Tuesday, 15 January 2013

நீல நாயின் கண்கள்







கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்


       பிறகு அவள் என்னைப் பார்த்தாள். முதல் முறையாக என்னைப் பார்க்கிறாள் போலும் என நினைத்துக் கொண்டேன். ஆனால் சற்று கழித்து அவள்  திரும்பி விளக்கின்பின் சென்ற பிறகு என் முதுகில் தோள்பட்டைகளில் என அவளது வழுக்கும் பிசுபிசுப்பான பார்வையை உணர்ந்தபடியிருந்தேன். நான்தான் முதல் முறையாக அவளைப் பார்க்கிறேன் என்பது புரிந்தது. ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டேன்.  சுழன்று, அதன் பின் கால்களுள் ஒன்றில் ஊன்றியபடி நாற்காலியில் அமரும் முன் கடுமையும் காட்டமுமான புகையை ஒருமுறை இழுத்துக் கொண்டேன். அதன் பிறகு அவளை அங்கு கண்டேன், ஒவ்வொரு இரவும் விளக்கின் பக்கத்தில் நின்றபடி என்னைப் பார்த்துக்கொண்டிருப்பதாக. கிடைத்த மிக சொற்ப நேரத்தில் நாங்கள் செய்ததெல்லாம் அதுதான்: ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருப்பது. நாற்காலியில் பின்னங் கால்களுள் ஒன்றில் ஊன்றியபடி அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். நீண்ட அமைதியான கைகளை விளக்கின் மீதாகக் காட்டியபடி அவள் நின்றிருந்தாள். தினம் இரவில் நிகழ்வதைப்போல அவள் கண்ணிமைகள் ஒளிபெறுவதை அப்போதும் கண்டேன். அவளிடம் நான் நீல நாயின் கண்கள் என்றபோதுதான் வழமையான அவ்விஷயம் என் நினைவுக்கு வந்தது. விளக்கிலிருந்து கைகளை எடுக்காமலே அவள் சொன்னாள். அதுதான். நம்மால் ஒருபோதும் அதை மறக்க முடியாது. பெருமூச்செறிந்தபடியே அவள் அவ்விடத்தை விட்டு அகன்றாள்: நீல நாயின் கண்கள். எல்லா இடங்களிலும் அதை எழுதி வைத்திருக்கிறேன்.

அவள் அலங்காரப்படுத்திக்கொள்ளும் மேசைக்குச் செல்வதைப் பார்த்தேன். முகம் பார்க்கும் கண்ணாடியின் வட்டப் பரப்புக்குள் தோன்றி, இப்போது ஒரு முதுகுக்குப் பின்னும் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட ஒரு ஒளியின் முன்னும் இருக்கும் என்னைப் பார்ப்பதைக் கண்டேன். தனது தீக்கங்குக் கண்களால்,  இளஞ்சிவப்பு வண்ண, கிளிஞ்சல் தாது பூசிய தனது சிறிய பெட்டியைத் திறந்தபடி என்னைத் தொடர்ந்து அவள் பார்ப்பதைக் கண்டேன். தன் மூக்குக்கு அவள் முகப்பூச்சு மாவு பூசுவதைப் பார்த்தேன். முடிந்ததும் பெட்டியை மூடினாள், திரும்ப எழுந்தாள். யாரோ இந்த அறையைப் பற்றிக் கனவு கண்டபடி என் ரகசியங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றபடியே மீண்டுமொருமுறை விளக்கினருகே சென்றாள். அலங்கார மேசைக்குச் செல்லும் முன் குளிர்காய்ந்துகொண்டிருந்தபடியே, தனது அதே நீண்ட நடுங்கும் கைகளை விளக்குத் தணலின் மீது காட்டியபடி குளிர்காயத் தொடங்கினாள். அவள் சொன்னாள்: உங்களுக்குக் குளிர் தெரியவில்லை. நான் சொன்னேன்: சில நேரங்களில். அவள் சொன்னாள்: இப்போது உங்களுக்குக் குளிரும். ஏன் என்னால் இருக்கையில் தனித்திருக்க முடியவில்லையென்பது அப்போது புரிந்தது. குளிர்தான் எனக்கு என் தனிமையின் நிச்சயத்தை அளித்துக்கொண்டிருந்தது. இப்போது குளிருகிறது என்றேன்.இரவு நிசப்தமாயிருப்பது விசித்திரமாயிருக்கிறது. பாய்மரத்துணி விழுந்துவிட்டிருக்கவேண்டும். அவள் பதில் பேசவில்லை. திரும்ப அவள் கண்ணாடியை நோக்கிச் சென்றாள், அவளுக்கு முதுகு காட்டியபடி நாற்காலியில் திரும்பி அமர்ந்தேன். அவளைப் பார்க்காமலேயே அவள் என்ன செய்துகொண்டிருக்கிறாளென்தை அறிந்தேன். அவள் கண்ணாடி முன் அமர்ந்து, கண்ணாடியின் ஆழங்களுக்குள் செல்லவும் அவள் பார்வைக்கு அகப்படவும் போதிய அவகாசம் கொண்டிருந்த என் முதுகைப் பார்த்தபடியிருந்தாள்.அவள் கைக்கு இரண்டாவது திரும்புதலை தொடங்க போதிய அவகாசம் கிடைக்கும் முன், அவள் கையின் முதல் திரும்புதலினால் அவள் உதடுகள் கருஞ்சிவப்பு வண்ணத்தால் பூசப்படும் வரை, அவள் பார்வை கண்ணாடியின் ஆழங்களுக்குள் சென்று திரும்ப போதிய அவகாசமிருந்தது. எனக்கு எதிரே வழவழப்பான சுவரைப் பார்த்தேன். அதில் எனக்குப் பின்னே அமர்ந்திருக்கும் அவளை நான் பார்க்க முடியாத குருட்டுக் கண்ணாடியாயிருந்தது அது. ஆனால் சுவரிருக்குமிடத்தில் ஒரு கண்ணாடியிருந்தால்  அதில் அவள் எந்த இடத்தில் இருப்பாள் என்பதைக் கற்பனை செய்ய முடிந்தது. நான் உன்னைப் பார்க்கிறேன், அவளிடம் சொன்னேன். தன் விழிகளை அவள் உயர்த்தியிருந்தால், நாற்காலியிலிருந்து திரும்பி அவளை நோக்கியிருக்கும் என் முதுகைப் பார்த்திருந்தால் எப்படியிருக்கும் என்பதை நான் சுவரில் பார்த்தேன். கண்ணாடியின் ஆழத்தில் என் முகம் சுவரை நோக்கித் திரும்பியது. பிறகு அவள் தன் கண்களைத் தாழ்த்தியதை, தாழ்த்தி தன் மார்க்கச்சையே பேசாமல் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் திரும்ப அவளிடம் சொன்னேன்: நான் உன்னைப் பார்க்கிறேன். மார்க்கச்சிலிருந்து திரும்பத் தன் கண்களை உயர்த்தினாள். அது சாத்தியமேயில்லை, என்றாள். ஏன் என்று கேட்டேன். மீண்டும் கண்களை மார்க்கச்சில் வைத்தபடி, ஏனென்றால் உங்கள் முகம் சுவரை நோக்கித் திரும்பியுள்ளது, என்றாள். நான் நாற்காலியில் சுழன்று திரும்பினேன். சிகரெட்டை வாயில் பற்றியிருந்தேன். நான் கண்ணாடியைப் பார்த்தபடியிருக்க அவள் விளக்கிடம் வந்திருந்தாள். விரல்களின் நிழல் அவள் முகத்தை மறைத்திருக்க தன்னைத்தானே நெருப்பில் வாட்டிக்கொள்ளும் ஒரு கோழியின் சிறகுகளைப்போல தன் கைகளை விளக்கின் மேலாக விரித்திருந்தாள். எனக்கு ஜலதோஷம் பிடிக்கப் போகிறதென நினைக்கிறேன் என்றாள். இது பனி நகராக இருக்கவேண்டும். முகத்தை அவள் பக்கவாட்டில் திருப்பினாள், பழுப்பிலிருந்து சிவப்பு வண்ணமாக மாறிய அவள் முகம்  திடீரென சோகக்களை பூண்டது. ஏதாவது செய்யுங்கள் என்றாள். பிறகு அவள் தன் உடைகளைக் களைய ஆரம்பித்தாள், மேலே மார்க்கச்சில் தொடங்கி, ஒவ்வொன்றாக. நான் சொன்னேன்: நான் சுவர்ப்பக்கம் திரும்பிக்கொள்ளப் போகிறேன். வேண்டாம். எப்படியிருப்பினும் நீங்கள் அந்தப்பக்கம் திரும்பியிருந்த போது பார்த்தது போல என்னைப் பார்க்கத்தானே செய்வீர்கள். இதைச் சொல்லி முடிக்கும் முன் விளக்கின் ஜுவாலைகள் நீண்டு அவளது பழுப்பு சருமத்தை நக்கியபடியிருக்க, கிட்டத்தட்ட உடைகளனைத்தையும் களைந்துவிட்டிருந்தாள். யாரோ உன்னை அடித்தது போல உன் வயிற்றுத் தோலில் ஆழமான பள்ளங்கள் இருக்கும் நிலையிலேயே உன்னை எப்போதும் பார்க்க விரும்புகிறேன். அவள் நிர்வாணத்தைக் கண்ணுற்றதால் ஏற்பட்ட நிலைகுலைவில் என் வார்த்தைகள் தெளிவற்றுப் போனதை நான் உணரும் முன் விளக்கின் உருண்டைப் பகுதியில் குளிர்காய்ந்தபடி அசைவற்று நின்றிருந்த அவள் சொன்னாள்: சில நேரம் நான் உலோகத்தால் ஆனது போல உணர்கிறேன்.ஒரு கணம் அவள் அமைதியாக நின்றாள். விளக்கின் மீது அவள் கைகளின் நிலை சற்றே மாறியது. நான் சொன்னேன்: சில நேரம் பிற கனவுகளில், ஏதோவொரு அருங்காட்சியகத்தின் மூலையிலிருக்கும் சிறிய வெண்கலச்சிலையாக உன்னை எண்ணியிருக்கிறேன். நீ  சில்லென்றிருப்பதன் காரணம் இதுவாகக்கூட இருக்கலாம்.அவள் சொன்னாள்; சில நேரம், கவிழ்ந்து படுத்து நான் உறங்கும்போது, என் உடல் உள்ளீடற்றுப் போய் சருமம் உலோகத் தகடாய் மாறுவதை உணர்ந்திருக்கிறேன். அப்போது உள்ளே துடிக்கும் இரத்தம் யாரோ என் வயிற்றைத் தட்டிக் கூப்பிடுவதாய் இருக்கும், என்னுடலின் செப்புத் தகட்டு ஒலியை படுக்கையில் என்னால் உணரமுடியும். அது-எப்படிச் சொல்வது- மேலுறையிடப்பட்ட ஒரு உலோகம். அவள் விளக்கை இன்னும் நெருங்கினாள். உனது ஒலியை நான் கேட்க விரும்பியிருப்பேன், நான் சொன்னேன். அவள் சொன்னாள் எப்போதாவது நாம் சேர்ந்திருக்க நேர்ந்தால், நான் இடதுபக்கம் சாய்ந்து உறங்குகையில் என் விலாவில் காதை வைத்தால் நான் எதிரொலிப்தைக் நீங்கள் கேட்கலாம். என்றாவது நீங்கள் அவ்வாறு செய்யவேண்டுமென நான் விரும்புகிறேன். பேசுகையில் அவள் ஆழ்ந்து மூச்சு விடுவதைக் கேட்டேன். ஆண்டுகளாக அவள் எதையும் வித்தியாசமாகச்  செய்யவில்லை என்றாள். நீல நாயின் கண்கள் என்ற சொற்றொடரின் வழி நிஜவாழ்வில் என்னைக் கண்டுபிடிக்கவென அவளது வாழ்வு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. உரக்க அதைச் சொல்லிக் கொண்டே அவள் தெருவில் சென்றாள், அவளைப் புரிந்துகொண்டிருக்கக்கூடிய அந்த ஒரே நபருக்கு அதைத் தெரிவிக்கும் விதமாய்.

தினம் இரவில் உங்கள் கனவில் வந்து நீல நாயின் கண்கள் எனச் சொல்பவள் நான்தான். மேலும் அவள் உணவு விடுதிகளுக்குச் சென்று உணவுவகைகளைச் சொல்லும் முன் பரிமாறுபவர்களிடம் நீல நாயின் கண்கள் எனக் கூறிக் கொண்டிருந்ததைச் சொன்னாள். ஆனால் கனவில் ஒருபோதும் அதைத் தாங்கள் சொன்னதாக நினைவில்லாத பரிமாறுபவர்கள், மரியாதையாகக் குனிந்து வணங்கினர். பிறகு அவள் துடைக்குந்தாளில் எழுதினாள்; கத்தியால் மேசையின் மரப்பூச்சில் கீறினாள்:நீல நாயின் கண்கள். தங்கும் விடுதிகளின் நீராவி படிந்த சன்னல்களில், ரயில் நிலையங்களில், பொதுக் கட்டடங்களில் தன் நுனிவிரலால் எழுதினாள்:நீல நாயின் கண்கள். ஒருநாள் மருந்துக் கடைக்குச் சென்றவள் என்னைப் பற்றிக் கனவு கண்ட இரவில் அவள் அறையில் வீசிய வாசனையை அங்கு உணர்ந்தாள். அவர் அருகேதான் இருக்கவேண்டும், மருந்துக் கடையின் சுத்தமான, புதிய தரை ஓடுகளைப் பார்த்தவள் நினைத்தாள். பிறகு கடையின் குமாஸ்தாவிடம் சென்று சொன்னாள்: என்னிடம் நீல நாயின் கண்கள் எனச் சொல்லும் ஒருவரை எப்போதும் கனவில் காண்கிறேன். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் உங்களுக்கு அதைப் போன்ற கண்கள் உள்ளன என அவன் சொன்னதாகச் சொன்னாள். அவனிடம் அவள் சொன்னாள்; என் கனவில் அவ்வார்த்தைகளைச் சொன்னவரை நான் கண்டுபிடிக்க வேண்டும். குமாஸ்தா சிரிக்கத் தொடங்கினான், சிரித்தபடியே அந்தப் பக்கம் சென்றான். அவள் சுத்தமான தரை ஓடுகளைப் பார்த்துக்கொண்டும் அந்த வாசனையை நுகர்ந்துகொண்டும் நின்றிருந்தாள். பிறகு தன் கைப்பையிலிருந்து கருஞ்சிவப்பு உதட்டுச் சாயத்தை எடுத்து தரையில் எழுதினாள்: நீல நாயின் கண்கள். குமாஸ்தா தனது இடத்திற்கு திரும்பி வந்தான். அவளிடம் அவன் சொன்னான்: அம்மணி, நீங்கள் தரை ஓடுகளை அசுத்தப் படுத்திவிட்டீர்கள். ஈரத் துணியொன்றைக் கொடுத்து சுத்தம் செய்யுங்கள் என்றான். விளக்கின் பின்னாலிருந்து அவள் சொன்னாள்,  கதவருகே கூட்டம் கூடி அவள் பைத்தியம் என்று சொல்லும்வரை அந்த மதியம் முழுக்க மண்டியிட்டபடி நீல நாயின் கண்கள் என்றபடியே தரை ஓடுகளைத் தான் துடைத்தபடியிருந்ததாக.

அவள் பேசி முடித்தபோது நாற்காலியில் ஆடியபடியே மூலையில் அமர்ந்திருந்தேன். அதைக் கொண்டு உன்னைக் கண்டுபிடிக்க உதவும் அச் சொற்றொடரை நினைவுபடுத்திக்கொள்ள தினம் முயல்கிறேன், நான் சொன்னேன். நாளை அதை மறந்துவிடமாட்டேன் என்றே நினைக்கிறேன். இருந்தும் எப்போதும் அதையே நான் சொல்கிறேன், ஆனால் விழித்தெழும்போது உன்னைக் கண்டுபிடிக்க உதவும் அந்த வார்த்தைகளை மறந்துவிடுகிறேன். அவள் சொன்னாள்: முதல்நாளே, நீங்களாகவே அதைக் கண்டுபிடித்துவிட்டீர்கள். அவளிடம் நான் சொன்னேன்: உன் சாம்பல் கண்களைப் பார்த்ததும் அவ்வார்த்தைகளை நான் கண்டுபிடித்தேன்,ஆனால் ஒருபோதும் அடுத்த நாள் காலை அதை என்னால் நினைவுகூர முடிவதில்லை. அவள் விளக்கின் பின்னே இறுக்கி மூடிய கைகளுடன் ஆழ்ந்து மூச்சுவிட்டாள்: நான் அதை எழுதிக்கொண்டிருந்த நகரம் எதுவென்று இப்போது உங்களால் நினைவுகூர முடிந்தால்.

இடுங்கிய அவளது பற்கள் ஜுவாலையின் மீதாக ஒளிர்ந்தன. இப்போது உன்னைத் தொட விரும்புகிறேன், நான் சொன்னேன். வெளிச்சத்தைப் பார்த்தபடியிருந்த முகத்தை அவள் உயர்த்தினாள், அவள் பார்வையை உயர்த்தினாள், அவளைப் போல, அவள் கைகளைப் போல அவள் பார்வையும் எரிந்தபடி, கனன்றபடி இருந்தது. மூலையில் நாற்காலியில் ஆடிக்கொண்டிருந்த என்னை அவள் பார்த்ததை உணர்ந்தேன். என்னிடம் அதை நீங்கள் சொன்னதேயில்லையே அவள் சொன்னாள். இப்போது சொல்கிறேன், இது உண்மை. விளக்கின் அந்தப்பக்கமிருந்து அவளொரு சிகரெட் கேட்டாள். சிகரெட்டின் அடிப்பகுதி என் விரல்களுக்கிடையே மறைந்துபோயிருந்தது.நான் புகைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதையே மறந்துவிட்டிருந்தேன். அவள் சொன்னாள்: அவ்வார்த்தைகளை எங்கே எழுதினேன் என்பதை ஏன் நினைவுகூர முடியவில்லையென்பதன் காரணம் எனக்குத் தெரியவில்லை. நான் சொன்னேன்: நாளை என்னால் அவ்வார்த்தைகளை நினைவுகூர முடியாமல் போகப்போவதற்கான காரணம்தான் அதுவும். வருத்தமுடன் அவள் சொன்னாள்: இல்லை. சில நேரம் அதையும் நான் கனவில் கண்டதாக எண்ணுவதுதான் காரணம். நான் எழுந்து விளக்கை நோக்கி நடந்தேன். அவள் சற்று தள்ளியிருந்தாள். விளக்கைத் தாண்டி நீள முடியாத என் கையில் சிகரெட்டுகளையும் தீக்குச்சிகளையும் வைத்தபடி நான் தொடர்ந்து நடந்தேன். சிகரெட்டை அவளிடம் நீட்டினேன். நான் தீக்குச்சியைப் பற்றவைக்கும் முன் உதடுகளுக்கிடையே சிகரெட்டைப் பொருத்திக்கொண்டு விளக்கின் ஜுவாலையை நோக்கிக் குனிந்தாள். இவ்வுலகின் ஏதோவொரு நகரத்தின் எல்லாச் சுவர்களிலும் அவ்வார்த்தைகள் எழுத்தில் தோன்றவேண்டும்: நீல நாயின் கண்கள், நான் சொன்னேன். நாளை அதை நான் நினைவுகூர்ந்தால் உன்னைக் கண்டுபிடிப்பேன். அவள் தலையை உயர்த்தினாள், இப்போது கங்கு அவள் உதடுகளுக்கிடையே இருந்தது. : நீல நாயின் கண்கள், சிகரெட் அவள் முகவாய்க் கட்டை மேலாக வளைந்து தொங்க, ஒரு கண் பாதி மூடியிருக்க அவள் பெருமூச்செறிந்தாள், நினைவுகூர்ந்தாள். பிறகு விரல்களுக்கிடையே சிகரெட்டை வைத்து புகையை உறிஞ்சி உரக்கச் சொன்னாள். இப்போது இது வேறொன்று. நான் கதகதப்பாகிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவள் சற்றே அசிரத்தையுடனும், கணநேர உற்சாகத்துடனும், தான் அதை சொல்லவேயில்லை, மாறாக அவள் அதை ஒரு காகித்தில் எழுதி விளக்கினருகில் வர அதை நான் வாசித்தது போலத் தோன்றும்படி சொன்னாள்: நான் கதகதப்பாகிக் கொண்டிருக்கிறேன். அவள் கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்குமிடையே இருந்த காகிதத்தைப் புகைப்பதைத் தொடர்ந்தாள். நெருப்பால் விழுங்கப்பட்டுக்கொண்டிருக்கும் அதை அவள் திருப்பினாள், முழுவதும் விழுங்கப்பட்டு அனைத்தும் சுருங்கி மறைந்து மென்சாம்பலாகித் தரையில் விழும் முன்  என்னால் ...மேலே என்பதை மட்டுமே வாசிக்க முடிந்தது. அது நல்லது, நான் சொன்னேன். உன்னை அப்படிப் பார்ப்பது சில நேரம் என்னை அச்சுறுத்துவதாக உள்ளது, ஒரு விளக்கின் பின்னே நடுங்கியபடியிருக்கும் உன்னைப் பார்ப்பது.

நாங்கள் ஒருவரையொருவர் பல வருடங்களாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். சிலநேரம் ஏற்கனவே நாங்கள் கூடியிருந்து உறங்கிக்கொண்டிருக்கும்போது வெளியே யாராவது ஒரு கரண்டியைக் கீழே தவறவிடுவார்கள், நாங்கள் விழித்துக் கொள்வோம். கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் நட்பு பிற விஷயங்களுக்கு, எளிய சம்பவங்களுக்கு அடுத்த இரண்டாம்பட்ச விஷயமானது. எங்கள் சந்திப்புகள் எப்போதும் அவ்வாறே முடிந்தன, அதிகாலையில் ஒரு கரண்டி கீழே விழுவதுடன்.

இப்போது விளக்குக்கு அருகிலிருந்து அவளென்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நாற்காலியை அதன் பின்னங்கால்களில் ஊன்றி சுழலவிட்டபடி சாம்பல் கண்களையுடைய அந்த வினோதப் பெண்ணைப் பார்த்தபடியிருந்த அந்த தொலைதூரக் கனவிலிருந்து கடந்த காலத்திலும் அவளென்னை இதுபோல பார்த்துக்கொண்டிருந்தது என் நினைவுக்கு வந்தது. அந்தக் கனவில்தான் முதல் தடவையாக அவளைக் கேட்டேன்: யார் நீ?. அவள் சொன்னாள்: எனக்கு நினைவில்லை. நான் சொன்னேன்: ஆனால் இதற்கு முன் நாம் ஒருவரையொருவர் பார்த்திருக்கிறோமென நினைக்கிறேன். அவள் சொன்னாள்: என்ன விசித்திரம். நிச்சயம் நாம் வேறு கனவுகளிலும் சந்தித்திருக்கிறோம்.

சிகரெட்டில் அவள் இரண்டு இழுப்புகள் இழுத்தாள். நான் விளக்கைப் பார்த்தபடி அங்கேயே நின்றிருந்தேன். சட்டென அவளைப் பார்க்கத் தொடங்கினேன். அவளை மேலும் கீழும் பார்த்தேன் அவள் செம்பு வண்ணத்திலேயே இருந்தாள்; கடினமான விரைத்த உலோகமாயல்ல, மஞ்சள் வண்ண, நெகிழ்வான செம்பாக. நான் உன்னைத் தொட விரும்புகிறேன், நான் மீண்டும் சொன்னேன். அவள் சொன்னாள்: எல்லாவற்றையும் பாழாக்கிவிடுவீர்கள். நான் சொன்னேன்: அது பற்றி இப்போது கவலையில்லை. இப்போது நாம் செய்யவேண்டியதெல்லாம் திரும்ப நாம் சந்திக்கும்வகையில் தலையணைகளை ஒழுங்குபடுத்துவதுதான். நான் கைகளை விளக்கின் மேலாக நீட்டினேன். அவள் அசையவில்லை. எல்லாவற்றையும் பாழாக்கிவிடுவீர்கள், அவளை நான் தொடும் முன் மீண்டும் அவள் சொன்னாள். விளக்கின் பின்புறமாக நீங்கள் உங்கள் இடத்தை மாற்றிக் கொண்டால், ஒருவேளை எந்த இடமென்று தெரியாத உலகின் ஓரிடத்தில் அச்சத்துடன் நாம் விழித்தெழலாம். ஆனால் பிடிவாதமாகச் சொன்னேன்:அது பற்றி இப்போது கவலையில்லை. அவள் சொன்னாள்: தலையணையை நாம் திருப்பிப் போட்டால், திரும்ப நாம் சந்திப்போம். ஆனால் விழித்தெழும்போது எல்லாவற்றையும் நீங்கள் மறந்திருப்பீர்கள். நான் மூலை நோக்கி நகர ஆரம்பித்தேன். தணலுக்கு மேலே கைகளைக் காட்டியபடி அவள் அங்கேயே நின்றிருந்தாள். நள்ளிரவில் நான் விழிக்கும்போது, படுக்கையில் புரண்டபடியிருப்பேன், தலையணையின் விளிம்பு என் கால் முட்டிக்கு எரிச்சலுண்டாக்கியபடி இருக்க, விடியும்வரை நீல நாயின் கண்கள் எனத் திரும்பத் திரும்பச் சொல்லியபடியே இருப்பேன் என எனக்குப் பின்னே அவள் சொன்னதைக் கேட்கும்போதும் நான் நாற்காலிக்குப் பின்னாலிருக்கவில்லை.

பிறகு என் முகம் சுவரைப் பார்த்தபடியிருக்க நின்றிருந்தேன். ஏற்கனவே விடிய ஆரம்பித்துவிட்டது, அவளைப் பார்க்காமலே சொன்னேன். மணி இரண்டடித்தபோது நான் விழித்தேன். நான் விழித்து நீண்ட நேரமாகிறது. நான் கதவை நோக்கிப் போனேன். கதவின் கைப்பிடிக் குமிழ் என் கையிலிருந்தபோது அவள் குரலை மீண்டும் கேட்டேன். அதே, மாற்றமற்ற குரல். கதவைத் திறக்காதீர்கள், அவள் சொன்னாள், தாழ்வாரம் கடினமான கனவுகளால் நிரம்பியிள்ளது. நான் அவளைக் கேட்டேன்: உனக்கு எப்படித் தெரியும்?. அவள் என்னிடம் சொன்னாள்: சற்று முன் நான் அங்கிருந்தேன், என் இதயத்தின் மீது நான் உறங்குவதைக் கண்டுணர்ந்தபோது நான் திரும்பிவிட்டேன். கதவை நான் பாதி திறந்திருந்தேன். இன்னும் சிறிது அதைத் தள்ளியபோது குளிர்மிக்க மெல்லிய காற்று புத்துணர்வுமிக்க தாவர பூமியின் வாசத்தையும், ஈர வயல்களின் வாசத்தையும் கொண்டு வந்தது. அவள் திரும்பப் பேசினாள். அமைதியான கீல்களின் மீதமைந்த கதவைத் தள்ளியபடியே நான் திரும்பினேன், அவளிடம் சொன்னேன்: வெளியே தாழ்வாரம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. எனக்கு நாட்டுப்புற வாசமடிக்கிறது. என்னிடமிருந்து சற்றுத் தள்ளியிருந்த அவள் சொன்னாள்: உங்களைவிட எனக்கது நன்றாகவே தெரியும். என்ன நடக்கிறதென்றால், அங்கே ஒரு பெண் நாட்டுப்புறம் பற்றிக் கனவு கண்டுகொண்டிருக்கிறாள். தணலின் மீதாக கைகளை அவள் குறுக்காக வைத்தாள். பேச்சைத் தொடர்ந்தாள்: அது நாட்டுப்புறத்தில் தனக்கொரு வீடு வேண்டுமென்று விரும்பிய ஆனால் ஒருபோதும் நகரத்தைவிட்டு நீங்க முடியாமல் போன ஒரு பெண். அப் பெண்ணை நான் இதற்குமுன் கண்ட சில கனவுகளில் பார்த்திருந்தது நினைவுக்கு வந்தது. கதவு திறந்திருக்க, இன்னும் அரை மணி நேரத்துக்குள் காலை உணவுக்காக நான் கீழே போக வேண்டியிருக்கும் என்பதை அறிந்திருந்தேன். நான் சொன்னேன் எப்படியிருப்பினும் விழித்தெழுவதற்காக நான் இங்கிருந்து கிளம்பியாக வேண்டும்.

வெளியே காற்று ஒரு கணம் சலசலத்தது, பின் அமைதியானது. படுக்கையில் இப்போதுதான் புரண்டு படுத்திருந்த, உறங்கும் யாரோ ஒருவரது சுவாசச் சத்தம் கேட்டது. வயல்களிலிருந்து வீசிக் கொண்டிருந்த காற்று அடங்கிவிட்டிருந்தது. இனியும் வாசனைகள் ஏதும் வீசவில்லை. நாளை அதிலிருந்து உன்னை நான் அடையாளம் கண்டுகொள்வேன், நான் சொன்னேன். தெருவில் நீல நாயின் கண்கள் என சுவரில் ஒரு பெண் எழுதுவதைப் பார்க்கும்போது உன்னை அடையாளம் கண்டுகொள்வேன். ஏற்கனவே, சாத்தியமல்லாத, அடைய முடியாத ஒன்றிடம் சரணடைவதன் புன்னகையாயிருந்த, ஒரு சோகப் புன்னகையுடன் அவள் சொன்னாள்:இருந்தும், பகல் பொழுதில் எதையும் உங்களால் நினைவுகூரமுடியாது.அவள் திரும்பக் கைகளை விளக்கின் மீதாக நீட்டினாள், ஓர் அடர் மேகத்தால் அவளது அங்கங்கள் இருண்டன. விழித்த பின், கண்ட கனவிலிருந்து எதையும் நினைவுகூர முடியாத ஒரே மனிதர் நீங்கள்தான்.
----------------


நன்றி: 'நீட்சி' (2012)