம். எங்கிருந்து  அப்படியொரு மூர்க்கம் வந்தது. ஆடிக்கொண்டிருந்த நாற்காலி நின்றபோது மிக்கேல்சாமியின் விழியோரம் துளி நீர் தெரிந்தது. சலனமும் நிச்சலமுமான மனஓட்டம் சில கணங்கள் குமிழியிட்டுப் பின் அடங்கியது. போர்ட்பிளேரில் ஏழே நாட்களில் ஒரு விமான ஓடுபாதையை அமைக்கத் தன் கம்பெனிக்கு கமாண்டர் கர்னல் ராம்நாத் உத்தரவிட்டதும் அவர் லாயத்திலிருந்து திரும்பக் குதிரையொன்றை அவிழ்த்துத் தயாரானார். திரும்பவும் நாற்காலி ஆடத்தொடங்கியது.


*****
                                  விபச்சாரத்தில் சிக்கிய பெண்ணைக் காப்பாற்ற உங்களுள் பாவம் செய்யாதவன் அவள் மீது முதல் கல்லை எறியட்டும் என்றவர் ஒரு பெண்ணை இச்சையோடு நோக்கும்போதே அவளோடு உன் மனதில் நீ விபச்சாரம் செய்தாயிற்று எனச் சொல்வது முரணாயிருக்கிறது - ஒரு லிபரல் சடாரென கன்ஸர்வேடிவ் பள்ளத்தில் இறங்குவது போல.

பதிலாக எதுவும் சொல்லாமல் பாதர் லாசரஸ் எழுந்து அக்கார்டியனில் உன் திரு யாழினில் இறைவா வாசிக்க ஆரம்பித்தார். அவர் இந்தப் பாடலை வாசிக்கிறார் என்றால் உற்சாகமான மனநிலையில் இருக்கிறார் என்று அர்த்தம். அபூர்வமாகவே அவர் இந்தப் பாடலை வாசிப்பார். அன்று யாழினை நீயும் மீட்டுகையில், இந்த ஏழையின் இதயம் துயில் கலையும் வரியினை சங்கதிகள் எல்லாம் சேர்த்து இரண்டு மூன்று தரம் திரும்பத் திரும்ப வாசித்தார்.

ஃபாதர் இன்னைக்கு ரொம்ப உற்சாகமாக இருக்கீங்க போல

ஃபாதர் லாசரஸ் சிரித்தார். அக்கார்டியனை மெதுவாக மேசைமீது வைத்தபின் சொன்னார் தாமஸ், பைபிள்ள ஏசுவுக்கு லிபரல் இமேஜ் உண்டாகற அல்லது உண்டாக்கப்படற இடங்கள்ள நீ சொன்ன முதல் சந்தர்ப்பமும் முக்கியமான ஒண்ணு. ஆனா நீ குறிப்பிடும் இந்த இரண்டு சந்தர்ப்பங்களையும் ஒப்பிட்டு அவர் கன்ஸர்வேடிவோனு நினைக்கத் தூண்டறது உன்னுடைய வயசு. ஃபாதர் மறுபடியும் சிரித்தார். சிரிப்பை நிறுத்திவிட்டு ஒரு கணம் தாமஸின் கண்களையே உற்றுப் பார்த்தவர் கேட்டார் யார் அந்தப் பெண்?.

எதிர்பாராத இந்தக் கேள்வி தாமஸை சற்றே நிலை குலைய வைத்தது. அவன் மௌனமாக அமர்ந்திருந்தான். அவன் தோளில் ஆதரவாய்க் கை வைத்தார் கமான் மை பாய், ஐ வாஸ் ஜஸ்ட் கிடிங்.

இல்ல பாதர், உங்ககிட்ட நான் பொய்சொல்ல விரும்பல. நிலை மீண்டவனாக தாமஸ் சொன்னான்.


*****               ந்த வருடம் மீன்பாடு உண்மையிலேயே மிக அதிகமாக இருந்தது. கடந்த எட்டு நாட்களாக எங்கிருந்தெல்லாமோ வியாபாரிகள் வந்து கூடை கூடையாக சைக்கிளில் வைத்து ஏற்றிக் கொண்டு போனதில் குத்தகைத் தொகையைவிடவும் பலமடங்கு லாபம் கண்டபின்னும் ஏரியில் தீராமல் பெருகியபடி இருந்த மீன்கள் குத்தகைதாரர்களையே வியக்க வைத்தது. மீன்பிடி முடிந்தபின் இரவுகளில் வானிலிருந்து வந்து யாரோ மீன்களைக் கொட்டித் திரும்பவும் ஏரியை நிரப்பிவிடுகிறார்களோ எனவும் சிலர் ஐயப்பட்டனர். ஆனாலும் அவர்களுக்கு மீனைக் கொள்ளையிட இன்னமும் மனம் வரவில்லை. கரையில் நின்றிருந்த கூட்டமோ கட்டுமீறிப்போகும் அளவை எட்டியிருந்தது.ஏரியினுள் மீன்கள் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் மேற்பார்வையில் ஈடுபட்டிருந்த குத்தகைதாரர்களில் ஒருவரான முன்னாள் சபைமணியம் அந்தோணி மற்ற குத்தகைதாரர்களோடு ஏதோ பேசினார். இவர் சொன்னதை அவர்கள் பலமாக மறுத்தது போலிருந்தது. அவர்கள் தொடர்ந்து பேசியபடி இருந்தனர். சற்று கழித்து அவர்களிடையேயான பேச்சு வாக்குவாதமாய் மாறியது. கரை மீதிருந்தவர்கள் ஆர்வம் கூடியவர்களாய் கவனிக்க ஆரம்பித்திருந்தனர். மீன் கொள்ளையிடுவார்கள் என வந்து இதுவரை அவர்கள் ஐந்து நாட்களாக ஏமாற்றத்துடன் திரும்பிப் போய்க்கொண்டிருந்தனர். வாக்குவாதத்தின் முடிவில்  கோபத்துடன் விலகிவந்த அந்தோணி மாறாத அதே கோபத்துடன் தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்தார். கரைமீது நின்றிருந்த கூட்டத்தில் சலசலப்பு அடங்கி திடீர் அமைதி வந்தது. அந்தோணி துண்டை தலைக்கு மேலே உயர்த்தி கரையைப் பார்த்து மூன்று முறை வலுவாகச் சுழற்றினார். அடுத்த கணம் மீன் கொள்ளையிட்டாச்சு என்ற உரத்த குரல்களும் வென்ற இரைச்சலுமாக சரிவான கரையில் திமுதிமுவென ஓடி ஊர் மொத்தமும் ஏரிக்குள் இறங்கியது.

*****


             ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் இரண்டாவது பூசையின்போது பாட்டுக் குழுவில் தாமஸ் ஃபாதர் அக்கார்டியன் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை பூசை கடன் பூசை, அதிலும் இரண்டாவது பூசை வாரத்தின் சிறப்பான பூசை, பாடல் பூசை. காலை முதல்பூசைக்குப் பெரியவர்களும் வயதானவர்களும் கறி எடுத்து சமைக்கும் வேலையிருக்கும் பெண்களும் வந்து போய்விடுவதால் எட்டுமணிக்கு நடக்கும் இரண்டாவது பூசையின்போது தேவாலயம் எப்போதும் சிறுவர்களாலும் வயசுப்பிள்ளைகளாலும் நிறைந்திருக்கும். அக்கார்டியன் வாசிப்பதற்காகவே தாமஸ் ஃபாதர் தனக்கு ஒதுக்கப்பட்ட கிளைப் பங்குகளில் விரைவாக பூசைகளை முடித்துக் கொண்டு எட்டு மணிக்குள் திரும்பி விடுவார். அவர் அக்கார்டியன் வாசிக்க ஆரம்பித்த தொடக்க நாட்களில் ஒருநாள் எல்லோரும் பூசையை கவனிக்காமல் அக்கார்டியனில் அமுங்கி விரியும் துருத்தியையும் அதிலிருந்து சிலீரென்று ஒலித்த சன்னமான இசையையும் வியப்புடன் கவனித்தபடி ஆண்டவர் உங்களோடு இருப்பாராக என்ற பெரிய ஃபாதரின் பாடலுக்கு உம்மோடும் இருப்பாராக என பதில் பாட மறந்த ஒரு சந்தர்ப்பத்தில் பெரிய ஃபாதருக்கு அக்கார்டியன் மீதும் அதை வாசித்த தாமஸ் ஃபாதர் மீதும் வந்த கோபத்தில் சற்று நேரம் பூசையை நிறுத்திவிட்டு அமைதியாக இருந்தார். அப்போதுமுதல் யார் பார்வையிலும் படாத, பாடல் குழு அமருமிடத்துக்கு அருகேயிருந்த பெரிய தூணின் உட்குழிந்த பகுதியை தனக்கும் தன் அக்கார்டியனுக்குமான இடமாக ஃபாதர் தாமஸ் தேர்ந்துகொண்டார்.

               அதிகாலையில் விலகாத தூக்கத்துடன் பாடல் பாடும் கொயர் பிள்ளைகள் மறந்தும் கண்ணயர்ந்துவிடாதபடிக்கு திடும் திடும் என அதன் பெடல் கட்டைகள் மரச்சுவரில் மோதி அதிர்வுகள் உண்டாகும்படி தேவாலயத்தின் சர்ச் ஆர்கனை வாசித்த சவரிமுத்து வாத்தியார்தான் பெரிய ஃபாதருக்கு அடுத்து அக்கார்டியனை எதிரியாகப் பார்த்த இரண்டாவது நபர். தன் ஏகபோக ராஜ்ஜியமாயிருந்த பாடல் குழுவில் நுழைந்து கம்பீரம்மிக்க தனது பழைய ஆர்கனை ஒரு ஒன்றுமற்ற வஸ்துவாக்கிவிட்ட அந்த வினோத இசைப்பெட்டியை, வாசிச்சுப் பார்க்கறீங்ளா? எனக்கேட்டு தாமஸ் ஃபாதர்  அதை வாசிக்கவும் கற்றுக் கொடுத்த தினம் வரை தீராத வன்மத்துடனே பார்த்து வந்தார். ஆர்மோனியத்தத்தான் ரெண்டு பக்கமும் கட்டைங்களை வச்சு நடுவுல துருத்திய திணிச்சு மாத்தி செஞ்சிருக்கான். துருத்தியோட சேர்ந்து கட்டைங்களும் முன்ன பின்ன போய்வருது அவ்ளோதான். ஆனா நம்ம ஆர்மோனிய சவுண்டு என்ன கம்பீரம். இதென்னமோ எச்சிலடைச்சிக்கிட்ட பீப்பி மாதிரி முக்கிக் முக்கிக் கத்துது. மரியசவரி வாத்தியரோடு சேர்ந்து தண்ணியடிக்கும்போது அக்கார்டியன் பற்றி சவரிமுத்து வாத்தியார் இப்படிச் சொல்லித்தான் புரையேறும் வரை சிரித்தார்.


*****

            ரியின் முட்டிக்காலளவு தண்ணீர் தாமஸுக்கு இடுப்பைத் தொடுமளவாக இருந்தது. ஏரி முழுக்க ஆட்களாய் இறங்கிய கணம் நீர்ப்பரப்பின் ஓரங்களிலிருந்த பீதியுற்ற தவளைகள் நாலாபுறமும் தாவித் தாவி ஓடி கரையோரப் புகலிடங்களையடைந்தன. சுற்றியிருப்பவர்கள் யாரென்று அடையாளங்காண முடியாதிருந்த நெரிசலில் கச்சா வலையை நீரில் அமுக்கி வெளியே எடுக்கையில் எதிரே குனிந்திருந்த பெண்ணின் வழித்துக்கட்டிய சேலையை, ஆணின் வேட்டியை, சிறுமியின் பாவாடையை மேலும் அது உயர்த்த சில இடங்களில் கோபமும் சில இடங்களில் சிரிப்புமாய் மீன்பிடி தொடர்ந்தது.எல்லோரும் மீன்களைப் பிடிப்பதில் மும்முரமாயிருக்க படபடப்பும் சந்தோஷமுமாய் நீரிலிறங்கிய தாமஸுக்கு முதலில் என்ன செய்வதெனத் தெரியவில்லை. குழம்பிச் சகதியாகிக் கொண்டிருந்த நீரில் கைகளை மூழ்கவிட்டு அளைகையில் வழுவழுவென நழுவியும் துள்ளியும் சென்றவைகளில் எதுவும் கைகளில் சிக்குவனவாகவில்லை. சற்றுநேரம் கழித்து சிக்கியவொன்றை வெளியே எடுத்து அது தவளையெனக் கண்டதும் அச்சத்துடன் தூர எறிந்தான். அப்படியே அளைந்து கொண்டிருந்தவன் சற்று கழித்து ஒருசேரக் கிடைத்த சின்னச் சின்ன ஆனால் அவ்வளவாக வழுவழுப்பற்ற நான்கு ஜந்து மீன்களை வலுவாகப் பற்றி மேலே கொண்டுவந்தபோது ஒரு பெண்ணின் விரல்களும் அவற்றோடு வளையல்களணிந்த அவள் கைகளும் மேலே வந்தன.  சிரிப்புடன் அவன் முன்னே ஜோஸஃபின் நிமிர்ந்தெழுந்து நின்றாள். அழுக்கு மஞ்சளாய் சகதி நீர் வழிந்து சொட்டிய கைகளைப் பற்றியபடி அவர்கள் நின்றனர். அவனும் சிரித்தான். விரல்களின் ஸ்பரிஸம் அவர்களுள் அந்தப் புதுவித விளையாட்டின் ருசியை தீவிரப்படுத்தியது. சுற்றி நின்றவர்கள் கவனமெல்லாம் தங்கள் கலன்களை மீன்களால் நிறைப்பதில் இருக்க, வந்து சிக்கிய மீன்களைக்கூடப் பிடிக்காமல் நெடுநேரம் இருவரும் நீருக்குள் விரல் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அன்று அந்த ஏரியின் நீர் மீன்கள், நண்டுகள், நத்தைகள், தவளைகள், சில நீர்க்கோழிகள், விலாங்கு மீன்கள் எனத் தவறாய் கணிக்கப்பட்டு பின் தூர எறியப்பட்ட தண்ணீர்ப் பாம்புகள் என தன்னிலிருந்து கொடுத்து பிள்ளைக் காதலொன்றின் களிகூடிய விளையாட்டில் தன்னைச் சேர்த்துக் கொண்டது. நிலத்தின் விளையாட்டுக்கள் நீருக்குள் நிகழ்கையில் அதீத மர்மமும் அமானுஷ்யமும் கூடியனவாக அவை மாறிவிடுவது நிலத்தைப் போலன்றி வெறும் பார்வையாளனாக இராமல் நீரும் விளையாட்டில் ஒருவராகத் தன்னைச் சேர்த்துக் கொள்ளும்போதுதான்.


*****

              ன்றொருநாள் காலைப்பூசை முடிந்து போகும்போது தூம்பாக் கொட்டகைக்குள்ளிருந்தபடி கிசுகிசுப்பான குரலில் அழைத்து ஹாப்பி பர்த்டே என ஜோஸப்பின் நீட்டிய சாக்லெட் டப்பாவை தாமஸின் தம்பியும் தங்கையும் துப்பறிந்து  கண்டுபிடித்த நாளில் அம்மாமுன் பதில் பேச வார்த்தைகளற்று நின்றான். ரோஸாலி தன் மகன் மீது வைத்திருந்த நம்பிக்கையை பளபளப்பான அந்த டப்பாவும் அதிலிருந்த விலைகூடிய இனிப்புகளும்  இரக்கமற்று உடைத்திருந்தன. தனக்குப் பாத்தியதையல்லாத ஒரு திருட்டுப் பட்டத்தினை ஏற்றுக்கொண்டிருப்பதன்  மூலமாக தன் வாழ்வில் அதுவரையும் அதன்பிறகும் தான் அனுபவித்திராத பவித்திரமான ஒரு பிரியத்தின், காதலின்  இதம்கூடிய வெம்மையை எப்போதைக்கும் இழக்காமல் இருந்திருக்கலாம் என்பது மட்டுமல்லாது யூதாஸ் ஸ்காரியோத்தினது போலாகிய தனது உண்மை தன்னிடம் பிரியம் காட்டியது தவிர்த்து ஒரு களங்கமுமறியாத ஆத்துமாவொன்றை சிலுவையில் பூட்டி வதைத்துவிட்டதில் காட்டிக் கொடுத்தலின் துரோகநிழலாவது தன் மேல் விழாமல் தப்பியிருக்கலாம்   என பிறகான காலங்களில் பலநூறு தரம் தாமஸ் கழிவிரக்கத்துடன் நினைத்து மறுகியிருக்கிறார். மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அப்பாவின் போட்டோ முன்பாக பைபிளில் அவனிடம் சத்தியம் வாங்கிய அம்மா அந்த சாக்லேட் டப்பாவை அதற்கு பாத்தியதையானவது வீட்டில் ஒப்படைத்தாள். ஹவில்தாரிலிருந்து நாயப் சுபேதாராக பதவி உயர்வு பெற்ற கையோடு விடுமுறையில் வந்திருந்த மிக்கேல்சாமி தன் நரம்புகளில் ஓடி திடப்பட்டுவிட்ட ஒழுங்கின் கிரமங்களை தன் மகளே பகிஷ்கரித்துவிட்டதாக சீற்றமடைந்தார். அடுத்து நடந்தவைகளுக்கு மிக்கேல்சாமி என்ற நபரை பொறுப்பாக்க முடியாதபடிக்கு ஒழுங்கின் வளையாத செங்கோல் அவரை வழிநடத்தியது. மறுநாள் காலையே ஜோஸஃபின் கேரளத்தில் வசிக்கும் தன் சித்தி வீட்டுக்கு அனுப்பப்பட்டாள். மனைவி பாக்கியமரியின் கெஞ்சல்களும் கதறல்களும்  அவரை சற்றும் அசைக்கவில்லை. ஜோஸஃபின் கேவியபடி ரயிலேறும்போது அவர் சொன்னார் நானாக விருப்பப்பட்டு உன்னைப் பார்க்க வரும்வரை, எத்தனை வருடங்களானாலும் சரி, என் முகத்தில் வந்து நீ விழிக்கக் கூடாது. மீறல்களுக்கு அனுமதியில்லாத தனது ஆளுகைப் பிரதேசத்தில் நிகழ்ந்த முதல் அத்துமீறலை சரியான வகையில் சீர் செய்த நிம்மதியும் பெருமையும் முகத்தில் தெரிய  ரயில் நிலையத்திலிருந்து குலையாத கம்பீரத்துடன் அவர் வெளியே வந்தார்.

*****


               ஜெர்மனியின் டூபிங்கன் பைபிள் விமர்சனப் பள்ளி, திருச்சபை தடை செய்த கறுப்பு வேதாகமம், கைவிடப்பட்ட புதிய ஏற்பாடுகள், பைபிளின் பல ஆகமங்களும் புதிய ஏற்பாட்டின் பல பகுதிகளும் திறமையாக எப்படி எடிட் செய்யப்பட்டன என்பது பற்றியெல்லாம் ஃபாதர் லாசரஸ் அவனோடு பேசியிருக்கிறார். பின்காலத்தில் கடுமையான நிறுவனமயமாதலுக்கு ஆட்பட்டது உள்ளிட்ட கிறித்தவத்தின் இந்த எல்லாப் பிசகுகளையும் மூடி மறைக்குமளவுக்கான ஆளுமையும் அகதரிசனமும்  மிக்க மனிதராக இயேசு கிறிஸ்து இருப்பதும், உலகத்தின் மீதான கிறித்தவ நிறுவனத்தன்மையின் இறுகிய பிடியும் எந்தக்காலத்திலும் எப்படிப்பட்ட சவால்களை எதிர்கொண்டாலும் அது உயிர்த்திருக்க உதவும். ஒரு பாதிரியாராக கிறித்தவத்தைக் கண்மூடி ஏற்கவேண்டிய அவசியமில்லை என ஃபாதர் லாசரஸிடமிருந்து தாமஸ் கற்றுக்கொண்டிருந்தார். வாழ்வின் அர்த்தத்தை நமக்கு விதிக்கப்பட்டவற்றினூடாக வாழ்ந்து தேடுவதும், கேள்விகளுக்கு வெளியேயிருந்தல்லாமல் கேள்விகளின் வழியாக தொடர்ந்து நகர முற்படுவதுமே சிறந்த வழிமுறையாக இருக்கமுடியும் என்பார்.  ஜோஸஃபின் தந்த சாக்லெட் டப்பாவினூடாக அல்லாமல் அதற்கு வெளியே நின்று தான் தீர்வைத் தேட முற்பட்டிருக்க வேண்டாம் என தாமஸ் எண்ணிக் கொண்டார். ஃபாதர் லாசரஸ் பரிசளித்த அக்கார்டியன் ஒரு பெரிய சாக்லெட் டப்பாவாய் இருந்தது. அதனூடாக கடக்க வேண்டிய தருணங்களை முன்னிட்டு அதை எப்போதும் பத்திரமாய் தன்னோடு வைத்திருக்க உறுதிகொண்டார் தாமஸ்.

*****


              வித்த மரவள்ளியின் வாசனை நிறைந்ததிருந்த திருவனந்தபுரத்து புறநகரொன்றின் சற்றே குறுகலான தெருவிலிருந்த அவ்வீட்டின் முன்  புதிய ஆடைகளும், இனிப்புகளும், இன்னபிற தின்பண்டங்களும் நிறைந்த பையுடன் ஆட்டோவில் இறங்கிய மிக்கேல்சாமி இரண்டு வருடங்களில் தன் மகள் எப்படி வளர்ந்திருப்பாள் என்ற கற்பனை மேலிட்ட சாதாரணத் தகப்பனாக அழைப்பு மணியை அழுத்தினார். கண்டிப்பான ஒழுக்கம் என்கிற ஆயுதத்தாலன்றி மனிதனுக்கு விமோசனமில்லை எனும் உறுதிப்பட்ட தனது கோட்பாட்டின் மீதான நம்பிக்கையினால் தன் மகள் பெரும் ஒழுக்கச் சரிவிலிருந்து காப்பாற்றப்பட்டது குறித்த நிம்மதியையும் அவர் கொண்டிருந்தார்.அவர் மனைவியின் தங்கை வீட்டில் சிரம பரிகாரம் முடித்தவர் தாளாத ஏக்கத்தை அடக்கியவராய் இயல்பாக `ஜோஸஃபின் எங்கே?` எனக் கேட்டார். உள்ளே  சம்மனசுமரி சென்ற திசையில் சற்று நேரம் அமைதியும் அதைத் தொடர்ந்து உரத்த பேச்சாக மறுக்கும் குரலும் கெஞ்சல்களும் மாறி மாறிக் கேட்டன. அப்படியே நெடு நேரத்துக்கு நீடித்த உரையாடலின் முடிவில் சம்மனசுமரி மட்டும் திரும்பி வந்தாள். `ஒண்ணுமில்ல… அவளுக்கு இன்னும் அந்தக் கோவம் போகல… உங்களப் பார்க்க மாட்டேங்கறா… சின்னப்புள்ளதான கொஞ்சநாள் போயி விவரம் புரிஞ்சா சரியாயிடுவா…`. மிக்கேல்சாமி சற்று நேரம் ஒன்றும் பேசாமலே அமர்ந்திருந்தார். பிறகு சொல்லிக்கொள்ளாமலே எழுந்து வெளியே வந்தவர் எப்போதும் வட்டத்தின் விளிம்புகள் வளைவானதாகவும், சதுரத்தின் பக்கங்கள் நேர்க்கோடாகவும்  எல்லாருக்கும் இருந்துவிடுவதில்லை என எண்ணிக்கொண்டார். தன் ஒழுக்க விதிகள்  ஏதோவொன்றைக் காணத் தவறிவிட்டதாக அவருக்குத் தோன்றியது. நுட்பமான அது புலப்பட்டும் புலப்படாதது போலிருந்தது. அதன் பிறகு பலமுறை, ஜோஸஃபின் அவரை மட்டுமல்ல அவர் வீட்டில் யாரையுமே பார்ப்பதில்லை என்பதில் திண்ணமாக இருந்தாள்.பாக்கியமரி தொலைவே நின்று தன் மகளை அவளறியாமல் பார்த்துவிட்டு வர நேரும் அவலத்தை அழுதழுது பேசி ஓய்ந்தாள்.சமரச முயற்சிகள் எதற்கும் அசைந்து தராத  ஜோஸஃபின் தன் புகைப்படம் கூட தன் வீட்டுக்குப் போகாமல் பார்த்துக்கொண்டாள். தன் குடும்பத்திடமிருந்து தன்னை முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்ட அவள் இறுதி வரை அக்குடும்பத்துக்கு தொடர்பற்றவளாய் வாழ்ந்து மடிவது என்ற வைராக்கியமொன்றையே வாழ்வின் குறிக்கோளாய்க் கொண்டாள்.

*****                ன்டர்வெலுக்கு வெளியே வந்த பள்ளிக் கூடப் பிள்ளைகள் மூன்றரை மணிக்கெல்லாம் திடீரென இருள ஆரம்பித்த வானத்தைக் கண்டு முதலில் வெருண்ட போதும் கனமான துளிகள்  விழக்கண்டு ஆரவாரக் கூச்சல் எழுப்பினர். ஆலங்கட்டிகள் கடும் ஓசையுடன் கூரைகள் மீதும் சிமெண்ட் தரைமீதும் விழுந்தன. திறந்த வைளியில் இருந்த சில பானைகள்கூட உடைந்தன. பின் வானம் திறந்துகொண்டதுபோல மழை கொட்ட ஆரம்பித்தது.யாரும் எதிர்பாராத இக் கோடைமழை குழந்தைகளை குதூகலப்படுத்தியது. ஆலங்கட்டி சேகரிக்கும் சாக்கில் மழையில் நனைய விரும்பிய பிள்ளைகள் டீச்சர்களின் அதட்டலுக்குப் பயந்து வகுப்பறைகளுக்குள் ஒடுங்கினர். ஆலங்கட்டிகள் மேல்விழுந்தபோது ஊரெங்கும் காய்ந்துகொண்டிருந்த மீன்கள் உயிர்பெற்ற பாவனையில் சற்றே துள்ளின. பிறகு கொட்டிய மழை சடுதியில் வெள்ளமாய் மாறியபோது மீன்களை சேகரித்து பத்திரப்படுத்த யாருக்கும் அவகாசம் இருக்கவில்லை. கிட்டத்தட்ட எல்லா மீன்களையுமே மழைவெள்ளம் தன்னுள் இழுத்துக் கொண்டுவிட்டிருந்தது. ஆலங்கட்டிகள் வீழ்ந்த ஓசையும்,மழை கொட்டிய பேரோசையும் சின்ன ஃபாதர் தாமஸின் மதிய தூக்கத்தை முன்கூட்டியே கலைத்துவிட்டதில் எழுந்து வெளியே வந்தவர் ஜன்னலோரம் நின்று திரண்டோடிய வெள்ளத்தைப் பார்த்தார்.வெள்ளம் எவ்வெவற்றையோ தன்னுடன்  சேர்த்தபடி கலங்கலாய் ஓடியது. தேவையற்றவை தேவையுள்ளவை என எல்லாமே ஒன்றாகி வெள்ளத்தில் கலந்தோடின.அவர் அழுக்காய் பெருக்கெடுத்தோடிய வெள்ளத்தைப் பார்த்துக்கொண்டிருக்கையில் அதில் ஊரெல்லாம் காயவைக்கப்பட்டிருந்த மீன்களும் பயணிப்பதைக் கண்டார்.  சுழித்தோடிய  வெள்ளத்தில் மிதந்த உயிரற்ற மீன்கள் நீந்தும் பாவனையிலிருந்தன. வெள்ளத்தின் ஓட்டம் அவற்றுக்கு அளித்திருந்த அந்த பாவனை பொருந்தாமல் கூட்டம் கூட்டமாய் எல்லாக் குப்பைகளையும் போல புரண்டோடிய அவைகள் எப்படியேனும் திரும்ப உயிர்பெற்றுவிட வேண்டும் என்ற உத்வேகத்துடன் செல்வன போலிருந்தன.அவர் அம்மீன்களையே பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு மஞ்சள் நிற வாளியும் சில சாக்லெட் டப்பாக்களும்கூட வெள்ளத்தில் பயணிப்பதை அவர் கண்டார். “நாளைக்குக் காலையில மூக்கப் பிடிச்சிக்கிட்டு எழுந்திருக்க வேண்டியிருக்காது சாமி தக்காளி சூப்புடன் வந்த சோம்பாய் சொன்னார். ஏறத்தாழ காய்ந்த மீன்களெல்லாமே வெள்ளத்தோடு போனபின்பும் தீராமல் மழை பெய்தபடியிருக்கையில் அவசரமாய் தன் அறைக்குத் திரும்பிய ஃபாதர் தாமஸ் அக்கார்டியன் அங்கே பத்திரமாய் இருக்கிறதா என ஒருமுறை பார்த்துக் கொண்டார்.

*****
    

                வர்களது விளையாட்டு சலிக்காததாய் நெடு நேரத்துக்கு நீண்டுகொண்டிருந்தது. பிறகு, ஒற்றை மீனுமின்றி கரையோரம் தவளைகள் சூழக்கிடந்த அவளது மஞ்சள் வாளிக்கு ஒரு சிறு மீனையேனும் கொண்டு சேர்க்க உறுதி கொண்டவர்களாய் அவர்கள் விளையாட்டிலிருந்து நீரை விலக்கிவிட்டு எல்லோரையும் போல கை கோர்த்து மீன் தேடினர். நீருக்குள் தன்னைப் பிடிக்க நீண்ட பல நூறு வலைகளையும் கைகளையும் தப்பித் துள்ளியும் நீந்தியும் வந்த கெளுத்தியொன்று விளையாட்டில் கோர்த்துக் கிடந்தபடி தன்னைப் பிடிக்க முயன்ற இரு ஜோடிக் கைகளெனும் வலையினை தன் கொடுக்கால் வெட்ட முனைந்தது.ஒரு கையில் மீனுடன் வலிதாளாமல் மறுகையை உதறினான் தாமஸ். அவன் கையைப் பரிசோதித்துவிட்டு  எங்கோ ஓடிப்போனவள் சுண்ணாம்புடன் திரும்பி வந்தாள். கடிவாயைச் சுற்றி சிவந்திருந்த விரல்பரப்பில் அவள் வைத்த சுண்ணாம்பின் வெண்மை மெல்லக் காதலின் வண்ணமாய்ப் பரிணமிக்கத் தொடங்குகையில் ஏரியினை மேற்குச் சூரியன் நிறம் மாற்றத் தொடங்கியது. அந்த மாலையில் மனம் இன்னும் ஏரிக்குள் மிதந்தபடியிருக்க வானத்தின் பொன்மஞ்சள் நிறைந்திருந்த பிளாஸ்டிக் வாளிக்குள் மீசை விரைக்க நீந்திக்கொண்டிருந்த ஒரேயொரு கெளுத்தி மீனுடன் எல்லாரோடும் சேர்ந்து அவளும் வீடு திரும்பினாள்.


அறைவீடு - ஊரில் பாதிரியார்கள் வசிக்கும் பங்களா. சோம்பாய் - பாதிரியார்களுக்கு சமையல் செய்பவர். தூம்பா - இறந்தவரின் உடலை வைத்து கல்லறைக்கு எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் வண்டி. 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நன்றி; கல்குதிரை (2011)