மெசியா
“நம்மையெல்லாம் எண்ணிக் கணக்குப்
பார்க்கும் வினோத ஆசை ஏனிந்த அகஸ்டஸ் சீஸருக்கு, நாமென்ன அவனது மந்தையா?”
முன்னே சிறு பொதிகளைத் தோளிலிட்டு
நடந்துகொண்டிருந்த இருவரில் ஒருவன் கேட்டான்.
“இப்படியாக அவன் தன் வரிக்கணக்கைச் சரிபார்ப்பானாயிருக்கும்.” உடன் வந்தவன் சொன்னான். “வசூலித்த வரியை ஏய்க்கும்
ஆயக்காரர்களுக்கும் இதில் ஒரு செய்தியிருக்கிறது, இல்லையா.”
அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒலிவமும்
அத்தியும் தென்பட்ட பாதையில் அதிகமும் பேரீச்சைகள் சடைத்து நிற்க, சிறுவர் இளைஞர் நடுத்தர வயதினர்
வயதானோர் என ஆண்களும் பெண்களுமாய் மூட்டை முடிச்சுக்களோடு அவர்கள் நடந்தனர். சிறு குழந்தைகள் தோள்களில்
சவாரி செய்ய மிகச்சிலர் கழுதைகள்மீது வந்தனர். வலுவான ஆண்கள் நடக்க இயலாதோரை தோளில்
சுமந்தும் படுக்கையில் வைத்துத் தூக்கிக்கொண்டும் நடந்தனர். பாதையின் இருமருங்கிலும் முக்காலும்
காய்ந்த குற்றுச்செடிகள் நிறைந்து பரவியிருக்க வறண்ட நிலத்தின் நெளிந்து வளைந்த மண்பாதையில்
நீண்ட ஊர்வலமாய் மக்கள் நகர்ந்துகொண்டிருந்தனர். இறுகிய முகங்களில் தெரிந்த எரிச்சலிலும்
சோர்விலும் இந்நெடிய பயணத்தின் மீதான அவர்களின் வெறுப்பைப் படிக்க முடிந்தது.
“அறுபது வருடங்களாகிறது, இந்த உரோமையர்கள் யூதேயாவில்
நுழைந்து ஜெருசலத்தைக் கைப்பற்றி.
நாம் எகிப்திலேயே
இருந்திருக்கலாமோ,
நைல் கரையில்
இவ்வளவு வெக்கையிருக்காது இல்லையா?”
“வாக்களிக்கப்பட்ட பூமியில் இதெல்லாம்
நிகழவேண்டுமென்று சித்தமாயிருக்கும். யாராவது
கிழட்டு ராபியிடம் கேட்டுப்பார்,
ஏடுகளைப் புரட்டிப்பார்த்துச்
சொல்வார்.“
இளைஞர்கள்
இருவரும் உரக்கச்
சிரித்தனர்.
இந்த இருவருக்கும் பின்னால்
கழுதையை ஓட்டிவந்தவன் இந்தப் பேச்சையும் சிரிப்பையும் ரசிக்கவே செய்தான். கடுமையான பயணத்தில் மனதைச்
சிறிது லகுவாக்க இதுபோன்ற விஷயங்கள் உதவுவதை அறிந்திருந்தான். இரண்டு நாட்கள் முன்பு இந்தப்
பயணத்தில் காலை தொடங்கி மாலைவரை அவர்களுடன் உரையாடிக்கொண்டு வந்த ராபி பேசியதும் அப்படித்தான்
இருந்தது.
கழுதைமீது அமர்ந்தபடி
வந்த அவன் மனைவி இதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்கிறாளா என்று தெரியவில்லை. அவள் கவனமெல்லாம் எங்கோ இருந்தது. அதிமுக்கியச்
செய்தியை ஏந்திய தூதுவன் அதை உரியவரிடம் சேர்க்கும்வரை கொண்டிருப்பது போன்ற பதற்றத்தையும்
நிலைகொள்ளாமையையும் அவள் கொண்டிருந்தாள். பேறுகாலம்
நெருங்கிக்கொண்டிருந்த கர்ப்பவதியான அவளது பதற்றத்தில்
அவனும் பங்கெடுத்துக்கொண்டிருந்தான். மக்கள்
தங்கள் பூர்வீக ஊர்களுக்குச் சென்று குடிக்கணக்கு ஒப்புவிக்க வேண்டுமென்ற அகஸ்டஸ் சீஸரின்
ஆணையின்படி இருவரும் நாசரேத்திலிருந்து பெத்லகேமுக்கு பயணப்பட்டுக்கொண்டிருந்தனர்.
நாசரேத்தில் செபக்கூடம் அமைந்த
பிரதான தெருவின் இறுதியில் அவன் வீடு. புறத்தில்
பாசியேறிய பழைய கற்சாடிகள் நிற்க சற்றுத்தள்ளி முளையில் கழுதை கட்டப்பட்டிருக்கும்
சிறு முற்றத்தைத் தாண்டி மரச்சீவல்கள் இறைந்து கிடக்கும் பட்டறை. மரத்தச்சனான அவன் நாளின் பெரும்பகுதியை
அங்குதான் கழித்தான்.
அங்கே உலர்ந்த, உலர்ந்து கொண்டிருக்கும் மரங்கள்
தம்மைத் திறந்து மணத்தைக் காற்றில் பரப்பிக்கொண்டிருக்கும். புதிதாக இழைக்கப்படும் மரங்களின்
வாசனை அவனுக்கு விருப்பமானது.
மரங்களை அவற்றின்
வாசனைகள் வழியே அறிந்துகொள்ளவும் செய்வான். நெருப்பில் வேகும் இரும்பின் குணமறியும்
கொல்லனைப்போல இழைக்கும் மரங்களின் வயதையறிபவனே நல்ல தச்சனாக இருக்க முடியும். வாதங்களில் தம் தரப்பை நிதானமாக
முன்வைக்கும் ஞானிகளைப்போல முதிர்ந்த மரங்கள்
இழைபட
இழைபட மெதுவாகவே தம் மணத்தை வெளிப்படுத்தும். நடுவயது மரங்கள் இன்னும் ஈடேறாத வாழ்வின்
ஏக்கங்களை வாசனையாக வெளிப்படுத்துகின்றனவோ என எண்ணும் வகையில் அவற்றின் சுகந்தம் அறுதியிட
முடியாத ஒரு கலவையாயிருக்கும். முதிராத சிறுமரங்கள் அரிதாகவே
அவனிடம் வரும்,
வேலிப்படல் அல்லது
அவசரத்துக்குக் கைக்கோல்கள் செய்வதற்காக. அவற்றின்
முதிரா வாசம்
நெடியேற்றும், சிலநேரம் குமட்டலைத் தரும். எவற்றையும்விட ஞானமிகு மன்னன்
சாலமோன் ஓஃபிரிலிருந்து இத்தேசத்துக்குத் தருவித்த அகில் மரங்களில் வேலை செய்வதில்
அவனுக்கு அத்தனை விருப்பம்.
அதன் அலாதி மணமும்
உள்ளடுக்குளின் மென்சிவப்பு வண்ணமும் கிறங்கவைக்கும். பொதுவாகவே பட்டையுரித்த மரங்களின் புறஅடுக்குகளை
இழைப்புளியால் இழைத்து இழைத்து நீக்குவது ஒரு மனித உடலை ஆடையகற்றுவது போன்ற குறுகுறுப்பை
அவனுக்குத் தந்தது.
தாவீதின் வழிவந்த குடும்பம்
தன்னுடையது என்பதை அவனது பாட்டனும் தந்தையும் சொல்லக் கேட்டிருக்கிறான். அரசன் தாவீதிலிருந்து அவனது
தந்தை வரையிலான வம்சாவரிசை எழுதிய ஏடொன்று வீட்டிலிருக்கிறது. ஆனாலென்ன அவனறிந்து மூன்று
தலைமுறைகளாக இந்த அரச பரம்பரை இழைப்புளிகளோடும் அறுப்பு வாட்களோடும்தான் போராடிக்கொண்டிருக்கிறது. அவனது தாத்தனும் அப்பனும் எப்படியோ
தெரியாது,
அவன் இந்த தச்சுத்தொழிலை
நேசித்தான்.
அவனொன்றும் பேர்பெற்ற
தச்சன் கிடையாது,
ஆனாலும் தன்னிடம்
வரும் வேலைகளை அர்ப்பணிப்போடு செய்வான். பெரிய
உணவு மேசையோ,
சிறு மரக்காலோ
சாதாரண விளக்குத்தண்டோ நேர்த்தி குன்றாமல்
செய்வதென்ற தொழில் ஈடுபாடு கொண்டவன். தனியனான
அவன் வீட்டைச் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருந்தான். சில நாட்கள் முன்புதான் சுவைக்கீனின்
மகளோடு அவனுக்கு மண ஒப்பந்தம் முடிந்திருந்தது.
மண ஒப்பந்தம் ஆனதிலிருந்து
அவள் அவன் வீட்டுக்கு வந்துபோகத் தொடங்கியிருந்தாள், வழமையான முகமன்களைப் பரிமாறிக் கொள்வது
தாண்டி பேச்சு நீண்டதில்லை.
ஏற்கனவே சுத்தமும்
ஒழுங்கும் மிக்கதாக இருந்த அவனது வீட்டை இன்னும் அவள் ஒழுங்குபடுத்தினாள். மண் கலயங்களையும் மரத்தட்டுக்களையும்
அவள் அடுக்கி வைத்த வரிசை,
வீட்டைப் பெருக்கிக்
குப்பைகளையும்,
பட்டறையின் மரச்சீவல்களையும்
காற்று கலைக்கவியலாத மூலையில் கூட்டிவைத்த பாங்கு என எல்லாமே ஒழுங்கின் இன்னொரு உயர்ந்த
பரிமாணத்தில்
இருந்தன. வாசலில் கட்டியிருந்த கழுதைக்கு
அவள் தீனி வைப்பதில்கூட அப்படியொரு அழகொழுங்கு இருந்தது. இனி காலமெல்லாம் தனது வசிப்பிடமாயிருக்கப்போகும்
அவ்வீட்டை மானசீகமாய் அவள் சுவீகரித்துக் கொண்டிருந்தாள். சிலகாலம் முன்பு தேவாலயத்து தூணைக்
கட்டிக்கொண்டு வீட்டுக்கு வரமாட்டேன் என அடம்பிடித்த பெண்ணா இவளென ஆச்சரியத்துடன் பார்ப்பான்
அவன்.
அவள் மூன்று வயதில் தேவாலயத்துக்கென
நேர்ந்துவிடப்பட்டவள்,
அவ்வூராரிடையே
அது வழமைதானென்றாலும் ருதுவான பின் இப்படி நேர்ந்துவிடப்பட்டப் பெண்கள் வீடு திரும்பிவிட
வேண்டும்.
ஆனால் அவள் தேவாலயத்திலிருந்து
வீடு திரும்ப விரும்பவில்லை.
காலமெல்லாம் கடவுளுடனே
இருக்க விரும்பியவள் போல முரண்டு பிடித்தாள். ருதுவான பெண்கள் கடவுளின் பிரசன்னத்தில்
இருப்பது முறையில்லை,
ஆசாரக்கேடு. சினந்து பேசி அவளை அங்கிருந்து
துரத்தவும் யாருக்கும் மனமில்லை,
ஊரில் எல்லோருக்குமே
அவள் மட்டில் வாஞ்சையுண்டு.
எனவேதான் மூத்த அந்த ராபி ஓர் உபாயம் செய்தார்.
அவளது தந்தை சுவைக்கீனின் சம்மதத்துடன்
நாசரேத்தில் திருமணத்துக்குத் தயாராயிருக்கும் இளைஞர்களை அழைத்து ஒவ்வொருவர்
கையிலும் ஒரு குச்சியைக் கொடுத்தார் ராபி. அவன் கைக்கும் ஒரு குச்சி வந்தது.
தேவாலயத்தின்
முன் அவர்களை நிற்கச் செய்துவிட்டு உள்ளே சென்று செபித்தார். வாசல் தூணோரம் நின்று நடப்பவற்றைக்
குறுகுறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். வெளியே வந்த ராபி இளைஞர்களிடம் தமது
குச்சிகளை உயர்த்திப் பிடிக்கச் சொன்னார். எல்லோரும் உலர்ந்த அந்தக் குச்சிகளை
உயர்த்துகையில் அதிசயமாய் அவனது குச்சியில் மட்டும் லீலிகள் மலர்ந்திருந்தன. புன்னகையுடன் அவனது கரம் பற்றி
அழைத்து வந்து அவள் பக்கத்தில் நிறுத்தி, “இதோ
உன் மணமகள்,
அழைத்துச் செல்” என்றார்.
அவனுக்கு எல்லாமே கனவு போலிருந்தது. நண்பர்களோடு சேர்ந்து செஃபோரிஸுக்குத்
தச்சுவேலை செய்யப் போகையில் பாதையோரம் மண்டிக் கிடக்கும் லீலிகளைப் பார்த்து லயித்தபடி
செல்வான்.
எரோது அந்திப்பாஸ்
செஃபோரிஸை தனது அரசின் தலைமையகமாகக் கொண்டபின் அந்நகரில் கட்டுமான வேலைகளுக்கு பக்கத்து
ஊர்களிலிருந்தெல்லாம் ஆட்கள் சென்றனர். நாசரேத்திலிருந்து
செஃபோரிஸ் நடக்கும் தூரம்தான் என்பதனால் அவனும் நண்பர்களும் காலையில் சென்று மாலையில்
திரும்பிவிடுவர்.
அந்தி சாய்ந்த
அரையிருட்டில் வீடு திரும்புகையில் லீலிகளைக் கடந்து வரும்போது மட்டும் அவற்றின் மணத்தில்
அவன் உள்ளம் அவிழ்ந்துகொள்ளும். காய்ந்த
அவனது கைக்கொம்பில் லீலி பூத்த அந்த நேரம் அவனுள் என்னவெல்லாமோ எண்ணங்கள் ஓடின. தன் தாத்தாவை நினைத்துக்கொண்டான். எல்லாமே இறைவனின் திருவுளப்படிதான்
நடந்தேறுகின்றன என்பார் அவனது தாத்தா மாத்தான், எது குறித்தும் அச்சப்படவோ ஆனந்தப்படவோ
என்ன அவசியமிருக்கிறது என்பார்.
தனியனான அவன் மனைவியுடன் குடும்ப வாழ்வைத் தொடங்கினான். அவனது மனைவி ஊரின் மற்றப் பெண்களைப்
போலில்லை என்பதை விரைவிலேயே உணர்ந்தான். அவளைச்
சுற்றி எப்போதும் ஒளி சுடர்ந்துகொண்டிருந்தது. அவள் பாதம் பட்ட இடங்கள் துலங்கின. ஆனால் அவளைக் காண்கையில் மனைவி
என்ற எண்ணம் ஏனோ அவனுக்கு உண்டாகவில்லை.
அவள் குழந்தைமையின்
பூந்தோட்டத்தைத் தாண்டிய பின்னும் சுழித்தோடும் பருவ ஆற்றினுள் இறங்க அச்சம் கொண்டு நிற்பவள் போலிருந்தாள். அன்றாடங்களின் வழமைக்குள் தம்பதியராய்
வலம் வந்தவர்கள் உடலளவில் விலகியே இருந்தனர். சத்திரமொன்றின் ஒரே அறையில் இரவுகளை
கழிக்க நேர்ந்த கண்ணியமான வழிப்போக்கர்களைப்போல நடந்துகொண்டார்கள். அவன் பொறுத்திருந்தான்.
பல நாட்கள் இது தொடர்ந்தது. ஆனால் உடல் தினவு தனது ஒப்பனைகளைக்
கலைத்துவரத் தொடங்கியதை அவன் உணர்ந்தான். இளம்பெண்ணின்
அண்மை அவன்
உணர்வுகளைத் தீவிரமடையச்
செய்தது ஆனால் அவளோ
அதை உணர்ந்தார்ப்போலில்லை.
உடல் மட்டும்
பூத்துவிட்ட மனங்கனியாத பெண்ணை தேர்ந்துகொண்டுவிட்டோமோ என ஒருநாள் அவன் நினைத்தான். பாலைக்குளிரும் மனைவியின் அண்மையும்
இரவில் அவனை வதைத்தன.
ஒருநாள் இரவு அவன் செங்கடலைக் கடந்துவந்த
தம் மூதாதைகள் பற்றி அவளிடம் பேச ஆரம்பித்தான். பாரவோனின் கொடும் பிடியிலிருந்து தப்பிப்
பாலையை அடைந்து வாழத்தொடங்கிய காலத்தில் அவர்கள் பட்ட துன்பங்கள்தாம் எத்தகையன. இறைவனும் அவரருள் பெற்ற மோயீசனும்
மட்டும் இல்லையானால் இந்நேரம் எகிப்தியரின் பைத்தியக்காரத்தனமான பெரிய கட்டுமானங்களில்
ரத்தம் சிந்தி உழைத்துச் செத்துப்போயிருப்போம் என்றெல்லாம் அவன் சொல்லிக்கொண்டிருக்க
பாதிக் கதையிலேயே அவள் உறங்கிவிட்டிருந்தாள். பெருமூச்சொன்றை அடக்கி வெளியிட்டவனாய்
வெளியே வந்து வானைப் பார்த்தான்.
பாலையின் இரவுதான்
எவ்வளவு வசீகரமானது.
நட்சத்திரங்கள்
பாலை வானுக்கென்றே படைக்கப்பட்டனவோ? கருணையற்ற வெம்மையின் பகற்பொழுதைக்
கடந்துவிட்டால் தெளிந்த வானும் தணிந்த காற்றும் மெலிதாய்ப் பரவிவரும் குளிருமாய் இந்த
மணல்வெளியின் இரவுதான் எத்தனை ரசமானது. அது
பகலெல்லாம் சதா சீறலும் புலம்பலும் பற்கடிப்புமாய் இருக்கும் மனைவி இரவில் கனிந்து
குளிர்ந்து காலை தொடங்கி அவன் கண்டது வேறு யாரோ என்றெண்ணும்படிக்கு படுக்கையில் வந்தமர்வது
போல. இந்த உவமானம் அவனுக்கு இன்னுமொரு
பெருமூச்சைத் தந்தது.
திருமணத்துக்குப் பின் ஏழெட்டு
வாரங்கள் கடந்திருந்தன.
அன்றும் அவன்
செஃபோரிஸுக்குப் போய் களைப்புடன் திரும்பி வந்தான். வாசலில் நின்றிருந்தவள் அவனது இடைவாரையும்
மிதியடியையும் அவிழ்த்துவிட்டுப் பாதங்களைக் கழுவினாள். இரவுணவுக்கு மிருதுவான புதிய ரொட்டியும்
சுவைமிக்கத் திராட்சைச்சாறும் இருந்தன. அவள்
முகத்தில் எதனாலென்று அறுதியிடமுடியாத ஒரு பூரிப்பு, தெள்ளிய விகாசம். ஏதோ நட்சத்திரத்தை விழுங்கிவிட்டவள்போல
அவளுடலிலிருந்து குளிர்ந்த மென்னொளி பரவிக்கொண்டிருப்பதைப் பார்த்தான். இதென்ன பிரமை என்றபடியே உண்டு
முடித்தான்.
வழமைபோன்ற படுக்கைச் சடங்கில்
அருகருகே இருவரும் கூரை நோக்கிப் படுத்திருந்தனர். எவ்வளவு நேரம் கடந்ததென்று தெரியாது, திடீரென மனைவியின் கை தன் கைமீது
படுவதை உணர்ந்தான்.
சமயங்களில் இப்படிக்
கைபட்டதும் ஒரு நாசூக்கான விரைவில் கையை விலக்கிக் கொள்வாள். ஆனால் இன்று அவளது உள்ளங்கை
அவன் முழங்கைமீது ஊர்ந்து வந்து மெதுவாகக் கீழிறங்கி அவனது விரல்களைப் பற்றியது. அந்த மிருதுவான ஸ்பரிசம் அவனைக்
கிளர்த்தியது.
ஒருவழியாய் பாதையைக்
கண்டுபிடித்து தாம்பத்திய சம்போகத்தின் கதவருகே வந்துவிட்டாள்
போலும் என உவகையுற்றான்.
மெதுவாகப் புரண்டு
அவள் கண்களைப் பார்த்தான்.
பதிலுக்கு அவள்
முறுவலித்தாள்.
அவன் விரல்களோடு
தன்னுடையவற்றைக் கோர்த்துக்கொண்டு அவன் காதருகே வந்து முணுமுணுப்பாய்ச் சொன்னாள். நாணமும் மகிழ்ச்சியும் கலந்து
குழறும் மென்குரலில் அதைச் சொன்னாள். “நான்
கருவுற்றிருக்கிறேன்”.
அவன் உடல் அதிர்ந்தது, கண்கள் கூரையில் நிலைத்தன. நான் கேட்டது இந்த வார்த்தைகளைத்தானா? ஆமாம், அவையேதான், அவற்றுக்கான அர்த்தமும் அதுவேதான். நிஜம் உரைத்த பொழுதில் அவனது
வானிலிருந்து ஒன்றும் மிச்சமில்லாமல் நட்சத்திரங்கள் பெயர்ந்து வீழ்ந்தன. தொடர்ந்து காபிரியேல் தூதர், மாசில்லாத உற்பவம், மெசியா என அவள் சொல்லிக்கொண்டிருந்த
எதுவும் அவன் செவிகளில் விழவில்லை, அவளுக்கு
அவன் பதிலுரைக்கவுமில்லை.
அவன் அமர்ந்திருந்த ஒலிவ மரத்தின்
நிழல் நீண்டு கொண்டிருந்தது.
அதுதான் சரி. நீண்ட மனப்போரட்டத்துக்குப்பின்
முடிவுக்கு வந்தான்.
பிளவுண்ட குளம்புடைய
விலங்குகளின் இறைச்சியை மட்டுமே உண்ணும் ஆசாரமான யூதனான அவன் அதைச் செய்ய முடிவெடுத்தான். தன்
மனைவியை யாருக்கும் தெரியாமல் விலக்கிவிடத் தீர்மானம் கொண்டான். அவளது முகம் மனதில் வந்தபோது
அந்தத் தீர்மானம் இளகிக் கரைந்தது. இத்தனைப்
பெரிய எந்திரக்கல்லை இச்சிறு பெண்ணின் கழுத்தில் கட்டிவிடுவது தகுமா? பின்னே, இது எவ்வளவு பெரிய துரோகம். அவன் மனம் கொந்தளித்தது. செபக்கூடத்தில் சொல்லி அவளைக்
கல்லால் எரிந்து கொல்லச் சொல்வதுதான் அவன் மனதை ஆற்றும் எனத் தோன்றியது. ஆனால் அடுத்த கணமே தனது எண்ணத்தைத்
கண்டு அவனே நடுங்கினான்.
குழந்தைமை மாறாத
அவளுக்கு இப்படியொரு தண்டனையா?
ஆனால் ஆனால்... ஆமாம் யாரும் அறியாமல் அவளை
விலக்கிவிடலாம்.
இப்படியே எதிரெதிராய்
எண்ணங்கள் அவனுள் மோதின,
தணிந்து அமர்ந்தன, பின் மீண்டும் கிளர்ந்தன. பொங்கிப் பொங்கித் தணிந்த எண்ணங்களால்
உண்டான அயர்வில் அப்படியே மரத்தடியில் கண்ணுறங்கிப் போனான்.
குரல்கேட்டு வீட்டுக்குள்ளிருந்து
வந்தவன் வாசலில் மரத்தைப் பார்த்தான்.
பெரிய அகில் மரம்,
அத்தனைப் பெரிய
மரத்தில் அதற்குமுன் அவன் வேலை செய்தது இல்லை, ஏன் பார்த்ததுகூட இல்லை. அருகே
ஒரு முதியவர் நின்றிருந்தார்.
பெரிய படகு ஒன்று
செய்ய வேண்டும் என்றார்.
“படகா? இந்த ஊரிலா?” அவன் சிரித்துவிட்டான். “அதுவும் அகிலிலா? உங்களுக்கொன்றும் பைத்தியமில்லையே?” முதியவர் சிரிக்கவில்லை, பதிலேதும் சொல்லவுமில்லை. அவன் இதற்குமுன் படகுகள் செய்ததில்லை. முணுமுணுப்பாக அவரிடம் சொன்னான், “நீங்கள் சீசெரியாவுக்குப் போகலாமே. அங்கே படகுகள் செய்வதற்கு நிறையப்பேர்
உண்டு.” பதில் பேசாமல் அவர் அவனையே
பார்த்துக்கொண்டிருந்தார்.
நீண்ட மௌனம். அவரை எப்படி எதிர்கொள்வதென
அவனுக்குத் தெரியவில்லை.
அவர் முகத்தைப்
பார்க்க முடியாமல் தலைதாழ்த்திக்கொண்டான். பையை எடுத்து மெதுவாக அவர் பதினைந்து
வெள்ளிக்காசுகளை எண்ணினார்.
அவற்றை மரத்தின்மீது
வைத்துவிட்டு,
மீதியை வேலை முடிந்ததும்
தருவேன் என்றவராய்ப் பதிலை எதிர்பாராது சென்றார்.
அவன் விக்கித்து நின்றான். ஆனால் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவன்போல
வேலையை ஆரம்பித்தான்.
மேற்புறத்தை மேலோட்டமாக
இழைத்துவிட்டு,
மரத்தைத் தோராயமாகப்
படகு வடிவில் வாளும் கோடரியும் கொண்டு வகிர்ந்தான். கடுமையான வேலைதான் ஆனால் ஏனோ அவனுக்குச்
சோர்வு தட்டவில்லை.
புறவடிவை அளவீடுகளுடன்
அமைத்தபின் படகின் வயிற்றைக் குடைந்தான். குடைவது
ஆனந்தமாயிருந்தது.
வெளிர் சிவப்பு
வண்ண மரச்சீவல்கள் அவனைச் சுற்றிக் குவிந்தன. ரம்மியமான மணம் சூழ அவன் இழைத்துக்
குடைந்தபடியேயிருந்தான்.
எவ்வளவு நேரமாகக்
குடைந்துகொண்டிருந்தான் எனத்தெரியாது. அவனுயரத்தைத்
தாண்டி குவிந்திருந்த மரச்சீவல்களுக்கு வெளியே வந்தான். அவனுக்கு நிறைவு, வேலை முடிந்துவிட்டிருந்தது. ஆனால் படகு எங்கே? இழைத்து இழைத்து கடைசியில்
ஒன்றுமில்லாமல் வெறும் மரச்சீவல் குவியல்தான் இருந்தது. அவன் திடுக்கிட்டு விழித்தான்.
ஒலிவ மரத்தின் நிழல் எதிர்த்திசைக்குப்
போய்விட்டிருக்க கண்கூச சூரியனைப் பார்த்தான். தாங்க முடியா விகாசம். “எளியவனுக்கு ஏன் இத்தனை ஒளி, துளிக் கிரணத்தில் என்னைக்
கழுவிப் பொலிவடைவேனே”
மனம் விம்ம முணுமுணுத்தான். காபிரியேல் எல்லாருக்கும்
பொதுவான ஒரு கனவுதானே. எல்லோர் கனவிலும் ஒரு காபிரியேல் இருக்கிறான். பெரிய அகில்
மரங்களைத் தந்து படகுகள் செய்யச் சொல்கிறான். உன் கனவுக்குத் துணைநிற்பேன் என் அருமை
மணையாளே. நம் குழந்தையை வளர்த்து இவ்வுலகின்முன்
நிறுத்துவேன்.
பின்வந்த நாட்களில் கர்ப்பிணியான
அவளைத் தன் கைகளில் தாங்கினான்.
வரவிருக்கும்
மகவுக்கென சிறிய மரச்சொப்புகள் செய்தான். அலங்காரமாக
ஒரு தொட்டிலும்.
அவனது சொப்புகளைப்
பார்த்து அவள் சிரித்தாள்.
நடைபயணத்தின் இடையில்
ஒருநாள் தோராவையும் பத்துக்கட்டளைகளையும் படித்துத் தேர்ந்த ராபி ஒருவர் அவர்களோடு
சேர்ந்துகொண்டார்.
சீஸரின் இந்த
மக்கள் கணக்கெடுப்பை அவரும் விரும்பவில்லை, அதிலும் அவரவர் தமது மூதாதைகள் ஊருக்குச்
சென்று கணக்கு ஒப்புவிக்க வேண்டுமென்பது பைத்தியக்காரத்தனம் என்றார். உரையாடலில்
அதிகமும் அவரே பேசினார்,
விஷய ஞானமும்
சமுதாய விமர்சனமும் கலந்த உற்சாகமூட்டும் பேச்சு அது. பெண்களைப் பற்றிய பேச்சு வந்தபோது தல்மூட்டிலும், மிட்ராஸிலும் என்ன சொல்லியிருக்கிறது
என நுணுகி அறிந்த அவர் சொன்னார்.
நமது மதம் பெண்ணை என்னவாக நினைக்கிறது? அவள் ஆணின் உடமை. அவள் அவனுக்கு ஒரு மேலங்கி, மட்டக்குதிரை, புளிக்காத ஒரு கோப்பை காடி
அல்லது இவை போன்றதொரு ஏதாவதொரு உருப்படி. சிலநாட்கள்
முன்பு திபேரியாஸில் ஓர் இளம்பெண்மீது அவர்கள் கல்லெறிந்துகொண்டிருந்தார்கள். தன் வயிற்றை நிறைக்க உடலை விற்கும்
அபலை. இழிபிறவிகளே, இருவர் சேர்ந்து செய்வதுதானே
விபச்சாரம்?
நான் அவர்களைப்
பார்த்துக் கத்தினேன்.
அந்த ஆண் எங்கே? இங்கிருப்பவற்றில் பாதிக் கற்கள்
அவனுக்கானவையல்லவா?
என்மேலும் சில
கற்கள் விழுந்தன.
அன்றுமாலையே மனம்
சோர்ந்தவனாய் கெனசரேத் கரையில் நடந்து என் நடோடிப்பாதையை அடைந்தேன்.
ராபி குடிக்கணக்கு ஒப்படைக்க
நடக்கும் கூட்டத்தாரில் ஒருவர் இல்லை, மக்களோடு
சேர்ந்து நடக்கக் கிடைத்த பாதையில் தன்னை நுழைத்துக்கொண்டவர். அவரது கோபத்தில் நியாயமிருப்பதை
அவன் உணர்ந்தான்.
மெசியா வந்தபின்
எல்லாம் மாறிவிடுமல்லவா எனக் கேட்க நினைத்தான், ஆனால் அதற்கு அவர் என்ன பதில் சொல்வார்
என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. ராபியின்
பேச்சு அவனுக்கு ஒரு சம்பவத்தை நினைவுபடுத்திவிட்டது.
நண்பர்களுடன் வேலைக்காக அவன்
செஃபோரிஸ் சென்றுகொண்டிருந்த ஒருநாள் பாதையின் இடப்புறம் பராமரிப்பின்றிக் கிடந்த பெரிய
ஒலிவத்தோட்டத்திலிருந்து வெளியேறி முழுக்கப் போர்த்தியவர்களாய் நாலைந்து பேர் அவசரம்
அவசரமாய் அவர்கள்முன் சாலையைக் கடந்தார்கள். விந்தி நடந்த நடை, கந்தற்போர்வைகள், கடுமையான சீழ் நாற்றம். தொழுநோயாளிகள் என்பது புரிந்தது. ஊருக்கு வெளியே துரத்தப்பட்ட
அவர்கள் இந்நேரத்தில் வெளியே வரக்கூடாது. வந்தாலும்
கைமணியை ஒலித்து எச்சரித்தபடிதான் வரவேண்டும்.
“கேடுகெட்டப் பன்றிகள்”. அவனோடு வந்தவர்களில் அருவருப்புடன்
ஒருவன் கத்தினான்.
விந்தி நடந்த
கூட்டத்தில் ஒருவன் மட்டும் தயங்கி நின்று அவர்களை நோக்கித் திரும்பினான். பழுத்துப் பளபளத்து அமுங்கிக்
கிடந்த மூக்கு,
இடது கை சுண்டுவிரலைச்
சுற்றியிருந்த துணி சீழில் நனைந்திருந்தது. ஆனால் கண்களில் மட்டும் குன்றாத ஒளி.
“ஏய், மனிதனே. உடல் ஷீனமடைந்த பன்றியை ஊரைவிட்டு துரத்துவதில்லை
சக பன்றிகள்,
தெரியுமா?” ஓர் இளக்காரச் சிரிப்புச் சிரித்தவன்
கையிலிருந்த காய்ந்த ரொட்டியைக் கடித்து மென்றான். “சீக்கிரமே மெசியா வருவார். பன்றிகளை மனிதராக்குவார். உன்போன்ற மனிதரை சீழ்ப்பிடித்த
பன்றிகளாக்குவார்.”
போர்வைக்குள்ளாக
இன்னொரு கையில் மறைத்துவைத்திருந்த மணியை எடுத்து வெறிகொண்டவன் போல ஒலித்துக்கொண்டே
ஆங்காரச் சிரிப்புடன் விந்தி விந்தி நடந்துபோய் தன்கூட்டத்தாருடன் சேர்ந்துகொண்டவன்
அங்கிருந்து கத்தினான்.
“அகஸ்டஸ் சீஸர் குடிக்கணக்கெடுக்கப் போகிறானாமே, சீழ்வடியும் புண்களுக்கு அதில்
இடமிருக்கிறதா என்று கேட்டுச்சொல்.” அவன்
கூட்டாளிகளும் அவனோடு சேர்ந்து கெக்கலித்தனர்.
கழுதைமீது மனைவி அமர்ந்திருக்க
அதன் கயிற்றைப் பிடித்தவாறு முன்னே நடந்தவனது மனதில் பலவித சிந்தனைகள். மத ஈடுபாடு கொண்டு ஆசாரங்களைக்
கடைபிடிப்பவன்தான் அவன்,
ஆனாலும் மற்ற
யூதர்கள் போல மெசியா வருவாரென்ற நம்பிக்கையை லட்சியக் கனவுபோல நெஞ்சில் சுமந்து
திரிபவனல்ல.
இயல்பிலேயே கனவுகளுக்கு
வெகு அப்பால் இருப்பவன்.
ஓய்வுநாளில் செபக்கூடத்துக்கு
வெளியே நின்று மெசியாவே விரைந்து வந்து என்னைக் காப்பாற்றும் என அரற்றுவோரை சிறு நகைப்புடன்
கடந்துபோவான்.
யோர்தானின் இடையளவு
நீரோட்டத்தில்,
மண்டிய நாணற்புதர்களருகே
நின்றபடி திருமுழுக்கு வழங்கும் நாடோடியைக் கூட்டம் கூட்டமாய் போய்ப்பார்த்து, வரவிருப்பவர் இவர்தானோ என சம்சயம்
கொண்டவர்களைப் பார்த்தும் சிரித்தான். நல்லவேளை
வெட்டுக்கிளிகளைத் தின்று காட்டுத்தேனைக்குடித்த அந்தக் காட்டுவாசி மெசியா நானல்ல எனச் சொல்லிவிட்டான். வாழ்வின் நம்பிக்கைகளை தச்சுப்பட்டறையிலும்
தன் கைத்திறனிலும் வைத்திருந்தான். இருப்பு
எளிய சூத்திரம்,
கனவுகளும் லட்சியங்களும்
இல்லாத தேருக்குப் பூட்டும் சக்கரங்கள் என்று வாழ்ந்தான். வாழ்வெனும் கைவண்டியை முணுமுணுப்பின்றி
தானே இழுத்தான்.
ஆனால் அந்த ராபியின் பேச்சு
அவனது அறையின் இதுவரை திறவாத ஒரு சன்னலைத் திறந்துவைத்தது போலிருந்தது. செஃபோரிஸ் போகும் வழியில் கண்ட
தொழுநோயாளிகள்,
அன்றொருநாள் கல்லடிபட்டுத்
தசை கிழிந்து இறந்துகிடந்த விலைமகள் என அவனுக்குள் வாழ்வின் பிற பக்கங்கள் தெரியத்
தொடங்கின.
வாழ்வு எல்லோருக்கும்
ஒன்றுபோல் இல்லையென்பது,
சரியாகச் சொன்னால், வாழ்வை எல்லோரும் ஒன்றுபோல
வாழ வகையில்லையென்பது பெரிய அநீதிதானே? அதைச்
சரிசெய்யும் ஒரு மீட்பர் தேவைதானோ? மெசியாவே
என மெல்ல முணுமுணுத்தான்,
அவனுக்குள் மெல்லிய
அதிர்வொன்று பரவியது.
அன்று ஒலிவமர
நிழலில் கண்ட கனவுக்குப் பிறகு போல மனம் விகசித்து நின்றது. இவளை மணந்தது முதலான சம்பவங்கள்
யாவும் அவன் நினைவில் சுழன்று வந்தன. தச்சுப்பட்டறையின்
மரச்சட்டங்கள் தாமே மேலெழுந்தன.
குறுக்கும் நெடுக்குமாய்
மிதந்துவந்த அவை தம் ஒழுங்கில் ஒரு சட்டகமாகி நின்றன. அச்சட்டகம்
குறிப்புணர்த்துவது அவனுக்குப் புரிந்தார்ப் போலிருந்தது, புரியாதது போலுமிருந்தது.
விரைவிலேயே அவர்கள் பெத்லகேம்
வந்து சேர்ந்தனர்.
நெடிய ஏழுநாள்
பயணம் முடிவுக்கு வந்திருந்தது.
நல்லவேளை வழியில்
எதுவும் நிகழ்ந்துவிடவில்லை.
ஆனால் எல்லாமே
ஏதோவொரு திட்டத்தின்படியே நடப்பது போலிருந்தது. பெத்லகேமின் சத்திரங்கள் நிரம்பி அவர்களுக்கு
இடமில்லாமல் போனதில்கூட ஏதோவொரு பொருளிப்பதைக் கண்டான். கடைசியில் யார்வீட்டுத் தொழுவிலோ இடம்
கிடைத்தபோது அவனும் அவளும் மகிழ்வுடன் அங்கே தங்கினர். சொல்லிவைத்ததுபோல
அன்றிரவே அவளுக்கு பேறுநேரம் வந்தது. அவளிடம்
சிறிதும் அச்சமோ கலவரமோ இல்லை.
நானே பார்த்துக்கொள்வேன்
என்று அவள் சொன்னதும் அவன் வெளியே வந்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். இருந்தும் அவன் மனம் பரபரக்கவே
செய்தது. மனதுள் அந்த ராபியை நினைத்து
சாந்தமடைய முயன்றான்.
அந்நேரம் நிரம்பி
வழிந்த சத்திரங்களின் ஓசைகள் மெல்லத் தணிந்து பாடலொன்று உயர்ந்து ஒலித்தது. ”விடியலின் வயிற்றிலிருந்து
உம் இளமையின் பனித்துளியைப் பெறுவீர்...” என்ற
தாவீதின் பாடலை இழுத்து இழுத்துப் பாடிக்கொண்டிருந்தான் திராட்சைமதுவின் பிடியிலிருந்த
இரவுப் பாடகனொருவன்.
நாழிகை நேரம் கடந்திருக்கும். படபடப்பு நீங்காதவனாய் தொழுவத்துள்
நுழைந்தான்.
விகாசம் பொங்கும்
முகத்துடன் அவனைப் பார்த்து முறுவலித்தாள். குழந்தையைக் கந்தையில் சுற்றி தீவனத்தொட்டிக்குள்
கிடத்தியிருந்தாள்.
இளங்கன்றுகள்
இரண்டு குழந்தையைப் பார்த்தவாறே அசைபோட்டுக்கொண்டிருந்தன. முறுவலிப்புடன் அவன் அவளை வினாக்குறியோடு
நோக்கினான்.
“தேவனது குழந்தை, நம் மகள்” என்றாள்.
மனம் விகசிக்க தொட்டியருகே
சென்று குழந்தையைக் கையிலேந்தினான். விடியவிருந்த
இரவின் குளிரில் அந்தத் தளிருடல் நடுங்கியது.
ஏதோ நினைத்தவன்
குழந்தையை உச்சிமுகர்ந்து “தேவகுமாரத்தி” என்றான். அதைக்கேட்டு முகம் மலர அவன்
மனைவி புன்னகைத்தாள்.
அப்போது சற்றுத்தள்ளி
சாமக்காவலில் இருந்த இடையர் தீமூட்டிக் குளிர்காய்ந்துகொண்டிருக்க, தீயேறி இறுகி முறிந்த மரத்துண்டிலிருந்து
தீப்பொறியொன்று கிளம்பி மிதந்து மிதந்து ஆகாயத்துக்கு ஏறத் தொடங்கியது.
----------------
கல்குதிரை - இளவேனிற்கால இதழ் 2020