Friday, 20 February 2015

நீலநாயின் கண்கள்: அசதாவின் மொழிபெயர்ப்புக் கதைகள்.

                                                 

     

                                         


குட்டி ரேவதி

  

'நீலநாயின் கண்கள்' என்ற அசதாவின் மொழிபெயர்ப்புக்கதை தொகுப்பு, தமிழ் வாசகர்களுக்கு மட்டுமன்று, எழுத்தாளர்களுக்கும் முக்கியமானதொரு வருகை. சமீபத்தில், மார்க்வெசின் ஒரு நீளமான நேர்காணலை ஆங்கிலத்தில் வாசித்தேன். அதில் எப்படி அவர் எழுத வந்தார் என்பதை அழகாகச் சொல்லியிருந்தார். சில வருட இடைவெளிக்குப் பிறகு, அவர் பிறந்த ஊருக்கு அவருடைய அம்மாவுடன் சென்ற போது, அவர் கற்பனை ஏதும் செய்யவேண்டியிராத அளவிற்கு, அந்த ஊரே வாசிப்பதற்கும், அதைப் பார்த்து அப்படியே எழுதிப் பிரதி எடுப்பதற்குமான எல்லா காட்சிகளுடனும் ஒரு புனைவு நிறைந்து இருந்ததாகக் கூறினார். இத்தொகுப்பில் எனக்குப் பிடித்தமான எழுத்தாளர்கள், இசபெல் ஆலண்டே, மார்க்வெஸ் மற்றும் வில்லியம் ஃபாக்னரின் கதைகள் இருப்பதும் கூடுதல் சுவை.

தொடக்கத்தில், நமக்கு அறிமுகமான ரஷிய இலக்கியங்களாகட்டும் மற்ற அயல் மொழி இலக்கியங்களாகட்டும், இன்று மீண்டும் வாசிக்கையில் எந்த அளவிற்கு அவை சாதிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. பெரும்பாலும் பார்ப்பனியக் கொச்சை மொழியில், பார்ப்பனீயர்கள் உரையாடிய வழக்கிலேயே அயல்நாட்டு மனிதர்களும் உரையாடுவது கேலிக்கு இடமானதாக இருக்கிறது. உண்மையில், இதிலிருந்து தப்பித்தவன், தாஸ்தாயேவ்ஸ்கி மட்டும் தான் என்று நினைக்கிறேன். அவனுடைய இலக்கியங்களில் இருந்த வறுமையும் நேரடித்தன்மையும் உன்னதமும் கூட்டாகச்சேர்ந்து மொழிபெயர்ப்பாளரை அதன் அசாதாரணத்தன்மையை நோக்கி இழுத்துச்சென்றிருக்கலாம். அசதாவின் மொழிபெயர்ப்பு அதிலிருந்து விடுபட்டு இருப்பதற்குக் காரணம், சமீபத்தில் பரவலாக எல்லா பின்புலத்திலிருந்தும்  தமிழ்ச்சொற்கள் உற்பத்தியாகி வந்து நமது சிந்தனையிலும் கற்பனையிலும் கலந்து புதிய  கற்பனைக்கான வேதியல் மாற்றங்களை   உருவாக்கியிருப்பது தான்.  

'நீலநாயின் கண்கள்' தொகுப்பில், உள்ள கதைகளுக்கு இடையே பொதுச்சரடு ஏதுமில்லை என்று கூறியிருக்கிறார், அசதா. கதைகளைத் தொடர்ந்து வாசித்து முடிக்கையில் எனக்கு அப்படித்தோன்றவில்லை. வெவ்வேறு பெண்களின் ஆளுமையும், கதை நிகழ்வுகளைத் தீர்மானிக்கும் கற்பனை வெளியும், எழுத்தாளர்கள் அவர்கள்  குறித்து தரும் உடல் திடமும் நூலெங்கும் தொடர்ந்து இருக்கின்றன. ஆசிரியை ஐனேஸ் ஆகட்டும், வில்லியம் ஃபாக்னரின் எமிலி க்ரையர்ஸனாகட்டும், ஜேம்ஸ் தர்பரின் கதையில் வந்து போகும் திருமதி மிட்டி ஆகட்டும், மார்க்வெஸின் 'நீலநாயின் கண்கள்' கதையில் கனவுக்குள் வரும் பெண் ஆகட்டும் ஒரு பிடிவாதமான பெண் குணநலன்கள் நூலெங்கும் விரிந்து கிடக்கின்றன. இது தற்செயலான ஒன்றாகவும் இருக்கலாம்.

'ஆசிரியையின் விருந்தாளி' என்ற இசபெல் ஆலண்டேயின் கதை அப்படியே நம் நிலவெளியில் நிகழும் கதையை ஒத்திருக்கிறது. ஒரு மாம்பழத்தைத் திருடியதற்காக, சிறுவன் சுடப்பட்ட கதை. நீதியும் தண்டனையும் அறமும் பிழையாகாமல் பார்த்துக்கொள்ளும் பணியை ஒரு சமூகமே தன் கையில் எடுத்துக்கொள்வதைப் பற்றிய கதையாக இருக்கிறது. கீழைத்தேயங்களில் எப்பொழுதுமே வாழ்வின் வெளியிலிருந்து தான் நீதிகள் சொல்லப்பட்டிருக்கின்றன, ஏடுகளின் வெளிகளிலிருந்து இல்லை.

மார்க்வெஸின் 'நீலநாயின் கண்கள்' கதையை வாசித்துவிட்டு, தொடர்ந்து அடுத்த கதைக்குச் செல்லும் போது, கனவு வெளிக்குள்ளிருந்து வெளியேற இயலாமல் இன்னும் நம் இருப்பு அங்கேயே நிலைப்பட்டிருப்பதை உணரமுடிகிறது. இது மார்க்வெஸின் கதை மற்றும் அசதாவின் மொழிபெயர்ப்பின் கூட்டு சாதனையாக இருக்கலாம். 

இசபெல் ஆலண்டேயின் 'ஆசிரியையின் விருந்தாளி' மற்றும் 'தாமஸ் வர்காசின் தங்கம்' என்ற இரு கதைகளிலுமே ஒரே கதாபாத்திரங்களும் ஒரே ஊரும் வருகின்றன. தொடர் வாசிப்பில், கதாபாத்திரங்களின் குணச்சித்திரிப்பை விவரிக்க வேண்டிய அவசியமில்லாமல் போகிறது. நிறைய விடயங்களைச் சொல்லாமல் விட்டுப் போகும், ஆலண்டேயின் கதைசொல்லல் தன்மை, கதை மாந்தர்களின்  ஆளுமையை இன்னும் மெருகூட்டுவதாக இருக்கிறது. தற்போதைய தமிழ்ச்சிறுகதைகளின் கதை சொல்லல் முறைக்கு, முற்றிலும் எதிரானது இது. தமிழ்ச்சிறுகதைகளின் கதைசொல்லலில், இயன்றவரை நுட்பமான விவரங்களையும் தகவல்களையும் கொடுக்கவேண்டிய ஆவணப்பதிவு நிலைக்கு வந்துள்ளோம். இங்கே சமூக எழுச்சியும் மாற்றங்களும் நேரடியாக மொழியைத் தான் ஊடுருவும். 

என்னைப் பொறுத்தவரை, சிறுகதைகள் பொதுவாகவே, யதார்த்தத்தின் நிலைகளைச் சொல்பவையாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. ஒரு மனிதன் எடுக்கும் எதிர்பாராத முடிவுகளுக்கான அல்லது அசாதாரணமான முடிவுகளுக்கான மர்மங்கள் அவன் வாழ்வின் எத்தருணத்திலிருந்து பிறக்கின்றன என்பதை அறிவதற்கான பாதையில் விளக்கைக்காட்டிச்செல்லும் முயற்சியாகத்தான் 'சிறுகதை' என்னும் இலக்கிய வடிவம் இயங்குகின்றது. ஆனால், இங்கே பலசமயங்களில் ஒரு செய்தித்தாளில் இடம்பெற வேண்டிய சம்பவம் போல அவை 'இருளின் நிழலை' உயர்த்திப் பிடித்துக்கொண்டிருக்கின்றன.

தமிழில் வெளிவந்த மொழிபெயர்ப்புக்கதைகளில் நான் மிகவும் மதிக்கும் தொகுப்பு மார்கரெத் யூர்ஸ்னர் என்ற பெண் எழுத்தாளரின் 'கீழைநாட்டுக்கதைகள்'. வெ.ஶ்ரீராம், மொழிபெயர்க்க க்ரியா வெளியிட்டிருந்தது. வடிவமைப்பிலும், கதைத்தேர்விலும், மொழிபெயர்ப்பிலும் பொலிவு நிறைந்த தொகுப்பு. தன் கற்பனைகளால்  என்னை நீண்ட நாட்களுக்கு அலைக்கழித்த தொகுப்பு. மேலைத்தேயக் கதைகளின் அந்நியத்தன்மை இக்கதைகளில் இல்லாமல் இருந்தன.  மேலும்,   பெண்கள், அவர்கள் சராசரி வாழ்வைக் கொண்டவர்களாக  இருந்தாலும், துடி தெய்வங்களாக இருந்தாலும் அறங்களைத் தாம் செயல்படுத்துபவர்களாக இருந்தனர். மார்கரெத் யூர்ஸ்னர், அறம் எனப்பட்டவையும், அறம் என்று பெண்களால் செயல்படுத்தப்படுபவையும் மாய யதார்த்தவெளியிலிருந்து உருவி எடுத்து எழுதிக்கொண்டே இருந்தார். மிகவும் சர்ச்சைக்குள்ளான கதைகளை எழுதியவர்.

அசதாவின் இத்தொகுப்பிலும்,  பெண்களின் இத்தன்மையை எதேச்சையாக, உணர்ந்தேன். ஒரு வேளை, லத்தீன் அமெரிக்க மொழிக்கதைகளுக்கும், அவர்களுக்கு எஞ்சிய வாழ்வின் சிக்கல்களுக்கும் இத்தகைய கதைசொல்லல்    திறன் தேவையாக இருந்திருக்கலாம். எனில்,    அமெரிக்க நாட்டின் கதைசொல்லல்களை,  அதில் நிலவும் வறட்சிகளை இக்கதைகள் வென்றுவிடுவதற்குக் காரணம், இவர்கள் சொற்களில் நிரம்பியிருக்கும் மர்மமான அர்த்தவெளிகளும், மாய யதார்த்தவாதக் கதைசொல்லல் முறையும் பெண்கள் தம் நீதியைச் செயல்படுத்தக் கண்டுணரும் அற நியாயங்களும்!

மேலும், இந்நூலில், நாவலின் பகுதிகளைச் சேர்த்திருக்கவேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து. சிறுகதை வடிவங்களும் நாவல்களும் கற்பனை செய்யும் முறையிலோ வாசிப்பின் வசதியிலோ ஒரு பொழுதும் ஒத்துப்போவதில்லை. தவிர்த்திருக்கலாம். சிறுகதைகளின் துடிப்பு நிலையும் நாவல்களின் மந்தத்தன்மை கதியும் ஒத்துப்போவதில்லை. 

அசதா, தனக்கு முன்மாதிரியானவர்கள் என்று குறிப்பிட்டிருக்கும் மொழிபெயர்ப்பாளர் பட்டிலிருந்து நான் சற்று வேறுபடுகிறேன். கவிதையோ புனைவோ தட்டையான மொழிபெயர்ப்பால், நம் கற்பனை எலும்புகள் முறிக்கப்பட்டதை பல வாசிப்பில் நான் உணர்ந்திருக்கிறேன். அதுமட்டுமன்று, யசுனாரி கவபட்டாவின் 'தூங்கும் அழகிகளின் இல்லம்' நாவலை ஆங்கிலத்தில் வாசித்த போது எழும்பிய நிலக்காட்சிகளின் ஒளியும் அழகும் என்றென்றும் துலங்குவதாக இன்னும் என்னுள் நிறைந்திருக்கிறன.

அசதா, தன் பலம் குறித்த முன்முடிவுகளை இத்தொகுப்பில் கடந்திருக்கிறார்.  இன்னும் கொஞ்சம் நுட்பமான உணர்வுச்சித்திரங்களுடன் சிறுகதைகளையும் நாவல்களையும் அவர் தமிழ்வெளிக்கு அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கலாம்.  அதற்கான தேவை இங்கே நிறைய இருக்கிறது. ஏனெனில், இது  கற்பனை நிலக்காட்சிகளை விழுங்கிக்கொள்ளும் அசாத்திய குணத்தை நமக்குக் கொடுக்கும். அதேசமயம், கற்பனையின் தாராளத்தையும் நமக்கு ஊட்டும். உன்னத இலக்கியங்களை மொழிபெயர்க்கும் போது, அந்த உன்னதங்களும் நம் நினைவின் அடுக்குகளில் வண்டலாய்ச் சென்று சேர்கின்றன. இதெல்லாவற்றையும் விட ஒரு மொழிபெயர்ப்பாளர், நிறைய கலைச்சொற்களையும்  தன்னுணர்வின்றி உருவாக்கிவிடுகிறார். அத்தகைய சில சொற்களை, இத்தொகுப்பில் காண நேர்ந்த போது மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்த்துகள், அசதாவிற்கும், நாதன் பதிப்பகம் வழியாக வெளியிட்ட அஜயன் பாலாவிற்கும்!

நன்றிகள்.

(22-03-14 அன்று டிஸ்கவரி புக் பேலஸில் நடந்த விமர்சனக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

Tuesday, 15 January 2013

நீல நாயின் கண்கள்







கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்


       பிறகு அவள் என்னைப் பார்த்தாள். முதல் முறையாக என்னைப் பார்க்கிறாள் போலும் என நினைத்துக் கொண்டேன். ஆனால் சற்று கழித்து அவள்  திரும்பி விளக்கின்பின் சென்ற பிறகு என் முதுகில் தோள்பட்டைகளில் என அவளது வழுக்கும் பிசுபிசுப்பான பார்வையை உணர்ந்தபடியிருந்தேன். நான்தான் முதல் முறையாக அவளைப் பார்க்கிறேன் என்பது புரிந்தது. ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டேன்.  சுழன்று, அதன் பின் கால்களுள் ஒன்றில் ஊன்றியபடி நாற்காலியில் அமரும் முன் கடுமையும் காட்டமுமான புகையை ஒருமுறை இழுத்துக் கொண்டேன். அதன் பிறகு அவளை அங்கு கண்டேன், ஒவ்வொரு இரவும் விளக்கின் பக்கத்தில் நின்றபடி என்னைப் பார்த்துக்கொண்டிருப்பதாக. கிடைத்த மிக சொற்ப நேரத்தில் நாங்கள் செய்ததெல்லாம் அதுதான்: ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருப்பது. நாற்காலியில் பின்னங் கால்களுள் ஒன்றில் ஊன்றியபடி அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். நீண்ட அமைதியான கைகளை விளக்கின் மீதாகக் காட்டியபடி அவள் நின்றிருந்தாள். தினம் இரவில் நிகழ்வதைப்போல அவள் கண்ணிமைகள் ஒளிபெறுவதை அப்போதும் கண்டேன். அவளிடம் நான் ‘நீல நாயின் கண்கள்’ என்றபோதுதான் வழமையான அவ்விஷயம் என் நினைவுக்கு வந்தது. விளக்கிலிருந்து கைகளை எடுக்காமலே அவள் சொன்னாள். ‘அதுதான். நம்மால் ஒருபோதும் அதை மறக்க முடியாது’. பெருமூச்செறிந்தபடியே அவள் அவ்விடத்தை விட்டு அகன்றாள்: ‘நீல நாயின் கண்கள். எல்லா இடங்களிலும் அதை எழுதி வைத்திருக்கிறேன்.’

அவள் அலங்காரப்படுத்திக்கொள்ளும் மேசைக்குச் செல்வதைப் பார்த்தேன். முகம் பார்க்கும் கண்ணாடியின் வட்டப் பரப்புக்குள் தோன்றி, இப்போது ஒரு முதுகுக்குப் பின்னும் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட ஒரு ஒளியின் முன்னும் இருக்கும் என்னைப் பார்ப்பதைக் கண்டேன். தனது தீக்கங்குக் கண்களால்,  இளஞ்சிவப்பு வண்ண, கிளிஞ்சல் தாது பூசிய தனது சிறிய பெட்டியைத் திறந்தபடி என்னைத் தொடர்ந்து அவள் பார்ப்பதைக் கண்டேன். தன் மூக்குக்கு அவள் முகப்பூச்சு மாவு பூசுவதைப் பார்த்தேன். முடிந்ததும் பெட்டியை மூடினாள், திரும்ப எழுந்தாள். ‘யாரோ இந்த அறையைப் பற்றிக் கனவு கண்டபடி என் ரகசியங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்’ என்றபடியே மீண்டுமொருமுறை விளக்கினருகே சென்றாள். அலங்கார மேசைக்குச் செல்லும் முன் குளிர்காய்ந்துகொண்டிருந்தபடியே, தனது அதே நீண்ட நடுங்கும் கைகளை விளக்குத் தணலின் மீது காட்டியபடி குளிர்காயத் தொடங்கினாள். அவள் சொன்னாள்: ‘உங்களுக்குக் குளிர் தெரியவில்லை’. நான் சொன்னேன்: ‘சில நேரங்களில்’. அவள் சொன்னாள்: ‘இப்போது உங்களுக்குக் குளிரும்’. ஏன் என்னால் இருக்கையில் தனித்திருக்க முடியவில்லையென்பது அப்போது புரிந்தது. குளிர்தான் எனக்கு என் தனிமையின் நிச்சயத்தை அளித்துக்கொண்டிருந்தது. ‘இப்போது குளிருகிறது’ என்றேன். ‘இரவு நிசப்தமாயிருப்பது விசித்திரமாயிருக்கிறது. பாய்மரத்துணி விழுந்துவிட்டிருக்கவேண்டும்’. அவள் பதில் பேசவில்லை. திரும்ப அவள் கண்ணாடியை நோக்கிச் சென்றாள், அவளுக்கு முதுகு காட்டியபடி நாற்காலியில் திரும்பி அமர்ந்தேன். அவளைப் பார்க்காமலேயே அவள் என்ன செய்துகொண்டிருக்கிறாளென்பதை அறிந்தேன். அவள் கண்ணாடி முன் அமர்ந்து, கண்ணாடியின் ஆழங்களுக்குள் செல்லவும் அவள் பார்வைக்கு அகப்படவும் போதிய அவகாசம் கொண்டிருந்த என் முதுகைப் பார்த்தபடியிருந்தாள்.அவள் கைக்கு இரண்டாவது திரும்புதலை தொடங்க போதிய அவகாசம் கிடைக்கும் முன், அவள் கையின் முதல் திரும்புதலினால் அவள் உதடுகள் கருஞ்சிவப்பு வண்ணத்தால் பூசப்படும் வரை, அவள் பார்வை கண்ணாடியின் ஆழங்களுக்குள் சென்று திரும்ப போதிய அவகாசமிருந்தது. எனக்கு எதிரே வழவழப்பான சுவரைப் பார்த்தேன். அதில் எனக்குப் பின்னே அமர்ந்திருக்கும் அவளை நான் பார்க்க முடியாத குருட்டுக் கண்ணாடியாயிருந்தது அது. ஆனால் சுவரிருக்குமிடத்தில் ஒரு கண்ணாடியிருந்தால்  அதில் அவள் எந்த இடத்தில் இருப்பாள் என்பதைக் கற்பனை செய்ய முடிந்தது. ‘நான் உன்னைப் பார்க்கிறேன்’, அவளிடம் சொன்னேன். தன் விழிகளை அவள் உயர்த்தியிருந்தால், நாற்காலியிலிருந்து திரும்பி அவளை நோக்கியிருக்கும் என் முதுகைப் பார்த்திருந்தால் எப்படியிருக்கும் என்பதை நான் சுவரில் பார்த்தேன். கண்ணாடியின் ஆழத்தில் என் முகம் சுவரை நோக்கித் திரும்பியது. பிறகு அவள் தன் கண்களைத் தாழ்த்தியதை, தாழ்த்தி தன் மார்க்கச்சையே பேசாமல் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் திரும்ப அவளிடம் சொன்னேன்: ‘நான் உன்னைப் பார்க்கிறேன்’. மார்க்கச்சிலிருந்து திரும்பத் தன் கண்களை உயர்த்தினாள். ‘அது சாத்தியமேயில்லை’, என்றாள். ஏன் என்று கேட்டேன். மீண்டும் கண்களை மார்க்கச்சில் வைத்தபடி, ‘ஏனென்றால் உங்கள் முகம் சுவரை நோக்கித் திரும்பியுள்ளது’, என்றாள். நான் நாற்காலியில் சுழன்று திரும்பினேன். சிகரெட்டை வாயில் பற்றியிருந்தேன். நான் கண்ணாடியைப் பார்த்தபடியிருக்க அவள் விளக்கிடம் வந்திருந்தாள். விரல்களின் நிழல் அவள் முகத்தை மறைத்திருக்க தன்னைத்தானே நெருப்பில் வாட்டிக்கொள்ளும் ஒரு கோழியின் சிறகுகளைப்போல தன் கைகளை விளக்கின் மேலாக விரித்திருந்தாள். ‘எனக்கு ஜலதோஷம் பிடிக்கப் போகிறதென நினைக்கிறேன்’ என்றாள். ‘இது பனி நகராக இருக்கவேண்டும்’. முகத்தை அவள் பக்கவாட்டில் திருப்பினாள், பழுப்பிலிருந்து சிவப்பு வண்ணமாக மாறிய அவள் முகம்  திடீரென சோகக்களை பூண்டது. ‘ஏதாவது செய்யுங்கள்’ என்றாள். பிறகு அவள் தன் உடைகளைக் களைய ஆரம்பித்தாள், மேலே மார்க்கச்சில் தொடங்கி, ஒவ்வொன்றாக. நான் சொன்னேன்: ‘நான் சுவர்ப்பக்கம் திரும்பிக்கொள்ளப் போகிறேன்’. ‘வேண்டாம். எப்படியிருப்பினும் நீங்கள் அந்தப்பக்கம் திரும்பியிருந்த போது பார்த்தது போல என்னைப் பார்க்கத்தானே செய்வீர்கள்’. இதைச் சொல்லி முடிக்கும் முன் விளக்கின் ஜுவாலைகள் நீண்டு அவளது பழுப்பு சருமத்தை நக்கியபடியிருக்க, கிட்டத்தட்ட உடைகளனைத்தையும் களைந்துவிட்டிருந்தாள். ‘யாரோ உன்னை அடித்தது போல உன் வயிற்றுத் தோலில் ஆழமான பள்ளங்கள் இருக்கும் நிலையிலேயே உன்னை எப்போதும் பார்க்க விரும்புகிறேன்.’ அவள் நிர்வாணத்தைக் கண்ணுற்றதால் ஏற்பட்ட நிலைகுலைவில் என் வார்த்தைகள் தெளிவற்றுப் போனதை நான் உணரும் முன் விளக்கின் உருண்டைப் பகுதியில் குளிர்காய்ந்தபடி அசைவற்று நின்றிருந்த அவள் சொன்னாள்: ‘சில நேரம் நான் உலோகத்தால் ஆனது போல உணர்கிறேன்’.ஒரு கணம் அவள் அமைதியாக நின்றாள். விளக்கின் மீது அவள் கைகளின் நிலை சற்றே மாறியது. நான் சொன்னேன்: ‘சில நேரம் பிற கனவுகளில், ஏதோவொரு அருங்காட்சியகத்தின் மூலையிலிருக்கும் சிறிய வெண்கலச்சிலையாக உன்னை எண்ணியிருக்கிறேன். நீ  சில்லென்றிருப்பதன் காரணம் இதுவாகக்கூட இருக்கலாம்.’ அவள் சொன்னாள்; ‘சில நேரம், கவிழ்ந்து படுத்து நான் உறங்கும்போது, என் உடல் உள்ளீடற்றுப் போய் சருமம் உலோகத் தகடாய் மாறுவதை உணர்ந்திருக்கிறேன். அப்போது உள்ளே துடிக்கும் இரத்தம் யாரோ என் வயிற்றைத் தட்டிக் கூப்பிடுவதாய் இருக்கும், என்னுடலின் செப்புத் தகட்டு ஒலியை படுக்கையில் என்னால் உணரமுடியும். அது-எப்படிச் சொல்வது- மேலுறையிடப்பட்ட ஒரு உலோகம்.’ அவள் விளக்கை இன்னும் நெருங்கினாள். ‘உனது ஒலியை நான் கேட்க விரும்பியிருப்பேன்’, நான் சொன்னேன். அவள் சொன்னாள் ‘எப்போதாவது நாம் சேர்ந்திருக்க நேர்ந்தால், நான் இடதுபக்கம் சாய்ந்து உறங்குகையில் என் விலாவில் காதை வைத்தால் நான் எதிரொலிப்தைக் நீங்கள் கேட்கலாம். என்றாவது நீங்கள் அவ்வாறு செய்யவேண்டுமென நான் விரும்புகிறேன்’. பேசுகையில் அவள் ஆழ்ந்து மூச்சு விடுவதைக் கேட்டேன். ஆண்டுகளாக அவள் எதையும் வித்தியாசமாகச்  செய்யவில்லை என்றாள். ‘நீல நாயின் கண்கள்’ என்ற சொற்றொடரின் வழி நிஜவாழ்வில் என்னைக் கண்டுபிடிக்கவென அவளது வாழ்வு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. உரக்க அதைச் சொல்லிக் கொண்டே அவள் தெருவில் சென்றாள், அவளைப் புரிந்துகொண்டிருக்கக்கூடிய அந்த ஒரே நபருக்கு அதைத் தெரிவிக்கும் விதமாய்.

‘தினம் இரவில் உங்கள் கனவில் வந்து ‘நீல நாயின் கண்கள்’ எனச் சொல்பவள் நான்தான்’. மேலும் அவள் உணவு விடுதிகளுக்குச் சென்று உணவுவகைகளைச் சொல்லும் முன் பரிமாறுபவர்களிடம் ‘நீல நாயின் கண்கள்’ எனக் கூறிக் கொண்டிருந்ததைச் சொன்னாள். ஆனால் கனவில் ஒருபோதும் அதைத் தாங்கள் சொன்னதாக நினைவில்லாத பரிமாறுபவர்கள், மரியாதையாகக் குனிந்து வணங்கினர். பிறகு அவள் துடைக்குந்தாளில் எழுதினாள்; கத்தியால் மேசையின் மரப்பூச்சில் கீறினாள்: ‘நீல நாயின் கண்கள்’. தங்கும் விடுதிகளின் நீராவி படிந்த சன்னல்களில், ரயில் நிலையங்களில், பொதுக் கட்டடங்களில் தன் நுனிவிரலால் எழுதினாள்: ‘நீல நாயின் கண்கள்’. ஒருநாள் மருந்துக் கடைக்குச் சென்றவள் என்னைப் பற்றிக் கனவு கண்ட இரவில் அவள் அறையில் வீசிய வாசனையை அங்கு உணர்ந்தாள். ‘அவர் அருகேதான் இருக்கவேண்டும்’, மருந்துக் கடையின் சுத்தமான, புதிய தரை ஓடுகளைப் பார்த்தவள் நினைத்தாள். பிறகு கடையின் குமாஸ்தாவிடம் சென்று சொன்னாள்: ‘என்னிடம் ‘நீல நாயின் கண்கள்’ எனச் சொல்லும் ஒருவரை எப்போதும் கனவில் காண்கிறேன்’. ‘உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் உங்களுக்கு அதைப் போன்ற கண்கள் உள்ளன’ என அவன் சொன்னதாகச் சொன்னாள். அவனிடம் அவள் சொன்னாள்; ‘என் கனவில் அவ்வார்த்தைகளைச் சொன்னவரை நான் கண்டுபிடிக்க வேண்டும்’. குமாஸ்தா சிரிக்கத் தொடங்கினான், சிரித்தபடியே அந்தப் பக்கம் சென்றான். அவள் சுத்தமான தரை ஓடுகளைப் பார்த்துக்கொண்டும் அந்த வாசனையை நுகர்ந்துகொண்டும் நின்றிருந்தாள். பிறகு தன் கைப்பையிலிருந்து கருஞ்சிவப்பு உதட்டுச் சாயத்தை எடுத்து தரையில் எழுதினாள்: ‘நீல நாயின் கண்கள்’. குமாஸ்தா தனது இடத்திற்கு திரும்பி வந்தான். அவளிடம் அவன் சொன்னான்: ‘அம்மணி, நீங்கள் தரை ஓடுகளை அசுத்தப் படுத்திவிட்டீர்கள்’. ஈரத் துணியொன்றைக் கொடுத்து ‘சுத்தம் செய்யுங்கள்’ என்றான். விளக்கின் பின்னாலிருந்து அவள் சொன்னாள்,  கதவருகே கூட்டம் கூடி அவள் பைத்தியம் என்று சொல்லும்வரை அந்த மதியம் முழுக்க மண்டியிட்டபடி ‘நீல நாயின் கண்கள்’ என்றபடியே தரை ஓடுகளைத் தான் துடைத்தபடியிருந்ததாக.

அவள் பேசி முடித்தபோது நாற்காலியில் ஆடியபடியே மூலையில் அமர்ந்திருந்தேன். ‘அதைக் கொண்டு உன்னைக் கண்டுபிடிக்க உதவும் அச் சொற்றொடரை நினைவுபடுத்திக்கொள்ள தினம் முயல்கிறேன்’, நான் சொன்னேன். ‘நாளை அதை மறந்துவிடமாட்டேன் என்றே நினைக்கிறேன். இருந்தும் எப்போதும் அதையே நான் சொல்கிறேன், ஆனால் விழித்தெழும்போது உன்னைக் கண்டுபிடிக்க உதவும் அந்த வார்த்தைகளை மறந்துவிடுகிறேன்’. அவள் சொன்னாள்: ‘முதல்நாளே, நீங்களாகவே அதைக் கண்டுபிடித்துவிட்டீர்கள்’. அவளிடம் நான் சொன்னேன்: ‘உன் சாம்பல் கண்களைப் பார்த்ததும் அவ்வார்த்தைகளை நான் கண்டுபிடித்தேன்,ஆனால் ஒருபோதும் அடுத்த நாள் காலை அதை என்னால் நினைவுகூர முடிவதில்லை’. அவள் விளக்கின் பின்னே இறுக்கி மூடிய கைகளுடன் ஆழ்ந்து மூச்சுவிட்டாள்: ‘நான் அதை எழுதிக்கொண்டிருந்த நகரம் எதுவென்று இப்போது உங்களால் நினைவுகூர முடிந்தால்’.

இடுங்கிய அவளது பற்கள் ஜுவாலையின் மீதாக ஒளிர்ந்தன. ‘இப்போது உன்னைத் தொட விரும்புகிறேன்’, நான் சொன்னேன். வெளிச்சத்தைப் பார்த்தபடியிருந்த முகத்தை அவள் உயர்த்தினாள், அவள் பார்வையை உயர்த்தினாள், அவளைப் போல, அவள் கைகளைப் போல அவள் பார்வையும் எரிந்தபடி, கனன்றபடி இருந்தது. மூலையில் நாற்காலியில் ஆடிக்கொண்டிருந்த என்னை அவள் பார்த்ததை உணர்ந்தேன். ‘என்னிடம் அதை நீங்கள் சொன்னதேயில்லையே’ அவள் சொன்னாள். ‘இப்போது சொல்கிறேன், இது உண்மை’. விளக்கின் அந்தப்பக்கமிருந்து அவளொரு சிகரெட் கேட்டாள். சிகரெட்டின் அடிப்பகுதி என் விரல்களுக்கிடையே மறைந்துபோயிருந்தது.நான் புகைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதையே மறந்துவிட்டிருந்தேன். அவள் சொன்னாள்: ‘அவ்வார்த்தைகளை எங்கே எழுதினேன் என்பதை ஏன் நினைவுகூர முடியவில்லையென்பதன் காரணம் எனக்குத் தெரியவில்லை’. நான் சொன்னேன்: ‘நாளை என்னால் அவ்வார்த்தைகளை நினைவுகூர முடியாமல் போகப்போவதற்கான காரணம்தான் அதுவும்.’ வருத்தமுடன் அவள் சொன்னாள்: ‘இல்லை. சில நேரம் அதையும் நான் கனவில் கண்டதாக எண்ணுவதுதான் காரணம்’. நான் எழுந்து விளக்கை நோக்கி நடந்தேன். அவள் சற்று தள்ளியிருந்தாள். விளக்கைத் தாண்டி நீள முடியாத என் கையில் சிகரெட்டுகளையும் தீக்குச்சிகளையும் வைத்தபடி நான் தொடர்ந்து நடந்தேன். சிகரெட்டை அவளிடம் நீட்டினேன். நான் தீக்குச்சியைப் பற்றவைக்கும் முன் உதடுகளுக்கிடையே சிகரெட்டைப் பொருத்திக்கொண்டு விளக்கின் ஜுவாலையை நோக்கிக் குனிந்தாள். ‘இவ்வுலகின் ஏதோவொரு நகரத்தின் எல்லாச் சுவர்களிலும் அவ்வார்த்தைகள் எழுத்தில் தோன்றவேண்டும்: ‘நீல நாயின் கண்கள்’, நான் சொன்னேன். ‘நாளை அதை நான் நினைவுகூர்ந்தால் உன்னைக் கண்டுபிடிப்பேன்’. அவள் தலையை உயர்த்தினாள், இப்போது கங்கு அவள் உதடுகளுக்கிடையே இருந்தது. : ‘நீல நாயின் கண்கள்’, சிகரெட் அவள் முகவாய்க் கட்டை மேலாக வளைந்து தொங்க, ஒரு கண் பாதி மூடியிருக்க அவள் பெருமூச்செறிந்தாள், நினைவுகூர்ந்தாள். பிறகு விரல்களுக்கிடையே சிகரெட்டை வைத்து புகையை உறிஞ்சி உரக்கச் சொன்னாள். ‘இப்போது இது வேறொன்று. நான் கதகதப்பாகிக் கொண்டிருக்கிறேன்’. ஆனால் அவள் சற்றே அசிரத்தையுடனும், கணநேர உற்சாகத்துடனும், தான் அதை சொல்லவேயில்லை, மாறாக அவள் அதை ஒரு காகித்தில் எழுதி விளக்கினருகில் வர அதை நான் வாசித்தது போலத் தோன்றும்படி சொன்னாள்: ‘நான் கதகதப்பாகிக் கொண்டிருக்கிறேன்’. அவள் கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்குமிடையே இருந்த காகிதத்தைப் புகைப்பதைத் தொடர்ந்தாள். நெருப்பால் விழுங்கப்பட்டுக்கொண்டிருக்கும் அதை அவள் திருப்பினாள், முழுவதும் விழுங்கப்பட்டு அனைத்தும் சுருங்கி மறைந்து மென்சாம்பலாகித் தரையில் விழும் முன்  என்னால் ‘...மேலே’ என்பதை மட்டுமே வாசிக்க முடிந்தது. ‘அது நல்லது’, நான் சொன்னேன். ‘உன்னை அப்படிப் பார்ப்பது சில நேரம் என்னை அச்சுறுத்துவதாக உள்ளது, ஒரு விளக்கின் பின்னே நடுங்கியபடியிருக்கும் உன்னைப் பார்ப்பது’.

நாங்கள் ஒருவரையொருவர் பல வருடங்களாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். சிலநேரம் ஏற்கனவே நாங்கள் கூடியிருந்து உறங்கிக்கொண்டிருக்கும்போது வெளியே யாராவது ஒரு கரண்டியைக் கீழே தவறவிடுவார்கள், நாங்கள் விழித்துக் கொள்வோம். கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் நட்பு பிற விஷயங்களுக்கு, எளிய சம்பவங்களுக்கு அடுத்த இரண்டாம்பட்ச விஷயமானது. எங்கள் சந்திப்புகள் எப்போதும் அவ்வாறே முடிந்தன, அதிகாலையில் ஒரு கரண்டி கீழே விழுவதுடன்.

இப்போது விளக்குக்கு அருகிலிருந்து அவளென்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நாற்காலியை அதன் பின்னங்கால்களில் ஊன்றி சுழலவிட்டபடி சாம்பல் கண்களையுடைய அந்த வினோதப் பெண்ணைப் பார்த்தபடியிருந்த அந்த தொலைதூரக் கனவிலிருந்து கடந்த காலத்திலும் அவளென்னை இதுபோல பார்த்துக்கொண்டிருந்தது என் நினைவுக்கு வந்தது. அந்தக் கனவில்தான் முதல் தடவையாக அவளைக் கேட்டேன்: ‘யார் நீ?’. அவள் சொன்னாள்: ‘ எனக்கு நினைவில்லை’. நான் சொன்னேன்: ‘ஆனால் இதற்கு முன் நாம் ஒருவரையொருவர் பார்த்திருக்கிறோமென நினைக்கிறேன்’. அவள் சொன்னாள்: ‘என்ன விசித்திரம். நிச்சயம் நாம் வேறு கனவுகளிலும் சந்தித்திருக்கிறோம்’.

சிகரெட்டில் அவள் இரண்டு இழுப்புகள் இழுத்தாள். நான் விளக்கைப் பார்த்தபடி அங்கேயே நின்றிருந்தேன். சட்டென அவளைப் பார்க்கத் தொடங்கினேன். அவளை மேலும் கீழும் பார்த்தேன் அவள் செம்பு வண்ணத்திலேயே இருந்தாள்; கடினமான விரைத்த உலோகமாயல்ல, மஞ்சள் வண்ண, நெகிழ்வான செம்பாக. ‘நான் உன்னைத் தொட விரும்புகிறேன்,’ நான் மீண்டும் சொன்னேன். அவள் சொன்னாள்: ‘எல்லாவற்றையும் பாழாக்கிவிடுவீர்கள்’. நான் சொன்னேன்: ‘அது பற்றி இப்போது கவலையில்லை. இப்போது நாம் செய்யவேண்டியதெல்லாம் திரும்ப நாம் சந்திக்கும்வகையில் தலையணைகளை ஒழுங்குபடுத்துவதுதான்.’ நான் கைகளை விளக்கின் மேலாக நீட்டினேன். அவள் அசையவில்லை. ‘எல்லாவற்றையும் பாழாக்கிவிடுவீர்கள்’, அவளை நான் தொடும் முன் மீண்டும் அவள் சொன்னாள். ‘விளக்கின் பின்புறமாக நீங்கள் உங்கள் இடத்தை மாற்றிக் கொண்டால், ஒருவேளை எந்த இடமென்று தெரியாத உலகின் ஓரிடத்தில் அச்சத்துடன் நாம் விழித்தெழலாம்.’ ஆனால் பிடிவாதமாகச் சொன்னேன்: ‘அது பற்றி இப்போது கவலையில்லை.’ அவள் சொன்னாள்: ‘தலையணையை நாம் திருப்பிப் போட்டால், திரும்ப நாம் சந்திப்போம். ஆனால் விழித்தெழும்போது எல்லாவற்றையும் நீங்கள் மறந்திருப்பீர்கள்.’ நான் மூலை நோக்கி நகர ஆரம்பித்தேன். தணலுக்கு மேலே கைகளைக் காட்டியபடி அவள் அங்கேயே நின்றிருந்தாள். ‘நள்ளிரவில் நான் விழிக்கும்போது, படுக்கையில் புரண்டபடியிருப்பேன், தலையணையின் விளிம்பு என் கால் முட்டிக்கு எரிச்சலுண்டாக்கியபடி இருக்க, விடியும்வரை ‘நீல நாயின் கண்கள்’ எனத் திரும்பத் திரும்பச் சொல்லியபடியே இருப்பேன்’ என எனக்குப் பின்னே அவள் சொன்னதைக் கேட்கும்போதும் நான் நாற்காலிக்குப் பின்னாலிருக்கவில்லை.

பிறகு என் முகம் சுவரைப் பார்த்தபடியிருக்க நின்றிருந்தேன். ‘ஏற்கனவே விடிய ஆரம்பித்துவிட்டது’, அவளைப் பார்க்காமலே சொன்னேன். ‘மணி இரண்டடித்தபோது நான் விழித்தேன். நான் விழித்து நீண்ட நேரமாகிறது’. நான் கதவை நோக்கிப் போனேன். கதவின் கைப்பிடிக் குமிழ் என் கையிலிருந்தபோது அவள் குரலை மீண்டும் கேட்டேன். அதே, மாற்றமற்ற குரல். ‘கதவைத் திறக்காதீர்கள்’, அவள் சொன்னாள், ‘தாழ்வாரம் கடினமான கனவுகளால் நிரம்பியிள்ளது’. நான் அவளைக் கேட்டேன்: ‘உனக்கு எப்படித் தெரியும்?’. அவள் என்னிடம் சொன்னாள்: ‘சற்று முன் நான் அங்கிருந்தேன், என் இதயத்தின் மீது நான் உறங்குவதைக் கண்டுணர்ந்தபோது நான் திரும்பிவிட்டேன்.’ கதவை நான் பாதி திறந்திருந்தேன். இன்னும் சிறிது அதைத் தள்ளியபோது குளிர்மிக்க மெல்லிய காற்று புத்துணர்வுமிக்க தாவர பூமியின் வாசத்தையும், ஈர வயல்களின் வாசத்தையும் கொண்டு வந்தது. அவள் திரும்பப் பேசினாள். அமைதியான கீல்களின் மீதமைந்த கதவைத் தள்ளியபடியே நான் திரும்பினேன், அவளிடம் சொன்னேன்: ‘வெளியே தாழ்வாரம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. எனக்கு நாட்டுப்புற வாசமடிக்கிறது.’ என்னிடமிருந்து சற்றுத் தள்ளியிருந்த அவள் சொன்னாள்: ‘உங்களைவிட எனக்கது நன்றாகவே தெரியும். என்ன நடக்கிறதென்றால், அங்கே ஒரு பெண் நாட்டுப்புறம் பற்றிக் கனவு கண்டுகொண்டிருக்கிறாள்’. தணலின் மீதாக கைகளை அவள் குறுக்காக வைத்தாள். பேச்சைத் தொடர்ந்தாள்: ‘அது நாட்டுப்புறத்தில் தனக்கொரு வீடு வேண்டுமென்று விரும்பிய ஆனால் ஒருபோதும் நகரத்தைவிட்டு நீங்க முடியாமல் போன ஒரு பெண்’. அப் பெண்ணை நான் இதற்குமுன் கண்ட சில கனவுகளில் பார்த்திருந்தது நினைவுக்கு வந்தது. கதவு திறந்திருக்க, இன்னும் அரை மணி நேரத்துக்குள் காலை உணவுக்காக நான் கீழே போக வேண்டியிருக்கும் என்பதை அறிந்திருந்தேன். நான் சொன்னேன் ‘எப்படியிருப்பினும் விழித்தெழுவதற்காக நான் இங்கிருந்து கிளம்பியாக வேண்டும்.’

வெளியே காற்று ஒரு கணம் சலசலத்தது, பின் அமைதியானது. படுக்கையில் இப்போதுதான் புரண்டு படுத்திருந்த, உறங்கும் யாரோ ஒருவரது சுவாசச் சத்தம் கேட்டது. வயல்களிலிருந்து வீசிக் கொண்டிருந்த காற்று அடங்கிவிட்டிருந்தது. இனியும் வாசனைகள் ஏதும் வீசவில்லை. ‘நாளை அதிலிருந்து உன்னை நான் அடையாளம் கண்டுகொள்வேன்’, நான் சொன்னேன். ‘தெருவில் ‘நீல நாயின் கண்கள்’ என சுவரில் ஒரு பெண் எழுதுவதைப் பார்க்கும்போது உன்னை அடையாளம் கண்டுகொள்வேன்’. ஏற்கனவே, சாத்தியமல்லாத, அடைய முடியாத ஒன்றிடம் சரணடைவதன் புன்னகையாயிருந்த, ஒரு சோகப் புன்னகையுடன் அவள் சொன்னாள்:‘இருந்தும், பகல் பொழுதில் எதையும் உங்களால் நினைவுகூரமுடியாது.’ அவள் திரும்பக் கைகளை விளக்கின் மீதாக நீட்டினாள், ஓர் அடர் மேகத்தால் அவளது அங்கங்கள் இருண்டன. ‘விழித்த பின், கண்ட கனவிலிருந்து எதையும் நினைவுகூர முடியாத ஒரே மனிதர் நீங்கள்தான்’.
----------------


நன்றி: 'நீட்சி' (2012)

Monday, 2 July 2012

மகான் படால் சந்து 27ஆம் எண் வீட்டிலிருந்து; தாகூர் சிறுகதைகள்-மதிப்புரை.


                                                  

மகாகவி, தேசியகீதம் தந்தவர், கவிதை, நாடகம், புனைவுகள், கட்டுரை, ஓவியம்  இவற்றில் பேரளவில் ஆக்கங்களை உருவாக்கியவர், நோபல் பரிசு பெற்றவர் என ரவீந்திரநாத தாகூரின் பிம்பம் மறுபரிசீலனைக்குள்ளாக்கவியலாத அளவுக்கு  இலக்கியப் புனிதம் மிக்கது. சமரசப் புள்ளியொன்றில் இந்திய இலக்கியத்தைச் சுட்டும் ஒட்டுமொத்த முகமாகவும் தாகூர் அறியப்படும் சாத்தியம் இப்போதும் உண்டு. கறாரான விமர்சன அளவுகோல்களை மீறி மேலெழும் படைப்புகளை அவர் தந்தார் என்றபோதும் அவர் படைப்புகள் நோபல் பரிசு உள்ளிட்ட அவரது பெருமைகளுக்கும் பிரபல்யத்துக்கும் முழுமையும் நியாயம் செய்யாதவை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. காலங்களாக பெரும்பான்மையும் கூர்மையான பார்வைகளின்பாற்படாத கல்விப்புல செயல்பாடுகளில் மட்டுமே தாகூரது படைப்புகள் முக்கியத்துவம் தந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தாகூரது படைப்புகளின்றி இந்தியப் பல்கலைக் கழகங்களின் ஆங்கிலப் பட்டப்படிப்புக்கான (இந்திய ஆங்கில இலக்கியம்)  பாடத்திட்டங்கள் முழுமையடைவது இல்லை என்பதும் இங்கு கவனிக்கத் தக்கது. 

தாகூரது இலக்கிய ஆக்கங்களுள் அவரது சிறுகதைகளுக்கு முக்கிய இடம் உண்டு. தன் வாழ்நாளில் அவர் எழுதியவை நூற்றுச் சொச்சம் கதைகள். இச்சிறுகதைகள் வழியாக நாம் கண்டடையும் தாகூர் ஆச்சரியமூட்டும் வகையில் கூர்ந்த அவதானிப்புடன் மனித உணர்வுகளை அவற்றில் காணும் சிடுக்குகளை, நிச்சயமான வாழ்வின் ஓட்டம் மனிதருள் பதித்துச் செல்லும் விரும்பத்தக்கதும், விரும்பத்தாகததுமான வடுக்களை என யதார்த்தமுடன் லாகவமாகவும் நயமாகவும் மொழிக்குள் படைத்துக் காட்டுபவராக இருக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்ட தாகூரின் கதைகளை இன்று ஒரு நூறாண்டுக்கும் அப்பால் நின்று வாசிக்கையிலும் அவற்றுள் நாம் லயித்து ஆழ்ந்து போகச் செய்பவையாக  இருப்பதே இக்கதைகளின் வெற்றி.

மறைந்த த.நா.குமாரஸ்வாமி அவர்களால் நேரடியாக வங்க மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்க்ப்பட்ட தாகூரின் பத்துச் சிறுகதைகள் அடங்கிய  தொகுப்பை ‘தாகூர் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. சா.கந்தசாமி இவற்றைத் தொகுத்துள்ளார்.

தொகுப்பின் முதல் கதையான ‘காரும் கதிரும்’ கதையில் மெத்தப் படித்த இளைஞனான சசிபூஷணனிடத்தில் சிறுமி கிரிபாலாவுக்கு காதல் முகிழ்க்கிறது, சசிபூஷணன் அதனை உணரத் தொடங்கும்போது கிரிபாலா இன்னொருவரது மனைவியாகி விடுகிறாள் (இத்தொகுப்பில் கதைநாயகிகள் சிறுமிகள் என சுட்டப்படுவது மொழிபெயர்ப்பில் உண்டான கவனக்குறைவு என ஒருவர் நினைக்கக்கூடும். கதைகள் எழுதப்பட்ட காலகட்டத்தில் வழக்கத்திலிருந்த பால்ய விவாக முறையில் சாதாரணமாக எட்டு, பத்து வயதையுடைய பெண் குழந்தைகளுக்கெல்லாம் மணமுடிப்பது இயல்பானவொன்று). ஒரு நாவலுக்குரிய விரிவை தன்னுள் அடக்கிய இக்கதை விதியினால் பந்தாடப்பட்டு நொந்து அலையும் சசிபூஷணன் கைம்பெண்ணாகிவிட்ட கிரிபாலாவிடம் வந்து சேரும் காவியத் துயருடன் நிறைவுகிறது. கிரிபாலா பேதைச் சிறுமியாக குறும்புமிக்கத் தன் விளையாட்டுத் தனங்களை சசிபூஷணனிடத்தில் நிகழ்த்திக் கொண்டிருக்கையிலேயே அவற்றுள் மெல்லக் காதலரும்பி வேர்கொள்ளத் தொடங்குவது அவ்விளையாட்டுகளின் போக்கிலேயே விவரிக்கப்படுகிறது. ‘டோரியா’ சிற்றாடை கட்டிய சிறுமியாக நாவற்பழங்களைத் தின்று அதன் கொட்டைகைள உமிழ்ந்தபடி அவனோடு சதா சண்டையில் ஈடுபட்டவளாய் இருக்கும் கிரிபாலா ஒருநாள் மணப்பெண்ணாகி சட்டென சசிபூஷணன் பார்வையிலிருந்தும் நம் பார்வையிலிருந்தும் மறைந்து போகிறாள். இறுதியில் விதவைக்குரிய வெள்ளையுடை அணிந்தவளாக விளையாட்டுத்தனங்கள் அகன்று முதிர்ச்சி குடிகொண்ட ஆனால் துயர் நிறைந்த ஓர் ஆன்மாவாக சசிபூஷணன் அவளைக் காண்கிறான். இக்கதையின் ஓட்டத்தில் சசிபூஷணன் ஆங்கில துரைமார்களது கொடுமைகளைக் கண்டு வெகுண்டெழுபவனாக இருக்கிறான். கிரிபாலாவின் தந்தை ஹரகுமார் ஒரு ஆங்கிலேய துரையால் அவமானத்துக்குள்ளாகும்போது வழக்கறிஞனான அவன் அவருக்காக நீதிமன்றம் சென்று வழக்காடுகிறான். பிறிதொரு சமயம் மீனவர்கள் வலையை அறுத்த இன்னொரு வெள்ளைக்கார துரையை அடிக்கவும் செய்கிறான். இதனால் வழக்கில் சிக்கி பல ஆண்டுகளை சிறையில் கழிக்கநேர்ந்து நைந்துபோய் வெளியே வருகிறான். மாஜிஸ்ட்ரேட் ‘அவன் காங்கிரஸ்காரனா’ என சசிபூஷணனைப் பற்றிக் கேட்பதற்கு ஹரகுமார் பொய்யாக ‘ஆமாம்’ என்று சொல்கிறார். இருப்பினும் சசிபூஷணது இந்த ஆங்கிலேய எதிர்ப்பு, அக்காலகட்டத்தில் வலுவுடன் விளங்கிய சுதந்திரப் போராட்டத்தின் சாயம் பூசப்படாமல்  இயல்பாக கதையின் போக்கிலேயே சொல்லப்படுகிறது. சசிபூஷணன், கிரிபாலா தவிர்த்து இக்கதையில் குறிப்பிடத்தக்க பாத்திரம் கிரிபாலாவின் தந்தையும் ஜமீன் காரியஸ்தருமான ஹரகுமார். தனக்குக் அடங்காத குடியானவன் ஒருவன் மீது பொய்யாக வழக்குப் போட  சசிபூஷணனிடம் கேட்க அவனோ மறுத்துவிடுகிறான். தன் சுயலாபத்துக்காக எதையும் செய்யத் துணியும் அவர் பின்னால் தனக்கு உதவ வந்த சசிபூஷணனக்கு எதிராக வேலை செய்யவும் தயங்குவதில்லை.

கிரிபாலாவின் பாத்திரத்தை நினைவூட்டும் வகையில் அமைந்த மிருண்மயி பாத்திரத்தை மையமாகக் கொண்ட கதை ‘இனிது முடிந்தது’ பெண்ணுக்குரிய அடக்கமும் நாணமுமற்றவளாக பிடாரியென குறும்புகள் செய்து சுற்றித் திரியும் மிருண்மயியை எப்படியோ பட்டப்படிப்புப் படித்த அபூர்வ கிருஷ்ணனுக்குப் பிடித்துப்போகிறது. தாயின் எதிரப்பையும் மீறி அவளைத் திருமணம் புரிந்துகொள்கிறான். திருமணத்துக்குப் பிறகும் அவள் ஊர் சுற்றித் திரியும் சிறுமியாகவே இருக்கிறாள். ஆரம்பத்தில் இதுபற்றி மனக்கவலை கொள்ளும் அபூர்வகிருஷ்ணன் பிறகு அவள் வழியிலேயே சென்று அவளைத் தன்வழிக்கு கொண்டுவர முயற்சிக்கிறான். மிருண்மயியின் திருமணத்துக்கு வர இயலாது போன அவளது ஏழைத் தந்தை ஈசான மஜூம்தார் அவளுக்கு ஆசி கூறி கடிதம் எழுதுகிறார். கடிதத்தைக் கண்டதும் அப்பாவைப் பார்க்வேண்டும் என அடம் பிடிக்கிறாள். அவள் மாமியார் கண்டிப்புடன் முடியாது என மறுத்துவிட இரவு எல்லோரும் உறங்கிய பின் தனியே அப்பாவைப்பார்க்க தொலைதூரப் பயணம் கிளம்புகிறாள். தெரிந்த ஒருவரால் மீண்டும் வீட்டுக்குக் கொண்டுவிடப்படும் அவளை பிறகு அபூர்வகிருஷ்ணனே தந்தையிடம் அழைத்துச் செல்கிறான். தந்தையைக் காணச் செல்லும் பயணம் அவளுள் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. வீடு திரும்பியவள் புதிய பெண்ணாகிறாள்.ஆனால் மேல்படிப்பை முன்னிட்ட அபூர்வ கிருஷ்ணனின் கல்கத்தா வாசம் அவர்களைப் பிரிக்கிறது. இருவரும் பிரிந்து காதலில் தவிக்க இறுதியில் ஒருவித நாடகத் தன்மையுடன் கதை ‘இனிதே முடிகிறது’. குறும்பும் விளையாட்டுமான சிறுமியொருத்தி கணவனது அணுசரணைமிக்க அரவணைப்பில் காதலும் அன்பும் கடமையுணர்வும் மிக்க பெண்ணாய்த் தகையும் மாற்றம் இக்கதையின் அடிநாதம்.

‘அதிதி’ கதையின் தாராபதனை கிரிபாலா மற்றும் மிருண்மயியின் ஆண்பாற் வடிவமாக ஒருவர் காணலாம். அழகும், திறமைகளும், நல்லெண்ணமும், யாருக்கும் உதவும்  மனப்பாங்கும் கொண்டவனான தாராபதன் ஓரிடத்தும் நிரந்தரமாகத் தங்கிவிடாமல் ஆற்றோட்டத்தில் மிதந்துசெல்லும் புஷ்பம் போல தொடர்ந்து புதிய இடங்களை புதிய உறவுகளைத் தேடி பயணிப்பவனாக இருக்கிறான். கடைசியில் மதிலால் பாபு குடும்பத்தில் அவன் ஐக்கியமாகி அவரது மகள் சாருசசியை மணமுடிக்குமளவுக்கு செல்லும்போது அவனது அதிதி வாழ்வு முடிவுக்கு வந்ததாய் நாம் எண்ணுகிறோம்.ஆனால் திருமணத்துக்கு முன்பாக தன்னைப் பிணைக்கப் பார்த்தவற்றிடமிருந்து விலகி ‘அன்பும் ஆதரவும் மீறிய பரந்த உலகினிடையே எங்கோ மறைந்து போகிறான்’ அவன். தாராபதன் ஒரு நிரந்தர அதிதி. லௌகீகத் தளைகளுக்குள் அகப்பட்டுக்கொள்ளாமல் எப்போதும் சுதந்திர வெளிக்குள் சஞ்சரிக்க விரும்புகிற உலகையும் இயற்கையையும் நோக்கி விரியும் ஆன்மாவைக் கொண்ட ஒருவனை தாரபதன் பாத்திரம் வழியாக சித்தரித்துக் காட்டுகிறார் தாகூர்.

இத்தொகுப்பின் ‘காபூல்காரன்’ கதையை ஒருவர் அவ்வளவு எளிதில் கடந்து போய்விட முடியாது. ஐந்து வயது பெண்குழந்நை மினிக்கும் உலர்ந்த திராட்சை முதலானவற்றை விற்கும் காபூல் வியாபாரியான ரஹமத்துக்குமிடையே ஒரு பிணைப்பு உருவாகிறது. ரஹமத்துக்கு குழந்தைகள் விரும்பும் உருவம் கிடையாது. சொல்லப்போனால் முதலில் அவனது நெடிய உருவையும் தாடியையும் கண்டு மினி அஞ்சவே செய்கிறாள். ஆனால் அவர்களிடையேயான குறும்பும் விளையாட்டும் தொனிக்கும் வாஞ்சைமிகு உரையாடல்கள் மூலமாக மெல்ல உரமேறி ஒரு உறவு திடப்படுகிறது. ரஹமத் மினியை வந்து சந்தித்துப் பேசிவிட்டுப் போகாத நாட்கள் ஆபூர்வம். இவர்களுக்குள் அப்படி என்னதான் உறவோ என அவள் தந்தை வியக்க மகளை இந்த காபூல்காரன் மயக்கிக் கடத்திக்கொண்டு போய் தன் ஊரில் அடிமையாக விற்றுவிடுவானோ என்ற அச்சம் மினியின் தாய்க்கு. ஆனால் மினிக்கும் ரஹமத்துக்குமான உறவு ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவுதான். விதிவசத்தால்  கொலையொன்றைப்  புரிந்துவிடும் ரஹமத் சிறையில் வருடங்களைக் கழித்துவிட்டு வெளியே வந்ததும் முதல் காரியமாக மினியை சந்திக்க வருகிறான். அங்கு மினி மணப்பெண் கோலத்தில் நிற்கிறாள். மினியின் தந்தை அவளைச் சந்திக்க முடியாது எனச் சொல்லும்போது மினியின்  வயதையொத்த தன் மகளைப் பற்றியும் மினியின் உருவில் தன் மகளைத் தான் கண்டுவந்ததையும் உருக்கமுடன் விவரிக்கிறான் ரஹமத். அவ்விடத்தில் மகளைப் பிரிந்திருக்கும் துயரையும், பிரியப்போகும் துயரையும் அனுபவிக்கும் இரண்டு தந்தையரும் தம்மிருவரையும் ஒரேவிதமான கையறுநிலையில் காண்கின்றனர். உறவினரது எதிர்ப்பையும் மீறி மணப்பெண் மினியிடம் ரஹமத்தை அழைத்து வருகிறார் மினியின் தந்தை. மினியைக் கண்ட நிம்மதியோடு ரஹமத் வெளியே வருகிறான். அப்போது மகளைப் பிரியப்போகும் தந்தை மகளைப் பிரிந்திருக்கும் தந்தைக்கு பெருந்தொகை கொடுத்து உடனே காபூல் போய் உன் மகளைப் பார் எனச் சொல்கிறார். தந்தை-மகள் உறவை வெகு நுட்பமாய் சித்தரிக்கிற, சாகாவரம் பெற்ற கதை இது.

ஒரு வேலையாளாக போஸ்ட் மாஸ்டருக்குப் பணிவிடைகள் புரியும் ‘போஸ்ட் மாஸ்டர்’  கதையின் ரதன் வெளியே கடமையையே கருத்தாய்க்கொண்ட பணியாளாகவும் உள்ளே உணர்வுகள் நிறைந்த ஒரு பெண்ணாகவும் மனப்போராட்டத்துக்கு உட்படுபவள். ஆனால் கடைசியில் போஸ்ட் மாஸ்டர் தன் மனதின் காதலையறியாது தன்னைப் பணியாளாய் மட்டுமே பார்த்திருந்திருக்கிறார் என்று உணர்ந்து மருகுகிறாள். இதில் பாவப்பட்ட ரதனுக்காக வருந்தும்வேளை  நாம் போஸ்ட் மாஸ்டரைக் குற்றம் சொல்லவும் தோன்றுவதில்லை. விதியின் ஓட்டத்தில் மனதின் ஆசைகள் குறுக்கு மறுக்காய்ப் பாய்ந்து பல நேரங்களில் தீராத சஞ்சலத்தில்தான் நம்மைக் கொண்டுசேர்க்கிறது. இந்தக் கதையில் ரதன் வந்து நிற்குமிடமும் அதுதான்.

இன்றளவும் அதிகம் பேசப்படும் ‘மனைவியின் கடிதம்’ கதை குடும்ப அடக்குமுறை எனும் வெளித்தெரியாத ஆனால் தீவிரமான ஒரு வன்முறையை எதிர்க்கத் துணியும் ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய பெண்ணின் எண்ணவோட்டங்களைப் பதிவு செய்கிறது. கதைநாயகி  மிருணாளின் துணிவை வியக்கும் அதே நேரம் இன்று நிலைமையில் பெரும் மாற்றங்கள் வந்துவிட்டதா என்ற வினாவை எழுப்பவும் இக்கதை தவறுவதில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டு வங்கப் பெண்களது நிலையினை இக்கதை கண்முன் நிறுத்துகிறது. மிருணாள் தான் அடக்கப்பட்டிருக்கும் குடும்பமெனும் சிறைக்குள் இருந்தபடியே தனது காலத்தைத் தாண்டிய எண்ணமும் துணிவும் மிக்கவளாக  சக பெண்களுக்கு அபயக்கரம் நீட்டுகிறாள். இறுதியில் தன்னைப் பிணைத்த தளையை விட்டு என்றென்றைக்குமாக வெளியேறுகிறாள். ‘நான், மாகன் படால் சந்தில் 27ஆம் எண்ணுள்ள உங்கள் இல்லத்திற்கு இனி திரும்ப மாட்டேன்’ என்ற வரியில் ஒலிக்கும் தீர்க்கமான கலகக் குரல் ஒரு நூற்றாண்டைத் தாண்டி இன்றும் ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் மனங்களைக் கிளர்த்தும் வல்லமை மிக்கதாய் ஒலிக்கிறது.

‘வாழ்வும் சாவும்’ கதையின் காதம்பினி வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவேயுள்ள புள்ளியில் நின்று அல்லாடுகிறாள். தனக்கு நிகழாத ஆனால் மற்றவரால் நிகழ்ந்துவிட்டதாகக் கருதப்படும் மரணம் அவளைத் திரிசங்கு சொர்க்கத்தில் தள்ளுகிறது.மிருணாளைப் போல தீர்க்க எண்ணம் அவளிடமில்லை. போக்கிடமின்றி கடைசியில் மரணத்திடமே தன்னை ஒப்புக்கொடுத்துவிடுகிறாள்.

‘கல்லின் வேட்கை’ புதுமைப்பித்தனின் ‘காஞ்சனை’யை நினைவூட்டுகிறது. ‘படித்துறையின் கதை’ பால்யத்தில் விதவைக் கோலம் பூண்டவளான குஸூமா தனது உணர்ச்சிகளின் சுழலில் சிக்கி கடைசியில் கதையை விவரிக்கும் படித்துறை சாட்சியாக ஆற்றின் சுழலுக்குத் தன்னைக் கொடுத்துவிடுகிறாள். ‘ராஸாமணியின் பிள்ளை’, ‘காரும் கதிரும்’ கதையைப் போலவே ஒரு நாவலைத் தன்னுள் அடக்கிய கதை. நல்ல காலத்தை நோக்கிய எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போகும் அவநம்பிக்கையும் பாத்தியதையானவை காலம் கடந்தேனும் எப்படியும் நம்மை வந்தடையும் என்ற நம்பிக்கையும் கலந்த துயரச் சித்திரம் இக்கதை.

வங்கமொழியின் துவக்க காலச் சிறுகதைகளான தாகூரின் கதைகள் அம்மொழிக்கு அவர் தந்த கொடையாகவே கருதப்படுகின்றன. இக்கதைகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டு வங்காளமும் அதன் மக்களும்  மொழிச்சித்திரமாய்த் தீட்டப்பட்டிருக்கிறார்கள்.

இச்சிறுகதைகள் வழியே அவர் கட்டமைக்கும் உலகம் பேரளவில் ரம்மியமானது. வருத்தமும், துயரமும் நிகழுகையில் கூட பின்னணியில் இந்த ரம்மியம் மெல்லப்  பரவியபடியே இருக்கிறது. ஆறுகளில் நிகழும் படகுப் பயணங்கள், இயல்பான இயற்கை வருணனைகள், இவற்றோடு இயைந்த கவித்துவம் கொண்ட மொழியும் இதை சாத்தியமாக்குகின்றன. குறும்பும் விளையாட்டுமான சிறுபெண்களது உலகம் (‘காரும் கதிரும்’, ‘அதிதி’, ‘இனிது முடிந்தது’) வளர்ந்த பெண்களது கடமைகள்,கட்டுப்பாடுகள் அழுத்தும் உலகம் (‘மனைவியின் கடிதம்’, ‘ராஸமணியின் பிள்ளை’), நுட்பமான பந்தத்தின்பாற்பட்ட தந்தை- மகள் உலகம் (‘காபூல்காரன்’,’இனிது முடிந்தது’) ஆகியவை இக்கதைகளில் வலுவாக இடம்பெறுகின்றன.

கூர்ந்த அவதானிப்பும், விமர்சனம் கலந்த சமூகப்பார்வையும் கொண்டு நவீனத்துவக் கதைப்பாணியில் சொல்லப்பட்ட இக்கதைகள் தாம் அடங்கிய சட்டகத்துக்கு விசுவாசமாக இருப்பவை. சில மீறல்கள் மூலம் சில கதைகள் வேறொரு தளத்துக்கு நகர்ந்திருக்க முடியும்.(படித்துறையின் கதை’யில் குஸூமை அந்தத் துறவியோடு சேரவிடாமல் தடுப்பது எது?, ஏன் ரதன் தன் மனதை போஸ்ட் மாஸ்டரிடம் அந்தக் கடைசித் தருணத்திலேனும் சொல்லியிருக்கக் கூடாது?) நூறு ஆண்டுகளுக்கும் முன்பான படைப்புகளை நிகழ்காலத்தின் இலக்கிய அளவீடுகள் முன் வைத்துப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. அதேநேரம் ‘காபூல்காரன்’ போன்ற காலத்தை வென்று நிற்கும் படைப்புகளுக்காக தாகூரை நாம் வியக்காமலிருக்கவும் முடியாது. ஆலன் போ, செகாவ், மாப்பஸான் போன்றோரது வரிசையில் தாகூரை வைப்பதை இதுபோன்ற கதைகள் நியாயப்படுத்தவே செய்கின்றன.

த.நா. குமாரஸ்வாமி அவர்கள் மிகச்சிறப்பாக இக்கதைகளை மொழிபெயர்த்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். தாகூரின் கவித்துவமான மொழிநடை சிறிதும் குன்றாமல் இக்கதைகளில் வெளிப்பட்டிருக்கிறது. தொகுப்பாளர் சா. கந்தசாமியும் தாகூரின் சிறுகதை ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்தும் கதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். முக்கியமான இந்தியச் சிறுகதைகளை சேகரிக்கும் ஒருவர் தவறவிடக்கூடாத தொகுப்பு இது.
-----------------------

நன்றி: 'புதிய புத்தகம் பேசுகிறது' ஜூன் 2012.

Thursday, 26 April 2012

தீட்டித் தீராத மொழியும் மெல்லிய ஓர் காதல் தூரிகையும்- ஆப்பிளுக்குள் ஓடும் ரயில் (அய்யப்ப மாதவன்)



          ஊற்றுக் கண் தூர்ந்து போகாமல் தொடர்ந்து எழுத வாய்க்கும் கவிஞர்கள் பாக்கியவான்கள். பிரக்ஞை நிலையில் கவிஞனாயிருப்பதும் அந்தக் கவிப் பிரக்ஞையின் ஸ்தூல சாட்சியங்களான கவிதைகளை தொடர்ந்து படைத்தபடியிருப்பதும் எல்லோருக்கும் சாத்தியமாகிவிடாது. இந்த வகையில் அய்யப்ப மாதவன் பெரும் பாக்கியவான். ‘ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்’ இந்த நான்கு ஆண்டுகளில் அய்யப்ப மாதவன் வெளியிடும் ஐந்தாவது தொகுப்பு. (ஒரு ஹைக்கூ தொகுப்பும் சேர்த்து). எஸ்.புல்லட், நிசி அகவல், சொல்லில் விழுந்த கணம் போன்ற அவரது சமீபத்திய கவிதைத் தொகுப்புகள் தந்த அனுபவத்தை முன் வைத்து ‘ஆப்பிளுக்குள் ஓடும் ரயிலை’ அணுக முற்படும் ஒருவருக்கு ஏமாற்றம் உண்டாகலாம். முன்னுரையில் கவிஞரே சொல்வதுபோல் இவை வேறான கவிதைகள். காதலைப் பிரதானப்படுத்திய கவிதைகள் முக்கால் வாசிக்கும் மேல் நிறைந்திருக்கும் இத்தொகுப்பில் முந்தைய தொகுப்புகளின் அய்யப்ப மாதவனை மீதமிருக்கும் கால்வாசி பொதுவான கவிதைகளில் மட்டுமே காண முடிகிறது. அபோதத்தில் மிதப்பது போன்றதான மொழியின் மென் தீற்றலில் தீவிரமிக்கக் காட்சிப் படிமங்களை உருவாக்கி வாசக உணர்வு நிலையைத் தொட்டும் விலகியும் நகரும் வழமையான அய்யப்ப மாதவன் கவிதைகளாக இத்தொகுப்பின் காதல் கவிதைகள் இல்லை என்ற புள்ளியிலிருந்து நாம் ‘ஆப்பிளுக்குள் ஓடும் ரயிலை’ அணுகத் தொடங்கலாம்.
    இக் காதல் கவிதைகளில் ஒரு பெண், ஒரு புகைச்சித்திரம் அல்லது நீரோவியம் போல அசைந்தபடியிருக்கிறாள். மழையாக, காற்றாக, கறுத்த மேகமாக இன்னும் பலவுமாக கவிஞனின் புறவெளியையும் மனவெளியையும் ஆக்கிரமித்தவளாக அவனை சதா புலனின்பக் கனவுகளிலும் தீராத தாபத்திலும் விழுத்தாட்டியபடியிருக்கிறாள். அவனை அவள் வேறொருவனாக்குகிறாள்.
           ‘ஏகப்பட்ட குதிரைகள் பூட்டி இழுத்தோடிய அவன் வாழ்வினைப் பிடித்து நிறுத்துகிறாள்’ (பக்.34) ‘ஆழங்களில் புதையும் உறவின் வல்லமையில் அவனுக்கு புதிதான அகிலத்தைத் தீட்டுதல் சாத்தியமாகிறது’ (பக்.35). ‘வேறொரு உடலாகி புத்துணர்வில் புதியதொரு காலத்தைச் செதுக்குகிறான்’ (பக்.58) மொழியின் மென்னடுக்குகளில் அடங்கிக் கிடக்கும் தாபம் தூரிகைத் தீற்றலாய் வரிகளெங்கும் தாவரத்தின் வனப்பில் மறைந்து கிடக்கும் கனிகளாக தன்னைக் காட்டியும் காட்டாமலும் அலைவுற்றபடியிருக்கிறது. ‘துவண்ட கைகளில் தீண்டிய/ பெண்மையின் விரல் சர்ப்பத்தில்/ நல்நஞ்சு ஊடுருவி சொக்கும் என் மேனி’ (பக் 21). ‘மஞ்சு விரித்த பரப்பினில் பிடித்த பறவைகளில் அவளைக் கொஞ்சுகிறேன்/ மேகத்துண்டில் என் முகமதில் அவள் விழிகளில்/ பிரவகிக்கும் காதலையுணர்கிறேன்/ அந்தியின் ஆரஞ்சு மினுமினுப்பில் அவள் இதழ்களை முத்தமிடுகிறேன்.’ (பக்.29) ‘தோன்றிய பெண் அசைய அசைய/தாள்களில் வாத்சல்யம் பெருகி/ இலைநுனி வடிக்கும் ஒரு துளி நீராகி/ ரம்மியத்தில் வீழ்ந்தேன்(பக். 96) அவள் அவனுக்கு யாவுமாயிருக்கிறாள். ‘மரத்தின் கீழ் மிதந்த இலையோசையில்/ அஞ்சுகத்தின் குரலில் அவளிருந்தாள்/ பச்சைநிறப் பறவையின் சிச்சிறு விழிகளில்/ கண் சிமிட்டி என்னைக் கண்டாள்’ (பக். 32)
      பிறகு ‘ ஒரு நொடியாயினும் அவளற்றுப் போவது யுகங்கள்’ (பக்.28) ‘அப்போது நீயில்லாத சுகமற்ற துன்பங்களில்/ உழன்றிருந்தேன்’ (பக்.40) ‘ சுழலும் பூமி மரங்கள் பறவைகள் காற்று/ மேகங்கள் கடலென யாவற்றின் மீதான/ ஈடுபாடுகளும் அவளில்லாத சூன்யத்தில்/ நினைவைவிட்டு அகல்கின்றன/’ (பக்.28) என அவளற்ற, அவள் அருகாமை சித்திக்காத பொழுதுகளை நொந்தபடி கவிஞன் தாபமேறி மருகுகிறான். கடைசிவரை அரூபமாகவே நின்றுவிடும் அப்பெண் வரிகளுக்கிடையே தன்னை மறைத்துக் கொள்ளும் சாகசம் கற்றவளாயிருக்கிறாள். உருவத்தைக் கலைத்து கலைத்து விளையாடுகையில் பொதுவில் வைக்கும்போதும் கவிஞன் தன் காதலை, காதலியை தனதானதாகவே காப்பாற்றிக்கொள்ள விழைகிறான். வழக்கமாக பளிச்சென்ற வரிகள் இடையோடி சொற்புதிரும் காட்சியனுபவமுமாய் மாறி மாறி விரியும் அய்யப்ப மாதவன் கவிதைகள் இக் காதல் கவிதைகளில் சற்று அடங்கி மொழிப்பரப்பில் இறுக்கமடைந்திருப்பதைக் ஒருவர் காண முடியும். காதலெனும் உன்மத்த உணர்வு கவிதையைச் செலுத்தும்போதும் ஒருவித நிதானம் கவிதைக்குள் வந்துவிடுவது அதிசயமே. இது புதுவிதமான கவி அனுபவத்தை சாத்தியமாக்குகிறது. நவீன கவிதைப் பரப்பில் காதலை ஒருவித தீவிரத்தன்மையுடனும் பிரத்தியேக வசீகரத்துடனும் எழுதிய ஆளுமைகளை யோசிக்கையில் உடன் நினைவுக்கு வருவது யூமா வாசுகியும் கண்டராதித்தனும். இருவரது காதல் கவிதைகளும் அதிகம் பேசப்பட்டவை. அய்யப்ப மாதவனது காதல் கவிதைகள் இவ்வரிசையில் அமர்வதற்கான எத்தனங்களைக் கொண்டிருப்பவை.                  காதலுக்கும் கவிதைக்குமான உறவின் அடிப்படை என்ன? லயித்தலும், சுகித்தலும், கலத்தலும், ஊடுதலும், தாகித்து ஏங்குதலும், நினைத்துத் துயர்கொள்ளுதலுமே காதல். இவற்றுக்கு வெளியே காதலைப்பற்றி எழுதப்படும் கவிதை காதல் செயலின் தேவையற்ற உடன் விளைபொருளன்றி வேறில்லை என்றே தோன்றுகிறது. ஆயினும் அபூர்வத் தருணங்களில் காதலின் ஒளிகூடிய நினைவின் பொற்பரப்பை வருடி உணர்வின் தகிப்புடன் மொழியில் பதிவுறுகிறது காதல் கவிதை. பின் உலகப்பொதுவான அனுபவமாக மாறி தனது இடத்தை காலத்திலும் மொழியிலும் உறுதிசெய்துகொள்கிறது. அப்போது அதன்மீது கவிஞனுக்கும் உரிமையிருப்பதில்லை. கவிதையல்லாது காதலை இம்மட்டும் கொண்டாடிய வேறொன்று உலகிலில்லை. அதேபோல் காதலல்லாது வேறொன்றால் கவிதை இத்துனை அழகும் ஒளியும் கொண்டதில்லை. காதல் உணர்வு நிலையின் தீவிரமும் அதன்பாற்பாட்ட அகக்கிளர்வுகளும் நீரோவியமாய் தீற்றப்பட்டிருப்பதும், மீண்டும் மீண்டுமான வாசிப்பில் அவற்றின் உள்கிடக்கைகள் பெருகிக் கொண்டே போவதுமான அய்யப்ப மாதவனது காதல் கவிதைகளை புதிய வகை மாதிரிகள் என்றே சொல்ல வேண்டும். அதே நேரம் காதலை, காதலியை வனம், மழை, காற்று, வெளி போன்ற இயற்கையின் கூறுகளாகக் கண்டு புலம்பல் மொழியைக் கையாண்டு படைக்கப்பட்ட தன்மையினால் பைபிளின் பழைய ஏற்பாட்டில் காணும் உன்னத சங்கீதங்கள் பகுதியின் காதல் கவிதைகளின் சாயலை இக்கவிதைகள் கொண்டிருப்பதையும் ஒருவர் ஒப்பிட்டு உணர முடியும்.
      காதல் கவிதைகளுக்குப் பிறகு தொகுப்பிலுள்ள பொதுவான கவிதைகளை வாசிக்கையில் ஏனோ சிறிது காலம் பிரிந்திருந்த நண்பனொருவனை மீண்டும் சந்திக்கும் உணர்வு. அர்த்தங்கள் நழுவிச் சென்றபடியேயிருந்து தீர்க்கமான ஒரு சித்திரத்தைச் சென்றடையும் இக்கவிதைகள் ரசனைமிக்க வாசிப்பனுபவத்தைத் தருபவை. ‘காற்றின் மீதே உறங்குகின்றனர்’ கவிதை குழந்தைகள் உலகை அவதானிக்கும்போதே குழந்தைகளாக இருக்க முடியாத வளர்ந்தவர்களின் இயலாமையும் பதிவு செய்கிறது. ‘உள்ளும் வெளியும்’ கண்ணாடியுடனான குழந்தையின் உறவைப் பற்றியது. இக்கவிதை இதே போன்றதொரு சங்கர ராமசுப்ரமணியன் கவிதையை நினைவூட்டவும் தவறவில்லை. ‘கதவுகள் விற்பனைக்கு’, ‘ஆப்பிளுக்குள் ஓடுகிற ரயில்’, ‘மரவுடல் அத்துமீறல்’, ‘ரம்மியாடும் நிழல்’ போன்ற கவிதைகள் நிறைவான வாசிப்பனுவம் தருபவை. ‘மிருகச் சேட்டைகளில் மூழ்குகிற நகரமோ/ வித்தைகளை இனாமாய்த் துய்த்து மறைகிறது’ என்ற வரிகளமைந்த ‘குரங்காட்டி நகரம்’ கவிதை தன்னுள் ஒரு சாட்டையை ஒளித்து வைத்துள்ளது. ‘நதியோடிய கவிதாவின் முகம்’ வழமையானதொரு பத்திரிக்கைச் செய்தியை வலுமிக்கதொரு சித்திரமாக்கி மனதை இருளில் கவிழ்த்துவது. கண்ணீர் பெருகும் கவிதாவின் முகம் நதியோடிய முகமாய் ஒரு ரொமாண்டிஸிசப் படிமமாகிவிடுகையிலும் யதார்த்தத்தைக் குறியிட்டு நிற்குமிடத்தில் அய்யப்ப மாதவனது மொழி புரியும் ரசவாதம் கவனிக்கத் தக்கது. இதுபோன்ற ரசவாதமே அய்யப்ப மாதவனது கவிதைகள்பால் வாசக ஈர்ப்பினைத் தக்கவைத்திருப்பது. உண்ணும் குச்சியால் ஒற்றை பாஸ்டா இழையை வாய்க்குக் கொண்டுபோக விழையும் முயற்சியின் சுவாரஸ்யங்கள் கொண்டது அய்யப்ப மாதவனது கவிதை மொழி. அதில் பூடகமற்ற பூடகங்கள் உள்சரிந்து உள்சரிந்து காட்சியனுபவம் மேலெழுந்து வருகிறது. லயங்கொண்ட இக் கவிதைமொழி அர்த்தங்களைத் தொட்டும் விலகியும் பயணித்து இறுதியில் பொருத்தப்பாடுடைய காட்சிகளை, அனுபவ மீட்டுருவாக்கங்களை நிகழ்த்துகிறது. மொத்தத்தில் உவப்பானதொரு வாசிப்பனுபவத்தை சாத்தியமாக்கும் வல்லமை இக்கவிதைகளுக்கு வாய்த்துவிடுகிறது. மொழியைக் கூர்மையாக்குவதற்கு பதில் இழைத்து மென்மையாக்குவதன் வழி அர்த்தம் செறிந்த நெகிழ்வான கவிதைகள் உருக்கொள்கின்றன. இதுவே அய்யப்ப மாதவனது கவி வலிமை. தொடர்ந்து இதுபோன்ற கவிதைகளையே ஒரு வாசகன் அவரிடமிருந்து எதிர்பார்க்கிறான். காதலின் உணர்வுப் புலம் தாண்டினால் நாம் எப்போதும் எதிர்கொள்ளும் வாழ்வுதான் காத்திருக்கிறது. அவ்வாழ்விலிருந்து எடுத்து எழுதப்படுவதற்காய் ஆயிரமாயிரம் வரிகள் இறைஞ்சிக் கொண்டிருக்கின்றன. அவற்றை அய்யப்ப மாதவன் செவிகொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டு முடிக்கிறேன். 
   
                                                       ___________________

 ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்(கவிதைகள்) அய்யப்ப மாதவன் வெளியீடு: உயிர்மை

 ·  · Monday at 17:50 ·