Tuesday 18 August 2009

'வாழ்க்கை மனிதனை இலக்கியத்திலிருந்து தள்ளி வைக்கும் தண்டனைகளால் நிறைந்தது'


ஓரன் பாமுக்




முப்பதாண்டு காலமாக நான் எழுதி வருகிறேன். சில காலமாகவே இவ்வாறு நான் கூறிவருகிறேன். இந்த வார்த்தைகள் பொய்யென ஆகும்படிக்கு நெடுங்காலமாகவே இதைக் கூறிவருகிறேன். எழுத்தாளனாக இது எனக்கு முப்பத்தியோராவது வருடம். முப்பதாண்டு காலமாக நான் நாவல்கள் எழுதிவருகிறேன் எனச் சொல்லவே விரும்புகிறேன். சற்றே இது மிகையானாலும் கூட. கட்டுரை, விமர்சனம், இஸ்தான்புல் பற்றிய என் மனப்பதிவுகள்,அரசியல் என பலவகை எழுத்துக்களையும் நான் எழுதிவருகிறேன். ஆனால் எனது பிரதான தொழில், வாழ்வோடு என்னை இணைக்கும் விஷயம் நாவல்கள் எழுதுவதுதான்.

என்னைக் காட்டிலும் நீண்ட காலமாக எழுதிவரும் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் ஏராளம் பேர் உள்ளனர். என்னளவுக்குக் கவனம் பெறாமலே அவர்கள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக எழுதிவருகின்றனர். திரும்பத் திரும்ப நான் வாசிக்கும் மாபெரும் எழுத்தாளர்கள் லியோ டால்ஸ்டாய், பியோதர் தாஸ்தாயெவ்ஸ்கி, தாமஸ் மன் இவர்களது எழுத்து வாழ்க்கையும் ஐம்பது ஆண்டுகளைத் தாண்டியது. பிறகு ஏன் எனது முப்பதாண்டு கால எழுத்து வாழ்க்கை பற்றி இவ்வளவு பிரஸ்தாபம்?

மகிழ்வுடன் இருக்க தினசரி குறிப்பிட்ட அளவு இலக்கியத்தை நான் உட்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த வகையில் தினமும் தேக்கரண்டியளவு மருந்து உட்கொள்ளும் நோயாளிக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லை. சிறுவயதில், நீரிழிவு நோயாளிகள் தினமும் ஒரு ஊசி போட்டுக் கொள்ள வேண்டுமென்று அறிந்தபோது பெரும்பாலானவர்களைப் போல அந்நோயாளிகளுக்காக நானும் வருத்தப்பட்டேன். அவர்கள் பாதி மரணமுற்றுவிட்டவர்கள் எனக்கூட எண்ணியிருக்கிறேன். இலக்கியம் மீதான என் சார்ந்திருப்பும் என்னைப் பாதி மரணமுற்றவனாகவே வைத்திருக்கிறது. இளம் எழுத்தாளனாக இருந்தபோது மற்றவர்கள் என்னை இவ்வுலகிலிருந்து ஒதுங்கியவனாக அதனாலேயே பாதி மரணமுற்றவனாகப் பார்த்ததை உணர்ந்திருக்கிறேன். உண்மையில் பாதிப் பிசாசு என்பதே சரியானதாக இருக்கும்.

முழுவதுமாக நான் இறந்து போய் என் சடலத்துக்கு இலக்கியம் மூலமாக உயிரூட்ட முயல்வதாகக் கூட கற்பனை செய்திருக்கிறேன். என்னளவில் இலக்கியம் ஒரு மருந்து. தேக்கரண்டி, ஊசி மூலமாக மற்றவர்கள் எடுத்துக் கொள்வதுபோல் தினசரி ஒரு குறிப்பிட்ட அளவு இலக்கியம்- மாறாத பழக்கம். உங்களுக்கும் வேண்டுமெனில் குறிப்பிட்ட சில நிபந்தனைகள் பூர்த்தியாக வேண்டும். முதலில் மருந்து நல்ல மருந்தாக இருக்க வேண்டும். அது எவ்வளவு உண்மையானது எவ்வளவு வீரியமுள்ளது என்பதே அதன் நல்ல குணம் என நான் குறிப்பிடுவது. நாவலொன்றில் அடர்ந்த ஆழமான பகுதியொன்றை வாசிப்பது, அதனுலகில் நுழைந்து அது உண்மையானதொரு உலகம் என நம்புவது - இதைவிடவும் என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கும், வாழ்வோடு பிணைக்கும் விஷயம் வேறொன்று இல்லை.

நான் எப்போதும் இறந்துபோன ஒருவரது எழுத்தை வாசிப்பதையே விரும்புகிறேன். காரணம் அப்போதுதான் அந்த எழுத்தின் மீதான என் போற்றுதலை பொறாமை எனும் சிறு கருமேகம் மூடாமலிருக்கும். வயது கூடக்கூட எனக்கு அதிகம் உறுதிப்படும் விஷயம், மிகச்சிறந்த புத்தகங்கள் யாவும் இறந்துபோன எழுத்தாளர்களுடையவையே. ஒருவேளை சிறந்த புத்தகங்களின் ஆசிரியர்கள் உயிரோடிருப்பின், அவர்களது இருப்பு ஆவிகளது இருப்பாகத் தோன்றுகிறது. இதனால்தான் பெரும் எழுத்தாளர்களைத் தெருவில் காண்கையில் தொலைவே இருந்து அவர்களைக் கண்டு வியப்பெய்தும்போது, நம் கண்களையே நாம் நம்பாமல் அவர்களை ஆவிகளெனக் கருதி அருகே செல்லாமல் நின்றுவிடுகிறோம். சில தைரிய மனம் படைத்தவர்கள் மட்டும் நெருங்கிச் சென்று ஆட்டோகிராஃப் கேட்கிறார்கள். இவர்கள் சீக்கிரமே இறந்து போவார்கள் என மனதில் நான் நினைப்பதுண்டு. பிறகு அவர்களது புத்தகங்கள் இப்போதிருப்பதை விடவும் உயரியதொரு இடத்தை நம் இதயங்களில் பெற்றுவிடும். ஆனால் எல்லா புத்தகங்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இது பொருந்தாது.

என்னுடைய எழுத்தே எனது தினசரி இலக்கிய மருந்தாகுமென்றால் அது முற்றிலும் வேறான விஷயம். என்னுடையதைப் போன்ற நோயால் அவதியுறுவோருக்கெல்லாம் மிகச்சிறந்த நிவாரணம், மகிழ்ச்சிக்கான ஊற்றுக்கண் எதுவென்றால் தினமும் அரைப்பக்கம் எழுதுவதுதான். முப்பது வருடங்களாக எழுதுவதற்கென்று தினமும் சராசரியாக பத்துமணி நேரம் தனியே ஓர் அறையில் அமர்ந்திருக்கிறேன். வெளியீட்டுக்கு உகந்ததாக இருந்த எழுத்தின் அளவை கணக்கிட்டுப் பார்த்தீர்களேயானால் என்னுடைய சராசரி தினசரி எழுத்து அரைப்பக்கத்திற்கும் மிகாதது. நான் எழுதுபவற்றில் பெரும்பாலானவை என்னுடைய சொந்த ‘நல்ல எழுத்து’ என்ற அளவுகோலுக்குள் வராதவையே. இவை இரண்டும் துயரத்தின் இருபெரும் ஊற்றுக் கண்கள்.

தயவு செய்து என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். என்னைப் போலப் பெரிதும் இலக்கியத்தைச் சார்ந்திருக்கும் ஓர் எழுத்தாளன் தான் இதுவரை எழுதிய புத்தகங்களின் புகழில் மயங்கியோ, தான் எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கை குறித்த தற்பெருமை கொண்டோ, அந்தப் புத்தகங்கள் செய்த சாதனையை நினைத்தோ இறுமாந்திருக்க மாட்டான். இந்த உலகைக் காப்பாற்றுவதாக பாவனை செய்யக்கூட இலக்கியம் அவனை அனுமதிப்பதில்லை. சொல்லப்போனால் அன்றைய தினத்தைக் காப்பாற்றிக் கொள்ள மட்டுமே சந்தர்ப்பமளிக்கிறது. எல்லா தினங்களுமே கடுமையான தினங்கள். கடுமையான தினங்கள் அவனால் எதையும் எழுத இயலாத தினங்கள். எழுதாத எல்லா தினங்களும் கடுமையான தினங்கள். அந்த தினத்தைக் கடந்து செல்லப் போதுமான தைரியத்தைப் பெறுவதுதான் இங்கு முக்கியம். வாசிக்கும் புத்தகம் அல்லது அதிலோரு பக்கம் நல்லவொன்றாக அமைந்துவிட்டால் அதிலிருந்து மகிழ்ச்சியைப் பெறுவது- கூடியமட்டில் அந்த தினத்துக்காவது.

புத்தகமொன்றில் மூழ்கிப் போகாத பட்சத்தில், நல்லபடியாக என்னால் எழுதமுடியாத நாளைப் பற்றி நான் நினைப்பது இதுதான்; முதலில் என் முன்னே உலகம் மாறிவிடுகிறது; தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றாகிவிடுகிறது. அருவெறுப்பானதாகி விடுகிறது. எனக்கு இது நிகழ்வதை என்னை அறிந்தவர்களும் உணர்கிறார்கள். காரணம், என்னைச் சுற்றியுள்ள உலகைப் பிரதிபலிப்பவனாக நான் மாறிவிடுகிறேன். உதாரணமாக மாலையில் என் முகத்தில் தெரியும் நிராசையைக் கண்ட அன்றைய தினம் உருப்படியாக எதையும் நான் எழுதவில்லையென என் மகள் சொல்லிவிடுவாள். இதை அவளுக்குத் தெரியாமல் மறைத்துவிடவே விரும்புகிறேன். ஆனால் என்னால் முடிவதில்லை.

இந்த இருண்ட கணங்களில் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான கோடு அழிந்து விடுகிறது. நான் யாரிடமும் பேச விரும்புவதில்லை. இந்த நிலையில் என்னைக் காண்பவர்களும் என்னோடு பேச விரும்புவதில்லை. இதே போன்ற ஆனால் சற்றே வலுக்குறைந்த ஒரு துக்கவுணர்வு தினமும் மதியப்பொழுதில், சரியாகச் சொன்னால் ஒரு மணியிலிருந்து மூன்று மணிக்குள் என்மீது கவிகிறது. ஆனால் வாசிப்பதன் மூலமும், எழுதுவதன் மூலமும் அதிலிருந்து மீள்வதற்கு நான் கற்றுக் கொண்டேன். உரிய நேரத்தில் செயல்பட்டால் நான் சவமாகிப் போவதிலிருந்தும் என்னையே காப்பாற்றிக்கொள்ள முடியும்.

பிரயாணம், பணம் செலுத்தப்படாத எரிவாயு ரசீது, ராணுவ சேவை (ஒரு காலத்தில்), அரசியல் விவகாரங்கள் (சமீபகாலமாக) அல்லது வேறு ஏதேனும் தடை ஏற்பட்டு எனது காகித-மை சிகிச்சை நீண்ட காலத்துக்குத் தடைபட்டால் துயரம் என்னுள் சிமெண்ட்டைப்போல இறுகிவிடுகிறது. வெளியில் நடக்க என் உடல் சிரமப்படுகிறது. முட்டிகள் மடக்க முடியாதவைகளாகிவிடுகின்றன. தலை கல்லாகிவிடுகிறது. சுவாசம் கூட வேறொரு வாசனையைக் கொண்டு விடுகிறது. இந்தத் துயரம் மேலும் வளரவே செய்கிறது.

காரணம், வாழ்க்கை மனிதனை இலக்கியத்திலிருந்து தள்ளி வைக்கும் தண்டனைகளால் நிறைந்தது. நெரிசல் மிக்க ஒரு அரசியல் கூட்டத்தில் நான் அமர்ந்திருக்கலாம், வகுப்புத் தோழர்களுடன் பள்ளியில் நடைக்கூடத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கலாம், விடுமுறை தினத்தில் உறவினர்களோடு சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கலாம், என்னிலிருந்து பல உலகங்கள் தள்ளி தன் சிந்தனையை வைத்திருக்கம் நல் இதயம் படைத்த நண்பரொருவருடன் சகஜமாக உரையாட சிரமப்பட்டுக் கொண்டிருக்கலாம், தொலைக்காட்சித் திரையில் மூழ்கியிருக்கலாம், முக்கியமானதொரு வியாபார பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கலாம், எதையாவது வாங்கிக் கொண்டிருக்கலாம், வழக்கறிஞரிடம் போவதற்கான வழியைத் தேடிக் கொண்டிருக்கலாம், ஒரு விசாவுக்கென என்னுடைய புகைப்படத்தை எடுத்துக் கொண்டிருக்கலாம் - சட்டென என் இமைகள் அழுத்துகின்றன,நடுப்பகலாய் இருந்தாலும் நான் உறங்கிப் போகிறேன். வீட்டிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறேன். என் அறைக்குத் திரும்பி தனிமையில் பொழுதைக் கழிக்க இயலாது, என்னுடைய ஒரே ஆறுதல் நடுப்பகலில் போடும் இந்தக் குட்டித் தூக்கம்தான்.

ஆனால், உண்மையில் இந்த வேட்கை இலக்கியத்திற்கானது அல்ல, தனியே இருந்து கனவு காண உதவும் ஓர் அறைக்காகத்தான். அப்படி வாய்த்தால, மக்கள் நெரிசல் மிக்க இடங்கள், குடும்ப ஒன்று கூடல்கள், பள்ளி பழைய மாணவர்கள் சந்திப்பு, விழாக்கால உணவுகள், அந்த விழாக்களில் கலந்து கொள்ளும் மக்கள் என அற்புதமான கனவுகளை நான் காண்பேன். ஏராளம் வைக்கப்பட்டுள்ள அந்த விடுமுறை தின உணவுகளை நானே கண்டறிந்த விஷயங்களைச் சேர்த்து இன்னும் சுவை கூடியவையாக ஆக்குவேன். அந்த மக்களை இன்னும் சுவாரஸ்யமானவர்களாக ஆக்குவேன். கனவுகளில் எல்லாமும் எல்லோரும் சுவாரஸ்யமானவர்களாக, நம்மை ஆட்கொள்வனவாக, உண்மையானவையாக உள்ன. அறிந்த உலகத்தின் விஷயங்களிலிருந்து அறியப்படாத புதிய உலகை உருவாக்குகிறேன்.

நாம் விஷயத்தின் முக்கிய கட்டத்தை நெருங்கி விட்டோம். நன்றாக எழுத, முதலில் கவனச் சிதைவின் மட்டில் சலிப்புற வேண்டும். கவனச் சிதைவின் மட்டில் சலிப்புற நிஜ வாழ்வுக்குள் நுழைய வேண்டும். அங்கே ஓசைகளால் நான் பந்தாடப்படுகிறேன். ஒலிக்கும் பல்வேறு தொலைபேசிகளுக்கு நடுவே ஒரு அலுவலக அறையில் அமர்ந்திருப்பது, நண்பர்களும் அன்புக்குரியவர்களும் சூழ பிரகாசமானதொரு காலநிலை நிலவும் கடற்கரையில் இருப்பது, மழைநடுவே ஒரு சவ ஊர்வலத்தில் செல்வது - வேறு வார்த்தைகளில் சொன்னால், என்னைச் சுற்றி அந்தக் காட்சி நிகழத் துவங்கும். அந்தக் கணமே அந்த இடத்தில் நான் இருக்கும் நினைவு மறந்து ஓரத்தில் நின்று நிகழ்வனவற்றைப் பார்ப்பவனாகிவிடுகிறேன். பகல் கனவு காணத் துவங்குகிறேன்.

நம்பிக்கை வறண்ட மனநிலையாக இருந்தால் நான் எவ்வளவு சலிப்புற்றிருக்கிறேன் என எண்ணிப் பார்ப்பேன். எப்படியிருந்தாலும் எனக்குள்ளிருந்து ஒரு குரல் ‘அறைக்குத் திரும்பிப் போய் மேசையில் உட்கார்’ என விரட்டும். இந்தச் சூழ்நிலையில் மற்றவர்கள் என்ன செய்வார்களோ தெரியாது. ஆனால் இந்தச் சூழ்நிலைதான் என்னைப போன்றவர்களை எழுத்தாளர்களாக்குவது ,நான் நினைக்கிறேன், இந்தச் சூழ்நிலை கவிதையை நோக்கியல்ல உரைநடை மற்றும் புனைவை நோக்கிச் செலுத்துகிறது. இது நான் தினமும் உட்கொள்ள உறுதி மேற்கொள்ளும் மருந்தின் குணங்கள் மீது இன்னும் கொஞ்சம் ஒளியைப் பாய்ச்சுகிறது. மருந்தின் பகுதிப் பொருள்கள் சலிப்பு, நிஜவாழ்வு, கற்பனையில் காணும் வாழ்வு ஆகியனதான் என்பது நமக்குப் புலப்படுகிறது.

குறைந்தபட்சம், என்னைப்போன்ற நாவலாசிரியர்களுக்கு, எழுதுவதென்பது ஒரு ஆறுதல். ஒரு நிவாரணம் கூட எனத் தொடங்கும் எளிய தத்துவமொன்றை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன். எழுதப்போகும் விஷயத்தை நாங்களே தேர்ந்தெடுக்கிறோம். தினப்படி எங்களது பகல்கனவுத் தேவைகளையொட்டி நாங்களே எங்கள் நாவல்களை வடிவமைக்கிறோம். எண்ணங்கள், உணர்ச்சிப்பெருக்குகள், சீற்றங்கள், ஆசைகள் இவைகளால்தான் நாவல்கள் தூண்டப்பெறுகின்றன என்பதை நாம் அறிவோம்.

எங்கள் காதலியரை குஷிப்படுத்த, எதிரிகளை அவமானப்படுத்த, நாங்கள் போற்றும் ஒன்றைப் பற்றிப் பேச, அதைப்பற்றி ஒன்றுமே தெரிந்திராத நிலையில் அறிவார்த்தமாக அந்த விஷயத்தைப் பற்றிப் பேசி மகிழ்ச்சியடைய, தொலைந்துபோய் நினைவில் மட்டுமே எஞ்சிய காலங்களைக் குறித்து மகிழ, காதலுறவு கொள்வது போல கனவு காண அல்லது வாசிக்க அல்லது அரசியலில் ஈடபட, ஒருவரது தனிப்பட்ட கவலைகளைப் பேச, தெளிவானதும், புரியாததுமான இவையும் இவைபோன்ற வேறுபல புதிரான, சொல்லப்போனால் முட்டாள்த்தனமான ஆசைகள்தான் எங்களை வடிவமைக்கின்றன. அவை எங்கேயிருந்து வருகின்றன, எங்கள் பகல் கனவுகள் எதைக் குறிக்கின்றன என எங்களுக்குத் தெரியாதிருக்கலாம். ஆனால் நாங்கள் எழுத அமரும்போது எங்கிருந்தோ வரும் காற்றைப் போல எங்களுக்குள் உயிர் மூச்சை ஊட்டுபவை இந்தப் பகல்கனவுகள்தாம். எங்கே போகிறோம் என்பது தெரியாத மாலுமியைப்போல இந்த மர்மக் காற்றுக்கு நாங்களும் அடிபணிந்து விடுகிறோம்.

ஆனால் அதே நேரம் எங்கள் மனதின் இன்னொரு பகுதியில் நாங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதை நினைவுகூர முடிவதைப் போல இப்போது எங்கே இருக்கிறோம் என்பதையும் வரைபடத்தில் மிகச் சரியாகச் சுட்டமுடியும். அந்தக் காற்றிடம் முழுமுற்றாக அடிபணிந்து விட்ட நேரங்களிலும் நான் மிகப்போற்றும் எழுத்தாளர்களை போல் பயணத்தின் திசை பற்றிய அறிவு என்னுள் நீங்காமல் இருக்கவே செய்கிறது. பயணம் புறப்படும் முன் நான் திட்டமிடுகிறேன், சொல்ல விரும்பும் கதையை பல பாகங்களாக பிரிக்கிறேன், என் கப்பல் எந்தெந்த துறைமுகங்களில் நிற்க வேண்டும், வழியில் என்னென்ன சரக்குகளை ஏற்ற வேண்டும், எவ்வெவற்றை இறக்க வேண்டும். என் பயணத்திற்காகும் நேரத்தைக் கணித்து பயண வழியை வரைபடத்தில் குறிக்கிறேன்.

ஆனால் அந்தக் காற்று எங்கிருந்தோ வீசி என் கப்பற்பாய்களை இழுத்து, என் கதையின் திசையை மாற்ற நினைத்தால் அதை நான் எதிர்க்க மாட்டேன். முழுமையான தனது பாய்களுடன் கப்பல் விழைவது முழுமையையும் கச்சிதத்தையும்தான். அனைத்தையும், எல்லாவற்றிலும் கலக்கக்கூடிய, எல்லாமும் ஒன்றோடொன்று தொடர்புடைய, எல்லாமும் வேறான எல்லாவற்றைப் பற்றியும் அறிந்திருக்கக் கூடிய அந்த விசேஷ இடத்தையும் காலத்தையும் நான் தேடுவதைப் போல. சட்டென காற்று நின்று போகிறது. எல்லாமே அசைவற்றிருக்கும் ஓர் இடத்தில் நான் சலனமற்று நிற்கிறேன். பொறுமையாக இருந்தால் சலனமற்றும் கலங்கியும் கிடக்கும் இந்த நீரில் என் நாவலை முன்னெடுத்துச் செல்லும் விஷயங்கள் இருப்பதைக் கண்டறிவேன்.

நான் ஏங்குவது என்னுடைய SNOW நாவலில் நான் விவரிக்கும் ஆன்மீகத் தூண்டுதலைப் போன்ற ஒன்றுக்கு அது ‘குப்ளாய்கான்’ கவிதையில் கூல்ரிட்ஜ் குறிப்பிடும் அகத்தூண்டுதல் இல்லை என கூறமுடியாது. இந்த அகத்தூண்டுதல் (கூல்ரிட்ஜ்க்கும் SNOW நாயகன் காவுக்கும் கவிதைகள் வழி வருவதைப் போல) ஒரு நாடகீயமான வழியில், ஒரு நாவலில் பொருந்தக் கூடிய காட்சிகள் மற்றும் சூழல்கள் மூலம் என்னை வந்தடைய வேண்டும். பொறுமையுடன் கவனமுடன் காத்திருக்கும்போது என் கனவு பலிக்கிறது. நாவல் எழுதுவதென்பது இந்த ஆசைகள், காற்றுகள், அகத்தூண்டல்கள், மனதின் இருள்பகுதிகள் மற்றும் அவற்றின் மூட்டமான அசைவற்ற கணங்கள் இவற்றிடம் மனம் திறந்து கொள்வதுதான்.

நாவலென்பது நமது கப்பற்பாய்களை இந்தக் காற்றுகளால் நிரப்புவது, அறியாத இடங்களிலிருந்து வீசும் அகத்தூண்டுதல்களால் தன்னைக் கட்டமைத்துக் கொண்டு நமக்கு பதிலிறுப்பது, மாற்றம் வேண்டி நாம் கண்ட பகல் கனவுகளனைத்தையும் கைப்பற்றிக் கொள்வது, அனைத்தையும் அர்த்தமுள்ள ஓர் முழுமைக்குள் கொண்டு வருவது அல்லாமல் வேறெது? அனைத்திற்கும் மேலாக நாவலென்பது நாம் எப்போதும் உயிர்ப்புடனும், ஆயத்தமுடனும் வைத்திருக்க உதவும் ஒரு கனவு உலகத்தைத் தனக்குள் கொண்டிருக்கும் ஒரு கூடையைப் போன்றது. நாவலென்பது அதனுள் நுழைந்ததும் வலிமிகுந்த இவ்வுலகிலிருந்து நாம் மீள உதவுகிற சிறுசிறு பகல்கனவுகளால் பின்னப்பட்டது.

தொடர்ந்து எழுத இந்தக் கனவுகள் மேலும் மேலும் துலக்கப்பெறுகின்றன. எழுத எழுத கூடைக்குள் இருக்கும் இரண்டாவது உலகம் விரிவடையத் தொடங்குகிறது, எல்லா விவரங்களும் கொண்டு முழுமையடைகிறது. எழுத்தின் வழியாகவே இந்த உலகை நாம் அறிந்தோம். எவ்வளவு சரியாக அதைப் புரிந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு நமது தலைகளில் அதைச் சுமந்து செல்வது சுலபமாகிறது. நாவலின் பாதியிலிருந்தபடி நன்றாக எழுதிக் கொண்டிருக்கையில் அந்நாவலின் கனவுகளுக்குள் சுலபமாக என்னால் நுழைய முடியும். வாசிப்பதன் மூலம் மகிழ்ச்சியுடன் நாம் உள் நுழைய முடியும் புதிய உலகங்கள்தான் நாவல்கள். வாசிப்பதைவிடவும் எழுதுவது அவற்றுள் நுழைவதை இன்னும் மகிழ்ச்சியானதாக்குகிறது. தாம் விவரிக்க விரும்பும் கனவுகளை, வெகு இலகுவாக விவரிக்க விரும்பும் கனவுகளை தாங்கள் சுமந்து செல்ல ஏற்றவகையில் நாவலாசிரியர்கள் தங்கள் நாவல்களை வடிவமைக்கிறார்கள்.

நல்ல வாசகனுக்கு அவைகள் மகிழ்வளிப்பதைப் போல நல்ல எழுத்தாளனுக்கு ஒரு நாளின் எந்த நேரத்திலும் தன்னை அதனுள் தொலைத்து மகிழ்ச்சி காணக்கூடிய வலுவானதொரு புதிய உலகை அளிக்கின்றன. இத்தகு அற்புத உலகின் ஒரு சிறு பகுதியை என்னால் உருவாக்க முடிந்தால் கூட என் மேசையை நெருங்கி பேனாவையும் காகிதத்தையும் தொடும் அந்த கணத்தில் பெருமகிழ்ச்சியடைவேன். பழகிப்போன, சலிப்பூட்டும் இந்த உலகை சட்டென்று கைவிட்டு சுதந்திரமாக உலவ உதவும் பரந்தவெளியையுடைய அந்த உலகில் நுழைவேன். யதார்த்த உலகுக்குத் திரும்புவது அல்லது நாவலின் இறுதியை நெருங்குவது என்ற எண்ணமே வராது. இந்த உணர்வு நான் புதிய நாவலொன்றை எழுதுகிறேன் என அறியும்போது நல்ல வாசகனொருவனுக்கு உண்டாகும் மனநிலையுடன் தொடர்புடையது. "உங்கள் நாவல் நீளமானதாக இருக்கட்டும்" என்ற குரலை " நீளம் குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்" எனக் கோரும் பதிப்பாளருடைய குரலைக்காட்டிலும் ஆயிரம் தடவைகள் அதிகமாகக் கேட்கிறேன் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

தனி மனிதனொருவனின் சந்தோஷங்களிலிருந்து உருவாகும் ஒரு படைப்பு எவ்வாறு பல்லாயிரக்கணக்கான மற்றவர்களுக்கு ஆர்வமூட்டுவதாக உள்ளது? என்னுடைய My name is Red-ன் வாசகர்கள், எல்லாவற்றையும் விளங்கிக்கொள்ள முயல்வது ஒரு வகையான அறிவீனம் எனும் செக்கூரேயின் கருத்தை நினைவுகூர்வார்கள். இந்தக் காட்சியில் நான் மனமொத்துப் போவது என்னுடைய குட்டிக் கதாநாயகன் ஓரனுடன் அல்ல அவனை செல்லப் பரிகாசம் செய்யும் அவன் அம்மாவுடன்தான். இன்னுமொரு அறிவீனத்தைப் புரிய அதாவது, ஓரனைப் போல நடந்துகொள்ள அனுமதிப்பீர்களேயானால் எழுத்தாளனுக்கு மருந்தாகப் பயன்படும் கனவுகள் வாசகனுக்கும் அவ்வாறே பயன்படக் காரணம் என்னவென்று விளக்க முற்படுவேன். ஒலிக்கும் தொலைபேசி, வாழ்வின் இடர்ப்பாடுகள், தேவைகள், துன்பங்களிலிருந்து தொலைவேயிருந்து நல்லபடியாக நான் எழுதிக் கொண்டிருந்தால் தன்னிச்சையாக மிதக்கும் என் சொர்க்கத்தை இயக்கும் விதிகள் எனது குழந்தைப் பருவத்து விளையாட்டுக்களை எனக்கு நினைவூட்டுகின்றன.

எல்லாமே எளிமையாகிவிடுகின்றன. வீடுகள், கார்கள், கப்பல்கள், கட்டடங்களையும் என்னால் ஊடுருவிப் பார்க்க முடிகிறது. காரணம் எல்லாமே கண்ணாடியால் செய்யப்பட்டுள்ளதைப் போலுள்ளன. காரணம் அவை தங்கள் ரகசியங்களை எனக்கு சொல்லத் தொடங்கியுள்ளன. என்னுடைய வேலை விதிகளைச் சொல்லிவிட்டு கேட்டுக் கொண்டிருப்பதுதான். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நடப்பவற்றை மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருப்பது, என்னுடைய கதைமாந்தர்களுடன் கார்களிலும் பஸ்களிலும் ஏறி இஸ்தான்புல்லைச் சுற்றிவருவது, என்னைக கண்ணீர் சிந்த வைத்த இடங்களை புதிய விழிகளோடு பார்ப்பது, இவ்வாறு செய்கையில் அவற்றை மாற்றுவது என் வேலை, சந்தோஷமாக இருப்பது, காரணம் விளையாட்டில் ஈடுபட்டிருக்கையில் (குழந்தைகள் போல்) நான் எதையேனும் கற்றுக் கொள்கிறேன்.

கற்பனைத்திறன் மிக்க நாவலாசிரியனின் முக்கிய குணம் ஒரு குழந்தையைப் போல இவ்வுலகை மறந்துவிட முடிவதுதான். பொறுப்பற்றுத் திரிந்து அதில் சந்தோஷமடைவது, அறிந்த உலகின் விதிகளிடமும் சட்டங்களிடமும் விளையாடுவது. அதே நேரம் தன்னிச்சையான தனது கற்பனை ஓட்டங்கள் பிற்பாடு தனது வாசகர்களை நாவலுள் கட்டற்றுத் திரியவிடும் ஆழ்ந்த பொறுப்புணர்வையும் தொட்டுவர வேண்டும். நாள் முழுவதும் அவன் விளையாடிக் கழிக்கலாம். ஆனால் வேறு யாரைவிடவும் மிகுந்த பொறுப்புள்ளவன் என்ற எண்ணம் அவனுள் ஆழப் பதிந்திருக்கிறது. காரணம் குழந்தைகளைப் போல விஷயத்தின் மையத்தை நேரடியாக அவனால் பார்க்க முடிகிறது. ஒரு காலத்தில் சுதந்திரமாக விளையாடிய விளையாட்டுக்கு விதிகளை வகுக்கும் தைரியம் வந்த பிறகு தனது வாசகர்களும் அந்த விதிகளுக்குள், அந்த மொழிக்குள், அந்த வாக்கியங்களுக்குள் அதனாலேயே அந்தக் கதைக்குள்ளும் ஈர்க்கப்பட்டுவிடுவார்கள் என உணர்கிறான். நன்றாக எழுதுவதென்பது வாசகனிடம் "அதே விஷயத்தை நானே சொல்லப்போகிறேன், ஆனால் அந்த அளவுக்கு குழந்தைத்தனமாக இருக்க மாட்டேன்" எனச் சொல்வதுதான்.

நான் ஆராயும், உருவாக்கும், விரிவுபடுத்தும் இந்த உலகம். போகிறபோக்கில் விதிகளை வகுப்பது, எங்கிருந்தோ காற்று வந்து என் கப்பற்பாய்களை நிரப்பக் காத்திருப்பது, என் வரைபடத்தை ஆழ்ந்து நோக்கியபடி இருப்பது - இவையெல்லாம் எனக்கு மட்டுமே சொந்தமான குழந்தைத்தனமான அறியாமையிலிருந்து பிறந்தவை. இது எல்லா எழுத்தாளர்களுக்குமே நடக்கிறது. எழுத்து தடைபட்டு நிற்கும்போது திடீரென எழுதத் தூண்டும் ஒரு உந்துதல் தோன்றும் அல்லது முன்பு எழுதுகையில் இதே உந்துதல் தோன்றி அதை எழுத முடியாமல் போன நாவலின் பகுதிக்கு நான் திரும்புவேன். எல்லா எழுத்தாளர்களுக்கும் இந்த வாதை பொதுவானது. மற்றவர்களுடையதைக் காட்டிலும் என் துன்பம் குறைவானது என எண்ணுகிறேன். விட்ட அந்த இடத்திலிருந்து மீண்டும் தொடங்க முடியாமல் போகையில் நாவலில் இருக்கும் இன்னொரு இடைவெளியை நோக்கிப் போகிறேன். காரணம் என் வரைபடத்தை மிகக் கவனமாக நான் பார்த்திருக்கிறேன். என்னால் நாவலின் இன்னொரு பகுதியை எழுதத் தொடங்க முடியும். இது அவ்வளவு பெரிய விஷயமில்லை. கடந்த மழைக்காலம் பல்வேறு அரசியல் விவகாரங்களில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கையில் இதே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது நாவல் எழுதும் விஷயத்தின் மீது ஒளியைப் பாய்ச்சும் ஏதோவொன்றைக் கண்டுபிடித்ததாக உணர்ந்தேன்.

என் மீதான வழக்கு, நான் மாட்டிக் கொண்ட அரசியல் சிக்கல்கள் நான் விரும்பியதை விடவும் கூடுதல் அரசியல் உணர்வுள்ள, அதிகக் கரிசனமுள்ள, பொறுப்புள்ள நபராக என்னை மாற்றியதை உணர்ந்தேன். வருத்தமேற்படுத்திய நிகழ்வுகள், அதைவிடவும் வருத்தமுற்ற மனம் - இதை ஒரு புன்னகையோடு சொல்லலாம். அது இன்றி எந்த நாவலும் சாத்தியமாகாத குழந்தைத்தனமான அறியாமைக்குள் என்னால் நுழைய இயலாமைக்கு இதுதான் காரணம்.... "இது புரிந்துகொள்ளக்கூடியதுதான், எனக்கு இதுபற்றி வியப்பு ஏதும் இல்லை" சம்பவங்கள் மெதுவே தொடங்கியபோது நான் எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன். என் பொறுப்பற்றத்தனம், குழந்தைத்தனமான விளையாட்டுப் புத்தி, குழந்தைத்தனமான நகைச்சுவை இவையெல்லாம் ஒருநாள் திரும்பி வரும், அப்போது அமர்ந்து மூன்று வருடங்களாக எழுதிவரும் இந்த நாவலை நான் முடிக்க முடியும். இருந்தும் தினசரி காலை, பத்துலட்சம் இஸ்தான்புல்வாசிகளை விடவும் முன்னதாக எழுந்துவிடுவேன். நள்ளிரவின் மௌனத்துள் முடிக்கப்படாமல் அமர்ந்திருக்கும் நாவலுக்குள் நுழைய முயற்சிப்பேன்.

நான் என்னையே வருத்திக் கொண்டேன். காரணம் அன்புக்குரிய என் இரண்டாவது உலகத்துக்குள் நான் நுழைய முயன்றேன். மிகவும் வருத்திக் கொண்டபிறகு நான் எழுத விரும்பிய நாவலின் பகுதிகளை என் மூளைக்குள்ளிருந்து பிடுங்குவேன். பிறகு அவை தாமாகவே தம்மை எழுதத் துவங்குவதைக் காண்பேன். இவை நான் எழுதும் நாவலின் காட்சிகள் அல்ல, முற்றிலும் வேறான ஒரு நாவலின் காட்சிகள். வேலைப்பளுவும் வறண்ட மனநிலையுமான அந்தக் காலைப்பொழுதுகளில் என் முன்னே நான் காண்பது மூன்று வருடங்களாக நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவல் அல்ல. வேறொரு நாவலின் தொடர்ந்து வளர்ந்தபடியே இருக்கும் காட்சிகள், வாக்கியங்கள், கதாபாத்திரங்கள் மற்றும் வினோத விவரங்கள்தான். பிறகு ஒரு குறிப்பேட்டில் இந்த வேறொரு நாவலின் பகுதிகளை ஒன்று சேர்த்தும், இதற்கு முன் எனக்குத் தோன்றாத எண்ணங்களைக் குறித்தும் வைக்கிறேன். இந்த வேறொரு நாவல் இறந்துபோன சமகால ஓவியர் ஒருவரின் ஓவியங்களைப் பற்றியதாக இருக்கும். அந்த ஓவியரை நான் மனக்கண்முன் கொண்டு வந்தபோதும் அவரது ஓவியங்களைப் பற்றி மட்டுமே என் சிந்தனை சென்று கொண்டிருக்கிறது. பல டநாட்களுக்குப் பின், அந்தக் கடினமான நாட்களில் ஒரு குழந்தையின் விளையாட்டுத்தனத்தை ஏன் என்னுள் கொண்டிருக்க முடியவில்லை. இனியும் என்னால் குழந்தைத் தனத்துக்கு திரும்ப முடியாது, ஆனால் ஒரு ஓவியனாகி தொடர்ந்து ஓவியங்களை வரைந்தபடியே இருக்க கனவு கண்ட அந்த நாட்களுக்குத்தான் (இஸ்தான்புல்லின்- நான் விவரித்தபடி) என் குழந்தைப் பருவத்துக்குத்தான் நான் திரும்பமுடியும்.

பிற்பாடு என் மீதான வழக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. நான் மூன்று வருட காலத்தைச் செலவிட்டிருந்த நாவலுக்குத் திரும்பினேன். குழந்தைப் பருவத்துக்குத் திரும்ப இயலாமல் என் குழந்தைப் பருவத்து உணர்ச்சிகளுக்குத் திரும்பிய அந்நாட்களில் எனக்குள் தோன்றிய அந்த நாவலை எழுத இப்போது திட்டமிட்டுள்ளேன். இந்த அனுபவம் நாவல் எழுதுவதென்ற மர்மமான கலை பற்றிய முக்கிய விஷயங்களை எனக்குக் கற்றுத் தந்தது.

மிகப்பெரும் விமர்சகரும் இலக்கியக் கொள்கையாளருமான வுல்ஃப்காஸ் ஐஸரது ‘உள்பொதிந்த வாசகன்’ என்ற கொள்கையை எடுத்துக்கொண்டு - எனக்கேற்ற வகையில் சற்றே அதை மாற்றிக்கொண்டு - இதை நான் விளக்குவேன். ஐஸர் அற்புதமானதொரு வாசக மைய இலக்கியக் கொள்கையை உருவாக்கினார். ஐஸரது கொள்கைப்படி நாவலின் அர்த்தம் பிரதியிலோ, அதன் சூழல் பொருத்தப்பாட்டிலோ இல்லை இவை இரண்டுக்கும் இடையே எங்கோ ஓரிடத்தில் இருக்கிறது. ஒரு நாவலின் அர்த்தம் அது வாசிக்கப்படுகையில்தான் வெளிப்படுகிறது. உள்பொதிந்த வாசகன் எனக் குறிப்பிடும்போது அந்த வாசகனுக்கு சிறப்பானதொரு பணியை அவர் அளிக்கிறார்.

ஏற்கனவே எழுதிக் கொண்டிருந்த நாவலைத் தொடராமல் இன்னொரு நாவலின் காட்சிகள், வாக்கியங்கள், விவரங்களைக் கனவு கண்டுகொண்டிருந்தபோது இந்தக் கொள்கை எனக்குள் ஓடியது. அது எனக்குச் சொன்னது என்னவென்றால் எழுதப்படாத ஆனால் கற்பனை செய்யப்பட்ட, திட்டமிடப்பட்ட நாவலுக்கும் (வேறு வார்த்தைகளில் சொன்னால் முடிக்கப்படாத எனது நாவலுக்கும்) ஒரு உட்பொதிந்த ஆசிரியன் இருக்கிறான். அந்த நாவலின் உட்பொதிந்த ஆசிரியனாக மாறும்போதுதான் அந்த நாவலை என்னால் முடிக்க முடியும். அரசியல் விவகாரங்களில் நான் மூழ்கியிருக்கும்போது அல்லது - என்வாழ்வில் அடிக்கடி இவ்வாறு நிகழ்ந்துவிடுகிறது - என் எண்ணங்கள், பணம் செலத்தப்படாத எரிவாயு ரசீதுகள், ஒலிக்கும் தொலைபேசிகள், குடும்ப ஒன்று கூடல்கள் இவற்றால் சிதறிவிடுகின்றன.

என் கனவுகளில் பொதிந்திருக்கும் நாவலின் ஆசிரியனாக என்னால் ஆக முடிவதில்லை. கடினமானதும் நீண்டதுமான அரசியல் ஈடுபாட்டு நாட்களில் நான் எழுத ஏங்கிக் கொண்டிருக்கும் அற்புதமான அந்தப் புத்தகத்தின் உட்பொதிந்த ஆசிரியனாக என்னால் மாற முடிவதில்லை. பிறகு அந்த நாட்கள் கடந்தன. நான் ஏங்கியிருந்தவாறே என் நாவலுக்குள் நுழைந்தேன். நாவலை முடிக்கிற தருணத்தை நெருங்கிவிட்டோம் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக உணர்கிறேன். (இந்த நாவல் ஒரு காதல் கதை. 1975க்கும் தற்போதைக்கும் இடையில், இஸ்தான்புல்லின் பணக்கார சமூகத்தில் அல்லது நாளேடுகளில் குறிப்பிடுவது போல ‘இஸ்தான்புல் சமூகத்தில்’ நடப்பது) இவற்றையெல்லாம் கடந்து வந்தபின், ஏன், கடந்த முப்பது ஆண்டுக்காலமாக என் எல்லா சக்தியையும் நான் எழுத ஏங்கும் புத்தகங்களுக்கு உட்பொதிந்த ஆசிரியனாக இருக்க செலவழித்திருக்கிறேன் எனப் புரிந்து கொண்டுள்ளேன். இது முக்கியமானது. ஏனென்றால் நான் பெரிய, தடிமனான, பகட்டான நாவல்களையே எழுத விரும்புகிறேன். அதோடு நான் மிக மெதுவாக எழுதுகிறேன். ஒரு புத்தகம் எழுதுவது பற்றிக் கற்பனை செய்வது கடினமல்ல. நான் அதிகமும் அவ்வாறு செய்கிறேன். என்னையே வேறு ஒரு நபராக நினைத்து கற்பனையில் அநேக நேரத்தை செலவிடுகிறேன். ஆனால் கடினமான விஷயம் உங்கள் கனவுப் புத்தகத்தின் உட்பொதிந்த ஆசிரியராக இருப்பதுதான்.

புகார்கள் எதுவும் வேண்டாம். ஏழு நாவல்களை வெளியிட்டுள்ள நிலையில், அது சற்றே வேலை வாங்குவது என்றாலும் கூட, நான் திடமாகச் சொல்வேன். என் கனவுகளிலுள்ள புத்தகங்களின் ஆசிரியனாகக் கூடிய திறமை எனக்கு இருக்கிறது. புத்தகங்களை எழுதிவிட்டு அவற்றைக் கடந்து வந்தது போலவே அந்தப் புத்தகங்களை எழுதக்கூடிய எழுத்தாளர்களின் ஆவிகளையும் கடந்து வந்துவிட்டேன். இந்த ஏழு உட்பொதிந்த ஆசிரியர்களும் என்னைப் பிரதிபலிப்பவர்கள் கடந்த முப்பது ஆண்டுகளில் இஸ்தான்புல்லினூடாக, என்னுடையதைப் போன்றதொரு ஜன்னல் வழியாக, வாழ்வையும் உலகையும் அறிந்தவர்கள். இந்த உலகில் உட்புறம் வெளிப்புறமாகவும், வெளிப்புறம் உட்புறமாகவும் இருக்கிறது என்பதை அறிந்தவர்கள். அதன்மட்டில் உறுதியாய் இருப்பவர்கள். அதனாலேயே விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் குழந்தையின் உள்ளார்ந்த அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும் அதை விவரிக்கிறார்கள்.

இன்னுமொரு முப்பதாண்டு காலத்துக்கு என்னால் நாவல்களை எழுத முடியும் என்பதுதான் தற்போது என்னுடைய மிகப்பெரிய நம்பிக்கை. இதை சாக்காக வைத்து என்னைப் பல புதிய நபர்களுக்குள் பொருத்திக் கொள்வேன்.
(துருக்கியிலிருந்து ஆங்கிலத்தில் மௌரீன் ஃப்ரீலி)

("உட்பொதிந்த ஆசிரியன்"/புது எழுத்து/ஜனவரி - ஏப்ரல் 2007)

1 comment:

Anonymous said...

Whom shall I call upon to share the wretched happiness of being alive (as a novelist)- Sergei Yesnin
words are within braces are mine.
Well said! orhan Pamuk. looking for some more tramslated works from the latest collection Naive and Sentimental Novelist.
- G. Manikandan